ஐம்புலன்கள்; ஐந்து உபசாரங்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

பிரபஞ்சத்தில் உள்ள சகல வஸ்துக்களையும் அநுபவிப்பதற்காக மனிதனுக்குக் கண், காது, மூக்கு, நாக்கு, சருமம் ஆகிய ஐந்து இந்திரியங்கள் இருக்கின்றன. பஞ்ச இந்திரியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். ரூபத்தைக் கிரகிப்பது கண். சப்தத்தைக் கிரகிப்பது காது. கந்தத்தை (மணம்) கிரகிப்பது மூக்கு. ரஸத்தை (சுவை) கிரகிப்பது நாக்கு. ஸ்பரிசத்தைக் கிரகிப்பது சருமம். இந்த ஐம்புலன்களும் புதிதாக ஒன்றை உண்டாக்கவில்லை. வெளியே உண்டாகி இருக்கிற சப்த, ஸ்பரிச, ரூப, ரஸ, கந்தங்களை இவை உணர்கின்றன. ரேடியோ ஸெட் மின்ஸார சப்த அலைகளைப் பிடிப்பது போல் இவை எப்படியோ வெளியில் இருப்பவற்றை அறிந்து பிடித்துக்கொண்டு மூளைக்கு அனுப்பி வைக்கின்றன. காரியம் செய்து புதிதாக ஒன்றைப் படைக்காமல், வெறுமே கிரகித்து நமக்கு அறிவிப்பதால், இந்தப் புலன்களுக்கு ஞானேந்திரியங்கள் என்று பெயர். கை, கால் போல காரியம் செய்கின்ற புலன்களுக்கு கர்மேந்திரியங்கள் என்று பெயர். நாக்கு ஞானேந்திரியமாக இருந்து ரஸத்தை உணர்வதோடு, பேச்சு என்று காரியத்தால் புதிதாக சப்தத்தைப் படைக்கவும் செய்வதால் கர்மேந்திரியமாகவும் இருக்கிறது.

ஞானேந்திரியங்களான ஐம்புலன்களுக்கும் ஆசிரயமாக இருப்பனவே பஞ்ச பூதங்கள் என்கிற ஆகாயம், காற்று, தீ, நீர், மண் ஆகிய பிரபஞ்ச சக்திகள். சப்தம் மட்டுமே ஆகாசத்தில் உண்டு. ஓம்கார நாதமாகிய பிரணவம் ஆகாயத்தில் நிரம்பியிருக்கிறது. பலர் கூடியிருக்கிற இடத்தில் பல தினுசான பேச்சுச் சப்தம் உண்டானாலும் ‘ஓ’ என்ற ஓசையொன்றே கேட்கிறது. சமுத்திரம் ‘ஓ’ என்கிறது. ஒரு சங்கைக் காதில் வைத்துக் கொண்டால் ‘ஓ’ சப்தம்தான் கேட்கும். “ஏன் ‘ஓ’ என்று கத்துகிறாய்?” என்றுதான் கேட்கிறோம். ‘ஓ’வுக்கு ஒரு புள்ளி வைத்து முடித்தால் ‘ஓம்’ இதுதான் எங்கும் இருப்பது. வாயுவில் சத்தத்தோடு ஸ்பரிசமும் இருக்கிறது. நம்மீது காற்றுப்பட்டால் நமக்குக் காற்றுதான் படுகிறது என்று புரிகிறது அல்லவா? நெருப்புக்கு ஸ்பரிசத்தோடு ரூபமும் இருக்கிறது. தீயைக் கண்ணால் பார்க்க முடிகிறது. ஜலத்துக்கு இவற்றோடு ரஸம் (சுவை) என்பதும் உள்ளது. அதை நாம் நாக்கில் விட்டுக்கொண்டு குடிக்கிறோம். மண்ணுக்கு மணமும் உள்ளது. மண் என்றால் மண்ணில் விளைகிற எல்லாம் அதில் அடங்கும். நாம் கண்டும் கேட்டும், ருசித்தும், தொட்டும், முகர்ந்து பார்த்தும் இவற்றையெல்லாம் அநுபவிக்கிறோம்.

ஐம்புலன்களே நமக்கு வாழ்வின் சகல ஆனந்தத்தையும் சாத்தியமாக்குகின்றன. நல்ல சாப்பாடு, ரம்மியமான சங்கீதம், சுகந்தம், குளிர்ந்த தென்றல், பூரண சந்திரனின் காட்சி இவை நமக்கு ஐம்புலன்களாலே அநுபவத்துக்கு வருகின்றன. மனிதனுக்கு இந்த ஐம்புலன்களைத் தந்து, இவற்றுக்கு ஆகாரமாக வெளியே ஐம்பூதங்களிலிருந்து தோன்றும் சுவை, மணம் முதலிய அழகுகளையும் வைத்திருப்பவர் ஸ்வாமி. அவரது கிருபையால்தான் சகல இன்பங்களும் கிடைக்கின்றன. நம்மால் ஒரு மணி அரிசி சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமியே இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டித்து, அதன் அழகுகளை நாம் அநுபவிப்பதற்காக நமக்கு பஞ்ச இந்திரியங்களையும் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார். ஆனபடியால் நமது புலன்களால் அநுபவிக்கும் இன்பங்களை ஸ்வாமியின் நினைவோடு அநுபவிப்பதே நமது கடமையும் தர்மமுமாகும்.

அவருக்கு இந்த இன்பங்களை முதலில் அர்ப்பித்து அவரது பிரஸாதமாகவே இவற்றை நாம் ஏற்க வேண்டும். இந்த வழக்கம் நிலைப்பட்டால் ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்யத்தகாத எந்தப் பொருளையும் நமது புலன்களால் அநுபவிக்கக் கூடாது என்ற பக்குவம் உண்டாகும்.

பஞ்சேந்திரியங்களால் அநுபவிக்கும் பிரபஞ்ச வஸ்துக்களைப் பரமேசுவரனுக்கு அர்ப்பணம் பண்ணும் மனோபாவனையில் பிறந்ததுதான் பஞ்சோபசாரம் என்கிற ஐந்து உபாசாரங்கள். கோயிலிலும் வீட்டுப் பூஜையிலும் ஸ்வாமிக்குக் குறைந்தது ஐந்து உபசாரம் செய்யவேண்டும். ஸ்வாமியின் விக்கிரகத்துக்குச் சந்தனமிடுவது, புஷ்பம் போட்டு அர்ச்சிப்பது, தூபம் காட்டுவது, தீபாராதனை செய்வது, நைவேத்தியம் பண்ணுவது ஆகியனவே பஞ்சோபச்சாரங்கள். இவற்றில் சந்தனமிடுவது கந்தம் – பிருதிவி தத்துவம் என்ற மண்ணைக் குறிப்பது. புஷ்பம் ஆகாயத்தைக் குறிப்பது. தூபம் வாயுவைக் குறிப்பது. தீபம் அக்னியைக் குறிப்பது. நைவேத்தியம் அமிருதமாகிய நீரைக் குறிப்பது, எனவே பஞ்ச பூதங்களும் பஞ்சோபசாரத்தில் அடக்கம். பஞ்ச பூதங்களிலிருந்துதான் பஞ்சேந்திரியங்களின் அத்தனை நுகர்ச்சி வஸ்துக்களும் உண்டாகின்றன. ஆகவே, பஞ்சோபசாரத்தில் ஈசுவரன், பிரபஞ்சம், ஜீவன் எல்லாம் ஒன்றுபடுத்தப் பெறுகின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஆலயமும் ஆஸ்பத்திரியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  நாக மகிமை
Next