‘யோகம் என்றால் சேர்க்கை’ என்று அர்த்தம். ஜீவனானவன் பேதமற்று பிரம்மமான பரமாத்மாவுடன் சேர்ந்து விடுவதுதான் யோகம். பலனில் பற்றில்லாமல் நிஷ்காம்ய கர்மம் செய்து, அதன் மூலம் சித்த சுத்தி பெற்று, பக்தி உபாஸனை மூலம் மனசு ஒருமுகப்பட்டு ஈஸ்வராநுக்கிரகமும் பெற்றால், இறுதியில், இந்த அபேதமான யோக நிலையை அடையலாம். வேதத்தின் பரம தாத்பரியம் இதுவே. ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்த யோகம் இதுவே.
“பரம்பரையாக வந்த இந்த யோகமானது, பின்னால் சிதிலமாயிற்று. அதைப் புனருத்தாரணம் பண்ணவே வந்திருக்கிறேன்” என்றார் ஸ்ரீகிருஷ்ண பகவான்.
பரமேஷ்வரன் வேறு, கிருஷ்ணன் வேறு அல்ல. இருவரும் ஒருவரே. கீதையிலேயே கிருஷ்ண பகவான், விசுவரூபம் காட்டும்போது, “என்னுடைய ஈஸ்வர ஸ்வரூபத்தைப் பார்” என்கிறார்.
பச்ய மே யோகம் ஐச்வரம்.
விசுவரூப தரிசனத்தில் லோகத்தை சம்ஹாரம் செய்யும் ருத்ர ஸ்வரூபத்தையே கிருஷ்ணன் காட்டினார்.
இவ்வாறு ஈசுவர அபேதமாயிருக்கிற கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஆதியில் “ஜகத்குரு” என்ற விருது உண்டு. ‘க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று சுலோகம்கூட உண்டு. ஜகத்குருவான ஸ்ரீ கிருஷ்ணன், “பூர்வத்தில் இந்த யோகத்தை சூரியனுக்கு உபதேசித்தேன். மீண்டும் இப்போது கிருஷ்ணனாக உனக்கு உபதேசிக்க வந்தேன். எந்தெந்தக் காலத்தில் தர்மம் மிகவும் க்ஷீணிக்கிறதோ அப்போதெல்லாம் வந்து உபதேசிப்பேன்” என்றார்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் துவாபர யுக இறுதியில் நடந்தது. பிறகு கலியுகம் வந்தது. மறுபடியும் ஜீவபிரம்ம அபேத யோகத்துக்கு நலிவு உண்டாயிற்று. எழுபத்திரண்டு துர்மதங்கள் தோன்றின. அவை மிக பயங்கரமாகக் கிளம்பின. அசந்தர்ப்பமானவை எல்லாமே இப்படித்தான் ஆரம்பத்தில் தடபுடலாக இருக்கும். பிறகு, இருந்த இடம் தெரியாமற் போகும்.
கலிகாலத்தில் இப்படி எழுபத்திரண்டு துர்மதங்கள் தோன்றி, வைதிக மதத்தை நலிவுறச் செய்ததைப் பரமேஷ்வரன் பார்த்தார். துவாபர யுகத்தில் ஏற்பட்ட நலிவு சாமானியமானதுதான். எனவே, ஏதோ சில சந்தர்ப்பங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருந்தது. மற்ற சமயங்களில் அவர் ஆயர்பாடியில் லீலை செய்தார்; துவாரகையில் ராஜ்யபாரம் செய்தார்; பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது போனார். ‘கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும்’ என்று பரமேஷ்வரன் எண்ணினார்.
சர்வ வித்தைகளுக்கும் நாயகனான அந்த சதாசிவனே ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களாக அவதரித்தார்.
ஸ்ரீ சங்கராசாரியர்கள் சிவாவதாரமே என்பதற்கு வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது. யஜுர் வேதத்தில் உள்ள ஸ்ரீ ருத்ரத்தில், ‘கபர்த்திக்கு நமஸ்காரம்; வ்யுப்த கேசனுக்கு நமஸ்காரம்’ என்று அடுத்தடுத்து வருகிறது. ‘கபர்த்தி’ என்றால் ‘ஜடாதாரி’ என்று அர்த்தம். சிவபெருமானை ஜடாதாரியாகவே பொதுவில் காண்கிறோம். ‘வ்யுப்த’ என்றால், ‘வபனம் செய்து கொண்ட’ என்று அர்த்தம். ‘வ்யுப்த கேசன்’ என்றால் தலையை முண்டனம் செய்து கொண்டவன் என்று பொருள். ஜடாதாரியான சிவன், ‘வ்யுப்த கேச’னாக இருந்தது எப்போது? ஸ்ரீ ஆதிசங்கரராக இருந்தபோதே! திரிகாலமும் உணர்த்த வேதம் இதை முன்பே சொல்லிவிட்டது!
பரமேசுவர மூர்த்தி ஆலமரத்தின் அடியில் தக்ஷிணாமூர்த்தியாக அசையாமல் இருந்தது, அதற்கு ‘சம்பு’ என்று பெயர். ‘சம்’ என்றால் ‘நித்ய சுகம்’ என்று அர்த்தம். நித்ய சுகம் உற்பத்தியாகுமிடமே சம்பு. ஆனந்த ஊற்றே சம்பு. இந்த ஆனந்த ஊற்று இருந்த இடத்திலேயே இருக்கும். கண் பார்ப்பதில்லை. வாய் பேசுவதில்லை. உடம்பு அசைவதில்லை. ஒரே நிஷ்டை, ஸமாதி, மௌனம். ஆனால் அந்த மௌனத்திலிருந்தே ஸனகாதி யோகிகள் மகா உபதேசம் பெற்றுத் தாங்களும் பிரம்ம நிஷ்டை பெற்றனர். ஆனந்த ஊற்றைத் தேடிப்போய் இவர்கள் அதை மொண்டு குடித்தார்கள். மௌனம்தான் இவர்கள் பெற்ற மகா உபதேசம்.
அப்படித் தேடிப் போகாத நமக்காக அந்த உத்கிருஷ்டமான மௌன நிலையை விட்டு ஜகத்குரு ஆதிசங்கரபகவத் பாதராக வந்தார் பரமேசுவரன்.
பதிவிரதா ரத்தினமாக ஒருத்தியிருக்கிறாள். அவள் குரலைக்கூட யாரும் கேட்டதில்லை. அவள் வெளியில் வந்து யாரும் பார்த்ததில்லை. அவர்களுடைய குழந்தை கிணற்றில் விழுந்து விடுகிறது! அப்போது அவள் வீட்டை விட்டு வெளியேவந்து கூப்பாடு போடுகிறாள். அதுபோலவே தக்ஷிணாமூர்த்தியாக இருந்த பரமேசுவரன் கலியில் தமது குழந்தைகளான ஜனங்கள் பாபப்படுகுழியில் விழுவதைப் பார்த்தார். ‘தான் மவுன உபதேச சம்புவாக – ஆனந்த ஊற்றாக – இருந்தால், இந்த யுகத்தில் பிரயோஜனம் இல்லை; ஊற்றைத் தேடி யாரும் வரமாட்டார்கள். எனவே, அந்த ஆனந்தமே ஜனங்களைப் தேடிப்போக வேண்டும். ஆனந்தமாக இருக்கும் சம்பு ஆனந்தத்தைச் செய்கிற சம்கரராக (சங்கரராக) ஜனங்களிடையே போய் நித்தியசுகத்தை அவர்கள் கையில் எடுத்துத் தரவேண்டும்’ என்று தீர்மானித்தார். சங்கராசாரியராக அவதரித்தார்.
இந்த வரிசைக் கிரமத்திலேயே ஸ்ரீ ருத்ரம் முதலில் சம்புவையும், பிறகு குருவான சங்கரரையும், அதன்பிறகு குரு உபதேசத்தால் பெறக்கூடிய பஞ்சாக்ஷரத்தையும் சொல்லி நமஸ்கரிக்கிறது.
பூர்வ காலங்களில் அசுரர்கள் என்று தனியாக ஓர் இனத்தவர் வருவார்கள். அவர்களை சம்ஹரிக்க விஷ்ணு ஆயுதபாணியாக வருவார். இந்தக் கலியில் ராக்ஷஸர்கள் தனியாக இல்லை. விசுவாமித்திரரின் யாகத்தைக் கெடுக்க ஸுபாஹு, மாரீசன் என்ற ராக்ஷஸர் வந்ததாகவும், ஸ்ரீ ராமர் அவர்களை வதைத்ததாகவும் ராமாயணத்தில் படிக்கிறோம். இந்தக் கலியில் விசுவாமித்திரர் இருந்திருந்தால் அவருடைய யாகத்தைக் கெடுக்க ஸுபாஹு, மாரீசரே வேண்டியிராது. அவர் மூளை கெட்டுப்போய் அதனுள்ளேயே அசுரப் பிரவிருத்தி குடிகொண்டிருக்கும். அவர் யாகம் செய்யவே எண்ணியிருக்க மாட்டார். ஜனங்களின் மூளையிலேயே அசுரன் புகுந்து விட்ட இந்தக் கலியில் யாரை சம்ஹாரம் பண்ணுவது? யாரை விட்டு வைப்பது? எனவே, அசுர சம்ஹாரத்துக்கான வைஷ்ணவ அவதாரங்கள் இப்போது வேண்டாம் என்று பரமேஷ்வரன் கருதி, ஞானோபதேசத்துக்காகத் தாமே ஒரு பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.
சம்புவாக உட்கார்ந்திருந்த மூர்த்தி சங்கரராகச் சுற்றும் மூர்த்தியாயிற்று. எவ்வளவுக்கெவ்வளவு உட்கார்ந்திருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு சஞ்சாரம் செய்தார். எவ்வளவுக்கெவ்வளவு மௌனமாக இருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு பேசினார். உபதேசித்தார். வாதம் செய்தார். பாஷ்யம் செய்தார்.
ஸ்ரீ ஆதி சங்கரரின் மகிமை, அவருக்கு முன்னிருந்த எழுபத்திரண்டு மதங்களில் எதுவுமே அவருக்குப் பின்பு பாரத் தேசத்தில் இல்லாமற் போனதுதான். அவர் கண்டனம் செய்த சாங்கியம், வைசேஷிகம் போன்ற சில மதங்களைப் பற்றிப் புஸ்தகங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள முடிகிறது! இவற்றை நடைமுறையில் பின்பற்றுகிற எவரையுமே காணோம். காபாலிகம், வாமாசார சாக்தம் போன்ற கோரமதங்களைப் பற்றி பழைய இடிபாடு (ruins) புதைபொருள் இவற்றிலிருந்தே தெரிந்து கொள்கிறோம். வேத கர்மாநுஷ்டானத்தைச் சொல்லாமல் ஆத்ம குணங்களை மட்டும் சொல்லும் புத்தமதம் முதலிய சில மதங்களை மற்ற நாடுகளுக்காக விட்டு வைத்திருக்கிறார், ஸ்ரீ சங்கர பகவத்பாதர். அவையும் நம் நாட்டில் அவர் காலத்துக்குப் பின் இல்லாமற் போயின. சொற்ப காலத்துக்குள், தத்வம் ஒன்றையே அடிப்படையாக வைத்து, மற்ற மதங்களை எல்லாம் ஜயித்து, அத்வைதத்தை ஆசார்யர்கள் நிலை நாட்டியதைப் போன்ற மகத்தான காரியதைச் செய்தவர் உலகில் எவருமே இல்லை.
ஸ்ரீ சங்கர பகவத்பாதர்களுக்குப் பிற்பாடு, நம் நாட்டில் வேறு சம்பிரதாயங்கள் ஏற்பட்டாலும், ஸ்ரீ சங்கரர் ஸ்தாபித்த அத்வைத மதம் போய்விடவில்லை. இன்றும் அத்வைதிகள் இருக்கிறோம்.
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் வேதம் முழுமையையும் ஒப்புக்கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லக்ஷ்யமாக, வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான, ‘ஜீவனும் பிரம்மமும் ஒன்றே’ என்ற அத்வைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரும் ‘ஜகத்குரு’ என்ற விருதைப் பெற்றார்.
வைசாக சுக்கிலபக்ஷ பஞ்சமி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்குரிய திருவாதிரையாகவோ, அல்லது ஸ்ரீ ராமனுக்குரிய புனர்வஸுவாகவோ அமையும்.
ஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணியகாலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீ சங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த்திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் என்கிறேன்.
அது என்ன காரணம்? ஸ்ரீ சங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள்? வேத தர்மத்துக்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்தால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீ சங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.
தனி மனிதராக இருந்துகொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அநுக்கிரகத்தைச் செய்தார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்ததுதான் ‘திக்விஜயம்’.
ஸ்ரீ ஆச்சார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும். ‘பஜகோவிந்த’த்தில் ஆரம்பித்துத் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீ ஆசார்யாளின் உபதேசம். “ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்” என்று ‘பஜகோவிந்த’த்தில் சொல்கிறார் ஆசார்யாள். “யமன் ஒரு க்ஷணம்கூட வீண் கழிப்பதில்லை. பிரதி க்ஷணமும் நெருங்கி வருகிறான். எப்போது பிடித்துக் கொள்வானோ தெரியாது. கோவிந்தன் காலைக் கட்டிக்கொண்டால்தான் யமனால் நமக்கு பயம் இல்லை’ என்கிறார். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிப் பழக வேண்டும். எப்படியும் போஜனம் செய்கிறோம். அதோடு, சாப்பிடுகையில் ‘கோவிந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அநுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈசுவர ஸ்மரணம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும். கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்கக் குறைவுக்கும் ஒரு முக்கியமான காரணம்.
ஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்ன சின்ன விஷயங்களையாவது அநுஷ்டானத்தில் கொண்டு வர வேண்டும். எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். “அம்மா, இன்றுவரை நான் செய்த தப்புகளை மன்னித்து, நாளையிலிருந்து நான் தப்புகளைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்” என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக்கொண்டு தூங்க வேண்டும்.
இன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீ ஆசார்ய ஜயந்தியைக் கோலாஹலமாகக் கொண்டாட வேண்டும். ஆசார்ய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீ ஆசார்யாள் அநுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.