தென் தேசத்தில் சீர்காழியில் பிறந்து ஜைனர்களை ஜயித்த அதே குமாரஸ்வாமி வடதேசத்தில் பௌத்தர்களின் ஆதிக்கம் இருந்தபொழுது பிரயாகையில் அவதாரம் செய்தார். அவருக்குக் குமாரிலபட்டர் என்று பெயர். பேரிலேயே ‘குமார’ சம்பந்தம்!
பக்தி, ஞானம் இவற்றையெல்லாம்கூட ஒதுக்கிவிட்டு ‘நமக்கு வேதம் சொன்ன கர்மா இருக்கிறது. அதை அநுஷ்டித்தாலே பரம சிரேயஸ்’ என்று அநுஷ்டானம் செய்பவர்கள் இருந்தார்கள். இவர்களுக்குக் கர்ம மீமாம்ஸகர்கள் என்று பெயர். பூர்வ மீமாம்ஸகர்கள் என்றும் சொல்வதுண்டு. வேதம் சொன்னபடி கர்மா செய்த இவர்கள் அதனாலேயே லோக க்ஷேமம், ஆத்மதிருப்தி இரண்டும் உண்டாவதைப் பார்த்தார்கள். எனவே, கர்மாவுக்குப் பலன் தருபவன் என்று ஒர் ஈசுவரனைக்கொண்டு வருவானேன் என்பது இவர்கள் கட்சி. அதனால் பக்தி வேண்டியதில்லை என்பார்கள். ‘கர்மாவிலேயே நிறைவு இருக்கிறபோது கர்மமே இல்லாத ஆத்மாவைப்பற்றி எதற்கு ஞான விசாரம்? ஞானத்துக்காகவே கர்மாவை விடுவது பாபம்’ என்பார்கள். அதாவது ஞான மார்க்கமும் இவர்களுக்கு ஆகாது. குமாரிலபட்டர் இப்படிப்பட்டவர்தான். மீமாம்ஸ மதத்தில் மூன்று விதம் உண்டு. அவற்றில் பாட்ட மதம் என்பது (குமாரில) பட்டராலேயே ஏற்படுத்தப்பட்டது. அவர் மதம் ஸ்தாபித்ததற்கு முன் கதைக்குப் போகலாம். வேத கர்மம், தானே பலனைக் கொடுக்கிறது என்ற நம்பிக்கையுடன் சகல கர்மாநுஷ்டானங்களும் செய்து வந்தார்.
அப்போது வேத அத்தியயனம், யாகயக்ஞங்கள் முதலானவற்றைக் கண்டனம் செய்யும் பௌத்தர்களின் செல்வாக்கு அதிகமாகி வந்தது. அவர்கள் ஏன் அப்படிக் சொல்கிறார்கள், அவர்களுடைய கொள்கைகள் என்ன என்று பூரணமாகத் தெரிந்துகொள்ளக் குமாரிலபட்டர் விரும்பினார். வைதிக கர்மாநுஷ்டானத்தின் உயர்ந்த பலனில் அவருக்குச் சந்தேகமில்லை; அதை அவர் விடுவதாகவும் இல்லை.ஆனாலும்கூட உடனே பௌத்தர்களிடம் சண்டைக்கு கிளம்பிவிடவில்லை. ‘அவர்களுடைய கொள்கை எந்தப் பிரயோஜனத்துக்கு ஏற்பட்டது என்று பூரணமாகத் தெரிந்து கொள்ள வேண்டும், அப்புறம் நம் கொள்கையின் பிரயோஜனம் பெரிதா; அது பெரிதா என்று தெரியும். இதற்கப்புறம்தான் அதை நிராகரிக்கத் தொடங்கலாம், என்று திறந்த மனஸோடு எண்ணியிருப்பார் போலிருக்கிறது. அல்லது அந்த மதத்தைப் பூரணமாகத் தெரிந்துகொண்டால், பிற்பாடு வாதத்துக்கு இடமில்லாமல் நாமே பூரணமாக எதிர்வாதம் செய்து நிராகரித்து விடலாம் என்று எண்ணியிருக்கலாம்.
சுப்ரமண்யர் என்கிற நிலையிலேயே இருந்தால் எல்லா மத சித்தாந்தமும் கற்றுக்கொள்ளாமலே தெரிந்துவிடும்தான். ஆனால், சுப்ரம்மண்யராயிருந்து ஜயிப்பது உதவாது. ஏனென்றால், எப்போது பார்த்தாலும் அபிப்பிராய பேதம் இருக்கத்தான் செய்யும். அவற்றை மநுஷ்யர்கள் தங்கள் புத்தி சக்தியை விருத்தி செய்துகொண்டு தாங்களே தீர்த்துக்கொள்ள விடாமல் சுப்ரம்மண்யரையே மறுபடி மறுபடி எதிர்பார்த்துக் கொண்டிருக்க விடுவதில் சாரமில்லை. எடுத்ததற்கெல்லாம் தெய்வ சக்தியை காட்டி ஜனங்களை உபயோகமில்லாமல் வைப்பதானால் சிருஷ்டியே வேண்டாமே! தெய்வ சக்தியை ஒரே தடவை பிரயோகித்து எல்லாவற்றையும் சம்ஹரித்துவிட்டு, அப்புறம் பேசாமலிருந்து விடலாம். ரொம்பவும் அதர்மம் மிஞ்சிப் போனால், கிருஷ்ண பரமாத்மா மாதிரி பகவத் சக்தியைக் காட்டத்தான் வேண்டும். மற்ற சமயங்களில் மநுஷ்யராக இருக்கிற மாதிரியே காட்டிக்கொண்டு, மநுஷ்யர்களுக்கு தக்கபடிதான் நடக்க வேண்டும். இதனால் மநுஷ்ய சக்தியை வைத்துக்கொண்டு, அதையே பெரிதாக்குகிற தன்னம்பிக்கையை, தைரியத்தை, உத்ஸாகத்தை ஜனங்களுக்கு ஊட்ட வேண்டும். பௌத்தத்தை சம்பூரணமாக அறிந்த பிறகே அதைக் கண்டிக்க எண்ணிய குமாரிலபட்டர் இப்படி நினைத்தார் போலிருக்கிறது. அதனால் மநுஷ்ய ரீதியில் பௌத்த சித்தாந்தத்தை வித்தியாப்பியாசம் செய்ய முடிவு செய்தார்.
பௌத்தர்களோ தங்களது ரகசிய தத்வங்களைச் சிஷ்யர்களுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். அதோடுகூட அவர்கள் கர்மாநுஷ்டானம் செய்கிற பிராம்மணர்களைத் தங்கள் விஹாரத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். இதற்காக ஒரு பெரிய தியாகம் செய்தார் குமாரிலபட்டர்! எதிராளிக் கொள்கைகளை சத்தியமாக உள்ளபடி தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தம்முடைய சத்தியத்தைத் தியாகம் செய்தார் – பொய் வேஷம் போட்டார்! தம்மை பௌத்தர் என்றே சொல்லிக்கொண்டு விஹாரத்தில் சேர்ந்துவிட்டார். அந்தரங்கமாக அவசியமான கர்மாக்களை மட்டும் அநுஷ்டித்து வந்தார்; மற்ற சமயங்களில் அவர்களில் ஒருத்தராகவே காட்டிக்கொண்டார். இப்படியே அங்கேயிருந்து சம்பூரணமாக பௌத்த சித்தாந்தத்தைக் கற்றுக் கொண்டு விட்டார். அதற்கப்புறம் அவர் பிக்ஷுவாக இருந்து புத்த தர்மத்தைப் பரப்பப் போவதில்லை; எப்படியாவது கத்தரித்துக் கொண்டு நழுவப் பார்க்கிறார் என்று விஹாரத்தைச் சேர்ந்தவர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. அவருக்குத் தெரியாமல் விசாரணைகள் செய்து அவரைப் பற்றிய உண்மையைத் தெரிந்து கொண்டார்கள். ‘சரி. நம்மை வஞ்சனை பண்ணியவனை நாமும் வஞ்சிக்க வேண்டும். இவன் கொஞ்சமாக நம் ரகசிய தத்வங்களை தெரிந்து கொண்டிருந்தால் விஹாரத்திலிருந்து விரட்டினாலே போதும். இவனோ முழுக்கத் தெரிந்து கொண்டுவிட்டான். ஆனதால் லோகத்திலிருந்தே இவனை விரட்ட வேண்டும்’ என்று அவர்கள் தீர்மானம் பண்ணினார்கள்.
அஹிம்ஸைத் தத்வம் போன இடம் தெரியவில்லை. ஹிதவஞ்சனையாக அவரை ஏதோ பேச்சுக் காட்டி விஹாரத்தின் ஏழாவது மாடிக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அங்கேயிருந்து அவர் எதிர் பாராத சமயத்தில் அங்கிருந்து அவரை அப்படியே கீழே தள்ளி விட்டார்கள்.
அந்த ஆபத்து சமயத்தில்கூட அவருக்கு வேதத்தில்தான் ஸ்மரணை. எனவே, “வேதம் பிரமாணமாக இருந்தால் நான் ஏழாம் மாடியிலிருந்து விழுந்தும் எனக்குக் கெடுதல் ஏற்படாமலிருக்கட்டும்” என்று ஆணை வைத்துக் கொண்டே விழுந்தார்.
அதேபோல் அத்தனை உச்சத்திலிருந்து விழுந்தும் அவருக்கு மண்டை நொறுங்கவில்லை. கைகால்கூட முறியவில்லை. கண்ணில் மட்டும் ஒரு கல் பொத்துக் கொண்டு கொஞ்சம் புண்ணாகி விட்டது. நமக்கு அவர் எப்படிப் பிழைத்தார் என்று ஆச்சரியமாயிருக்கிறது. அவருக்கோ, ‘வேதப் பிரமாணத்தின்மேல் நான் ஆணை வைத்திருக்க எனக்கு ஏன் இந்தச் சின்ன உபாதைகூட ஏற்பட வேண்டும்?’ என்று வேதத்தின் மேல் ஸ்வாதீனமாகக் கோபமே வந்தது.
அப்போது அசரீரி கேட்டது. அது, “நீ என்ன சொன்னாய்? வேதம் பிரமாணமாதலால் எனக்குக் கெடுதல் ஏற்படாது, என்று சொல்லவில்லையே! இப்படிச் சொன்னாலல்லவா பூர்ண நமபிக்கை என்றாகும்? நீ ‘வேதம் பிராமணமாக இருந்தால்’ என்று சொன்னதில் கொஞ்சம் சந்தேகம் தொக்கி நிற்கத்தானே செய்கிறது? அதன் பலன்தான் கண்ணுக்கு வந்த கஷ்டம்” என்றது.
குமாரிலபட்டர் முன்னைவிடத் தீவிரமாக வேத கர்மங்களில் விசுவாசம் வைத்து, பாட்ட மதத்தை ஸ்தாபித்து, பௌத்தத்தை நிராகரணம் செய்யத் தொடங்கினார். தன் மதம் (சித்தாந்தம்) எதிராளி மதம் (பூர்வபக்ஷம்) இரண்டையும் கரைத்துக் குடித்த மகாமேதையாதலால், சுலபத்தில் பௌத்தர்களை வாதத்தில் வென்றார்.
‘சங்கர பகவத் பாதர் புத்த மதத்தை விரட்டினார்’ என்று நீங்கள் சரித்திர புத்தகத்தில் படித்திருக்கிறீர்கள். இது தப்பு! ரொம்பவும் மிகை (Exaggeration) என்று அவர் பெயரை வைத்துக் கொண்டிருக்கிற நானே சொல்கிறேன். ஆசாரிய பாஷ்யங்களைப் படித்தவர்கள் ஒப்புக் கொள்வார்கள். அதிலே பௌத்த மத கண்டனம் ரொம்பவும் குறைச்சல்தான். பௌத்தர்களை ஏற்கெனவே குமாரிலபட்டர் அடக்கி விட்டார். ஆசார்யாள் அதிகம் கண்டனம் செய்தது, வைதிகத்தையே சேர்ந்த இந்தக் கர்ம மீமாம்ஸகர்களையும், இன்னொரு வைதிக மதமான சாங்கியத்தையும்தான். அவருடைய பாஷ்யங்களில் பார்த்தால், இவற்றில் நூற்றிலொரு பங்கு தான் பௌத்தமத கண்டனம் இருக்கும்.
இதென்ன ஸ்வாமிகள் இப்படிச் சொல்கிறார் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஸுப்ரம்மண்யரின் அவதாரம் என்று குமாரிலப்பட்டரைச் சொல்லி, அவரே நம் ஆசாரியாருக்கு விரோதமான பௌத்தத்தைக் கண்டனம் பண்ணிவிட்டார் என்றும் சொல்லிவிட்டு, இப்போது ஆசார்யாள் பட்டரின் கர்ம மீமாம்ஸ மதத்தையே கண்டித்ததாகச் சொல்கிறேனே என்று குழப்பமாயிருக்கலாம். அப்படியானால், ஆசார்யாளின் மதத்துக்கு வேத கர்மநுஷ்டானமே இல்லாத பௌத்தம் விரோதமா, கர்மாநுஷ்டானம் மட்டுமே உள்ள மீமாம்ஸை விரோதமா என்று கேட்பீர்கள்.
இவை இரண்டுமே ஆசார்யாளுக்கு விரோதம் இல்லை. அத்வைதத்துக்கு எதுவுமே விரோதம் இல்லை. அதற்குள்ளே சகல சித்தாந்தங்களும் அடக்கம். படிப்படியாக கர்மம், பக்தி, ஞானம் என்று அது போகும். ஆரம்பத்தில் ஞானமேயில்லாமல் கர்மா செய்தாலும் போதும். முடிவிலே கர்மாவே இல்லாத ஞானம் வந்துவிடும். முதலில் சித்த சுத்திக்கு கர்மாதான் முக்கியம்; முடிவில் ஞானம்தான் முக்கியம். அங்கே கர்மா எல்லாம் நின்றுவிடலாம். இவற்றின் ஒருபடி லக்ஷியம் மட்டும் என்று நிற்கிறபோதுதான் அவற்றிடம் சண்டைக்குப் போக வேண்டும் என்று நம் ஆசாரியாள் நினைத்து வாதம், கண்டனம் செய்தார். அல்லது எந்தப் படி எந்த நிலையில் வருவது என்கிற தெளிவு இல்லாமல், அதை எல்லோருக்கும் பொதுவாக்கினால், அப்போது அதை வேத நிராகரணம் செய்தார். பக்திக்கும் ஞானத்துக்கும் வராமல் வெறும் கர்மாவோடு நிற்கிறார்களே என்றுதான் மீமாம்ஸகர்களைக் கண்டித்தார். பரம ஞானத்தைத் துளிக்கூட அநுபவத்தில் கொண்டுவர முடியாத சாமானிய ஜனங்களுக்கெல்லாம் மாயை, சூனியம், நிர்வாணம் என்று உபதேசம் பண்ணிக் கொண்டு லோக க்ஷேமத்துக்காக அவர்கள் அநுசரிக்க வேண்டிய வேத கர்மங்களைப் புறக்கணிக்க வைக்கிறதே என்பதால், பௌத்தத்தோடு சண்டைக்குப் போனார். பௌத்தம் ‘எப்போதும் – ஆரம்ப நிலையில்கூட கர்மா வேண்டாம்’ என்றதாலேயே, அதை ஆசாரியாள் நிராகரணம் செய்தார். ‘எப்போதும் கர்மாதான்; முடிகிற நிலையில்கூட ஞானம் வேண்டாம்’ என்றதால் பூர்வ மீமாம்ஸையை நிராகரித்தார். அவை இரண்டும் தங்கள் மட்டத்தை – லெவலை – அறியாதபோது சண்டை போட்டார். ஆனால், அவற்றை ஒவ்வொரு மட்டத்தில் தன்னிலேயே கொண்டதுதான் அத்வைதம். இதில் பௌத்தர்களுடன் இவர் போட வேண்டிய வாதப் போரைப் பெரும்பாலும் குமாரிலப்பட்டரே போட்டு அவர்களை நிராகரணம் செய்துவிட்டார். ‘ஸ்வாமியும் இல்லை, கர்மமும் இல்லை’ என்ற பௌத்தர்களை ‘ஸ்வாமி இல்லை, கர்மம் உண்டு’ என்ற மீமாம்ஸகர்கள் பெருமளவுக்கு ஜயித்த சமயத்தில், ‘ஸ்வாமியும் உண்டு, கர்மமும் உண்டு; கடைசியில் ஆத்ம சாந்தத்தில் கர்மமும் இல்லை; ஸ்வாமியும் தனியே இல்லை’ என்று சொன்ன ஆசாரியாள் அவதரித்தார்.
பரமேசுவரன் நம் ஆசார்யாளாக அவதரிப்பதற்கு முந்தியே, குமாரஸ்வாமி பட்டராக அவதாரம் செய்து பௌத்தத்தை நிராகரித்து, இவர் காரியத்தில் பாதியைச் செய்துவிட்டார்.
ஆசாரியாள் காசியிலிருந்து திக்விஜயம் புறப்பட்டார். அவருக்கு குமாரிலரைக் கண்டு தம் வழிக்குத் திருப்ப வேண்டும் என்பதிலேயே முனைப்பு. குமாரிலர் ஒருத்தர் அத்வைத வேதாந்தத்துக்குத் திரும்பி விட்டால், அத்தனை கர்ம மார்க்கக்காரர்களும் இதே வழிக்கு வந்து விடுவார்கள் என்பதால்தான் இந்த முனைப்பு.
இச்சமயத்தில் குமாரிலபட்டர் தம்மைச் சுற்றி உமியைக் கொட்டி அதை அக்னியில் கருக்கிக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகத் தாமும் அதில் கருகிக் கருகிப் பிராணத்தியாகம் செய்துகொள்கிறார் என்கிற சமாச்சாரம் தெரிந்தது. இதைக் கேட்ட ஆசாரியாள் பதறிப்போய் பிரயாகைக்கு விரைந்தார்.
குமார ஸ்வாமியின் அவதாரமான பட்டர் ஏன் இப்படி கோரமான முறையில் ஜீவனைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றால், மநுஷ்யர் மாதிரி செய்கிற காரியங்களில் தர்ம சங்கடமான ஒன்றைச் செய்து விட்டால், அதற்காகத் தண்டனையும் பெற்றேயாக வேண்டும் என்று அவதாரங்கள் தாமாகத் தீர்மானிப்பதேயாகும். ‘பௌத்த குருமார் என்னை அவர்களில் ஒருவராக நம்புமாறு ஏமாற்றி அவர்களிடமிருந்து வித்தையை ஸ்வீகரித்தேனே! குரு த்ரோகம் செய்துவிட்டேனே! ஈசுவரன் என்று ஒருத்தனை எதிர்ப்பார்க்காமல் புண்ணிய, பாப கர்மங்கள் தாமே பலன் தரும் என்று ஸ்தாபித்த நான், இப்போது குருத்ரோக பாபத்துக்குப் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளத்தான் வேண்டும்’ என்று ரொம்பவும் மனசு நொந்து தர்ம சாஸ்திரங்களைப் பார்த்தார். அதில் மனமறிந்து செய்த குரு த்ரோகம் உடம்பைச் சித்ரவதை செய்துகொண்டாலொழியப் போகாது என்று இருந்தது. ‘சரி அப்படியே செய்வோம்’ என்று அஞ்சாநெஞ்சராக முடிவு செய்தார் குமாரிலபட்டர். ‘துஷாக்னிப் பிரவேசம்’ என்று உமிக்காந்தல் நெருப்பில் வறுபட்டுச் சாவதுதான் மிகப் பெரிய சித்ரவதை என்பதால் அப்படியே சங்கற்பம் செய்துகொண்டு காரியத்தில் அதை செய்தார். நமக்கு இப்படி ஒரு பிராயச்சித்தம் போட்டிருக்கிற புஸ்தகம் அகப்பட்டால், அந்தப் புஸ்தகத்தை நெருப்பில் போடுவோம். குமாரிலரோ, பிராயச்சித்தம் கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டு, தாம் தீயில் இறங்கினார்.
வேதகர்மாக்களை எல்லாம் மறுபடி நிலைநாட்டிய மகா பெரியவர், கொஞ்சம்கூட மனம் கலங்காமல் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக உமிக்காந்தலில் வெந்து கொண்டிருக்கும்போது, பகவத்பாதாள் அவரிடம் ஒடோடி வந்தார்.
குரு த்ரோகத்துக்குத் தண்டனையாக (நிஜமான குருகூட இல்லை; போலி குருத் துரோகத்துக்காக) உமிக்காந்தல் அக்கினியில் வெந்துகொண்டிருந்த குமாரிலப்பட்டருக்கு முன் நம் ஆசார்யாள் வந்து நின்றார்.
ஆசாரிய தரிசனத்தால் குமாரிலப்பட்டருக்குத் துஷாக்கினியின் தகிப்புத் தெரியவே இல்லை.
தரிசன அமிருதத்தோடு ஆசாரியாள் அவருக்குத் தத்வ உபதேச அமிருதத்தையும் கொடுத்தார்.
இது வரை கதை சொன்னேன். இப்போது கொஞ்சம் கொஞ்சம் தத்வம் சொல்கிறேன். எல்லாக் கதையும் தத்வத்தில் நிறைந்து போவதற்குத்தான்.
‘வேதம் விதித்துள்ள கர்மாக்களை நாம் செய்தால், அதுவே நிறைவு; ஸ்வாமியிடம் பக்திவேண்டாம்; அவரோடு ஒன்றாகப் போய் விடுகிற ஞானம் வேண்டாம்’ என்பது கர்ம மீமாம்ஸை. இவர்கள் ஒப்புக் கொண்ட அதே வேதங்களில் உள்ள உபநிஷத்தில்தானே கர்மம் எல்லாம் நின்றுபோன ஜீவபிரம்ம அபேத ஞானத்தைச் சொல்லியிருக்கிறது என்றால்; இவர்கள் வேதத்தை ‘விதி’ என்றும் ‘அர்த்த வாதம்’ என்றும் இரண்டாகப் பிரித்தார்கள். விதி என்பது ‘நீ இன்னின்ன கர்மாக்களை இப்படியி்ப்படிச் செய்’ என்று சொல்லி, அந்தக் கர்மாக்களில் பிரயோகமாகிற மந்திரங்களைத் தரும் பகுதி. அதாவது காரியத்தைச் சொல்கிற பாகம். ஜீவபிரம்ம அபேத வாசகங்களில் காரியம் இல்லை, வெறுமே இருந்து கொண்டிருக்கிற நிலையை அது சொல்கிறது. ‘இருப்பது எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். நமக்கு, லோகத்துக்குப் பிரயோஜனம் தருவது கர்மம்தான். இந்த விதிகளைக் கொண்ட வேத பாகம்தான் நமக்குப் பிரமாணம்’ என்று மீமாம்ஸகர்கள் சொன்னார்கள். விதியாக இல்லாத உபநிஷத்தை ‘அர்த்தவாதம் என்பார்கள். ஒரு விதியை அநுஷ்டிப்பதால் உண்டாகும் பலனை உயர்த்திச் சொல்லி, அதனால் விதிகளில் ஜனங்கள் ஊக்குவதற்காக ‘கதைப்பது’தான் அர்த்தவாதம்.
பேப்பரில் தாதுபுஷ்டி லேகியம் விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. அதிலே சிங்கத்தோடு ஒரு ஸாண்டோ (பயில்வான்) குஸ்தி செய்கிற மாதிரி படம் போட்டிருந்தது. அந்தப் படம், அதைப் பார்த்து நம் ரஸிப்பதற்காகவா போட்டிருக்கிறது? இல்லை. இந்த லேகியத்தைச் சாப்பிட்டால் நீங்களும் அப்படி பலசாலிகளாக ஆவீர்கள்’ என்று நமக்கு ஆசை காட்டுவதற்கு ‘அர்த்தவாதமாக’வே போட்டிருக்கிறது. இப்படியேதான் ‘சகல கர்மங்களையும் அநுஷ்டிக்கிறவன் ரொம்பவும் உயர்ந்துவிடுவான் என்று ஜீவனை ஸ்தோத்திரம் பண்ணுவதற்காகவே உபநிஷத்துக்களில் ‘சகலமாகவும் ஆன பிரம்மம் ஒன்று இருக்கிறது; இந்த ஜீவன் அந்த பிரம்மமே ஆகிவிடுவான். அப்போது இவனுக்குக் கர்மாவே நின்றுபோய் ஞான மயமாகுகிறான்’ என்றெல்லாம் சொல்லி இருக்கிறது. இந்தக் ‘கதை’ எல்லாம் ஜீவனை நிறையக் கர்மாபண்ண வைக்கிற உத்தேசத்தில் ஏற்பட்டவைதான்” என்று கர்ம மீமாம்ஸகர்கள் சொல்வார்கள். லேகியம் சாப்பிட்டு ஒருநாளும் சிங்கத்தோடு சண்டைக்குப் போக முடியாது என்பதுபோல, அந்த பிரம்ம நிலையும் ஏதோ அசாத்தியத்தைச் சொல்லும் கதை என்றே கருதினார்கள்.
இவர்களுக்கு ஆசார்யாள் என்ன எதிர்வாதம் செய்து உபதேசித்தார்? வேதத்தில் காரியத்தைச் சொல்கிற விதிகளைப்போலவே, இன்னின்ன காரியம் செய்யக்கூடாது என்று சொல்லும் ‘நிஷேதங்’களையும் நீங்கள் அர்த்தவாதம் என்று தள்ளிவிடாமல் ஒப்புக் கொள்கிறீர்கள். வேதம் ‘கள் குடிக்காதே’ என்கிறது. இங்கே செய்ய வேண்டிய காரியம் எதுவும் இல்லை. ஆனாலும், ஒன்றைச் செய்யாததாலேயே பிரயோஜனம் இருக்கிறது – கள் குடிக்காததால் புத்தி கலங்காமல் இருக்கிறது என்பதால் இதை நீங்களும் ஏற்கிறீர்கள். சில காரியங்களைச் செய்யாததிலேயே பிரயோஜனம் இருக்கிறது என்று ஒப்புக் கொள்கிறீர்கள். அதாவது காரியத்துக்கு இல்லாமல் (வேத) சப்தப் பிரமாணத்தைப் பிரயோஜனத்துக்காகவே ஒப்புக் கொள்கிறீர்கள். சிலவற்றைச் செய்யாமலிருப்பதே பிரயோஜனம் என்று நீங்கள் சொன்னால் நானோ உபநிஷத்தில் சொன்னபடி பரம ஞான நிலையில் ஒன்றையுமே செய்யாததுதான் பரமப் பிரயோஜனம். அது வெறும் அர்த்தவாதம் அல்ல என்கிறேன். ஒரு நிலைவரைக்கும் வேத விதிப்படி லோக க்ஷேமார்த்தமாக கர்மா செய்து செய்துதான் மனஸைக் கண்டபடி திரியாமல் தர்மத்தில் கட்ட முடியும். ஆனால், கர்மாவே முடிந்த முடிவு, நிறைந்த நிறைவு என்பது சரியில்லை, கர்மா உள்ள வரை அதன் பலனை அநுபவிக்க ஜன்மா எடுத்துக் கொண்டேதான் இருக்க வேண்டும். ஜன்மா முழுக்க துக்கமே இல்லாமல் நிறைந்திருக்க எவராலாவது முடியுமா? கர்மா தரும் நிறைவும் ஆனந்தமும் தாற்காலிகம்தான். நிறைந்த நிறைவு, நித்யானந்தம் எப்போது ஏற்படுகிறது? கர்மாநுஷ்டானத்தால் சித்த சுத்தி உண்டானபின், கர்மாவை விட்டு, ஆத்ம விசாரம் பண்ணி, தியான யோகத்தில் இறங்கி அதன் முடிவில், தான் எங்குமாக நிறைந்து ஆனந்த ஸ்வரூபமாக இருக்கிற ஆத்மாவே என்று அநுபவிக்கிறபோதுதான் நிறைந்த நிறைவு, பூரணத்துவம், சாசுவத சௌக்கியம் உண்டாகும். இத்தனை கர்மாவும் அந்தக் காரியமற்ற நிலைக்குக் கொண்டுவிடவே ஏற்பட்டவை” என்று உபதேசித்தார்.
‘சரி, ஒரு காரியமும் இல்லாமல் ஒருத்தன் ஆத்மானந்தத்தில் இருக்கிறான் என்றால் அவனுக்கு வேண்டுமானால் அது பரமப்பிரயோஜனம். ஆனால், லோகத்துக்கு அவனால் என்ன பிரயோஜனம்? வேதம் சொல்கிறபடி அவரவரும் கர்மாவை, கடமையைச் செய்தால்தானே லோக க்ஷேமம் உண்டாகிறது. “
இதற்கு ஆசாரியாள் என்ன பதில் சொன்னார்? ‘ஜனங்களுக்குப் பெரிய பிரயோஜனம் அன்பாக, ஆனந்தமாக இருப்பதுதானே? கர்மாவை விட்டுவிட்டு ஒருத்தன் சந்நியாசம் வாங்கிக் கொள்ளும்போது, ‘ப்ரைஷ மந்திரம்’ என்று ஒன்று சொல்கிறான். அது, என்னைக் கண்டால் ஒரு ஜீவராசிக்குக்கூட பயம் உண்டாகக்கூடாது. சகல ஜீவராசிகளிடமும் நான் அன்பாக இருக்கக் கடவேன்’ என்கிறது. கர்மா இருக்கிற வரையில் அதற்கு ஏதாவது இடையூறு வந்துதான் சேரும்; உடனே கோபம், துவேஷம் வரத்தான் செய்யும். சந்நியாசிக்கோ கர்மாவே இல்லை. அதனால் எல்லோரிடமும், எல்லாவற்றிடமும் அவனே எப்போதும் அன்பு மயமாக இருக்க முடியும். அன்பாக இருப்பதே இவனுக்கும் ‘கர்மா’வாகி விடுகிறது என்று வேடிக்கையாகச் சொல்லலாம். இவனுடைய தரிசனமே மற்றவர்களுக்கு அன்பை, ஆனந்தத்தைத் தருகிறது. இதைவிட லோகப் பிரயோஜனம் என்ன வேண்டும்? ஸ்தூலமாகக்கூட இவன் காரியம் செய்யாமலா இருக்கிறான்? காரியத்தால் தனக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லாவிட்டாலும், தன் தரிசனத்தால் தத்வோபதேசத்தால் லோகத்துக்கு நன்மை செய்வதற்காக ஊர் ஊராகச் சுற்றுகிறான். தான் கொஞ்சம்கூடப் பட்டுக்கொள்ளாமலே , பட்டுக் கொள்ளாததாலேயே, லௌகிகர்களைவிட ஜாஸ்திக் காரியம் செய்கிறான். மற்றவர்கள் அழுதுகொண்டும், ஆத்திரப்பட்டுக் கொண்டும், லாப நஷ்டக் கணக்கு பார்த்துக் கொண்டும் செய்வதால் பூரண சக்தியோடு காரியம் பண்ண முடியவில்லை; அதில் குறைகள் உண்டாகின்றன. இவனோ, சிரித்துக்கொண்டே செய்வதால் அசாத்தியமானதையும் அநாயாசயமாகச் செய்துவிடுகிறான். இவனுக்கு எல்லாம் தானானதால், தன்னிடமே ஒரு தோஷம் இருப்பதற்காகத் தன்னைத் தள்ளிவிடாததுபோல், பிறரிடம் இருக்கிற தோஷத்துக்காக அவர்களை துவேஷிக்காமல், அதைப் பரம பரிவோடு நிவிருத்தி பண்ணுகிறான். அவன் இருக்கிற நிறைந்த நிறைவான, பரிபூரண ஆனந்த நிலையில் ஜனங்களைச் சேர்க்கத்தான் முதல்படியாக வேத கர்மா இருக்கிறது. ஜனங்கள் சொந்த லாபத்தையே நினைத்து ஆசைவயப்பட்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று விடாமல், வேதம் லோகோபகாரமாகக் கர்மாவைக் கொடுத்திருக்கிறது. இவற்றை நிஷ்காம்யமாக (பற்றில்லாமல்) செய்து செய்து சித்தசுத்தி உண்டான பின் இவை நின்றுவிடலாம்’ என்று ஆசார்யாள் விளக்கினார்.
ஞானியின் அன்பு, ஆனந்தம், நிஷ்காம்ய கர்மம் முதலியவற்றுக்கெல்லாம் தாமே ஒரு விக்கிரகமாக ஆசார்யாள் குமாரிலப்பட்டரின் முன் நின்றார்.
ஈசுவர பக்தியில்லாமல் வறட்டுக் கர்மம் செய்வது பிசகு என்றும் விளக்கினார். ‘கர்மம் என்பது ஜடம். அது தனக்குத்தானே பலன் தந்து கொள்ள முடியாது. லோக க்ஷேமத்துக்காக ஸ்வாமிதான் வேதத்தின்மூலம் கடமைகளை விதித்து, பலன் தருகிறார். கர்மாவில் குறை ஏற்பட்டால் க்ஷமித்துக் கைதூக்கி விடவும், குறை வராமல் கர்மா செய்யும் சக்தியையும் சிரத்தையையும் பெறவும் அவரையே பிரார்த்திக்க வேண்டும். அவர் பிரீ்திக்காகச் செய்கிறோம் என்கிற பாவம் வந்தால்தான், சொந்த ஆசைக்காகக் காரியம் செய்வது போகும்.’
இப்படி ஆசாரியாள் உபதேசிக்க உபதேசிக்கக் குமாரிலபட்டருக்குக் கர்மமெல்லாம் ஈச்வரார்ப்பணம் செய்யப்பட்டு பக்தியிலும், அந்த பக்தி ஈசுவரனோடு இரண்டறக் கலந்து விடும் ஞானத்திலும் கொண்டு விடுவதற்குத்தான் என்று நன்றாகத் தெளிவாயிற்று.
ஆனந்த பாஷ்பத்துடன் ஆசார்யாளைப் பார்த்து, ‘கர்மமே பலன் தரவில்லை, ஈச்வரன்தான் பலதாதா என்று நன்றாகத் தெரிகிறது. நான் பிராயச்சித்தமாகச் செய்கிற இந்தத் துஷாக்னிப் பிரவேச கர்மாவுக்குப் பலனாக எனக்கு ஞானாமிருதத்தைத் தருவதற்கு ஈசுவரனான தாங்களே பலதாதாவாக வந்திருக்கிறீர்கள். கர்மாவினால் ஒருநாளும் கிடைக்காத ஜனன நிவிருத்தியை எனக்கு அருளிவிட்டீர்கள். அந்திம சமயத்தில் பக்தர்களுக்குக்கூடப் பகவத் ஸ்மரணை வராது என்பார்கள். ஆனால், ஸ்வாமியே தேவையில்லை என்ற எனக்கோ, தாங்களே நேரில் பிரத்தியக்ஷமாகி விட்டீர்கள். தங்கள் சித்தாந்தம் முழுவதும் எனக்குச் சம்மதம். ஆனால், இன்னும் சில க்ஷணங்களில் சரீரத்தை விட்டுவிடப்போகிற நான், மற்ற கர்ம மார்க்கக்காரர்களுக்கெல்லாம் இதை எடுத்துச் சொல்ல முடியாமல் அசக்தனாக இருக்கிறேன். ஆகையால் தாங்கள் மாஹிஷ்மதி நகரத்துக்குச் சென்று, அங்கே என்னைவிட மீமாம்ஸகராக இருக்கிற மண்டன மிச்ரருக்கு இதே உபதேசத்தை அநுக்கிரகத்துத் தங்கள் சித்தாந்தத்துக்குத் திருப்பிக் கொள்ளுங்கள். பிறகு மீமாம்ஸகர்கள் எல்லோரும் அதே வழிக்கு வந்துவிடுவார்கள்’ என்றார்.
சரீரத்தை வறுத்து எடுக்கின்ற அக்கினியின் தாபமே தெரியாமல் குமாரிலபட்டர் ஆசாரியாளின் சந்நிதான விசேஷத்தால் அமிருதத்தில் நனைந்த மாதிரி இருந்தார். இந்தக் கட்டத்தை நினைக்கிறபோது ‘மூக பஞ்சசதீ’ சுலோகம் ஒன்றும், அப்பர் ஸ்வாமிகளின் பாடல் ஒன்றும் ஞாபகம் வருகின்றன.
‘ மூக பஞ்சசதீ’ சுலோகம் ‘ஜனோயம் ஸந்தப்தோ’ என்று ஆரம்பிக்கிறது. ‘நான் நெருப்பில் நன்றாக வெந்துகொண்டிருக்கிறேன்’ என்கிறார் மூகர். என்ன நெருப்பு? சம்ஸாரம் என்பதுதான் நல்ல கோடைகால சூரியன் மாதிரி கொளுத்தி எடுக்கிறதாம். ‘எனக்குப் பரமஞான தீர்த்தம் ஒரு துளிக்கூடக் கிடைக்காமல் வேகிறேன்’ என்கிறார். ‘பரஞானபயஸ்’ என்கிறது சுலோகம். ‘பயஸ்’ என்றால் தீர்த்தம்; பால் என்றும் அர்த்தம்.
பரம ஞானப்பாலைத்தான் அம்பாள் ஞானசம்பந்தருக்குக் குழந்தைப் பிராயத்திலேயே அநுக்கிரகித்தாள். அதனால் அவர் ஆரம்பத்திலிருந்தே கர்மம், பக்தி, ஞானம் மூன்றைப் பற்றியும் சரியானபடி தெரிந்துகொண்டு உபதேசித்தார். அவர் பெயரிலேயே ‘ஞானம்’ இருக்கிறது. பக்தியை அவர் யதேஷ்டமாக வளர்த்தது எல்லோருக்கும் தெரிந்தது. வேத கர்மாக்களையும் அவர் எங்கு பார்த்தாலும் உயர்த்திப் பாடியிருக்கிறார். உதாரணமாக, ‘கற்று ஆங்கு எரி ஓம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை’ என்கிறார். ‘கற்று வேத அத்யயனம் செய்து, ஆங்கு – அதில் சொல்லியிருக்கிறபடி; எரி ஓம்பி அக்கினி வளர்த்து யாகம் செய்து; கலியை வாராமே செற்றார் வாழ் தில்லை – கலியை விரட்டிவிட்ட வேதியர்கள் வாழ்கிற சிதம்பரம்’ என்கிறார். கர்மா அதுவாகவே கலியை விரட்டிவிடவில்லை. கர்ம பலனாக ஈச்வரப் பிரசாதத்தாலேயே கலி ஓடிற்று என்பதை இதே பாட்டில் ‘முற்றா வெண் திங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரை பற்றா பாவமே’ என்றார். பாவம்தான் கலி புருஷன்.
குமாரிலப்பட்டருக்கு ஆயுள் முடிகிற சமயத்தில்தான் ஞானம் ஜலமாக, பாலாக இல்லாமல், அமிருதமாகவே, ஆசாரியாள் தந்த அத்வைத அமிருதமாகவே கிடைத்தது.
தாக சாந்திக்கு மூகர் எதைத் தேடிக்கொண்டார்? ‘அம்மா காமாக்ஷி! பரமசிவ ஜாயே – மகா மங்களமான பேரன்பு வடிவான ஈசுவரனுடன் இரண்டறக் கலந்திருக்கும் தாயே! சம்ஸார தாபத்தில் கொதித்திருக்கிற நான் உன் மகா குளிர்ச்சியான திருவடி நிழலைத்தான் தேடுகிறேன் அம்மா” என்கிறார். ‘பதாம்போஜச் சாயாம்’ – ‘இணையடிக் கமலங்களின் நிழலை’ என்று நேர் அர்த்தம்.
‘ஈசன் எந்தை இணையடி நீழலே’ என்று இதையே அச்சடித்தாற்போல் அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார். எந்தச் சந்தர்ப்பத்தில் இதைச் சொன்னார்? மூகர் ரூபமாக (Symbolic) சம்ஸாரத்தைக் கொளுத்தும் சூரியன் என்றார். அப்பர் வாஸ்தவமாகவே ( Factual ) சுண்ணாம்புக் காளவாய்க்குள் இருந்து கொண்டு இப்படி பாடினார்.
ஜைனமதத் தலைவராக இருந்த அப்பர் சைவத்துக்கு மாறி விட்டார் என்றதும் ஜைனனாக இருந்த பல்லவ ராஜா அவரைச் சுண்ணாம்புக் காளவாய்க்குள் போடும்படி ஆக்ஞையிட்டான். அப்படியே செய்த ராஜ சேவகர்கள், “சிவன் சிவன் என்றீரே, இப்போது எப்படி இருக்கிறது சொல்லும்” என்று பரிஹாசம் செய்தார்கள்.
ஹிரண்யகசிபு செய்த குரூர தண்டனைகள் பிரஹலாதனைத் தொடாத மாதிரி, அப்பருக்கும் ஈசுவராநுக்கிரகத்தால் சித்திரஹிம்சை எதுவுமே தெரியவில்லை. தன்னிடம் கேலியாகக் கேட்டவர்களிடம் கோபமே இல்லாமல், “எப்படி இருக்கிறதா? ஈசன் எந்தை இணையடி நிழல் எப்படிக் குளிர்ச்சியாக இருக்குமோ அப்படி இருக்கிறது. அது இந்திரிய அதீதமானது. உங்களுக்குப் புரியாது. உங்களுக்குப் புரிகிற மாதிரி சில இந்திரிய சுகங்களை வரிசையாக சொல்கிறேன். எண்ணிக் கொள்ளுங்கள். முதலில் பரம ஸுஸ்வரமான வீணா கானம் – மாசில் வீணை! – அப்புறம் பூரண சந்திரன் – மாலை மதியம்; அப்புறம் ஜிலுஜிலு என்று அடிக்கும் தென்றல் – வீசு தென்றல்; இன்னும் வஸந்தகாலத்தில் எங்கு பார்த்தாலும் கம்மென்று பூரித்து நிற்கிற புஷ்பங்களின் சுகந்தம்- வீங்கு இளவேனில்; கடைசியாக, தேனின் ரஸமும், அதற்காகக் கூட்டம் கூட்டமாக வரும் வண்டுகளின் ரீங்காரமும் சேர்ந்த தாமரைப் பொய்கை-மூசு வண்டு அறை பொய்கை; இத்தனை இனிமைகளையும் ஒன்று கூட்டினால் கிடைக்கிற ஈசன் இணையடி நிழலின்பத்தை இதோ இந்தக் கொதிக்கிற காளவாய்க்குள் அநுபவித்துக் கொண்டு ஆனந்தமாய் இருக்கிறேன்” என்றார், அப்பர் ஸ்வாமிகள். அந்த ஈசனின் அவதாரமான ஆசாரியாளின் இணையடிகளைத் தரிசனம் செய்துகொண்டே, தேக சிரமம் கொஞ்சங்கூடத் தெரியாமல் குமாரிலபட்டர் நெருப்பில், கருகிப் பிராணத் தியாகம் செய்தார்.
ஞானபண்டித முருகனின் அவதாரமானவருக்கு பக்தியும் ஞானமும் தெரியாதா? ஆனாலும் பௌத்தர்கள் வெறும் அறிவு மார்க்கத்தை மட்டும் சொன்னபோது, தாம் அதில் கொஞ்சத்தை எடுத்துக்கொண்டால்கூட, அவர்களுக்கு இடம் கொடுத்துப் போகும்; இதனால் ஜனங்களை வைதிகத்துக்குத் திருப்பச் சிரமப்படும் என்பதால் ‘ஞானமும் வேண்டாம், பக்தியும் வேண்டாம், கர்மாவே போதும்’ என்று மட்டும் அடித்துச் சொன்னார். நடுவிலே இப்படி அவர் ஒரு வழி போட்டதால்தான் அப்புறம் ஆசார்யாள் கர்மம், பக்தி, ஞானம் மூன்றையும் சொல்ல முடிந்தது.