உள்ளத்தில் எவ்வளவுக்கெவ்வளவு அமைதி நிலவுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு இன்பம் மேலிடுகிறதென்பது பிரத்தியக்ஷ அநுபவம். மன அமைதியின் உயர்நிலையே மேலான புருஷார்த்தமாகும். அமைதி குறையக் குறையத் துன்பமும் வளரும். மனிதர்கள் தங்கள் துன்பங்கள் நீங்குவதற்கு முயற்சி செய்யும்போது, பிறரைத் துன்புறுத்தவும் நேருகிறது. இவ்விதம் ஒவ்வொருவரும் சந்தர்ப்பங்களை ஒட்டி மற்றவர்களைத் துன்புறுத்த முயலும்போது சமுதாயத்தில் குழப்பம் ஏற்படுகிறது. அவ்விதம் குழப்பம் நேரும் போதெல்லாம் அதை அடக்கி அமைதியையும், சமாதானத்தையும் நிலை நிறுத்த அரசாங்க அதிகாரிகள் சட்டத்தின் மூலம் நடவடிக்கைகள் எடுக்கிறார்கள். ஆயினும், உண்மையான பரிகாரம் யாதெனில், மக்கள் எல்லோரும் புலன்களைப் பறிக்கும் வெளி விஷயங்களிலிருந்து தங்கள் மனஸைத் திருப்பி அதைத் தங்கள் வசமாக்கி அமைதியாக இருக்க எப்பொழுது முற்படுகிறார்களோ, அப்போதுதான் துன்பம் அவர்களை அணுகாமல் இருக்கும். அதோடு அவர்களால் பிறருக்குத் துன்பம் விளையாமலும் இருக்கும். நல்ல கல்வியைப் பயிலும் பயனாகத்தான் இத்தகைய வெளி அமைதியும் உள் அமைதியும் நம் நாட்டிலே தொன்று தொட்டு சித்தித்து வந்திருகின்றன.
நம் பாரத நாட்டின் முற்காலக் கல்வியின் முதல் நோக்கம் மன அமைதியை அடைவதேயாகும். புதிது புதிதாகத் தோன்றும் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சித் துறைகளில் மேன்மேலும் கல்வியைப் பெருக்குவதில் தவறில்லை. ஆனால், அதன் பயனை தர்ம மார்க்கத்தில் மட்டுமே உதவுமாறு செய்தால்தான் நாடும் மக்களும் உயர்வான அமைதி நிலையை அடைய முடியும். இவ்வாறில்லாமல் புலன்கள் போன வழியே அவைகளை பிரயோஜனப்படுத்திக் கொண்டிருந்தால், எத்தனை படிப்பும் விஞ்ஞான அறிவும் இருந்தாலும் கெட்ட எண்ணங்களும் துராசைகளுந்தான் வளரும். இன்னல்களும் துன்பங்களும் பெருகும்.
உண்மையான கல்வி என்பது ஆத்மஞானம் அடைய உதவுவதேயாகும். ஆத்ம ஞானத்தாலேயே மக்கள் அமரத்துவம் அடைகிறார்கள். எதற்கு மேலாக ஒரு பயன் உலகில் இல்லையோ அந்தப் பயனை உண்மைக் கல்வி அளிக்கிறது. மற்ற விதமான கல்விப் பயிற்சிகளெல்லாம் உலகப் பயன்களைத்தான் அளிக்கின்றன. ஆனாலும் அவையும் படிப்படியாகப் பரமாத்மாவை சேர உபயோகப்படலாம். உலகப் பயன் என்பது பொதுவாகப் பொருள் திரட்டுவதையே குறிக்கின்றது. பொருள்கூட பலவித தருமங்களை செய்யப் பயன்படுகிறது. லௌகிக தருமங்களும் பிரம்ம ஞானத்துக்குத் சாதகமாகின்றன. ‘தனக்கு விதிக்கப்பட்ட கர்மங்களைச் சரிவர நடத்துவதாலும், தவத்தினாலும், இறைவனை வணங்கி வழிபடுவதாலும் ஒருவன் ஆத்ம ஞானத்தை அடைகிறான்’ என ஆதி ஆசாரியர்கள் கூறியுள்ளார்கள்.
ஆத்ம ஞானத்தை அளிக்கும் கல்வியைப் பரவித்யை எனவும், மற்றவற்றை அபரவித்யை எனவும் கூறுவர். பரவித்யை எனும் பிரம்ம ஞானம், இப்போது நமக்குக் கொஞ்சங்கூடப் புலனாகாத பரம ஸத்தியத்தை நாம் அறிவதில் நேரான பலனை அளிக்கிறது. அஞ்ஞான இருளைப் போக்குகிறது. கண்களுக்குப் புலனாகாத தர்மத்தின் லட்சணத்தை வேதம், ஸ்மிருதி இவைகளின் மூலமாகத்தான் அறிய முடியும். ஞானத்துக்குப் பிரத்தியக்ஷம், அநுமானம், யுக்தி இவை மட்டுமின்றி வேதம், அநுபவம் இவ்வகையான பிரமாணங்களே ஆதாரமாக இருக்கின்றன. இது ஆதிசங்கர பகவத் பாதாசாரியர்களின் தீர்மானம். ஆனாலும், மனிதனது புத்தி நுட்பத்தால் கண்களுக்குப் புலனாகும் பயனை மட்டும் விளக்கக்கூடிய வான சாஸ்திரம், அரசியல், பொருளாதாரம், சரித்திரம், ஸயன்ஸ்கள் இவைகளும், வெளிநாட்டாரது ஆராய்ச்சி முறைகளும் கற்பிக்கப்படுவதும் நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவியாகத்தான் இருக்கிறது.
ஆஸ்திக மயமான கல்வி போதனையுடன் அந்நிய நாட்டாரின் முறைகளைக் கலந்து போதிப்பதில் நாம் மிகவும் ஜாக்கிரதையுடன் நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நமது ஆத்ம சுத்தி, அந்தரங்க சுத்தி, ஒழுக்கம் – இவற்றைக் கல்வியின் உறுபயனாகக் கருத வேண்டும். நம் புலன்களுக்கு மட்டுமே சுக உணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் எளிதில் தரக்கூடிய வகையில் உள்ள எல்லா அம்சங்களையும் போதனா முறையிலிருந்து விலக்கவேண்டும். மேலை நாட்டவரின் நடை, உடை, பாவனை, உணவு, உரையாடல் முதலியவைகளில் ஈடுபட்டு அவைகளைக் கையாளுவோமேயானால் படிப்படியாக நமது பண்பாடு, அறம் இவைகளிலிருந்து நாம் நழுவி, நமது ஆன்ம நலனுக்கு இடையூறு செய்துகொள்வதோடு, புண்ணிய பூமியாகிய இந்தப் பாரத நாட்டுக்கே கெடுதல் ஏற்படுத்தி விடுவோம்.
பாரத நாட்டில் தற்காலம் நமது மக்கள் பெரும்பாலும் சிறு பிராயம் முதலே தம் தேசத்துக்குரிய ஒழுக்கம், பண்பாடு, இறைவணக்கம், ஆத்ம தியானம், இவ்விதமான பழக்கமே இல்லாமலிருந்து வருகின்றனர். விஞ்ஞானத்தைப் பயில்வதில் மட்டுமின்றி வாழ்முறையிலும்கூட வெளிநாட்டாரது முறைகளையே பின்பற்றி வருகின்றனர். இதனால் மக்களுக்கு இந்த உலகத்தின் சாமானிய இன்பத்தையும் மறு உலகத்தின் பேரின்ப வழியையும் அடையத் தடை ஏற்படுகின்றதென்பது தெளிவு. ஆஸ்திகப் பரம்பரையில் தோன்றிய நமது குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே நமது பண்புக்குரிய தர்மம், ஒழுக்கம், பக்தி, ஞானம் முதலியவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுவதற்கு அநுகூலமான கல்வியைப் போதிக்க வேண்டியதே நம் முதற் கடமை.