ஸம்ஸாரே கிம் ஸாரம் ? : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘இந்த ஸம்ஸார வாழ்வில் என்ன சாரம் இருக்கிறது?’ என்று நம் ஆசாரியாள், ‘பிரச்னோத்தர ரத்ன மாலிகா’வில் ஒரு கேள்வி போடுகிறார், ‘கிம் ஸம்ஸாரே ஸாரம்?’ என்று கேட்கிறார். (ஸம்ஸாரே – ஸம்ஸாரத்தில்; கிம் – என்ன; ஸாரம் – சாரம் இருக்கிறது?) அதற்குப் பதிலும் சொல்கிறார்: ‘அப்பா, இப்போது இப்படிக் கேள்வி கேட்டாய் அல்லவா? இதை எப்போதும் கேட்டுக்கொண்டே இரு. அதுவே ஸம்ஸாரத்தின் ஸாரம்’ என்கிறார். பஹுச: அபி விசிந்த்யமானம் இதம் ஏவ.

அதாவது, ‘நாம் பிறந்ததற்கு என்ன பிரயோஜனம்? எதற்காகப் பிறந்தோம்?’ என்று அடிக்கடி நினைக்க வேண்டும். அந்தப் பிரயோஜனத்தை அடைவோமா என்று நினைக்க வேண்டும். ‘நமக்கு ஏன் பாபம் வருகிறது? கோபம் வருகிறது? காமம் வருகிறது? இவையெல்லாம் ஏன் வர வேண்டும்? எப்போதும், ஆனந்தமாக, சந்தோஷமாக இருக்கக்கூடாதா’ — என்று தோன்றுகிறது. இதற்குப் பதில் ஒன்றும் நமக்குப் புரியவில்லை.

எல்லாம் நல்லதற்குத்தான். ஒரு மரத்திலே புஷ்பத்திலிருந்துதான் காயும் பழமும் உண்டாகின்றன. புஷ்பமாக இருக்கும்போது மூக்குக்கும் பழமாக இருக்கும்போது நாக்குக்கும் ரஸமாக இருக்கின்றன. பழம் நல்ல மதுரமாக இருக்கிறது. இந்த மதுரம் வருவதற்கு முன்பு எப்படி இருந்தது? பூவில் கசப்பாகவும், பிஞ்சில் துவர்ப்பாகவும், காயில் புளிப்பாகவும், பிறகு மதுரமாகவும் ஆகிறது. மதுரம் என்பதுதான் சாந்தம். சாந்தம் வந்தால் எல்லாப் பற்றும் போய் விடுகிறது. பழத்தில் மதுரம் பூராவாக நிரம்பிய உடனே கீழே விழுந்து விடுகிறது. அதுபோல் இருதயத்தின் எல்லா இடத்திலும் மதுரம் வந்துவிட்டால் தானாகவே எல்லாப் பற்றும் போய்விடும். புளிப்பு இருக்கும்வரை பற்று இருக்கும். அப்போது காயைப் பறித்தால் காம்பில் ஜலம் வரும். காயிலும் ஜலம் வரும். அதாவது மரமும் காயை விட்டுவிட விரும்பவில்லை; காயும் மரத்திலிருந்து விடுபட விரும்பவில்லை. ஆனால் நிறைந்த மதுரமாக ஆகிவிட்டால் தானாகவே பற்றும் போய்விடும்! பழம் தானே இற்று விழுந்துவிடும். மரமும் பழத்தை விடுகிறது; பழமும் மரத்தை விடுகிறது. இரண்டும் ஜலம் விடாமல் — அதாவது அழாமல் — ஆனந்தமாகப் பிரியும். படிப்படியாக வளர்ந்து மனம் முழுவதும் மதுரமயமான ஒவ்வொருவனும் இப்படியே ஆனந்தமாக சம்ஸார விருட்சத்திலிருந்து விடுபட்டு விடுவான். பழமாக ஆவதற்குமுன் ஆரம்ப தசையில் எப்படிப் புளிப்பும் துவர்ப்பும் வேண்டியிருக்கின்றனவோ அதுபோலக் காமம், வேகம், துடிப்பு எல்லாமும் வேண்டியவைதாம் போலிருக்கிறது!

இவற்றுக்கு நாம் ஆரம்ப தசையில் ஆட்படும்போதே, இவற்றிலிருந்து பூரணமாக விடுபட முடியாது. ஆனாலும், இவையெல்லாம் ஏன் வருகின்றன என்று அடிக்கடி நினைத்தாவது பார்க்க வேண்டும். ‘இப்போது இன்ன உணர்ச்சி வந்ததே! ஆசை வந்ததே! கோபம் வந்ததே! பெருமை வந்ததே! பொய் வந்ததே! இதனால் ஏதாவது பிரயோஜனம் உண்டா? இந்த உணர்ச்சி அவசியமாக வருகிறதா? அநாவசியமாக வருகிறதா?’ என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அப்படி நினைக்கவில்லையென்றால் அவை நம்மை ஏமாற்றி விடும். ஏமாந்து விடுவோம்.

புளிப்பு இருக்கவேண்டிய சமயத்தில் புளிக்க வேண்டும்; துவர்ப்பு இருக்கவேண்டிய சமயத்தில் துவர்க்க வேண்டும்.

ஆனாலும், அந்தந்த நிலையோடு நிற்காமல் பிஞ்சு அனவரதமும் பழமாகிக்கொண்டே இருப்பதுபோல் நாமும் மேலும் மேலும் மாதுரி்யமான அன்பையும் சாந்தத்தையும் நினைத்துக் கொண்டேயிருக்க வேண்டும். இப்படிச் செய்து வந்தால் நாமாகப் போய் மோக்ஷத்தைத் தேடவேண்டாம். எந்தக் காலத்தில் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருந்தால், தானாக மோக்ஷம் என்கிற மதுர நிலை வந்துவிடும். அப்படியில்லாமல் தகாத பருவத்தில் முயற்சி செய்தால் பிஞ்சிலே பழுத்த மாதிரிதான். அது வெம்பல்தான். அதில் மதுரம் இருக்காது. “வெம்பி விழுந்திடுமோ?” என்று இராமலிங்கர் பாடின மாதிரி நாம் வெம்பிப் போவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை.

இப்போது நாம் இருக்கிற மாதிரி, கண்டதே காட்சி என்று இருக்கிறதும் தப்பு; அதற்காக, நாம் தீர்க்க வேண்டிய கர்மா மூட்டை ஏகமாக இருக்கிற இப்போதே, நமக்கும் பரம ஞானம் உடனே வந்துவிட வேண்டும் என்று தவியாகத் தவித்து ஆத்திரப்படுவதும் தப்பு.

நாம் இப்போதே பரம ஞானம் வேண்டுமென்று அதைத் தேடிப்போக வேண்டாம். இந்த ஜன்மத்திலே வரவில்லை என்றால் எத்தனை ஜன்மம் கழித்தாவது வரட்டும் என்று கருதி, நம் கடமைகளைச் செய்து கொண்டிருப்போம். நம்முடைய வேதம் விதிக்கிறபடி தர்மத்தை அநுஷ்டானம் பண்ணுவோம். அப்படிச் செய்தால் படிப்படியாகப் பரம ஞானமும் தானே வந்துதான் ஆகவேண்டும். இப்போது நமக்கு வெளிக்காரியங்கள், வெளி வேஷங்கள்தானே தெரிகின்றன. அதனால் மத சம்பந்தமாகவும் வெளிக் காரியங்களாக இருக்கிற சடங்குகள், வெளியே போட்டுக்கொள்கிற சமயச்சின்னங்கள் இவற்றிலேயே ஆரம்பிப்போம். படிப்படியாக பக்குவமாகி, பிஞ்சாகி, காயாகி, கனியாகிய உள்ளேயிருக்கிற தத்துவத்துக்குப் போவோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சீலம் உண்டாக வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  உள்ளும் புறமும்
Next