வரதக்ஷிணைப் பிரச்னை : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

ஒவ்வொருவருக்கும் எத்தனையோ விதமான கஷ்டங்கள், தொல்லைகள் இருக்கின்றன. அதையெல்லாம் சிறிது காலமாவது மறந்திருப்பதற்கே இங்கே பூஜை பார்க்கவும், உபந்நியாசம் கேட்கவும் வருகிறீர்கள். ஆனால் இந்த உபந்நியாசம் வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருந்தால் பிரயோஜனமில்லை. உபந்நியாசம் உபயோகமாக இருக்க வேண்டுமானால் அதில் உங்கள் வாழ்க்கையில் அநுசரிப்பதற்கு ஏதாவது ஒரு அம்சமாவது இருக்க வேண்டும். உங்களுக்குப் பிடிக்காத விஷயமாக இருந்தாலும்கூட, உங்களுடைய க்ஷேமத்தை உத்தேசித்து நான் சில விஷயங்கள் சொல்லத்தான் வேண்டும். நீங்கள் அதைச் செய்வதும், செய்யாததும் உங்கள் காரியம். சொல்லத்தான் என்னால் முடிந்தது. ‘ஜகத்குரு’ என்று பெயர் வைத்துக்கொண்டு, உங்கள் பணத்தை எல்லாம் வாங்கிக்கொண்டு எனக்கு நல்லதாகத் தோன்றுவதை நான் சொல்லக்கூட இல்லை என்றால் அது பெரிய தோஷம். அதற்காகவே சொல்கிறேன்.

சென்னை நகரத்தில் வந்து நீண்ட காலமாகத் தங்கியதில் என் மனஸில் மிகுந்த கிலேசம் உண்டாகியுள்ள ஒர் அம்சத்தைச் சொல்வதற்காகத்தான் இந்த பீடிகை போடுகிறேன். இங்கே என்னிடம் வயசு வந்த எத்தனையோ பெண்கள் தங்களுக்குக் கல்யாணமாகவில்லை, என்ற குறையுடன் கண்ணும் கண்ணீருமாக வந்து முறையிடுகிறார்கள். அவர்கள் மனஸில் எத்தனை கஷ்டமும் கோபமும் இருக்கின்றன என்று எனக்குத் தெரிகிறது. இந்தப் பரிதாபகரமான காட்சி என்னை ரொம்பவும் வேதனைப்படுத்துகிறது.

இந்தக் குழந்தைகள் வயசு முற்றிய பின்னும் கல்யாணமாகாமல் நிற்பதற்குக் காரணம் என்ன? சாரதாச் சட்டத்தின் தலையில் பழியைப் போடுவதை நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. சாரதாச் சட்டம் பதினாலு வயசுக்குக் கீழ் கல்யாணம் செய்யக்கூடாது என்று தான் கட்டுப்படுத்துகிறது. இருபத்தைந்து முப்பது வயசுவரை பெண்களைக் கல்யாணம் செய்து கொடுக்காமலிருப்பதற்கு அந்தச் சட்டம் எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாமலிருந்தாலும்கூட நாம் அவற்றையும் உரிய காலத்தில் செய்யாமல்தானே இருக்கிறோம்? எனவே பெண்கள் கல்யாணமாகாமல் கஷ்டப்படுவதற்குச் சட்டத்தை இழுக்க வேண்டியதில்லை. நம் அசிரத்தைதான் காரணம்.

கல்யாணம் என்றால் ஆடம்பரமாகச் செலவழிக்க வேண்டும் என்றாகிவிட்டது. இதைவிட முக்கியமாகப் பிள்ளை வீட்டார் வரதக்ஷணையும் சீர்வரிசையும் ஏராளமாகக் கேட்கிறார்கள். அன்றாட வாழ்க்கைக்கே கஷ்டமாயிருக்கிற நிலையில், இத்தனை செலவுக்கு ஈடுகொடுத்துச் சேமித்து வைக்கப் பெண்ணைப் பெற்றோருக்கு முடியாமல் போகிறது. பணக்கஷ்டம் காரணமாகவே குழந்தைகள் கல்யாணமாகாமல் மாளாத மனக்குறைவுடன் நிற்கிறதுகள்.

இதோடு விஷயம் நிற்கவில்லை. இதைத் தொடர்ந்து பாரத தேசத்தின் ஸ்திரீ தர்மத்துக்கே விரோதமான போக்குகள் உண்டாகின்றன; கல்யாணமாகாத பெண்களைப் படிக்க வைத்து, வேலைக்கு விட்டு, அவளே சம்பாதிக்கும்படியாகப் பெற்றோர்கள் விடுகிறார்கள். முதலில் இது அவமானமாக இருந்தது. ஆனால் முதலில் தயக்கத்தோடு ஆரம்பிக்கிற ஓர் ஏற்பாடு வழக்கத்தில் வந்துவிட்டால் பிறகு அதில் கூச்சம் போய்விடுகிறது. முதலில் அவமானமாக நினைத்த விஷயமே பிறகு பழகிப் போய் விடுகிறது. அதுவே நாகரிகத்தின் அடையாளம் என்ற அளவுக்கு வந்துவிடுகிறது. பெண்கள் உத்தியோகம் பார்ப்பது இப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது. வயசு வந்த பெண்கள் சர்வசகஜமாக ஆண்களுடன் சேர்ந்து உத்தியோகம் பார்ப்பது நம் தேச ஆச்சாரத்துக்கே விரோதமானது. இதனால் எத்தனையோ தப்பிதங்கள் நேருகின்றன. இதை எல்லோரும் கண்டும் காணாமல் இருப்பதுபோல் நானும் இருந்தால் பிரயோஜனமில்லை. என் மனஸில் பட்டதை, நீங்கள் கேட்டாலும், கேட்காவிட்டாலும், வெளியிட்டுச் சொல்வது கடமை என்றுதான் சொல்கிறேன்.

பிள்ளைகளைப் பெற்றவர்கள் ஒரு காலும் வரதக்ஷிணை வாங்குவதில்லை என்று தீர்மானம் செய்ய வேண்டும். மற்ற விஷயங்கள் திருப்தியாக இருந்தால் கல்யாணத்தை முடிக்க முன்வர வேண்டும். வரதக்ஷிணை கேட்டால்தான் தங்களுக்கு மதிப்பு, வரதக்ஷணை கேட்காவிட்டால் தங்கள் பிள்ளைக்கு ஏதோ குறை என்று நினைப்பார்கள் என்பது போன்ற எண்ணங்களை விட்டு, எல்லோருக்கும் சந்தோஷம் தரும் வகையில் கல்யாணத்தை முடிக்க வேண்டும். தேசத்துக்காக, பாஷைக்காக, அரசியல் கொள்கைக்காக ஏதேதோ தியாகங்கள் செய்கிறார்கள். நம் தர்மத்துக்காக இந்த வரதக்ஷிணையை தியாகம் செய்யக்கூடாதா?

வரதக்ஷணைப் பழக்கமும், கல்யாணங்களை டாம்பீகமாக நடத்துகிற வழக்கமும் தொலைய வேண்டும். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுத் தான தர்மங்கள் செய்வதைவிட, பணக்காரர்கள் தங்கள் ஏழை பந்துக்களின் விவாகத்துக்குத் தாராளமான திரவிய உதவி தரவேண்டும். உரியகாலத்தில் தம் பெண் குழந்தைகளுக்கு கல்யாணமாகி ஸ்திரீ தர்மமும் சமூக தர்மமும் கெடாமலிருக்க வேண்டும் என்பது என் ஆசை.

ஸ்திரீகள்தான் தர்மத்தை வளர்க்கிற தீபங்களாக இருக்கிறவர்கள். அவர்களின் பண்பு கெடுக்கிறதற்கு இடம் தரக்கூடாது. அப்புறம் தேசம் பிழைக்காது. குலஸ்திரீகளின் சித்தம் கெட்டுப் போய்விட்டதானால் அப்புறம் தருமமே போய் விடும். தேசமே போய்விடும் என்றுதான் அர்ஜுனன் கூட பகவானிடம் அழுதான். நம் ஸ்திரீ தர்மத்தைக் காப்பாற்றுகிற பெரிய கடமைகளில் நாம் தவறிவிடக் கூடாது. பெண்கள் உரிய காலத்தில் கல்யாணமாகி கிருஹலக்ஷ்மிகளாக இருக்க வேண்டியது சமூக க்ஷேமத்துக்கு ரொம்பவும் அவசியம். இதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிற வரதக்ஷணை வழக்கத்தை நாம் கைவிட்டேயாக வேண்டும்.

உங்களை இப்படிச் செய்யப் பண்ணுவதற்கு எனக்கு எந்த அதிகார சக்தியும் இல்லை. என்னால் முடிந்தது, ஒரு ஆயுதப் பிரயோகம் பண்ணுகிறேன்; இப்போது ரொம்பப் பேர் கல்யாணப் பத்திரிக்கைகளில், “ஆசார்ய ஸ்வாமிகள் அநுக்கிரகத்தோடு நிச்சயிக்கப்பட்டிருப்பதாகப்” போடுகிறீர்கள் அல்லவா? இனிமேல் வரதக்ஷணை வாங்குகிறவர்களும் கொடுக்கிறவர்களும் அப்படிப்பட்ட கல்யாணப் பத்திரிக்கைகளில் என் அநுக்கிரகத்தோடு நிச்சயித்ததாகப் போட வேண்டாம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பணத்தை விட்டுக் குணத்தைக் கொள்க
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  இளைஞர் கடமை
Next