என் காரியம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

நான் பாட்டில் எங்கேயாவது கிராமத்தில் ஏகாந்தமாக இருந்து கொண்டு, பூஜையைப் பண்ணிக் கொண்டு, தியானம் செய்துகொண்டு நிம்மதியாக இருக்கலாம். மடம் நடப்பதற்கு இப்போது நீங்கள் பட்டணத்தில் தருகிற மாதிரி இவ்வளவு பணம் வேண்டுமென்பதேயில்லை. மடங்களுக்குப் பணபலம், ஆள்பலம் எல்லாமே ரொம்பக் குறைச்சலாக இருக்க வேண்டும் என்றுதான் என் அபிப்ராயம். பரிவாரம், சிப்பந்திப் பட்டாளங்கள் நிறைய வேண்டியதில்லை. மடத்தில் அதிபதியாக இருக்கப்பட்டவரின் யோக்கியதைதான் அதற்குப் பணம், பலம் எல்லாம்.

ஆதலால், நீங்கள் நிறையப் பணம் தருகிறீர்கள் என்பதற்காக நான் ஏகாந்தத்தைவிட்டு இங்கே டவுன்களுக்கு வரவில்லை. என்னிடத்தில் உங்களுக்கு நிரம்ப அன்பு, பக்தி இருக்கிறது. நீங்கள் கூப்பிட்டு நான் சம்மதித்து வந்திருப்பதில் உங்களுக்கு ரொம்பவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனாலும், நான் வரவேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டது, அந்த ஆசை நிறைவேறியதில் சந்தோஷப்படுவது இரண்டும் உங்கள் காரியம். பட்டணங்களுக்கு நான் வந்திருப்பதில் என் காரியம் ஒன்று இருக்கிறது. அது என்ன?

என்னவென்றால், பிராம்மணர்கள் வேதத்தை விடக்கூடாது என்று சொல்லி, தொடர்ந்து வேதரக்ஷணத்துக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுமாறு பண்ணவேண்டும் என்றுதான் வந்திருக்கிறேன். நம்முடைய மதத்தின் சகல சித்தாந்தங்களுக்கும், வாழ்க்கை முறைக்கும் மூலமாக, வேராக இருக்கிற வேதம் இந்தத் தலைமுறையோடு நசித்துவிடாமல் இருப்பதற்கான ஏற்பாடுகளை நீங்கள் செய்ய வேண்டும் என்று அழுத்தங்கொடுத்துச் சொல்லத்தான் வந்தேன்.

அநாதியான வேத தத்துவம் அதன் மூல ரூபத்திலேயே என்றென்றும் பிரகாசித்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஜோதியை, தீவர்த்தியை, தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற மசால்ஜி (சேவகன்) யாகப் பிராம்மணன் இருக்க வேண்டும். இப்போதுள்ள சமஸ்தப் பிரஜைகளுக்கும் எதிர்கால வாரிசுகளுக்கும் (posterity) இவன் செய்தே தீரவேண்டிய கடமை இது.

மற்றவர்களை அதட்டிக் கொண்டு, ‘தனக்கு உயர்த்தி கொண்டாடுவதற்காக ஏற்பட்டதல்ல பிரம்மண்யம்’. சமூகத்தின் மசால்ஜி (peon) வேத விளக்கைப் பிடித்துக் கொண்டு வழிகாட்டுவதற்காகத்தான் அது இருக்கிறது. ‘விளக்கை அணைத்து லோகம் முழுவதையும், நம்மோடு மட்டுமில்லாமல் எதிர்காலம் முழுவதற்கும் இருட்டாகி விடாதீர்கள்’ என்று பிராம்மண சமூகத்தைக் கேட்டுக் கொள்வதற்காகத் தான் நான் நகரங்களுக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

பட்டணங்களில்தான் இப்படி ஆயிரக்கணக்கில் ஜனங்கள் வருகிறீர்கள். அதனால், நான் எங்கேயோ உட்கார்ந்துகொண்டு, யாரோ ஒரு சிலரிடம் சொல்லி, அவர்கள் மற்றவர்களிடம் சொல்லுவது என்று சுற்றி வளைக்காமல், நேராக நானே நிறைய ஜனங்களுக்குத் தெரிவித்துவிட முடிகிறது. இதை உத்தேசித்தே, மடத்து ஆசாரங்களுக்குத் பட்டணங்களில் எத்தனையோ பங்கம் ஏற்பட்ட போதிலும் பட்டணங்களுக்கு வருகிறேன். நான் நினைத்ததை விடவும் ரொம்ப ஜாஸ்தி கூட்டமாக இருக்கிறது. சிரமப்படுகிறேன்; உங்களையும் சிரமப்படுத்துகிறேன்!

நீங்கள் எத்தனையோ செலவழித்து பேட்டைக்குப் பேட்டை பெரிதாகக் கொட்டகை, பந்தல் போட்டு என் பேச்சுக் கச்சேரியை கேட்க வேண்டும் என்றே எத்தனையோ கஷ்டங்களுக்கு நடுவே வருகிறீர்கள். உங்கள் தப்பைச் சொல்லி மனஸைக் கஷ்டப்படுத்தாமல் கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாம் என்றால் அதற்கு மனசு இடம் தரமாட்டேன் என்கிறது. உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக் கொண்டு உங்களுக்கும் ஊருக்கும் உலகத்துக்கும் எது நல்லது என்று எனக்கு தோன்றுகிறதோ அதைச் சொல்லாமல் போய்விட்டால் பிரயோஜனமே இல்லை என்று படுகிறது. அதனால்தான் ‘வேதத்தை ரக்ஷியுங்கள், பிராசீன தர்மங்களை அநுஷ்டியுங்கள்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறேன். உங்களை அப்படி செய்யும்படி பண்ணுகிற சக்தி எனக்கு இருக்கிறதோ இல்லையோ. ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்று உங்கள் காதில் போடவாவது என்னால் முடிகிற மட்டும், இப்படிக் காதில் போட்டுக் கொண்டிருக்கலாமே என்றுதான் வந்திருக்கிறேன்.

எனக்குக் கனகாபிஷேகம், பீடாரோஹண உத்ஸவம் எல்லாம் ரொம்பவும் விமரிசையாகப் பண்ணுகிறார்கள். மிகுந்த அன்பினால் பண்ணிப் பார்க்கிறார்கள். இதற்காகக் கமிட்டி போடுகிறார்கள். வசூலிக்கிறார்கள். ராப்பகல் உழைக்கிறார்கள். ஆனால் இந்தக் கனகாபிஷேகம் மடத்துக்கு இனிமேல் வருகிற ஆச்சாரியார்களுக்கு சாசுவதமாக நடப்பது எப்படி? வேதம் இல்லாவிட்டால் மடம் எதற்கு மடாதிபதி எதற்கு? ஆகவே இப்போது என் கனகாபிஷேகத்துக்கும், பீடாரோகணத்துக்கும் காட்டுகிற உற்சாகத்தை வேத ரக்ஷணத்தில் காட்டி, அதற்காகக் கமிட்டி, திட்டம் எல்லாம் வசூல் செய்யுங்கள் என்கிறேன்.

வேத ரக்ஷணத்தை அடுத்த சந்ததிக்கு ஜீவிய கர்மமாக, ஆயுட்காலப் பணியாக வைக்க முடியாவிட்டால் கூடப்போகிறது. எட்டு வயசிலிருந்து ஆரம்பித்து அப்புறம் பத்து வருஷங்களுக்கு தினம் ஒரு மணி இளம்பிள்ளைகளுக்கு வேத மந்திரங்களிலும் பிரயோகங்களிலும் வகுப்பு நடத்தப் பேட்டைக்கு பேட்டை கூட்டுறவு அடிப்படையில் ஏற்பாடு பண்ணுங்கள் என்கிறேன். இதுதான் எனக்கு வாஸ்தவமான கனகாபிஷேகம், உத்ஸவம் எல்லாம்.

சிரமம் இல்லாமல் எந்தக் காரியமும் இல்லை. நாமாக ஒரு காரியத்தை இழுத்துப் போட்டுக் கொண்டால் அதற்காக எத்தனை கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் சகித்துக் கொள்கிறோம்? ஏதோ ஒரு கண்டத்தில் உள்ள ஏதோ ஒரு யூனிவர்ஸிடியில் ஏதோ ஒரு படிப்பு பார்த்தால் பெரிய உத்தியோகம். பணம் கிடைக்கிறது என்கிறபோது உடனே ‘ஸிலபஸ்’ வரவழைத்து விடுகிறோம் – அங்கே போய் பரிட்சை எழுத ஏற்பாடெல்லாம் செய்கிறோம். நமக்கென்றே ஏற்பட்ட தர்மத்தை கஷ்டம் இருக்கிறது என்று விட்டுவிடலாமா? கஷ்டம் இருந்தும் செய்தால்தான் ஜாஸ்தி பலன், ஜாஸ்தி பெருமை.

இப்படி உங்களை கஷ்டப்படுத்தத்தான் வந்திருக்கிறேன். நான் சொன்ன பிரகாரம் செய்வதாக நீங்கள் சொல்லி, அதற்கான ஏற்பாடுகளை முடித்து வருகிற வரையில், இங்கேயே உட்கார்ந்து கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தால் என்ன என்று கூட நினைக்கிறேன். எங்கேயாவது உட்கார்ந்து கொண்டு யாரையாவது உபத்திரவப்படுத்தத்தானே வேண்டும்? இங்கேதான் உட்கார்ந்து உபத்திரவம் பண்ணுவோமே என்று தோன்றுகிறது.

பட்டணங்களில் பஜனை, கோயில் திருப்பணி, புராணப்பிரவசனங்கள் எல்லாம் ரொம்பவும் விருத்தியாகியிருப்பதைப் பார்க்க, சந்தோஷமாகத்தான் இருக்கிறது. ஆனாலும், இவற்றுக்கொல்லாம் வேர்-மூலமான வேதம் – மட்கிப் போகவிட்டால், இவை அப்புறம் எத்தனை நாளைக்கு ஜீவிக்க முடியும்? வேதத்தை அப்பனிடமிருந்து பெற்று பிள்ளைக்குத் தரவேண்டும் என்கிற பெரிய தர்மந்தான் அஸ்திவாரம். அதை மறந்ததாலேயே இப்படி மதம் ஆட்டம் கண்டிருக்கிறது. பிராம்மணன் வேதத்தை விட்டதால் இன்றைக்கு லோகத்தில் உள்ள அத்தனை கோளாறுகளும், கஷ்டங்களும், விபரீதங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

ஜாதி அழிவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. லோக க்ஷேமம் போகிறதே என்றுதான் கவலைப் படுகிறேன். வேத ரக்ஷணம் விட்டுப்போனால் இந்தப் பரம்பரையை மறுபடியும் உண்டு பண்ணவே முடியாதே என்றுதான் கவலைப்படுகிறேன்.

‘லோக க்ஷேமம்’ என்று சொன்னது வேத சப்தத்தாலும், யக்ஞாதி கர்மாக்களாலும் ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல. வேதாந்தத்தைப் பார்த்தால்தான் சகல தேசங்களில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னதத் தத்துவங்கள் கிடைக்கின்றன. இந்தத் தத்வங்களால் எல்லா தேசத்தாரும் ஆத்மாபிவிருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தைப் பார்க்க வேண்டும் என்று இதர தேசத்தவர்களுக்கு எப்படி நாட்டம் வந்தது? அவர்கள் இங்கே வந்தபோது வேத ரக்ஷணமே ஜீவியப் பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால்தான். “இதென்ன. இப்படி வாழ்க்கை முழுவதும் அர்ப்பணிக்கும்படியான புஸ்தகம்!” என்று அவர்களுக்கு ஓர் ஆர்வம் பிறந்தது. அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களைத் தெரிந்து கொண்டார்கள். குறிப்பாக உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (Culture) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்து கொண்டார்கள். லோகத்துக்கெல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத கல்ச்சர்தான் ஆதியில் இருந்தது என்பது என் அபிப்ராயம். நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களும் இந்த அபிப்ராயத்துக்கு வரலாம். எல்லாருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச சௌஜன்யம் ஸர்வ மத சமரஸ பாவனை எல்லாம் வந்துவிடுகிறது. அது தவிர, இதன் தத்வங்களால் எந்த மதஸ்தர்களும் தங்களை உயர்த்திக் கொள்ளவும் முடிகிறது. வேதத்துக்காக என்றே சகலத்தையும் தியாகம் செய்கிற ஒரு கூட்டம் நம் தேசத்தில் இல்லா விட்டால், மற்றவர்களுக்கு அதில் எப்படிப் பிடிப்பு ஏற்படும்? உதவாத விஷயம் என்று நாமே ஒன்றை விட்டுவிட்டால், மற்றவர்களுக்கு அதன் தாத்பரியங்களை அறிவதில் எப்படி ஈடுபாடு உண்டாகும்? அதாவது, நம் அசிரத்தையால் வேதத்திலிருந்து பிறர் பெறக்கூடிய பிரயோஜனத்தை அவர்களும் பெற முடியாமல் தடுத்தவர்களாகிறோம். நம் தேசத்தின் சகல ஜாதியாரை உத்தேசித்து மட்டுமின்றி எல்லாத் தேச மக்களையும் உத்தேசித்து வேத பரம்பரையைத் தொடர்ந்து இருக்கப் பண்ண வேண்டியது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு. இதைச் செய்யாமல் எனக்குக் கனகாபிஷேகம் செய்து பிரயோஜனம் இல்லை.

பின் ஏன், கனகாபிஷேகத்துக்கு ஒப்புக் கொண்டேன் என்றால், அப்படி ஒப்புக் கொண்டால்தான் இப்படி உத்ஸவக் கூட்டமாக நீங்கள் கூடுகிறீர்கள். நான் சொல்ல வேண்டியதைக் கேட்பதற்கு நிறைய ஆள் கிடைக்கிறீர்கள். கூட்டம் சேர்த்து என் காரியத்தை நடத்திக் கொள்வதற்காகத்தான் உங்கள் ஆசையைப் பூர்த்தி பண்ணினேன்.

இப்போதிருக்கிற துவேஷம், மனக்கசப்பு, கோபதாபங்கள் போக வேண்டுமானால், வேத ரக்ஷணம் என்கிற கடமையைப் பெற்றவர்கள் அதைச் செய்து, ஸாதுக்களாக, சாந்தர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். இதன் பலன் மற்றவர்களுக்கு உடனே புரியாமல் போகலாம். ஹர்த்தால் வந்து கடைகளை மூடினால் உடனே சிரமம் தெரிகிற மாதிரி, வேத ரக்ஷணம் நிற்பதனால் ஏற்படும் சிரமம் சமூகத்திற்குப் தெரியாமல் போகலாம். ஆனால் உண்மையில் இது நின்று போவதால் ஏற்படுகிற நஷ்டமே பெரிசு. இது நாளாவட்டத்தில் புரிந்து விடும். வேத ரக்ஷணத்துக்காக என்றே சிலர் ஆயுசை அர்ப்பணித்து வாழ்வதில் பெரிய சமூகப் பிரயோஜனம் இருக்கிறது என்று எல்லாரும் காலப்போக்கில் உணர்வார்கள். கடமையில் பின்வாங்காமலே நின்றால், ஒரு நாள் இப்போது எத்தனைக்கெத்தனை துவேஷம் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பிரீதி உண்டாகத்தான் செய்யும்.

ஆதியில், மநு இருந்ததே தமிழ் நாட்டில்தான். இங்கேதான் வேத வித்யை, ஞானம், பக்தி எல்லாமே ரொம்பச் செழிப்பாக இருந்திருக்கிறது. த்ரவிடேஷு பூரிச: என்பார்கள். தமிழ்நாட்டில் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்தான் என்றில்லை; மதாந்தரங்களைச் (அன்னிய மதங்களை) சேர்ந்த வேதநாயகம்பிள்ளை, மஸ்தான் சாகிப் போன்றவர்கள்கூட தமிழ்நாட்டு மண்ணின் விசேஷத்தால் பரம வேதாந்திகளாக இருந்திருக்கிறார்கள். வேத தர்மத்துக்கு ஆதி வீடே இதுதான். அந்தத்திலும் கலி முடிவில் வேத ரக்ஷணத்துக்காக அவதரிக்கப் போகிற கல்கி திராவிட தேசத்தில் திருநெல்வேலிச் சீமையில் தோன்றப்போகிறார் என்றுதான் சொல்லியிருக்கிறது. அங்கேதான் வேத தர்மத்தில் தவறாத பிராம்மணர் இருக்கப் போகிறார்; அவருக்குப் புத்திரராகக் கல்கி அவதரிக்கப் போகிறார் என்று புராணத்தில் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தில் வைதிகத்துக்கு விரோதமே இருக்கக்கூடாது. இதைச் செய்வதற்கு விசை பிராம்மணர்களிடமேதான் இருக்கிறது என்று சொல்லத்தான் பட்டணத்துக்கு வந்திருக்கிறேன்.

மநுஷ்யனைத் தன் நிஜமான நிலைக்கு உயர்த்த எத்தனை கட்டுப்பாடுகள் வேண்டுமோ அத்தனையையும் சொன்னது நம் மதம்தான். தனி மனிதனுக்குக் பலவிதக் கட்டுப்பாடுகள்; சமூகத்துக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள். கட்டுப்பாடு என்றால் கரை போடுவது என்று அர்த்தம். கரையில்லாமல் ஒரு ஏரி இருக்க முடியுமோ! கட்டுப்படுத்தக் கூடாது என்று அப்படியே கரையை உடைத்துவிட்டால் ஜலம் முழுதும் பாழாகி ஊரும் பாழாக வேண்டியதுதான். ரொம்பவும் விசித்திரமாக இருப்பது என்னவென்றால், மிக அதிகமான கட்டுப்பாடுகள் உள்ள நம் மதத்தில்தான் இப்போது அடியோடு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது!

இதில் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பிராம்மணர்களைக் கொஞ்சம் கொஞ்சம் கட்டிப் போடலாம் என்றுதான் ஊர் ஊராகச் சுற்றி, ஓயாமல் உபந்நியாசம் பண்ணுகிறேன். பிராம்மணர்கள் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ, நான்தான் அப்படி நினைக்கிறேனோ இல்லையோ – அவர்கள் எனக்கு மற்றவர்களைவிடக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்று பொதுவில் பரவலாக அபிப்ராயம் இருக்கிறது. எனவே முதலில் இவர்களை இவர்களுடைய தர்மத்தில் கொஞ்சம் கட்டுபட்டிருக்கச் செய்தாலே, அப்புறம் மற்ற ஜனங்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்குச் சொல்லவேண்டியதை நான் உபதேசிப்பதற்கு எனக்கு ஒரு சக்தி உண்டாகும். ஆகவே என் வார்த்தைகளுக்குப் பிராம்மணர்கள் கொஞ்சம் கொஞ்சம் கட்டுப்பட்டு, இதர சமூகத்துக்கெல்லாம் நான் செய்யக்கூடியதை செய்வதற்கு சகாயம் பண்ண வேண்டும்.

சுருக்கமாக என்னச் செய்யச் சொல்கிறேன்? ஆசாரியாள் சரீரத்தை விடுவதற்குமுன் சாரமாக உபதேசம் செய்த ஐந்து சுலோகங்களில், எடுத்த எடுப்பில் என்ன சொன்னாரோ அதையேதான் சொல்கிறேன்: வேதோ நித்யம் அதீயதாம். இதையே மொழி பெயர்த்த மாதிரி ஔவையாரும் உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்கிறாள். ‘தினமும் வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும்’ என்று ஆசாரியாள் ‘பாஸிடி’வ்வில் சொன்னதையே அவ்வை ‘நெகடிவ்’-ஆக ‘ஒரு தினம்கூட அத்யயனம் பண்ணாமல் இருக்க வேண்டாம்’ என்றாள். ‘ஓதுதல்’ என்று வெறுமே சொன்னாலே ‘வேதம் ஓதுதல்’ அதாவது ‘அத்யயனம்’ என்றுதான் அர்த்தம். எழுதாமல் படிக்காமல் வாயாலேயே ஓதவேண்டியது வேதம் என்பதால் இப்படிப் பெயர் வந்தது. வேதத்துக்கு ‘ஓத்து ‘என்றே பெயர். திருக்குறளிலும் இப்படி வருகிறது. வேதங்கள் ஈசுவரனை பூஜை செய்த வேதபுரி என்கிற ஸ்தலத்துக்கு ‘திருவோத்தூர்’ – ‘திரு ஓத்து ஊர்’ என்றே பெயர் இருக்கிறது. பிரம்ம சிருஷ்டியிலிருந்து நம் வரைக்கும் வந்துள்ள இந்த ஓதும் பணி சாசுவதமாக நடக்க வேண்டும் என்று உங்கள் எல்லோருடைய காதிலும் போடத்தான், இப்படிப் பட்டணம் பட்டணமாகத் திரிந்து கொண்டு, உங்களுக்கெல்லாம் செலவு வைத்து, சிரமங்களைத் தந்து கொண்டிருக்கிறேன்.

இத்தனை ஆயிரம் பேர் கூடுகிற இடத்தில் சொன்னால் ஒரு பத்து இருபது மனசுக்குள்ளாவது அது இறங்கிக் காரியத்தில் பலிக்காதா என்று எனக்கு ஆசை.

பட்டண வாழ்க்கைக்கு வந்த பின்தான் தர்மவிருத்தமாக (முரணாக)ப் போகவேண்டிய நிர்ப்பந்தம் வந்தது. இங்கேதான் நவநாகரிகத்தின் ஆட்டம் அதிகம். ஆகையால் இனிமேல் பட்டணங்களுக்குப் போவதில்லை என்று நடுவாந்தரத்தில் நான் ஒரு தீர்மானம் பண்ணிக் கொண்டு கிராமங்களிலேயே இருந்து வந்தேன். ஆனால் பட்டணத்துக்காரர்கள் ‘வரவேண்டும் வரவேண்டும்’ என்று ரொம்பவும் பிரீதியோடு வற்புறுத்தினார்கள். அப்போது அவர்களிடம், நம்முடைய பழைய வழிக்கு நீங்கள் கொஞ்சமாவது திரும்பினால்தான் வருவேன். உடனே, அத்யயனத்துக்குத் திரும்பாவிட்டாலும் பரவாயில்லை. அதற்காக் ஏற்பட்ட வெளி அடையாளங்களையாவது வைத்துக் கொள்ளுங்கள். வேதத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தீவட்டிக்காரன் என்றால் அதற்குச் சில அடையாளம் சொல்லியிருக்கிறது. பியூன் என்றால் ஒரு டவாலி, யூனிஃபாரம் இருக்கிறதோ இல்லையோ? அப்படித்தான் இவனுக்கும் சிகை (குடுமி), பஞ்சகச்சம் இவைகளை அடையாளமாகச் சொல்லியிருக்கிறது. இவையெல்லாம் ‘நான் உசத்தி’ என்று காட்டுகிற (Superiority-க்கு) அடையாளம் (Symbol) இல்லை. நான் சமஸ்த ஜனசமூகத்துக்கும் சேவகன், வேதத்தின் சேவகன் என்று தெரிவிக்கவே அவை இருக்கின்றன. இந்த அடையாளங்களை நீங்கள் போட்டுக் கொண்டால்தான் “நான் பட்டணத்துக்கு வருவேன்” என்று நான் ‘கிராக்கி’ செய்து வந்தேன்.

நான் கிராக்கி செய்தது பலிக்கவில்லை. நடை உடை பாவனைகளை மாற்றிக் கொள்ள இஷ்டம் இல்லையோ? அல்லது துணிச்சல் இல்லையோ? ஆனால் என்னை வருந்தி வருந்திக் கூப்பிடுவதும் நிற்கவில்லை. கடைசியில், ‘நாம் சொன்னதை செய்யாவிட்டாலும்கூட நம்மை இவர்கள் கூப்பிடுவது நிற்கவில்லை. அதனால் இன்னமும் நம்மிடம் ஒரு பிரியம், அபிமானம், மரியாதை இருக்கிறது என்றுதான் அர்த்தம். சரி, இவர்கள் ஆசைக்குத்தான் விட்டுக் கொடுத்து, பட்டணத்துக்குப் போகலாமே. அங்கேபோய் இவர்களுக்கு நடுவிலேயே உட்கார்ந்து கொண்டு நம் ஆசையைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஏதாவது துளி பலிக்கிறதா என்று பார்ப்போமே! மடம் என்று ஒரு ஸ்தாபனம் (institution) இருப்பதே ஜனங்களின் தோஷங்களுக்கு நிவிருத்தி சொல்லி, அவர்களை நல்வழிப்படுத்துவதற்குத்தானே. நமக்குக் குறையாகத் தோன்றுவதை, அவர்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதானே நம் கடமை?’ என்று முடிவு பண்ணினேன். கிராக்கி பண்ணிக் கொண்டதை விட்டுவிட்டு மறுபடி பட்டணத்துக்குப் போக ஆரம்பித்தேன்.

ஜனங்கள் ரொம்ப சந்தோஷத்துடன் எனக்கு உபசாரம் பண்ணி, பேட்டைக்குப் பேட்டை கொட்டகை, வீதி பவனி எல்லாம் செய்கிறபோது, அவர்கள் மனசைப் புண்படுத்துகிற மாதிரி தோஷங்களைச் சொல்லலாமா? அவரவருக்கும் வாழ்க்கையில் எத்தனையோ சிரமங்கள், இப்போது லோகம் முழுதும் இருக்கிற தத்தளிப்பில் ஒவ்வொருவனுக்கும் உள்ள கஷ்டங்களுக்கு எல்லையே இல்லை. இதன் நடுவே கொஞ்சம் கஷ்டத்தை மறந்திருக்கலாம் என்று இங்கே வருகிறார்கள். அவர்களிடம் இது தப்பு, அது தப்பு என்று சொல்லி மனஸைப் புண்படுத்தலாமா? அல்லது ஏதோ வந்தவர்களெல்லாம் சந்தோஷப்படுகிற மாதிரியே (பேச்சுக்) கச்சேரி செய்துவிட்டுப் போய்விடலாமா?

அவர்கள் வாழ்க்கைக்கு, சமூக க்ஷேமத்துக்கு நல்லதாக எதையும் சொல்லாமல், தாற்காலிக சந்தோஷமாகக் கச்சேரி செய்வதென்றால் அதற்கென்றே சங்கீதக்காரர்கள் இருக்கிறார்கள். ஆகையால் என்னைக் கச்சேரிக்கு கூப்பிட வேண்டாம். நான் பணத்துக்குக் கச்சேரி செய்கிறேன் என்றால், அப்போதைக்கு சந்தோஷப்படுத்திவிட்டுத்தான் போக வேண்டும். ஆனால் பணம் வாங்க நான் வரவில்லை. மடத்துக்கு இவ்வளவு பணம் தேவையில்லை. அதிகமாகப் பணம் வந்தால் இன்னும் அதிகமாக ஸந்தர்ப்பணை, ஸதஸ் என்று நடத்தி உடனே செலவாகித்தான் போகிறது. எனவே இவ்வளவு பணம் இல்லாமலே கிராமங்களில் சுற்றிக் கொண்டு மடத்தை நடத்திவிடலாம். ஆனால் ஜனசமூகம் முழுவதற்கும் நல்லதை எடுத்துச் சொல்லப் பிரயத்தனம் செய்ய வேண்டும். மடத்தின் குறிக்கோள் (purpose) இதுதானே!

இப்படியெல்லாம் யோசித்துக் கடைசியில், “கேட்பவர்கள் காரியத்தில் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது அவர்கள் விஷயம். அவர்களுக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி, நம்-கடமை, ‘அப்பா, இது இதுகள் ஆத்ம சிரேயசஸுக்கும் லோகக்ஷேமத்துக்கும் நல்லது. நீ இவற்றைச் செய்ய உன்னாலான பிரயத்தனங்களைப் பண்ணிப் பாரப்பா’ என்று சொல்வதுதான்; இவ்விஷயத்தைத் திரும்பத் திரும்பக் காதில் போடுவதுதான் நம் ‘டியூட்டி (கடமை)’” என்ற முடிவிற்கு வந்தேன். இப்படி வெறும் வாய் வார்த்தையாக சொல்லுவதற்குமேல் நான் ஒன்றும் தண்டித்து, சிக்ஷை பண்ண முடியாது. எல்லாம் ஒன்றாகிவிட வேண்டும் என்கிற கட்சிகளில்கூட ஒழுக்கக் குறைவுக்கு நடவடிக்கை (disciplinary action) என்று எடுத்து, சிலரைத் தீண்டாதார் மாதிரி வெளியே தள்ளி விடுகிறார்களே (expel) அம்மாதிரி பிரஷ்டம் (excommunicate) பண்ண எனக்கு அதிகாரமில்லை. அத்தனை அதிகாரம் ‘ரைட்’ நான் கேட்கவும் இல்லை. காதில் போடுவதுதான் என்னால் முடிந்தது. நான் கேட்கிற ‘ரைட்’ அதுதான். என்னால் முடிந்ததைச் செய்யாமலிருக்ககூடாது என்றே வந்திருக்கிறேன்.

எங்கேயோ யாரோ ஒருத்தர் நான் சொல்வதை எடுத்துக் கொண்டு ஆரம்பித்துவிட்டால் போதும். அதுவே துளித்துளியாக வளர்ந்துவிடும். கொஞ்சம்கூட நியாயமில்லாத இயக்கங்களையெல்லாம் பத்துபேர் கூப்பாட்டில் ஆரம்பித்து மகாபெரிசாக வளர்ந்துவிடவில்லையா? நல்லதற்கு இப்படிப் பத்துப்பேர் சேர்ந்தால் போதும்.

அப்படிப்பட்டவர்கள் கிடைப்பார்கள் என்று நம்பிக் கொண்டுதான் நானும் விடாமல் சொல்கிறேன். உங்களிடமெல்லாம் நான் ரொம்பவும் அதிருப்திப்படுவதாக நினைத்துத் துக்கப்பட வேண்டாம். நவீன வாழ்க்கை முறையின் சிக்கல், கோளாறு எனக்குத் தெரியாமலில்லை. அதிலே மாட்டிக் கொண்டால், விடுபடுவதில் உள்ள சிரமம் தெரிகிறது. இத்தனைக்கும் நடுவில் அங்கங்கே கும்பாபிஷேகம், பஜனை, பிரவசனம் என்று நீங்கள் நிறைய ஏற்பாடு செய்வதைப் பார்த்தால் – இவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் – சந்தோஷமாகவே இருக்கிறது. இவற்றைப் பார்த்தே, இவை எல்லாவற்றுக்கும் எது ஜீவாதாரமோ, உயிர் நிலையோ அந்த வேதரக்ஷண தர்மத்தை எடுத்துச் சொல்லலாம் என்று எனக்கே ஒரு நம்பிக்கை, தெம்பு வந்திருப்பதால்தான் இதையெல்லாம் சொல்கிறேன். சாஸ்திர விரோதமான தப்புகளுக்கு இப்போது நிறைய இடமிருந்தாலும், வருங்காலம் என்ன ஆகுமோ என்ற விசாரத்துக்கு நிறைய இடம் இருந்தாலும், க்ஷேமத்துக்கான அறிகுறிகளையும் அங்கங்கே பார்க்கிறேன், ‘எல்லாம் போய்விட்டது; பாக்கியிருப்பதும் போய்விடும்’ என்று அழாமல் வளர்ந்து வருகிற இந்த நல்ல அம்சங்களை மேலும் விருத்தி செய்து, வளர்க்க வேண்டியதையும் எடுத்துச் சொல்லி வருவதுதான் முறை; அப்படிச் செய்தால் தப்பு வழியில் போகிறவர்களுக்கும் நாளடைவில் க்ஷேம வழியில் புத்தி வரும்.

இந்த நம்பிக்கையோடு பழைய வழிமுறைகளைக் காதில் போடுகிறேன். ‘பழையது’ என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவேயில்லை. ஆனால் ‘பழையது’ என்பதாலேயே அது உதவாதது என்று ஒதுக்கிவிடவும் கூடாது. புதிசு, பழசு என்பதால் ஒன்று வேண்டும், வேண்டாம் என்பதேயில்லை. அதன் பிரயோஜனம் என்ன என்பதைப் பரீட்சித்துப் பார்த்தே எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது தள்ள வேண்டும். அல்லது இருக்கிற புதிசையும் எடுத்துக் கொள்வோம். தப்பாக இருக்கிற பழசைத் தள்ளுவோம். அப்படியே புதிசில் இருக்கிற கெட்டதுகளைத் தள்ளுவோம். பழசில் இருக்கும் நல்லதுகளை எடுத்துக் கொள்வோம். காளிதாசன்கூட இப்படித்தான் சொல்கிறான்.

ஆசையாகக் கூப்பிட்டு எனக்கு உபசாரம் செய்கிற உங்களிடம், முதலில் உங்களுடைய புது வழிகளில் இத்தனை கெடுதல் இருக்கிறது என்று சொல்ல எனக்கே மனசு வரவில்லைதான். மற்ற விஷயங்களைப் பற்றி உபந்நியாசம் செய்தேன். பக்தி, ஞானம், கலாச்சாரம், ஊர்க்கதை எல்லாம் சொன்னேன். அதெல்லாம் நல்ல விஷயங்கள்தான். ஆனாலும் அவை எல்லாம் கிளை, பூ, பழம், மாதிரி என்றால், அவற்றுக்கெல்லாம் ஆதாரமாக ஒரு வேர் இருக்கிறது – அது வேதம்தான். வேரான வேதரக்ஷ்ணம் இல்லாமல் வேறு எதுவுமே இல்லை. இதை விட்டுவிட்டு மற்றதைச் சொல்லிப் பயனில்லை. இந்த மூல கைங்கரியத்தைச் சொல்வதென்றால், குறைகளைச் சொல்லத்தான் வேண்டும். மற்ற விஷயங்களைப் பேசிக் கொஞ்ச நாளைக் கழித்தபின், இத்தனை நாள் உங்களில் ஒருத்தனாக பழகிவிட்டதால், எனக்கே உங்களிடம் சிநேகிதம், ஸ்வாதீனம் வந்துவிட்டது. குறையைச் சொல்ல முன்போலத் தயங்கவேண்டாம் என்று வேத விஷயத்துக்கு வந்திருக்கிறேன்.

இந்தக் காரியத்துக்குத்தானே நான் வந்திருப்பதே! என் காரியத்தை எடுத்த எடுப்பில் சொல்லலாமா? என்னை உபசரித்து சந்தோஷப்படுகிற உங்கள் காரியத்தை நீங்கள் முடித்துக் கொண்டுவிட்ட பிறகு, இனிமேல் என் காரியத்தைச் சொல்லலாம் என்று சொல்கிறேன். வேத ரக்ஷணம்தான் அந்தக் காரியம்.

இதற்காக, இத்தனை நாள் உங்களை இத்தனை சிரமப்படுத்தி, இத்தனை பணச்செலவு வைத்தது போதாது என்று விநோபா மாதிரி நானும் ஒரு “ஸம்பத்தி தானம்” கேட்கிறேன். அவரவரும் அத்யயனம் செய்து, தங்கள் பிள்ளைக்கும் செய்விக்க வேண்டும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இது அவசியம் செய்ய வேண்டியதுதான். அதைவிட அவசியமாக முதலில் செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு; அதாவது, இப்போது மூச்சைப் பிடித்துக் கொண்டு நடந்து வருகிற வேத பாடசாலைகள் மூடிப்போகாமல் அவற்றைத் தொடர்ந்து நடைபெறப் பண்ண வேண்டும். இதற்காக வித்யார்த்திகள் (மாணவர்கள்) அத்யாபகர்கள் (ஆசிரியர்கள்) இருவருக்கும் நிதி உதவி செய்ய வேண்டும். இன்னும் பல பாடசாலைகளை வைத்து வேத மூலத்தை சொல்லிக் கொடுப்பது, அப்புறம் அதன் அர்த்தத்தை – வேத பாஷ்யத்தை – சொல்லிக் கொடுப்பது, இவற்றில் பரீட்சை வைப்பது ஆகிய காரியங்களைச் செய்ய வேண்டும். படிக்கிற காலத்தில் வித்தியார்த்திக்கு ஸ்டைஃபண்ட் (உபகாரச் சம்பளம்) கொடுக்க வேண்டும். பரீட்சையில் பாஸ் பண்ணியவுடன் மார்க்கைப் பொறுத்துக் கணிசமான சம்பாவனை செய்ய வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் வேதம் இருக்கும். இதற்கெல்லாம் மூலதனம் வேண்டும்.

இதற்காக சில டிரஸ்ட்கள் இருக்கின்றன. பலர் தனித்தனியாக பூதானம் செய்திருக்கிறார்கள். விநோபா மாதிரி பூதானம் வாங்கினேன். இப்போது உச்ச வரம்புகள் சட்டங்கள் வந்துவிட்டன. இனி நில உரிமைகள் எப்படியிருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதனால்தான் ‘ஸம்பத்திதான்’ கேட்கிறேன்.

அதாவது ஒவ்வொருவரும் மாஸா மாஸம் தங்கள் ஜன்ம நக்ஷத்திரத்தன்று என்னை நினைத்துக் கொண்டு (நான் தானே கொடுக்கச் சொல்லிக் கேட்கிறேன்!) ஒரு ரூபாயை ஒரு உண்டியில் போட்டுவிட வேண்டும். ஒரு வருஷம் ஆனதும் இந்த 12 ரூபாயை வேத ரக்ஷண நிதிக்கு அனுப்பிவிட வேண்டும். இப்படி அனுப்புகிறவர்களுக்கு இங்கே மடத்தில் நடக்கிற பூஜைப் பிரசாதம் – விபூதி, குங்குமம், மந்திராக்ஷதை – மாஸா மாஸம் அவர்கள் ஜன்ம நக்ஷத்திரத்தன்று அனுப்பி வைக்கப்படும். வருஷந்தோறும்* இந்த தர்மத்தைப் புதுப்பித்துக் கொண்டிருந்தால், சந்திரமௌலீசுவரப் பிரசாதமும் நிற்காமல் அகத்தைத் தேடி வந்துகொண்டிருக்கும்.

எத்தனையோ செலவு செய்கிறீர்கள். வரிகள் (tax) கொடுக்கிறீர்கள். இது நான் போட்டிருக்கிற டாக்ஸ். மாஸம் ஒரு ரூபாய் எனக்காகக் கொடுக்க வேண்டும். எல்லோரும் அப்படிச் செய்தால் பல துளி பெறு வெள்ளம் என்று வேத ரக்ஷணத்துக்கும் பெரிய பலம் கிடைக்கும்.

அடுத்த சந்ததிக்கு எப்படியாவது வேதத்தை ரக்ஷித்துக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆலோசனைதான் எனக்கு எல்லாவற்றையும்விட முக்கியமாக இருக்கிறது.

வேதம் ஏன் இருக்க வேண்டும் என்றால், முதலில் அந்த மந்திர சப்தம் அதிலுள்ள யக்ஞாதி கர்மாக்கள் லோகத்தில் இருந்து கொண்டிருந்தாலே சகலருக்கும் பெரிய க்ஷேமம். இதனால் மழை, தன தானிய சுபிக்ஷம் உண்டாவதோடு ஜனங்களின் எண்ணங்களும் உத்தமமானதாக ஆகும். இரண்டாவதாக உலகம் முழுவதற்குமான ஒரு மதமாக வைதிகமே இருந்திருக்கிறது என்பது சகல தேசத்தவருக்கும் தெரிந்து, இதனாலேயே ஓர் ஒற்றுமை, சாந்தி ஏற்பட வேண்டுமானால், நம் தேசத்தில் வேதத்துக்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்த (dedicate) ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இப்படியாக இன்றைக்கும் என்றைக்கும் நம் தேசத்துக்கு மட்டுமின்றி லோகம் முழுவதற்கும் சுபிக்ஷத்தையும் ஆத்ம சாந்தியையும் உண்டாக்குவதற்காகத்தான், வேத ரக்ஷணத்தை அதி முக்கியமாகச் சொல்லி வருகிறேன்.

வேதம் படிக்காமல் அடுத்த தலைமுறையில் ஒரு பிராம்மணன்கூட இருக்கக்கூடாது. அதட்டி மற்றவர்களை அதிகாரம் செய்வதற்காக பிராம்மணன் இருக்க வேண்டும் என்று சொல்லவேயில்லை. நம் தேசம் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ஒன்றாகியிருப்பதாக, இவனிடம் வந்திருக்கிற ஆதிமூலமான தர்மத்தை இவன் காப்பாற்றிக் கொடுக்க வேண்டும் என்றே சொல்கிறேன்.

இங்கே நம் தேசத்தில் இப்படி ஒரு சின்ன கூட்டம் இருந்தால் லோகம் முழுவதும் எப்படி க்ஷேமமடையும் என்றால்… பவர் ஹவுஸ் இருக்கிறது. அங்கே நாலுபேர்தான் வேலை செய்கிறார்கள். ஆனால் ஊர் முழுக்கப் பிரகாசமாய் விடுகிறது. அந்த நாலுபேர் வேலை செய்யாவிட்டால் ஊரே இருட்டாகி விடுகிறது. இப்படியே லோக மங்கள தீபமான வேதத்தைத் தூக்கிப் பிடிக்க இங்கே கொஞ்சம்பேர் இருந்தால் போதுமானது. இதற்கான விதை முதலை எப்படியாவது காப்பாற்றித்தந்துவிட வேண்டும் என்கிற காரியத்துக்கே வந்திருக்கிறேன். இதற்காகவே எனக்குச் செய்கிற உத்ஸவங்களுக்கு ஒப்புக் கொண்டேன். இந்த உத்ஸவங்களில் போட்ட ‘ஜய ஜய சங்கர’, ‘ஹரஹர சங்கர’ கோஷம்தான் இத்தனை பேரை இங்கே என் பேச்சை கேட்க இழுத்து வந்திருக்கிறது. இப்படி ஒரு கோஷம், கீஷம் இருந்தால்தான் ஆள் சேர்ந்து அதன்மூலம் நாம் காரியத்தைப் சாதித்துக் கொள்ளப் பார்க்கலாம் என்றே ஒப்புக்கொண்டேன். எனக்கு உத்ஸவம் நடத்தியவர்கள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும்; கேட்பதற்கு பிரயாசையாவது படவேண்டும்.

சிரமத்தோடு சிரமமாக எனக்காகவும் கொஞ்சம்படுங்கள். உங்களுக்காக எத்தனையோ காரியம் செய்து கொள்கிறீர்கள் – ஆபீஸ், பொழுதுபோக்கு இப்படி பலவிதமான பிஸினஸ் பண்ணுகிறீர்கள். எனக்காக இந்த வேத ரக்ஷணத்தைப் பண்ணுங்கள்.

எனக்காக, உங்களுக்காக என்று வித்தியாசம் என்ன? நான், நீங்கள் எல்லாம் ஒன்றுதான். என் காரியம் உங்கள் காரியம்தான். வேதத்தை ரக்ஷித்துவிட்டால் அதுதான் எல்லோருக்கும் பரம சிரேயஸைத் தருகிற ஒரே காரியம். இதைத் செய்வதால் க்ஷேமம் உங்களுக்கு, பெயர் எனக்கு.


* தபால் செலவு அதிகரித்திருப்பதால், இப்போது ஓர் ஆண்டுக்கான தொகை ரூ17 ஆகியிருக்கிறது. அனுப்ப வேண்டிய முகவரி , Veda Rakshana Nidhi Trust,”Sreyas” VI Main Road, Nanganallur, Chennai-600061

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is வேத ரக்ஷணம் ஏன் ஆயுட்காலத் தொழிலலாக வேண்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  நாகரீக வியாதிக்கு மருந்து
Next