நம்முடைய மதம் என்பது சைவம், வைஷ்ணவம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கின்றது. ‘இதை ‘இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதந்தான் என்று சொல்வதா?’ என்று சந்தேகம் வரும்.
கிறிஸ்துவ மதத்திலும் காத்லிக், ப்ராடெஸ்டன்ட் என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும், ஒரே மதம் என்று சொல்கிறார்கள். காரணம் என்ன? இரண்டு பேரும் பொதுவாகப் பூஜை செய்ய ஒரே கர்த்தரின் பெயரைச் சொல்லி வணங்குகிறார்கள். புத்த மதத்தில் ஹீனயானம், மஹாயானம் என்று இரண்டு மதமாகச் சொல்வதில்லை! காரணம் அவர்கள் இரண்டு பேருக்கும் புத்தரே தலைவர்.
இப்படி, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரே ஸ்வாமி இருக்கிறாரா? இல்லை. இப்போது சாதாரண வைஷ்ணவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு ஆசாரிய புருஷர்களாக இருப்பவர்கள் சிவன் கோயில் பக்கமே வரமாட்டார்கள். விஷ்ணுதான் அவர்களுக்கு ஸ்வாமி, அவர்களுக்கு சிவன் ஸ்வாமியே அல்ல. விஷ்ணுவினுடைய பக்தர்களுக்கு, சிவனும் ஒரு பக்தன்தான் என்பது அபிப்பிராயம். சைவர்களிலும் தீவிரவாதிகள், ‘விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்’ என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?
‘அது போகட்டும்; இவர்கள் இரண்டு பேரையும் ஒரு மதம் என்று சொல்ல இரண்டு பேருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு மதப் புஸ்தகமாவது இருக்கிறதா?’ என்று பார்க்கலாம். கிறிஸ்துவம் இஸ்லாம் முதலியவற்றில் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவாக பைபிளும் குர் ஆனும் இருப்பதுபோல், சைவ வைஷ்ணவருக்குப் பொதுவான பிரமாண கிரந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். சைவர்கள் தேவாரம் முதலிய திருமுறைகளைத் தங்கள் மத நூல்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்களோ நாலாயிர திவ்வியப் பிரந்தம் தமது ஆதார நூல் என்கிறார்கள். புஸ்தகங்களும் வேறாகப் போய்விட்டன. ஸ்வாமியும் வேறாகப் போய்விட்டார். அப்படி இருக்க இரண்டு பேரையும் ஒரே மதம் என்று எப்படிச் சொல்லுவது?
நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் ‘ஹிந்து’ என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம். இப்போது ‘ஹிந்து சமூகம்’ என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாகிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு ‘ஹிந்து’ என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!
அப்படியானால், நமக்கு ஒரு மதமா, இரண்டு மதமா? வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே, சைவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே என்று சொன்னாலும் உண்மை அப்படி அன்று. இப்போது இருக்கிறவர்களுடைய மனோபாவத்தைக் கவனித்தால் அது வேறு மதம், இது வேறு மதம் என்று சொல்லக்கூடிய ஹேது வளர்ந்திருக்கிறதே தவிர, அவர்களுடைய முதல் நூல்களைப் பார்த்தோமானால் உண்மை தெரியவரும். சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற இரண்டையும் பாடினவர்கள் தங்களது நூலே “முதல் நூல்” என்று சொல்லவே இல்லை; நினைக்கவே இல்லை. அவர்கள் தங்களை மதஸ்தாபகர்களாகவும் நினைத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் காலத்துக்கு முந்தியே ஒரு மதம் இருந்திருக்கிறது. ஆழ்வார்கள் பாடுவதற்கு முந்தி வைஷ்ணவம் இருந்திருக்கிறது. நாயன்மார்களுக்கு முந்தியும் சைவம் இருந்திருக்கிறது. இவற்றுக்கு முதல்நூல் எது என்று பார்த்தால் மறைகள்தாம்: அதாவது வேதங்களே. சைவர்கள் ஈசுவரனையே,
‘வேதமோ டாறங்க மாயி னானை’
‘வேதநாதன், வேத கீதன், ஆரணன்காண்’
என அநேக இடத்தில் சொல்கிறார்கள். வைஷ்ணவ நூல்களிலும் இப்படித்தான், ‘வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருப்பதை நாம் சரியாகக் கவனித்தால், இவ்விருவர்களுக்கும் மூலப் புஸ்தகம் ஒன்றே என்பது தெளிவாகும். இப்போது சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் முக்கியமாக இருக்கிற தேவாரமும், பிரபந்தமும் ஒரே பொது மூலமான வேதத்தை ஆதாரமாகக் கொண்டு உண்டானவையே. தேவாரத்தையும் பிரபந்தத்தையும் பாடிய மகான்கள் எங்கு பார்த்தாலும் வேதத்தின் பெருமையையே பேசுகிறார்கள். எந்த க்ஷேத்திரத்தை வர்ணித்தாலும் ‘அங்கே வேத ஒலி மிகுந்திருந்தது; ஹோமப் புகை மிகுந்திருந்தது; வேதம், அதன் அங்கங்கள் எல்லாம் தழைத்திருந்தன’ என்று பரவசமாகச் சொல்கிறார்கள். ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதத்தைப் பற்றியும் சொல்கிறார்கள்.
வேதம் ஒரே தத்துவத்தைப் பல மூர்த்திகளாக்கித் தந்திருக்கிறது. வேதம் என்ற நதியில் இந்த ஒவ்வொரு மூர்த்தி வழிபாடும் ஒரு துறை மாதிரி, ‘வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க’, என்று இதையே சேக்கிழார் சுவாமிகள் சொல்கிறார்.
இப்படியே சாக்தம், காணபதம் (பிள்ளையார் உபாஸனை), கௌமாரம் (முருகன் வழிபாடு), ஸௌரம் (சூரியனையே பரமாத்மாவாக உபாஸிப்பது) முதலான எதை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதார நூல்களில், இந்த வழிபாட்டுக்கு ஆதாரம் வேதத்திலேயே இருக்கிறது; ‘எங்கள் ஸ்வாமி வேதத்திலேயே ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவர்’ என்றே சொல்லியிருக்கும்.
ஆக ‘ஹிந்து’ மதம் என்ற பெயருக்குள் உள்ள அத்தனை பிரிவுக்கும் ஆதாரமான நூல் ஒன்றே என்றாகிவிட்டது.
அந்த ஆதாரமான வேதத்தில், சைவ-வைஷ்ணவ-ஸ்மார்த்த சம்பிரதாய ஆசாரியர்கள் எல்லோரும் தசோபநிஷத்துக்கள் என்கிற பத்து உபநிஷதங்களுக்குப் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். இந்த உபநிஷதங்களுள் பிரம்மம் ஒன்றே ஸ்வாமி என்றுதான் சொல்லியிருக்கிறது. அதற்கே ஓரிடத்தில், கடோபநிஷத்தில் விஷ்ணு என்றும், இன்னோரிடத்தில் மாண்டூக்ய உபநிஷத்தில் சிவம் என்றும் பெயர் சொல்லியிருக்கிறது. வேத சம்ஹிதைகளில் வருகிற மித்ரன், வருணன், அக்னி, இந்திரன் முதலான அத்தனை தெய்வங்களும்கூட இந்த சத்தியத்தின் பல பேர்கள்தான் என்றும் அதே வேதத்தில் சொல்லியிருக்கிறது. (ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி)
ஆனபடியால், நம் மதத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் பொதுப் புஸ்தகம், பொது ஸ்வாமி இரண்டும் இருப்பதாக ஆகிவிட்டது. பொதுப் புஸ்தகம் வேதம், பொது ஸ்வாமி பிரம்மம். எனவே, சந்தேகமில்லாமல் நாம் எல்லாரும் ஒரே மதந்தான் என்று தீர்மானமாகச் சொல்லிக்கொள்ளலாம்.
அந்தப் பொது ஸ்வாமியையும் நமக்குக் காட்டிக் கொடுத்திருப்பது பொதுப் புஸ்தகமான வேதம்தான். ஸ்வாமியைக் காட்டிக் கொடுத்திருப்பதோடு, ஆசாமிகளான நாம் எப்படி வாழ்க்கை நடத்தி முடிவில் அந்த ஸ்வாமியாகவே ஆகவேண்டும் என்பதற்கும் நமக்கு வழிகாட்டிப் பரமோபகாரம் செய்வது இந்த வேதம்தான். இகம், பரம் இரண்டுக்கும் அதுதான் நமக்குக் கதி; அதுதான் இத்தனை சம்பிரதாயங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் மூலம், வேர். நம்முடைய மதப்பிரிவுகள் எல்லாம் வேதத்திலிருந்தே வந்தவை. வேர் ஒன்று; கிளைகள் பல.
ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும். அந்த மூலத்தை மங்காமல் ரக்ஷிக்க வேண்டும் என்பதே நம்முடைய தலையாய கடமை.