உதவி பெற்றதற்கு நன்றி சொல்வதற்கு ஒரு சிறந்த கடமை. ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி நிவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டிவிட்டுப் பிறகு நாம்தான் உண்ணப்போகிறோம். நாம் பலவிதமான ஆடை ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திரு ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லோருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன.
ஆதியில் மகரிஷிகள் மந்திர சக்தியால், எங்கும் நிறைந்த பரம்பொருளைச் சில விக்கிரங்களில் விசேஷ சாந்நித்தியம் கொள்ளச் செய்தனர். அப்படிப்பட்ட மூர்த்திகளைச் சுற்றிக் கோயில்கள் எழுப்பப்பட்டுள்ளன.
வீட்டில் பூஜை செய்கிறவர் உள்பட அனைவரும் கோயிலுக்குப் போவது என்று கட்டுப்பாடாகப் பழக்கம் வைத்துக் கொண்டால்தான் அங்கு பூஜைகள் குறைவற நடக்கும். நான் கோயிலுக்குப் போகிறேன் என்றால், எனக்காகவாவது கோயிலைச் சுத்தமாக வைக்கிறார்கள்; விளக்குகள் போடுகிறார்கள்; நைவேத்தியம் சுத்தமாகச் செய்கிறார்கள்; வஸ்திரம் அழுக்கில்லாமல் கட்டுகிறார்கள்.
சின்னஞ்சிறிய சூக்ஷ்மமான தர்மங்களை எல்லாம் மறந்து விட்டோம். நமக்கு உணவு தருபவனுக்கு நல்லபடி நிவேதனம் நடக்க வேண்டும். நமக்கு உடை தருபவனுக்கு நல்ல வஸ்திரம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம் கவனிக்கத் தவறுகிறோம். இப்போது ஒரு ஊரில் யார் ரொம்ப அழுக்குத் துணி கட்டிக் கொண்டிருக்கிறார் என்று பார்த்தால் ஸ்வாமிதான் என்று தெரிகிறது. நம் ஊர் கோயிலில் ஸ்வாமியின் வஸ்திரம் சுத்தமாயிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்திவிட்டோமானால், நம் மனஸின் அழுக்கும் போய்விடும். ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’, ‘அரனை மறவேல்’, ‘திருமாலுக்கு அடிமை செய்’ என்றெல்லாம் புண்ணிய மொழிகள் வழங்கும் இந்த நாட்டில், ஒவ்வோர் ஊரிலும் உள்ள ஈசுவரன் கோயிலையும் பெருமாள் கோயிலையும் நல்ல நிலையில் வைத்திருந்து வழிபாடு நடக்கச் செய்ய வேண்டும். இது நம் முதல் கடமை.
தற்போது ஆலய வழிபாட்டுக் கிரமங்களில் என்ன வேண்டுமானாலும் மாறுதல் செய்யலாம் என்று எண்ணப் படுகிறது. எங்கேயும் உள்ள மின்சாரத்தை வெளிப்படுத்த ஆங்காங்கே மின்சக்தி ஸ்தாபனம் ( Power House) இருப்பது போல், எங்கும் உள்ள ஈசுவர சக்தியை வெளிப்படுத்த ஆங்காங்கே மந்திர பூர்வமாக ஆகமபூர்வமாக ஆலயங்கள் எழுப்பப்பட்டு, அவற்றின் பூஜாக்கிரமங்கள் உருவாகி உள்ளன. மின்சக்தி இயந்திரத்தில் நாம் தாறுமாறாகக் குறுக்கிட்டால் தேகம் போய்விடும். அதுபோலவே ஆத்ம க்ஷேமத்துக்கான ஆலய யந்திரத்தில் குறுக்கிட்டால் ஆத்மா போய்விடும்.
‘குருக்கள் அநுஷ்டானம் இல்லாதவராக இருக்கிறாரே’ அதனால் சாந்நித்தியம் போகவில்லை என்றால், நாமும் எதைச் செய்தால் என்ன என்கிறார்கள்! அதாவது, பாக்கி இருக்கிற ஸ்வாமியையும் வெளியே அனுப்பிவிடலாம் என்கிறார்கள். ஒரளவு அநாசாரத்துக்குத் தாக்கு பிடிக்கிற சக்தி கோயில்களில் இருக்கிறது. அதற்காக முழுக்க அநாசரமாக்குவோம் என்று கிளம்பினால் நமக்குத்தான் பயன் நஷ்டமாகும். ஸ்வாமிக்கு ஒரு நஷ்டமும் இல்லை. கோயிலில் இப்போதுள்ள ஆசாரக் குறையை நிவிருத்தி செய்ய வேண்டுமேயன்றி, ஆகமத்தில் இல்லாத புது விஷயங்களைப் புகுத்தக்கூடாது. நாம் கட்டுப்பாடாக இந்த ஆசாரங்களைப் பின்பற்றி அத்தனை பேரும் கோவிலுக்குப் போவது என்று ஏற்பட்டால் குருக்களும்தானே சரியாகி விடுவார்.
ராஜீய விவகாரங்களின் பொருட்டு மத விஷயங்களை மாற்றக்கூடாது. புதிது ஸ்திரமாக இராது. ஆடி மாதம் வெள்ளம் வரும்போது கரையைச் சில இடங்களில் இடிக்கும்; அதுபற்றிக் கவலை வேண்டாம். புது ஆவேசத்தைப பற்றிக் கோபம் கொள்ள வேண்டாம். ஜனங்களிடம் நாம் நியாயத்தை விளக்கினால் அவர்கள் ஒப்புக் கொள்வார்கள். புது ஆவேசம் தானாகப் போய்விடும். சீர்திருத்தக்காரர்கள் நம் சாஸ்திரங்களைப் படிக்கவில்லை. அதனால் கோபம் அடைகிறார்கள். அதற்காக நாமும் கோபம் கொள்ளலாகாது. எதிர்க்கட்சியிடத்திலும் நமக்குப் பிரியம் வேண்டும். ஆகமத்தின் கருத்தை நாம் அவர்களுக்குப் பிரியமாக எடுத்துச் சொல்லி விளக்க வேண்டும்.
இந்தக் கோவில்களைக் கட்டிய மன்னர்களின் காலத்திலிருந்து இன்றுவரை அவற்றில் பின்பற்றப்படும் நியதிகளை அப்படியே காக்கவேண்டும். நாம் சரியாக இருந்து, உண்மையான பக்தியுடன் வழிபாடு செய்து, உண்மையான அன்புடன் எடுத்துச் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள். இன்று கோயில்கள் விஷயம் இப்படியானதற்கு நாமே காரணம் என்று உணர்ந்து, முதலில் நம்மைத் திருத்திக் கொள்வோமாக!