தேவர்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

“ஸ்வாமி ஒருவர்தானே! உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?” என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிஹாஸம் செய்கிறார்கள்.

ஸ்வாமி ஒருவர்தான். அவரைத்தான் நாம் பேச்சு வழக்கில் ‘தெய்வம்’, ‘தெய்வம்’ என்கிறோம். தெய்வம் என்றால் ‘விதி’ என்றே அர்த்தம். விதி என்பது ஸ்வாமி நமக்குத் தருகிற கர்ம பலன்தான். ஆனால் நாம் ‘ஸ்வாமி’ என்ற அர்த்தத்திலேயே தெய்வம் என்ற பதத்தை உபயோகிக்கிறோம். அதோடு, அந்த தெய்வமும் தேவர்களும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு, ‘முப்பத்து முன்று கோடி தெய்வமானது’ என்று நாமும் மற்ற மதஸ்தர்களோடு சேர்ந்துக் கொண்டு கேலியாக எண்ணுகிறோம்.

தெய்வம் (ஸ்வாமி) வேறு. தேவர்கள் வேறு. ஸ்வாமி ஒருவர்தான் என்பதே நமது மதம். அவரே மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாவாக சிருஷ்டிக்கிறார். விஷ்ணுவாகப் பரிபாலிக்கிறார். ருத்திரனாக சம்ஹாரம் செய்கிறார்.

உண்மையில் இவர்களும் வேறு வேறு இல்லை. கோர்ட்டுக்குப் போகும்போது தாசில்தார் ஸுட் போட்டுக் கொண்டிருக்கிறார். பூஜை செய்யும்போது அவரே பஞ்சகச்சம் கட்டிக் கொள்கிறார்; பத்தினி அகத்தில் இல்லாமல் அவரே சமைக்க நேர்ந்தால் அப்போது துண்டை மட்டும் இடுப்பில் சுற்றிக் கொள்கிறார். நாம் சாமானிய ஜீவர்கள். வேலைக்குத் தக்கபடி உடுப்பை மட்டும் மாற்றிக் கொள்கிறோம். சர்வ சக்தனான ஸ்வாமி வேலைக்கு ஏற்ப ரூபத்தையும் மாற்றிக் கொள்வார். பார்க்கப் போனால் சரீரம் என்பதே ஆத்மாவுக்கு ஒரு உடுப்பு மாதிரிதான். கீதையில் பகவான் இப்படித்தான் சொல்லியிருக்கிறார்.

அல்ப சக்தர்களான நமக்கு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வேஷங்கள் ஏற்படுகின்றன. சர்வ சக்தரான ஸ்வாமி ஒரே சமயத்தில் பல காரியங்களில் ஈடுபட்டுப் பல வேஷங்களையும் போடுவார். நாம் ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்கிறோம்; ஸ்வாமி ஒரே சமயத்தில் சகல வேலையும் செய்வதால் எல்லோ வேஷமும் போட்டுக் கொண்டிருக்கிறார். இவற்றை வெவ்வேறு தெய்வ வடிவங்களாகச் சொல்கிறோம். இந்த தெய்வ ரூபங்களில் மகாவிஷ்ணு, ஈசுவரன், அம்பாள், விக்நேசுவரர், ஸுப்ரம்மண்யர் போன்றவர்கள் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு மாதிரி காரியம் மட்டும் செய்தாலும்கூட அவர்களுக்கு உள்ளுக்குள் தாங்கள் முழுமுதல் ஸ்வாமிதான் என்று தெரியும். அதனால் அவர்கள் பக்தர்களுக்கு மோக்ஷபரியந்தம் எல்லா அநுக்கிரஹங்களும் செய்வார்கள்.

ஆனால், தேவர்கள் யாவரும் இப்படி முழு ஸ்வாமியாகத் தங்களைத் தெரிந்து கொண்டிருக்கிற தெய்வ வரிசையைச் சேர்ந்தவரல்ல.

அவர்கள் யார் என்று சொல்கிறேன்:

ஸ்வாமி சிருஷ்டித்துள்ள எண்ணி முடியாத அண்டங்களில் இருக்கும் பிராணிகளுக்கெல்லாம் இருக்க இடம், உண்ண உணவு முதலியன வேண்டியிருக்கின்றன. ஆகாயம், காற்று, தீ, நீர், மண் இந்த பஞ்ச பூதங்களைப் பலவிதங்களில் கலந்தே அவர் இத்தனை பிராணிகளுக்கும் வாழ்வுக்கான உபகரணங்களைத் தந்திருக்கிறார். ஆறே சுவைக்குள் அடங்கும் சரக்குகளை வைதத்துக்கொண்டு நாம் ஆயிரக்கணக்கான பட்சண தினுசுகளைச் செய்வது மாதிரி, ஐந்தே பூதங்களைப் பலவிதங்களில் கலந்து எல்லா உயிர்களுக்கும் ஜீவனோபாயம் தருகிறார் ஸ்வாமி.

பஞ்சபூதங்களும், அவற்றின் தினுசான கலவை (Mixture)களும் பிராணிகளுக்கு ஹிதமாக அமைந்து அவர்களை ரக்ஷிக்க வேண்டும். இவ்விதம் அவற்றை நமது வாழ்வுக்கு அநுகூலமாக்கித் தரும் பொறுப்பை ‘தேவர்கள்’ என்ற இனத்துக்கு ஸ்வாமி அளித்திருக்கிறார். இப்போது மநுஷ்ய இனம், பக்ஷி இனம், விலங்கினம், தாவர இனம் என்று சொல்கிறோமல்லவா? அது மாதிரி ஒரு ஜீவராசிதான் தேவர்கள். லௌகிகமாகப் பிராணிகளை ரக்ஷிக்கும் ராஜா அல்லது ராஜாங்கம், பல அதிகாரிகளை வைத்துக் கொண்டு ரக்ஷணம் தருவது போல், தேவர்கள் என்ற அதிகாரிகளைக் கொண்டு சர்வ லோகங்களையும் ஆண்டு ரக்ஷணம் செய்கிறார் ஸ்வாமி. ஒரு ராஜா அல்லது ராஜாங்கம் பஞ்ச பூதங்களில் தனக்குரிய பூமி, கடல் பிரதேசம், வானவெளி இவற்றைக் காப்பாற்றத் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை இவற்றை வைத்திருப்பது போல், ஈசுவரனும் பஞ்ச பூதங்களைக் காப்பாற்ற தேவர்களின் சைன்னியத்தை வைத்திருக்கிறார். நமது ராஜாங்கத்தில் சைன்னியத்தைத் தவிர, நீர்ப்பாசனம், மராமத்து, போக்குவரத்து இவற்றுக்கெல்லாம் அதிகாரிகள் இருப்பதுபோல், ஈசுவர சாம்ராஜ்யத்திலும் ஜனங்களுக்குத் பஞ்ச பூதங்களை அநுகூலமாக்கித் தருவதற்காகப், பலவிதமான தேவர்கள் அதிகாரம் வகிக்கிறார்கள். நம் உலகில் ஜல சப்ளை விஷயத்தைக் கவனித்து, வெள்ளம் வந்தால் வெட்டி விடவும், வறட்சி பாதிக்காமல் அணை கட்டவும் என்ஜினீயர்கள் இருக்கிறார்களல்லவா; ஆனால், ஜலத்தை இவர்களே சிருஷ்டிக்க முடியாது. ஸ்வாமி தான் சிருஷ்டிக்கிற ஜலத்தை லோகங்களில் பங்கீடு செய்ய எஞ்சினீயர்களுக்கெல்லாம் என்ஜினீயராக வருணனை வைத்திருக்கிறார். இதே மாதிரி நெருப்பைக் கவனித்து அதை மக்களுக்கு அநுகூலமாக்குபவன் அக்னி, காற்றைபப் பிராணிகளுக்கு அநுகூலமாக்கித் தருபவன் வாயு. இப்படிப் பல தேவர்கள். அவர்களுக்கெல்லாம் அதிபதி இந்திரன்.

உயிரினங்களில் பல வகைகளை நாம் நேருக்கு நேர் கண்ணால் பார்க்கிறோம். நாம் மனித இனம். இன்னும் விலங்கினம், புள்ளினம், தாவர இனம் என்று பலவற்றைப் பார்க்கிறோம். சிருஷ்டியில் கீழே போகப் போகப் கிரியா சக்தி அதிகம். யானை, சிங்கம் போன்ற பலம் மனிதனுக்கு இல்லை. ஒரு குருவியைப் போலவோ, தேனீயைப் போலவோ கூடுகட்ட இவனுக்குத் தெரியவில்லை. ஆயினும் அவற்றைவிட மனிதனுக்கு ஞான சக்தி அதிகம். கிரியா சக்தி, ஞான சக்தி இரண்டுமே மிக அதிகமாகப் படைத்த உயிரினத்துக்குத் தேவர்கள் என்று பெயர். மனிதர்களுக்குள்ளேயே நீக்ரோ இனம், மங்கோல் இனம் (race) என்றெல்லாம் இருப்பதுபோல் தேவர்களுக்குள்ளும் கின்னரர், கிம்புருஷர், யக்ஷர், ஸித்தர், சாரணர், ஸாத்யர், கந்தர்வர் என்று பலவகைகள் உண்டு. தேவர்களை ஊனக் கண்ணால் பார்க்க முடியவில்லை. அதனால், இல்லை என்று சொல்லிவிடக்கூடாது. காற்று கண்ணுக்குத் தெரியாதது போல், அவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால், விசிறிக்கொண்டால் காற்றை நாம் அநுபவிப்பதுபோல், கர்மாநுஷ்டானங்களைச் செய்தால் தேவர்களின் அநுக்கிரகத்தை அநுபவத்தில் நிச்சயமாகப் பெறலாம்!

நாம் கர்மாநுஷ்டானம் செய்வதற்கும், தேவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்பீர்கள். சொல்கிறேன்; ராஜாங்கம் நியமித்துள்ள அதிகாரிகளுக்கு ராஜாங்கம் சம்பளம் தருகிறது. ஆனால், சம்பளம் தருவதற்கு ராஜாங்கம் எங்கிருந்து பணம் பெற்றது? பிரஜைகளிடமிருந்துதான் வரியாகப் பெறுகிறது. அப்படியே ஸ்வாமி நம்முடைய கர்மாநுஷ்டானங்களிலிருந்தே தேவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைப் பிரித்துத் தருகிறார். நமக்கு பஞ்ச பூதங்களை அநுகூலமாக்கித் தரும் தேவர்களுக்குப் பிரதியாக நாம் யாகம், யக்ஞம் செய்து ஆகாரம் தருகிறோம். கர்மாநுஷ்டான வரி செலுத்தினாலே தேவ அதிகாரிகளின் சகாயத்தைப் பெற முடியும். பலவிதமான உயிரினங்களில் புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் எத்தனை வித்தியாசம் இருக்கிறது? மனிதனுடைய பழக்கங்களைப் புழு புரிந்து கொள்ள முடியுமா? அப்படியே தேவர்களின் வழிமுறைகளை நாம் புரிந்து கொள்ள முடியாது. தேவ வகையைச் சேர்ந்தவர்களுக்கு நம்மைப்போல் மூப்பு, மரணம் இவை இல்லை. அவர்களுக்கு நம்மைவிட சக்தி மிகவும் அதிகம். இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே ஆஹுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.

உயிரனத்தின் உச்சி நிலையில் உள்ள இந்தத் தேவர்களுக்கு மூன்று ரூபங்கள் உண்டு. தேவலோகத்தில் ஒவ்வொரு தேவதையும் திவ்ய சரீரத்துடன் இருப்பதை ஆதி தைவிக ரூபம் என்பார்கள். மனிதர்கள் தபஸினால் பெரிய சக்தி பெற்றுவிட்டால், இந்த தேவ ரூபங்களைப் பார்த்துப் பேச முடியும். தேவர்கள் தேவ லோகத்தில் ரூபத்துடன் இருப்பது மட்டுமல்ல; நம் பூலோகத்திலேயே பஞ்ச பூதங்களில் கரைந்தும் அரூபமாக இருப்பார்கள். இதற்கு ஆதி பௌதிக ரூபம் என்பார்கள். எல்லா ஜலத்திலும் வருணனின் ஆதி பௌதிக ரூபம் கரைந்திருக்கிறது. எனவே எங்கே நாம் ஜலத்தை அசுத்தம் செய்தாலும் அவனுக்குத் தெரிந்துவிடும். நம் ராஜாங்க அதிகாரிகளுக்கும், ஈசுவரனின் அதிகாரிகளான தேவர்களுக்கும் இது பெரிய வித்தியாசம். நாம் பெட்டிஷன் கொடுத்தால்தான் ராஜாங்க அதிகாரிகளுக்குக் குற்றம் தெரியும். ஆனால், எந்த இடத்தில் எந்தப் பாபம் செய்யப்பட்டாலும், அது ஆங்காங்கு கரைந்திருக்கிற குறிப்பிட்ட தேவதைக்கு உடனே தெரிந்துவிடும். நம் உடம்பிலேயே ஒருவர் கிள்ளினால், இன்னொருவன் பெட்டிஷன் கொடுத்தா அது நமக்குத் தெரிய வேண்டும்; அதுபோல!

நிலம் முழுவதற்கும் ஒரு தேவதை. நீர் நிலம் முழுவதற்கும் ஒரு தேவதை; இப்படியே நெருப்பு, காற்று ஒவ்வொன்றுக்கும் ஒன்று. இவற்றில் எதற்கு எங்கே நாம் அபசாரம் இழைத்தாலும் அந்தந்த தேவதைக்கு அது தெரிந்துவிடும் என்று சொன்னால், ‘இதெல்லாம் ஜடவஸ்துக்களாகத்தானே தெரிகின்றன? இவற்றுக்கு எங்கே உயிர் இருக்கிறது? சாஸ்திரம் வெறும் புரளிதான் பண்ணுகிறது’ என்று தோன்றலாம். கொஞ்சம் யோசித்துப் பார்க்கலாம். நம் சரீரம் இருக்கிறது. இதற்குள்ளேயே பாக்டீரியாக்கள், நாக்குப் பூச்சி மாதிரி சில கிருமிகள், புழுக்கள் உண்டாகி நம் மாமிஸத்தைத் தின்றே ஜீவிக்கின்றன. இவை எங்கே ஹிம்ஸை செய்தாலும் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஆனால் இப்படி நமக்குத் தெரியும் என்பது அந்தப் கிருமிக்குத் தெரியும் என்று எப்படிச் சொல்ல முடியும்? நாம் நிலத்தையும் நீரையும் பற்றி நினைக்கிற மாதிரி, அது அதனளவில், ஒரு உலகம் மாதிரி பெரிசாக இருக்கிற நம் சரீரத்தையும் சமுத்திரம் மாதிரி இருக்கிற நம் ரத்தத்தையும் வெறும் ஜடவஸ்துக்கள் என்றும், இவற்றுக்குள் ஒரு உயிர் இருக்கிறது என்றும் தெரிந்து கொள்ளாமலே இருக்கலாம். இப்படித்தான் நாம் பூதேவி உண்டா? வருணன் என்கிற சமுத்திர ராஜா உண்டா? என்று கேட்பதும். நம் சரீரத்தில் எங்கே ஒரு கிருமி கெடுதல் செய்தாலும் நாம் மருந்து சாப்பிட்டு அதை ஒழித்து விடுகிறோம். நாம் பஞ்ச பூதம், விருக்ஷம், பர்வதம் என்று எதற்குக் கெடுதல் பண்ணினாலும், அதற்குறிய தேவதைகள் நம்மைத் தங்களுடைய சொந்த சக்தியாலேயே தண்டிப்பார்கள். ஸர்வேச்வரன் அவர்களுக்கு அப்படிப்பட்ட சக்தி தந்திருக்கிறான். உடனே ஸ்தூலமாக வந்து தண்டிக்காமல், பிற்பாடு எப்போதோ தண்டிப்பதால் நமக்கு இது தெரியவில்லை.

ஆத்யாத்மிகம் என்றும் தேவர்களுக்கு மூன்றாவதாக ஒரு ரூபம் உண்டு. அதாவது அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது என்றபடி, பிராணிகளின் ஒவ்வொர் அங்கங்களிலும் ஒவ்வொரு தேவதை தங்களுக்கு வாஸஸ்தானம் வைத்திருக்கிறார்கள். சூரியன் நம் கண்ணில் இருக்கிறான். அக்னி நம் வாக்கில் இருக்கிறான். இந்திரன் நம் கையில் இருக்கிறான். இப்படியே எல்லா தேவதைகளுக்கும், நம் சரீரத்திலேயே இருப்பிடம் இருக்கிறது. மனிதன் இழைக்கிற குற்றங்களுக்கு ஆளாகும் பஞ்ச பூதங்களில் இருப்பதோடு, குற்றம் செய்கிற மனிதனின் அங்கங்களுக்குள்ளும் தேவர்கள் இருப்பதால், அவர்களை ஏமாற்றவே முடியாது. தர்மங்களை மீறாமலும், கர்மங்களை அநுஷ்டானம் பண்ணிக் கொண்டும் நாம் இருக்கிறவரையில்தான் அவர்கள் நம்மை ரக்ஷிப்பார்கள். இல்லாவிட்டால் சிக்ஷிக்கவே செய்வார்கள்.

தேவதை என்பவனும் ஓர் உயிர்தான். நமக்கு ஆகாரம் இல்லாவிட்டால் எப்படிக் கஷ்டமோ, அப்படித்தான் தேவர்களுக்கும் நாம் ஆகாரம் தராவிட்டால் கஷ்டம். அதனால்தான் வைதிக கர்மாநுஷ்டானங்கள் குறைந்போதெல்லாம், அவர்கள் ஸ்வாமியிடம் முறையிட்டதாகவும், ஸ்வாமி அவதரித்ததாகவும் புராணங்கள் பார்க்கிறோம்.

தேவர்களைப் பற்றி இன்னுமே சில நூதன விஷயங்கள் சொல்கிறேன். தேவதைகளுக்கு வேத அத்யயனம், யக்ஞம் முதலிய கர்மாநுஷ்டானங்கள் கிடையாது. ஏன் தெரியுமா? நாம் தேவதைகளைக் குறித்து வேத ஸூக்தங்களை ஓதுகிறோம். யாகங்கள் செய்கிறோம். தேவதைகள் யாரைக் குறித்து இவற்றைச் செய்வார்கள்? நாம் இந்திரனையும், சூரியனையும் உபாஸிப்பதுபோல், இந்திரனும், சூரியனும் தங்களையே உபாஸித்துக் கொள்ள முடியாதல்லவா? அதனால்தான் அவர்களுக்கு வைதிக கர்மாவில் அதிகாரமில்லை.

வேதத்தை நம் போல் அத்யயனம் செய்யாவிட்டாலும், அவர்களுக்கு வேதம் தானாகவே தெரியும். அதனால்தான், நம் வேத மந்திரத்தைச் சொன்னால் அநுக்கிரகம் செய்ய வந்துவிடுகிறார்கள். மீன் குஞ்சுக்குப் பிறவியிலேயே நீந்தும் சக்தி இருப்பதுபோல், தேவர்களுக்குப் பிறவியிலேயே வேத ஞானம் உண்டு. இதனால் அவர்களுக்கு ‘ஸ்வயம் பிரதி பாதித வேத’ ர்கள் என்று ஒரு பெயர் உண்டு.

தேவர்களும் ஆத்ம விசாரம் செய்து அத்வைத ஞானத்தை அடைந்து பிரம்மத்துடன் ஐக்கியமாகலாம். கர்மமும் உபாஸனையும் இல்லாவிட்டாலும், அவர்களுக்கும் ஞான மார்க்கத்தில் ஈடுபடுவதற்கு அதிகாரம் உண்டு என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

ஸ்வாமி என்கிற பரமேசுவரன் இல்லாத இடம் இல்லை. நமக்குள் இருக்கும் பரமேசுவரன் தேவர்களுக்குள்ளும் இருக்கிறான். ஆனால், நமக்குள் ஈசுவரன் இருப்பதை நாம் உணராதது போலத்தான் தேவர்களிலும் பெரும்பாலோர் இருக்கிறார்கள். நம்முடைய அதிகாரிகளில் பெரும்பாலோருக்கு ராஜாவை (அல்லது ராஷ்டிரபதியை) நேரில் தெரியாதல்லவா? இப்படியேதான் தேவர்களிலும் பலருக்குப் பரமேசுவரனைப் பற்றித் தெரியாது. ஆத்ம விசாரம் செய்தால் நமக்கு ஈசுவரனே நம்மில் நாமாக இருப்பது தெரியும். அதற்குப் பிறகு தேவர்களால் நமக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. அப்போது எல்லாக் காரியமும் நம்மை விட்டுவிடும். ஆனால், அதுவரை தேவர்களை உத்தேசித்த கர்மங்களை நாம் செய்யத்தான் வேண்டும். நம் பூர்வ கர்மா தீர்ந்து, சித்த சுத்தி உண்டாவதற்கே, தேவதைகளை உத்தேசித்த வேத கர்மாக்களை நாம் செய்தாக வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is பசுபதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சிவராத்ரி
Next