சமயமும் சமூகமும் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

சமய விதிகளில் சில லௌகிகத்தில் அசௌகரியம் உண்டாக்குகின்றன; தர்ம சாஸ்திர விதிகளில் சில சமூக வாழ்வில் (Social Life) கஷ்டம் உண்டாக்குகின்றன – என்பதைக் காரணம் காட்டிச் சீர்திருத்தக்காரர்கள் சாஸ்திரங்களை மாற்றுகிறார்கள்.

நமது தர்ம சாஸ்திரங்களின் அடிப்படையையும் லக்ஷியத்தையுமே இந்த சீர்திருத்தக்காரர்கள் அறிந்திருக்கவில்லை. இவர்கள் ‘சமூக வாழ்வு’ (Social life) என்கிறபோது, ஆத்மார்த்தமானதைக் குறிப்பிடவில்லை. புதுப்புது அரசியல் முறைகள், ஸயன்ஸ்கள், வியாபார மாறுதல்கள், பொருளாதாரம், ஃபாஷன்கள் இவற்றையே சமூக வாழ்வு என்கிறார்கள். இவை யாவும் பலவிதமான மாறுபாடுகளுக்கு ஆளாகிக்கொண்டிருப்பவை. வெறுமே லௌகிகத்தை மட்டும் சமூகம் குறிக்கோளாகக் கொண்டிருந்தால், சமூக வாழ்வுக்காக உள்ள விதிகளும் அதற்கேற்ப மாறலாம். ஆனால், நம் சாஸ்திரங்கள் சமூக வாழ்வை இப்படி லௌகிகமாக மட்டும் கருத்தில் கொண்டவை அல்ல, அவை ஆத்மார்த்தமானவை, மனிதனானவன் சம்ஸாரத்திலிருந்து விடுபடுவதற்கு வழி சொல்வதே சாஸ்திரத்தின் லக்ஷியம். லௌகிகமாக மட்டுமே அரசியல், அறிவு நூல்கள், பொருளாதாரம் ஆகியன உள்ளபோது தான் அவை மாறும். நம் பண்பாட்டிலோ வெறும் லௌகிகம் என்று எதுவுமே இல்லாமல் ராஜாங்கம், சமூக வாழ்வு, அறிவு சாஸ்திரம், பொருளாதாரம், கலைகள் ஆகிய எல்லாமும் ஆத்ம அபிவிருத்திக்கு உபாயங்களாகவே உள்ளன. ஆத்மார்த்தமான சத்தியங்கள் எந்நாளும் மாறுவதில்லை. மாறுகிற சமூகத்தை அந்த மாறாத சத்தியத்தில் நிலைப்படுத்துவதற்காக சாஸ்திரங்கள் விதித்த நியதிகளும் மாறாதவையே.

லட்சியம் லௌகிகமாக மட்டும் இருந்தால், அவ்வப்போது சமூக வாழ்வுக்கான விஷயங்களை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், ஆத்மக்ஷேமத்தையே லட்சியமாக வைத்து, அதற்கு அனுசரணையாக லௌகிக வாழ்வுக்கு விதிகள் செய்து தருகிற போது, இவ்விதிகளை மாற்ற முடியாது. தர்ம சாஸ்திர விதிகள் லௌகிகத்தில் அசௌகரியமாயிருக்கிறது என்று குறைபடுவதே பொருந்தாது. ஏனென்றால், தர்ம சாஸ்திரம் இகலோக சௌக்கியத்தை முக்கியமாகவே கருதவில்லை. இகலோகத்தில் பலவித அசௌகரியங்களை அனுபவித்தாவது பரலோக சுகம் பெறுவதற்கே அது உபாயம் சொல்கிறது. ஆனபடியால், அதை உலக ரீதியில் நமது சௌகரியப்படி மாற்ற வேண்டும் என்பது நியாயமில்லை.

சீர்திருத்தக்காரர்களை குற்றம் சொல்லிப் பயனில்லை. அவர்கள் இப்படிக் கருதுவதற்குக் காரணம். நம்முடைய கல்வி முறையே ஆகும். மற்ற தேசங்களில் அவரவருடைய மதத்துக்கும் படிப்பு முறைக்கும் இடையே முரண் இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நம் தேசத்திலோ வெள்ளைக்காரர்கள் காலத்தில் ஏற்பட்ட பள்ளிக்கூடங்கள் நம் மதத்தொடர்பே இல்லாமல் உருவாயின. ஜீவனத்துக்காக எல்லோரும் இந்தப் படிப்பிலேயே போய் விழும்படி ஆயிற்று. குழந்தைப் பருவத்திலேயே இவ்வாறு சொந்த சாஸ்திரங்களில் தொடர்பில்லாமல் அந்நிய முறையில் ஊறியதால், நம் புராதன சாஸ்திரங்களில் பற்றோ நம்பிக்கையோ ஏற்படவே வழி இல்லாமல் ஆகிவிட்டது. சாஸ்திரங்களின் உத்தேசம் இன்னது என்றே தெரியாததால், அவற்றின் விதிகளையும் மனம் போனபடி மாற்றலாம் என்று எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

புராணங்கள் புளுகு மூட்டை, சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் குழந்தைகள் கேட்டு வருகிறார்கள். இவர்களுக்கு எப்படி நம் மத அநுஷ்டானங்களிலும் ஆசாரங்களிலும் பிடிப்பு ஏற்பட முடியும்?

சிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அநுஷ்டானங்களை விடாமல் பற்றி ஒழுகி உத்தமமாக வாழ்கிற சிஷ்டர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும்! இந்திரிய அதீதமான அநுபவம் பெற்ற ரிஷிகள் பிரத்யக்ஷ அநுபவத்தின்மீது தந்த கிரந்தங்களே ஆத்ம க்ஷேமத்துக்கு வழிகாட்டுபவை என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும். இகலோக சௌக்கியம், சமூக வாழ்வு இவற்றையும் ஆத்ம க்ஷேமத்துக்கு உகந்த முறையில் ஒழுங்குபடுத்தித் தரவே ரிஷிகள் சாஸ்திரங்களைத் தந்தார்கள் என்ற விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் லௌகிக சௌக்கியத்துக்கும் மேலாக சமய விதிகளைக் கருதி அநுசரிக்கிற அறிவு நாட்டில் வளரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is நாகரீக வியாதிக்கு மருந்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  தலைவலிக்குப் பரிகாரம் சிரச்சேதமா ?
Next