மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக அரசாங்கத்தார் அநேக திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலும் தரித்திரம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கிறது! போதும் என்ற எண்ணம் எவருக்குமே இல்லாமல், பழைய காலத்திலிருந்த திருப்தி இன்றைய ஜனங்களுக்கு அடியோடு இல்லாமல் இருப்பது தரித்திரம்தான்.
‘ஒருவன் இரண்டு வேளை காப்பி சாப்பிடுவது நான்கு வேளையாக உயர வேண்டும்; இரண்டு வேஷ்டி வைத்துக் கொண்டிருப்பவன் இருபது வேஷ்டி வைத்துக் கொள்ள வேண்டும்; இதுவே வாழ்க்கைத் தர உயர்வு’ என்கிற அபிப்பிராயம் வளர்ந்தால் அது பெரிய தப்பு. வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால், துராசைதான் அதிகமாகும். எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.
மநுஷ்யர்களுக்கு மானம், உயிர் இரண்டையும் காப்பாற்றிக்கொள்ள அத்யாவசியமானவை எவையோ அவை நாட்டில் உள்ள அத்தனை ஜனங்களுக்கும் கிடைக்க வேண்டும். இவற்றை சர்க்காரே சகலருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்குத்தான் திட்டம், ஒழுங்கு எல்லாம் வேண்டும்.
அப்படிப்பட்ட நிலை ஏற்பட வேண்டுமானால், வசதி உள்ளவர்கள்கூட நாட்டில் இருக்கும்படியான பரம ஏழை எப்படி வசிக்கிறானோ அப்படி வசிக்கப் பிரயத்தனம் பண்ணவேண்டும். அவன் குடிசையில் இருந்தால் இவனும் குடிசையில் இருப்பது, அவன் கஞ்சி குடித்தால் இவனும் கஞ்சி குடிப்பது என்று சௌகரியம் இருக்கிறவர்களும் கூடத் தங்களிடம் பணம் இருக்கிறது என்பதால் தேவைகளுக்குமேல் அதிகமான வசதிகளையெல்லாம் பெருக்கிக் கொள்ளாமல் வாழ வேண்டும்.
வசதி இருக்கிறது என்று இவர்கள் பண்ணுகிற சுக ஜீவன காரியங்களெல்லாம் (Luxuries) அபரிக்ரஹம் என்ற பெரிய தர்மத்துக்குப் விரோதம்தான். இந்த தோஷம் வந்து விட்டால் ஈசுவராநுக்கிரஹம் கிடைக்காது! மனுஷ்ய ஜன்மா பிரயோஜனம் உள்ளதாக ஆக வேண்டுமானால், நமக்கு ஜீவிப்பதற்கு அத்யாவசியமாக எவ்வளவு தேவையோ அதற்குமேல் ஓர் இம்மிகூட விரும்பக்கூடாது. இதுவே அபரிக்ரஹம். வசதி இருக்கிறது என்றால் அதைக் கொண்டு, கஷ்டப்படுகின்ற இதர குடும்பங்களுக்கு – அத்யாவசிய வசதியைக்கூடப் பெற முடியாதவர்களுக்கு – உதவி செய்வதுதான் நியாயம், தர்மம், புண்ணியம். அதுதான் ஒருவனுக்கு மோக்ஷத்தை அளிக்கும்.
இது தெரியாமல் வசதி இருக்கிறவர்கள் தேவைக்குமேல் பட்டுப்படவை, ஸில்க் ஷர்ட் என்று தோஷத்தை அதிகமாக இப்போது வளர்த்துக் கொண்டிருப்பது ஒரு பக்கம், அதே சமயம் இவர்களைப் பார்த்து வசதியில்லாதவர்களுக்கும் சபலம் பிடித்து ஆட்டுகிறது. அவர்களும் கூடக் கடன் வாங்கியாவது இந்த வேண்டாத தேவைகளைப் பூர்த்தி பண்ணிக் கொள்ள நினைத்து, கடனாளியாகி அநேக உபத்திரவங்களுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஐம்பது நூறு வருஷங்களுக்கு முன்னால் யாரும் காப்பி சாப்பிட்டது இல்லை. குடிசையில்தான் இருந்தார்கள். ஸ்திரீகள் காதில் பனை ஓலைதான் போட்டுக் கொண்டிருந்தார்கள். கேழ்வரகுக் கூழோ, கஞ்சியோதான் சாப்பிட்டார்கள். ஏழைகளோ, பணக்காரர்களோ எல்லோரும் ஏறக்குறைய ஒரேமாதிரியான வீட்டில்தான் இருந்தனர். நம் ஜனங்கள் யாவரும் பட்டுத்துணி உடுப்பது இல்லை; காப்பி குடிப்பது இல்லை என்று சங்கல்பம் செய்து கொண்டுவிட்டால் இப்போது ஒரு குடும்பத்துக்குச் செலவாகிற பணத்தைக் கொண்டு ஐந்து குடும்பங்கள் வாழ முடியும்.
தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமானால் அப்புறம் அதைப் பூர்த்தி செய்து கொள்ளும் ஓயாத பிரயாசை ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் பங்கம்தான். போதுமென்ற மனமே பொன்னானதிருப்தியைத் தருவது. சமீப காலம்வரை படாடோப (Luxury) வஸ்துக்களாக இருந்த ரேடியோ, ஃபான் மாதிரியானவற்றைக்கூட இப்போதே அவசியமாக்கிக் கொண்டு (necessaries), இவை கிடைக்கவில்லையே என்று தாபப்படுவதும், அதிருப்திப்படுவதுமாக இருக்கிறார்கள். தேவையை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகப்படுத்திக் கொள்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு சாந்தி குறையும்; சௌக்கியம் குறையும்; நிம்மதியும், திருப்தியும் குறையும். தரித்திரம், துக்கம் உண்டாகும். Standard of living என்பதை ‘வாழ்க்கைத் தரம்’ என்று மொழி பெயர்ப்பதே சரியல்ல. ‘வாழ்க்கைத் தரம்’ என்பது மிகவும் உயர்ந்த விஷயம். நல்ல குணங்களுடன், ஈஸ்வர பக்தியுடன் வாழ்கிற வாழ்வே ‘தரமான’ வாழ்வு. வாழ்க்கைக் தரத்தை Quality of life என்று சொல்ல வேண்டும். தற்போது பொருளாதார தேவைகளை அதிகமாக்கிக் கொண்டேபோவதைத்தான் ‘வாழ்க்கைத் தரம்’ என்கிறார்கள். இதை விட்டு, மனசினால் உயர்ந்த, வாஸ்தவமாகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதைத்தான் பெரியதாக எண்ண வேண்டும்.
நான் சொல்லி ராஜாங்கத்தார் கேட்கப் போவதில்லை. ஆனாலும் எனக்குத் தோன்றுவதைச் சொல்லத்தான் வேண்டும். நம் ஜனங்களுக்கு நிஜமாக நல்லது செய்ய வேண்டும் என்றால் இப்போது பொருளாதாரக்காரர்கள் ‘வாழ்க்கைத் தரம்’ என்று எதைச் சொல்கிறார்களோ அதைக்குறைப்பதற்கு, இறக்குவதற்குத்தான் திட்டம் போட வேண்டும்; உயர்த்துவதற்கல்ல.