ஸ்ரீ சங்கர பகவத்பாதர்கள் விதேக முக்தி அடையப் போகிறார் என்று தெரிந்தபோது சாமானிய சிஷ்யர்களெல்லாம் அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘வேதாந்த பரமான உபதேசங்கள் அளித்தீர்கள். அதில் பல விஷயங்கள் எங்களுக்குப் புரியவே இல்லை. கடைத்தேறுவதற்கு “சுலபமான வழி ஒன்று சொல்ல வேண்டும்” என்று ஆசாரியாளிடம் பிரார்த்தித்துகொண்டார்கள். ஆசாரியாள் ‘ஸோபான பஞ்சகம்’ என்று ஐந்து சுலோகங்களை உபதேசித்தார்கள்.
“வேதம் வகுத்த வழியைத் தினந்தோறும் பின்பற்ற வேண்டும். வேதம் கூறுகிறபடி கர்மங்களைத் தவறாமல் அநுஷ்டானம் பண்ணுங்கள். இதையே ஈசுவர பூஜையாக நினைத்து பண்ணுங்கள். ஆசை வாய்ப்பட்டு நம் மனசுக்குப் பிடிக்கிற காரியங்களைச் செய்வது என்பதில்லாமல், லோக உபகாரமாக அவரவர்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கர்மாவைச் செய்யுங்கள்” என்ற கருத்துடன் தொடங்குகிறது ‘ஸோபான பஞ்சகம்’.
வேதம் விதித்தபடி கர்மத்தை ஒழுங்காக ‘அநுஷ்டிப்பவர்கள்’ சிலர் இன்னமும் இருக்கிறார்கள். பூஜை, உத்ஸவம், பஜனை இவற்றை நன்றாகச் செய்கிறவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் கர்ம அநுஷ்டானம் செய்வோரைப் பார்த்து, “இத்தனை கர்மா செய்தும் என்ன பிரயோஜனம்? கொஞ்சமாவது மனசு உருகி பக்தி செய்யாவிட்டால் என்ன பயன்? என்று தாழ்வாக எண்ணுகிறார்கள். கர்ம மார்க்கக்காரர்களோ இவர்களைப் பார்த்து, “செய்ய வேண்டிய கர்மத்தில் சிரத்தையில்லை; ஆடம்பரமாக மணி அடித்துக் கொண்டும், தாளம் போட்டுக் கொண்டும் இருந்தால் போதுமா?” என்று நினைக்கிறார்கள்.
ஆசாரியாள் ஸோபான பஞ்சகத்தில் சொல்லியிருப்பதைப் பார்த்தால் கர்மத்தையே ஈஸ்வர பூஜையாக செய்ய வேண்டும் என்று தெரிகிறது.கர்மத்தையும் செய்ய வேண்டும்; ஈஸ்வரனையும் மறக்காமலிருக்க வேண்டும். கர்மங்களை ஈஸ்வரார்ப்பணமாக செய்ய வேண்டும். இது மிகவும் உயர்ந்த நிலை. கர்மங்களைச் செய்யும்போதே, அதில் பற்றில்லாமல் செய்து, சித்தத்தை ஈஸ்வரனிடம் வைத்து அவனுக்குக் கர்ம பலனை அர்ப்பணம் செய்வது சாதாரண ஜனங்களால் லேசில் முடிகிற காரியமில்லை. சாமானிய ஜீவர்கள் ஒரு கர்மம் என்று இறங்கி விட்டால், அப்போது பகவத் ஸ்மரணம் குறைந்துதான் போகும். ஆகவே தனித்தனியாகக் கர்மாவும் வேண்டும். பக்தியும் வேண்டும். நாளடைவில் கர்மத்தையே பூஜையாகச் செய்கிற உத்தம நிலை சித்திக்கும்; அல்லது பூஜையே ஒருத்தனுடைய கர்மம் முழுவதுமாக ஆனாலும் ஆகலாம்; அல்லது பூஜை, கர்மம் எல்லாம் நின்றுபோய் பிரம்மானந்தம் என்கிற சமாதி நிலை ஏற்படலாம்.
இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆரம்ப நிலையைப் பார்த்தால், கர்மம் செய்கிறவனிடம் பகவான் பிரீதி அடைவானா? பூஜை செய்கிறவனிடம் பிரீதி அடைவானா? ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் வேலை எதுவும் செய்யாமல் அந்தப் பிரபுவை ஸ்தோத்திரம் செய்துகொண்டே இருக்கிறான். இன்னொருவன் வெகு நேர்த்தியாக வேலை செய்கிறான். என்றாலும் அந்தப் பிரபுவிடம் துளிக்கூட அன்போ பாசமோ காட்டாமல் வேலையை மட்டும் கவனிக்கிறான். சாதாரணமாகப் பார்ப்பவர்களுக்கு அருகில் நின்று ஸ்தோத்திரம் பண்ணுகிறவன்தான் பிரபுவின் பிரீதிக்குப் பாத்திரமாக முடியும் என்று தோன்றும். பிரபு அசடாக இருந்தால் இப்படியே நடப்பான். ஆனால் அவன் புத்திசாலியாக இருந்தால் கண்ணில் படாமல் வேலை செய்கிறவனிடமே அதிகப் பிரியத்துடன் இருப்பான். ஈஸ்வரன் அசட்டுப் பிரபு இல்லை. தன்னை ஸ்தோத்திரம் பூஜை செய்கிறான் என்பதால் மட்டும் ஒருவனுக்கு அவன் அநுக்கிரகம் செய்துவிடமாட்டான். தான் விதித்த கர்மங்களைச் செய்கிறவர்களிடமே அதிகப் பிரீதி கொள்வான். ஆனாலும் அந்தக் கர்ம மார்க்கக்காரன் மனஸில் அன்பே இல்லாமல், ‘வெட்டு வெட்டு’ என்று வேலை மட்டும் செய்தால் அவன் பகவத் பிரீதியின் ஆனந்தத்தைப் பூரணமாக அநுபவிக்க முடியாது. ‘இது பகவான் செய்த லோகம். சர்வ லோக ராஜாவான பகவானின் குடிமக்களே ஜனங்கள் அத்தனை பேரும். நாமும் அவனுடைய பிரஜை. எனவே இவர்களெல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள். நம் சகோதரர்கள். ராஜாவாக இருக்கிறதோடு அவனே நம் அம்மையும் அப்பனும். நாம் அத்தனை பேரும் அவனுடைய குழந்தைகள். ஆதலினால் ஒருத்தருக்கொருத்தர் சகோதரர்கள். இத்தனை குழந்தைகளும் இருக்கிற ஜனசமூகக் குடும்பம் ஒற்றுமையாக, சௌஜன்யமாக வாழவேண்டுமென்றே நமக்கு வேததர்மம் வெவ்வேறு காரியங்களைப் பிரித்துக் கொடுத்திருக்கிறது. அவற்றை நம்முடைய சொந்த ஆசைகள், லாபங்களை நினைக்காமல் செய்து ‘பகவானின் குடும்பம் ஒழுங்காக நடக்கச் செய்வதே நம் கடமை’ என்ற உணர்ச்சி உண்டானால்தான் நாம் செய்கிற கர்மம் துளிக்கூடக் குறைவு, ஒழுங்கீனம் இல்லாமல் சரியாக இருக்கும். இந்த உணர்ச்சி வருகிறபோது அதிலேயே ஈஸ்வர பக்தியும் உட்புகுந்து நிற்கும். இப்படி பக்தி உணர்வோடு கர்மம் செய்தாலே பகவத் கிருபையைப் பூரணமாகக் கிரகிக்க முடியும். கர்மத்தையே பகவானின் பூஜையாகச் செய்கிற நிலை வருவதற்கு ஆரம்பமாகத் தனியாகப் பூஜை, பஜனை எல்லாம் செய்து பகவானை ஸ்மரிக்க வேண்டியதும் அவசியம்.