அருள் மின்னல் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

‘ஸ்வாமி’ என்ற பெயர் ஸுப்ரம்மண்யத்துக்கே உரியது என்பதற்கு ஆதரவாக இன்னொரு விஷயமும் தோன்றுகிறது.

திருப்பதியை சுப்ரம்மணியரோடு சம்பந்தப்படுத்திப் பேசுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். வேங்கடரமண ஸ்வாமியே சுப்ரம்மணியர்தான் என்று நினைக்கிறவர்கள் உண்டு. வேங்கடரமண ஸ்வாமி சகல தெய்வங்களாகவும் இருக்கிற பரமாத்மாவாக இருக்கிறார். அவரே பெருமாள், அவரே பரமேஷ்வரன் – அதனால்தான், அங்கே பில்வ அர்ச்சனை நடக்கிறது. அவரே அம்பாள் – இன்றைக்கும் சுக்ரவாரத்தில்தான் அவருக்கு அபிஷேகம்! புடவையைத்தான் உடுத்துகிறார்கள். எல்லாத் தெய்வமும் அவரே. அவரை சுப்ரம்மணியமாகச் சொல்பவர்கள் கூறும் காரணம் – அவர் மலைமேல் இருக்கிறதுதான். மலைமேல் பொதுவாக சுப்ரம்மணியர்தான் கோயில் கொள்கிற வழக்கம் இருக்கிறது என்கிறார்கள். ‘வேங்கட ரமணா’ என்று சொல்வதில்லை! ஹிந்திக்காரர்கள் அவரை என்னவென்று சொல்கிறார்கள்? ‘பாலாஜி’ ‘பாலாஜி’ என்றே சொல்வார்கள். பாலன், குமரன் என்றால் சிவசக்திகளின் செல்லக் குழந்தையான சுப்பிரமணிய ஸ்வாமியைத்தான் குறிப்பிடும். ‘குமாரதாரை’ என்றே திருப்பதியில் ஒரு தீர்த்தம் இருக்கிறது. இதோடு சேர்ந்து திருப்பதியிலுள்ள திருக்குளத்தின்பேர் ‘ஸ்வாமி புஷ்கரிணி’ என்றிருப்பதைப் பார்த்தால், “ஸ்வாமி”யே ‘குமாரன்’ தான் என்பதற்கு இன்னொரு சான்று கிடைக்கிற மாதிரி இருக்கிறது. திருப்பதி திருக்குளத்துக்கு “ஸ்வாமி புஷ்கரிணி” என்றே பெயர்.

சகல லோகத்தையும் – ஜீவர்களையும் ஜடத்தையும் – தன் சகல சொத்தாக (ஸ்வம்) க் கொண்டிருக்கிறவர்தான் ‘ஸ்வாமி’. அந்தப் பெயர் ஏன் சுப்ரம்மணியருக்கு விசேஷமாக வந்தது? அத்தனை பெருமை அவருக்கு ஏன் என்று பார்ப்போம்.

மேகத்தில் மின்னல் பளிச்சிடுகிறது. க்ஷணகாலம்தான் – அதற்குள் அது மகாஜோதியை, மகாசக்தியைக் கொட்டி விடுகிறது. எத்தனையோ ‘பவர் ஹவுஸ்’களில் ‘ஜெனரேட்’ செய்ய முடியாத அளவுக்கு மின்சாரத்தைப் பாய்ச்சி விடுகிறது. இத்தனை சக்தி இப்போதுதான் மின்னலாகத் தோன்றினாலும், இதற்குமுன் அது இல்லாமல் இல்லை. இல்லாதது எப்படித் தோன்ற முடியும்? ஸயன்ட்டிஸ்ட்கள் மின்சாரம் எப்போதும் எங்கேயும் நிறைந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால், சாதாரணமாக அது தெரிவதில்லை. பின் எப்போது தெரிகிறது? நீராவி மேகமாக மாறித் திரிகிறபோது, ஒன்றாக இருக்கிற மின்சாரம் சில பகுதிகளில் வல அம்சமாகவும் (பாசிடிவ்), சிலவற்றில் இட அம்சமாகவும் (நெகடிவ்) பிரிந்து நிற்கிறது. பிற்பாடு மழைச் சமயத்தில் மேகங்களில் ஒருவிதமான நெரிசல், குமுறல் உண்டாகிறபோது, வல அம்ச (Positively charged) பகுதிகளும் இட அம்சப் பகுதிகளும் (negatively charged) நெருங்குகிறபோது, இந்த அம்சங்கள் ஒன்றையொன்று சரேலென்று ஆகர்ஷித்துக் கொள்கின்றன. இப்படி அவை தாவிக் கலக்கும்போதுதான், எங்கும் நிறைந்திருக்கிற மின்சாரம், நமக்குத் தெரிகிற மாதிரி, இத்தனை சக்தியுடன் மின்னலாக வெளிப்பட்டுத் தெரிகிறது. எங்கும் ஒன்றாக உள்ளபோது இருப்பதே தெரியாமல் இருந்த மின்சாரம் இரண்டாகப் பிரிந்து, பிறகு மறுபடி ஒன்றாகச் சேருகிற போது பெரிதாக ஜொலிக்கிறது; ஒலிக்கிறது இடியாக; மின்சக்தியை வாரிக் கொட்டுகிறது.

இது ஜடசக்தியான மின்சாரம். இந்த ஜடசக்திக்கு ஆதாரம் இதைப் பிறப்பித்த சித்சக்தி – ஞானசக்தி, அறிவுச் சக்தி. தன் சக்தியை அறிந்து கொள்ளாமலேயே எங்கேயும் பரம்பொருளாக அது முதலில் இருக்கிறது. அப்புறம் ‘பாஸிடிவ்’, ‘நெகடிவ்’ ஆகப் பிரிகிறது. அதைத்தான் சிவன், சக்தி என்கிறோம். தமிழில் ‘வலது’, ‘இடது’ என்று மின்சாரத்துக்குச் சொல்கிறோமே இதுதான் ரொம்பப் பொருத்தம். ஏனென்றால், ஈசுவரன் வலப்பக்கமும், அம்பாள் இடப்பக்கமும் இருப்பதுதான் அர்த்தநாரீசுவரக் கோலம். (அம்பாளுக்குப் பதில் இதே இடத்தில் – அதாவது இடப்புறத்தில் விஷ்ணு இருந்துவிட்டால் அதுவே சங்கர நாராயணர்) . இரண்டாகப் பிரிந்தால் போதாது. மேகங்கள் உண்டானால் போதாது. மின்னலாக வாழ்விக்கிற சக்தி ஏற்பட வேண்டும். ஒன்றாக இருந்த பிரம்மம் தன்னை அறிந்து, சிவசக்திகளாகப் பிரிந்து, பிரபஞ்சத்தை உண்டுபண்ணி விட்டால் போதாது. பிரபஞ்சத்துக்கு எந்நாளும் அநுக்கிரகம் பண்ணிக்கொண்டிருப்பதாக ஒரு மின்னல் சக்தி பிறக்க வேண்டும். இதற்காகத்தான் இரண்டாக பிரிந்த வல அம்ச சிவனும், இட அம்ச சக்தியும் மறுபடி ஒன்றாகச் சேர்ந்து, மின்னல்போல சக்தி வேலாயுதத்தை பிடித்திருக்கிற சுப்ரம்மண்ய ஜோதியை ஆவிர்பவிக்கச் செய்தார்கள். பிரமத் தன்மையானது லோகாநுக்கிரகத்துக்கெனவே ஒரு மூர்த்தியாகிறபோது, ‘ஸுப்ரமண்யம்’ ஆகச் சிறப்புப் பெறுகிறது. “ஸு” என்றால் நல்லது. சிரேஷ்டமானது என்று அர்த்தம். வெறும் பிரம்மம், அநுக்கிரக ஸுப்ரமண்யமாவதால் “ஸ்வாமி” என்ற ‘டைட்டில்’ கிடைக்கும்படியான பெருமையைப் பெறுகிறது.

இந்த ஜோதி உண்டாவதற்கே மூலமான சித்சக்தி பிரிந்து, சேர்ந்தது. பிரிந்தது, அப்புறம் பெரிய ஆகர்ஷண வேகத்தோடு சேருவதற்குத்தான். சேர்ந்தது, இப்படி லோகங்களுக்கெல்லாம் கிருபை செய்கிற மகாசக்திமானாக ஒரு ஜோதிக் குமாரன் உண்டாவதற்குத்தான்.

மேகத்தில் நாம் பார்க்கிற மின்னல் ஜோதி வெளி இருட்டை மாத்திரம் வெகு சிறிது காலத்துக்கு நீக்குகிறது. சுப்ரம்மண்யமோ, அருள் ஒளி – அருட்பெரும்ஜோதி. அது வெளியிருட்டு, உள்ளிருட்டு இரண்டையும் சாசுவதமாக நீக்குவது. மின்சாரம் ஒருத்தரை இழுத்துக்கொண்டால் எவராலும் எதிர்த்துத் தாக்குப் பிடிக்க முடியாது. ‘எலெக்ட்ரோக்யூட்’டானால் மரணம்தான். இந்த அருள் மின்சாரம் இழுத்துக் கொண்டாலும் எதிர்த்து நிற்க முடியாது. ஆனால், இது அந்த ஜோதி ரூபமாகவே நம்மையும் ஆக்கி, அமரமாகச் செய்துவிடும். அருணகிரிநாதர் “கந்தர் அநுபூதி”யில் இந்தப் பெரிய அநுபவத்தையே சொல்கிறார். ஒன்று இரண்டாகப் பிரிந்து மறுபடி ஒன்றாய்ச் சேர்ந்தபின், பலவாக நினைக்கிற நம்மையும் இழுத்துக் கடைசியில் அந்த ஒன்றாகவே ஆக்குகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஸ்வாமி என்றால் குமாரஸ்வாமியே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  குமாரன்
Next