பரோபகாரம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பிதிர்கடன், பரமேசுவர பூஜையான வேத யக்ஞம் எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு படைப்பது ஆகியவற்றை வைதிக மதம் விதிக்கிறது. திருவள்ளுவரும் இதே தர்மத்தைத்தான் விதித்திருக்கிறார்;

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

வள்ளுவர் வேதப் பிரமாணத்தை மதித்தே குறள் எழுதினார் என்பதற்கு மிகவும் ஆதரவாக இருக்கப்பட்ட குறள்களில் இதுவும் ஒன்று. ‘திருவள்ளுவர் வைதிக மதஸ்தரே அல்ல; அவர் ஜைனர் அல்லது பௌத்தர் அல்லது எல்லா மதங்களையும் கடந்தவர். வேதம் கூறும் தர்மங்களுள் ஹிம்ஸையுள்ள யாகத்தைத் திருவள்ளுவர் வெளிப்படையாகவே கண்டிக்கிறார்’ என்று சிலருக்கு அபிப்பிராயம். கீழ்க்கண்ட குறளை மேற்கோள் காட்டுகிறார்கள்;

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று

‘ஹவிஸை’ அக்னியில் ஆஹுதி செய்து ஆயிரம் யாகம் செய்வதைவிட, ஒரு பிராணியையும் வதைத்து உண்ணாமலிருப்பது சிரேஷ்டம்’ என்று இதன் அர்த்தம். இதைப் படித்த பின்னும்கூட என் அபிப்பிராயமோ திருவள்ளுவர் வைதிக அநுஷ்டானங்கள் அனைத்திலும் பூரண நம்பிக்கை கொண்டவர் என்பதே. காவிரியின் பெருமையைச் சொல்ல வந்த ஒருவர். ‘ஆயிரம் கங்கையைவிட ஒரு காவிரி உயர்ந்தது’ என்று சொன்னால், ‘கங்கையும் உயர்ந்தது’ என்றே அர்த்தமாகும். காவிரியைச் சிலாகித்துப் பேச விரும்புகிற ஒருவர், ஆயிரம் சாக்கடையைவிட ஒரு காவிரி உயர்ந்தது என்று சொல்வாரா? அப்படியே திருவள்ளுவர் அஹிம்ஸையைச் சிலாகித்துப் பேசும்போது, ‘ஆயிரம் யாகத்தைவிட அஹிம்ஸை உயர்ந்தது’ என்றால், யாகமும் உயர்ந்தது என்றே அர்த்தமாகும். ரொம்ப உயர்ந்த ஒன்றைச் சொல்லி அதைவிட இது ரொம்ப ரொம்ப உசத்தி என்றுதானே சொல்வது வழக்கம்!

இந்தக் குறள் இல்லற இயலில் சொல்லப்படவில்லை; துறவற இயலிலேயே சொல்லப்பட்டிருக்கிறது. துறவிக்கு யாகத்தில் அதிகாரம் இல்லை; அவனுக்கு மட்டுமே வைதிக மதம் பூரண அஹிம்ஸையை விதிக்கிறது. அதையே வள்ளுவரும் வலியுறுத்துகிறார்.

உலகத்துக்கெல்லாம் உபயோகமான ஒரு கிரந்தத்தைத் தந்திருக்கும் திருவள்ளுவர் வைதிகத்தை ஆட்சேபிக்கும் நாஸ்திகர் அல்லர். திருவள்ளுவர் ‘விருந்து’ என்று சொல்கிற ‘விருந்தோம்பல்’ வைதிக மதத்தில் ‘மனுஷ்ய யக்ஞம்’ எனப்படும் விருந்தோம்பல் என்பதே. இன்னும் கொஞ்சம் விரித்தால் அன்னதானம் எனக் கொள்ளலாம்.

ஒவ்வொரு குடும்பத்திலும் சமைப்பதற்காகப் பானையில் அரிசி போடும்போது பகவானை நினைத்துக் கொண்டு, ஏழைகளுக்கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டுவிட வேண்டும். இப்படிப் பல குடும்பங்களில் தினமும் போட்டு வைப்பதைப் பேட்டைக்குப் பேட்டை சேகரித்து, சமைத்து ஆங்காங்குள்ள ஆலயத்தில் நிவேதனம் செய்து, ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். ஒருபிடி அரிசியோடு ஒரு பைசாவும் தினந்தோறும் போட வேண்டும். சேகரித்த அரிசியைச் சமைப்பதற்காக விறகுக்கு, சாதத்தில் சேர்த்துக் கொள்ள மிளகுப் பொடியோ அல்லது வேறு ஏதாகிலும் வியஞ்சனமோ தயாரிப்பதற்கு, சமையல் பாத்திர வாடகைக்கு – இப்படிப்பட்ட மேல் செலவுகளுக்குத்தான் அந்த ஒரு பைசா. இந்த திட்டத்தை நடத்திக் காட்டுவது பெரிய பரோபகாரம். பசித்து வந்த ஏழைகளுக்கு ஈஸ்வரனின் கோயிலில் இப்படி பிரசாதம் கிடைக்கிறது என்றால் வயிறும் மனசும் குளிரும். இதனாலாவது கோயிலுக்கு வருகிற வழக்கம் ஏற்பட்டு பக்தியும் வளரும். வெறுமே ‘சாப்பாடு’ என்றில்லாமல், ஈசுவரனுக்கு நிவேதனமாக பிரசாதம் என்று இருப்பால் அந்த அன்னம் சித்தசுத்தியும் அளிக்கும்.

அன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம், சமூகசேவை, ஸோஷல் சர்வீஸ் என்று இந்த நாட்களில் ஆர்ப்பாட்டமாகப் பிரகடனம் பண்ணுவதை, முற்காலங்களில் எந்தப் பகட்டுமில்லாமல் சுபாவமாகவே மக்கள் செய்து வந்தனர். இதற்குப் ‘பூர்த்த தர்மம்’ என்று ஒரு பெயர். ஜனங்களுக்காகக் கிணறு, குளம் வெட்டுவது, அன்ன தானம், அவர்களின் ஆத்ம க்ஷேமத்துக்காகக் கோவில் கட்டுவது, அதன் அங்கமாக நந்தவனம் அமைப்பது எல்லாம் ‘பூர்த்த தர்ம’த்தில் சேர்ந்தவை. இதில் கிணறு, குளம் வெட்டுவது முதலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால்தான் பேச்சு வழக்கில்கூட, ‘அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? வெட்டிக் கொண்டு இருக்கிறானா?’ என்கிறோம். ‘வெட்டுவது’ அவ்வளவு பெரிய தர்மம். தாகமெடுத்த பசுக்களும் மற்ற பிராணிகளும் நீர் அருந்துவதற்காகத் கிராமத்துக்கு வெளியே மேய்ச்சல் பூமியில் ஒரு குளம் வெட்டினால் எவ்வளவோ புண்ணியம். ஒரு கிராமத்தில் அல்லது பேட்டையில் இருக்கிற சகலரும் – பணக்காரர், ஏழை என்கிற வித்தியாசமில்லாமல், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற வித்தியாசமில்லாமல் – ஒன்று சேர்ந்து மண்வெட்டியை கையில் எடுத்துக் கொண்டு இப்படிப்பட்ட சரீரப் பிரயாசையுள்ள பரோபகார சேவையில் ஈடுபட வேண்டும். இதனால் சமூக ஒற்றுமையும் அதிகமாகும். புத்தியை சுத்தப்படுத்திக் கொள்வதற்காக கல்வி, மனசு சுத்தமாக தியானம், வாக்கு சுத்தமாக சுலோகம் – இப்படியெல்லாம் இருக்கின்றன அல்லவோ? சரீரம் சுத்தமாவதற்கு அந்த சரீரத்தால் சேவை செய்ய வேண்டும். உழைக்க உழைக்கச் சித்த சுத்தியும் வரும். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்றில்லாமல் எல்லோருடனும் சேர்ந்து மண்ணை வெட்டும்போது அகங்காரத்தையும் வெட்டி எடுத்ததாகும். குளத்தில் தண்ணீர் ஊறுவதைவிட நம் இருதயத்தில் ஊறுகிற அன்பே முக்கியம். வெளிவேஷம், டெமான்ஸ்ட்ரேஷனே வேண்டாம். அவரவரும் பிறருக்குத் தெரியாமல் ஏதாவது ஒற்றையடிப் பாதைக்குப் போய் அங்கேயிருக்கிற கண்ணாடித் துண்டுகளை அப்புறப்படுத்தினால்கூடப் போதும் – அதுவே பரோபகாரம்; சித்த சுத்தி என்கிற ஆத்ம லாபமும் ஆகும்.

பகவத் ஸ்வரூபமாக எல்லோரையும் நினைத்து, நமக்குக் கர சரணாகதிகள் தந்துள்ள பகவானுக்குப் பிரீதியாக அந்தக் கரசரணங்களைக் கொண்டு பரோபகாரம் செய்வோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பூஜை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சேவையே மேலான பாக்கியம்
Next