சிவ, விஷ்ணு அபேதம் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

குணங்கள் மூன்று விதம். ஸத்வம், ரஜஸ், தமஸ் என்பன அவை. ஸத்வம் என்பது ஸமநிலை, சாந்தம், அன்பு. அதன் நிறம் வெண்மை. வெள்ளை வெளேரென்று வஸ்துவைப் பார்த்தாலே மனஸில் ஏற்படுகிற பரிசுத்த மலர்ச்சிதான் ஸத்வம். ரஜஸ் என்பது வேகம். இதில் நல்லது கெட்டது என்ற இரண்டும் கலந்து இருக்கும். இதன் நிறம் சிகப்பு அல்லது செம்மஞ்சள். செக்கச் செவேல் என்று இருப்பதில் அழகும் உண்டு. கண்ணைக் குத்துகிற மாதிரி பயப்படுகிற தினுசும் உண்டு. உதய சூரியனையும் செம்பருத்தியையும் பார்த்தால் சிவப்பே அழகாயிருக்கிறது. ரத்தத்தைப் பார்த்தால் பயமாயிருக்கிறது. தமஸ் என்பது முழுக்கவும் கெட்ட குணம். சோம்பல், தூக்கம் எல்லாம் இதைச் சேர்ந்தவை. இதன் நிறம் கறுப்பு. அதாவது அஞ்ஞான இருள் மயமானது.

ஸத்வ – ரஜோ – தமோ குணங்களில்தான் எல்லா மனிதர்களும் கட்டுண்டு கிடக்கிறோம். எல்லாம் ஒரே பரமாத்மாவிடமிருந்து வந்ததால், ஸத்வம், ரஜஸ், தமஸ் இவற்றுக்கும் ரூபகமாக பரமாத்மாவின் மூன்று மூர்த்தி பேதங்களைச் சொல்கிறார்கள்.

ஜனனம் என்பதில் நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கிறது. காம வேகத்தினால்தான் பிறப்பு உண்டாகிறது. எனவே, சிருஷ்டிக்கெல்லாம் காரணமாயிருக்கிற பிரம்மாவை பரமாத்மாவின் ரஜோ குணமூர்த்தி என்று வைத்தார்கள்.

அதில் யாருக்கும் அபிப்பிராய பேதமில்லை. பிரம்மா மஞ்சள் சிவப்பாக இருக்கிறவர்.

பரிபாலனம் செய்து ஸத்வ குணத்தால் நடப்பது, மகா பாவம் செய்கிற நமக்கு, ஒருவேளை சோறு பெறக்கூட லாயக்கில்லை. அப்படியிருந்தும் ஈ எறும்பிலிருந்து சகல ஜீவ ராசிகளுக்கும் உணவு கிடைக்கும்படி செய்து ரக்ஷிப்பவர் மஹாவிஷ்ணு. இவரை சத்வ மூர்த்தி என்று வைத்தார்கள்.

ஸம்ஹாரம் என்பது அழிப்பது. அழிக்கிற குணம் தமஸைச் சேர்ந்தது. இதனால்தான் ஸம்ஹாரமூர்த்தியாகிய சிவனைத் தமோ மூர்த்தி என்கிறார்கள்.

இதிலிருந்துதான் சைவ – வைஷ்ணவப் பிணக்குயாவும் வந்தது போலிருக்கிறது. மஹாவிஷ்ணுவின் பரிபாலனத்தை ஸத்வம் என்று சைவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். ‘இந்த நிலையற்ற இகலோக வாழ்க்கையைப் பரிபாலிப்பது என்பது மனிதனை மேலும் மேலும் அஞ்ஞானத்தில் தள்ளுகிற காரியம்தான். இதில் ஸத்வம் இல்லை. சிவன்தான் அஞ்ஞானம் நீங்க ஞானோபதேசம் செய்கிறவர். இந்த ஞானபதேசத்துக்குப் பக்குவமாக இல்லாதவர்களைக்கூட, அவர் பரமக்கிருபையோடு அவ்வப்போது கர்மக் கட்டிலிருந்து விடுவித்து, ஓய்வு தருவதற்கே சம்ஹாரம் செய்கிறார். பிறவிகளுக்கு நடுவே சம்ஹாரத்தின் மூலம் விச்ராந்தி தருகிற கருணாமூர்த்தியே சிவபெருமான். இத்தொழில் தமஸ் அல்ல. ஸத்வமே. ‘பரதெய்வமான பரமேசுவரன் ஆக்ஞைப்படிதான் விஷ்ணு பரிபாலனம் செய்கிறார்’ என்று சிவ பக்திர்கள் சொல்கிறார்கள். வைஷ்ணவர்களோ, ‘மஹா விஷ்ணு இவ்வுலகத்தைப் பரிபாலனம் பண்ணுவார். ஆனால் அது மட்டுமில்லை. அவரே பரமபதமான மோக்ஷமும் தருவார்; அவரே முழுமுதற் கடவுள்; பரமசிவன் அவருக்குக் கீழ்ப்பட்டுத்தான் சம்ஹாரம் செய்கிறார் என்கிறார்கள்.

ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர்களின் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற நாம் எல்லோரும் சைவரும் அல்ல; வைஷ்ணவரும் அல்ல; நமக்கு ஸ்மார்த்தர் என்று பெயர். ஸ்மிருதிகள் என்கிற தர்ம சாஸ்திரங்கள் சொல்வதை அநுசரிக்கிறவர்களே ஸ்மார்த்தர்கள். நமக்கு சிவன் விஷ்ணு இன்னும் மீதமுள்ள எல்லாத் தெய்வமுமே ஒரே பரமாத்மாவின் வெவ்வேறு ரூபங்கள்தான். இதில் ஏற்றத் தாழ்வே இல்லை.

இப்படி நாம் சொன்னால் மற்றவர்கள் விடுவார்களா? தங்கள் தங்கள் தெய்வத்தின் தொழிலைச் சொல்லி இதுதானே ஸத்வ மூர்த்தி என்று கேட்கிறார்கள். ஸத்வமூர்த்தியைத்தான் வழிபட வேண்டும்? இதனால்தான் இரு கட்சிக்காரர்களும் ஏகமனதாக ரஜோ குணமூர்த்தி என்று வைத்துவிட்ட பிரம்மாவுக்குக் கோவிலோ வழிபாடோ இல்லை.

நாம் நடு நிலையில் நின்று யோசித்துப் பார்ப்போம். பிரம்மாவின் தொழில் ரஜஸ்; நிறமும் ரஜஸ்!. அவர் வசிக்கிற தாமரையும் சிவப்பாக ரஜோ சம்பந்தமாகவே இருக்கிறது. ஆனால் சிவனையும், விஷ்ணுவையும் பாருங்கள். பரிபாலனம் என்கிற ஸத்வத் தொழிலைச் செய்கிற விஷ்ணு வெளுப்பாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் இவரோ கரியவராக இருக்கிறார். இது தமஸின் நிறம். அதோடுகூட இவர் ஆதிசேஷன் மேல் நீள நெடுகப் படுத்துக்கொண்டு, எப்போது பார்த்தாலும் தூங்கிக்கொண்டிருக்கிறார். தூக்கமும் தமஸைச் சேர்ந்தது தான்.

சிவனைப் பார்ப்போம். அழிவு என்கிற தமோ துணத்தொழிலைச் செய்கிற இவர் கருப்பாக இல்லை! ‘சுத்த ஸ்படிக ஸங்காசம்’ என்றபடி சுத்த ஸத்வ வெள்ளையாயிருக்கிறார். இவர் இருக்கிற பனிமலையான கைலாஸமும் அப்படியே இருக்கிறது. விபூதிப்பூச்சு, ரிஷப வாகனம் எல்லாம் ஒரே வெளுப்பு. இவர் தூங்கவில்லை. ஒன்று சாந்த தக்ஷிணா மூர்த்தியாக இருக்கிறார். அல்லது நடராஜனாக ஆனந்தக் கூத்தாடுகிறார். இதெல்லாம் ஸத்வமாகவே இருக்கிறது.

இதிலிருந்து என்ன ஏற்படுகிறது? சிவனும் விஷணுவும் தனித்தனியாக ஸத்வமூர்த்தி, தமோ மூர்த்தி என்று பிரிந்திருக்கவில்லை. இருவரிடமும் ஸத்வம், தமஸ் இரண்டும் கலந்திருக்கின்றன. ஒருவர் ரூபத்தில் தமஸ், காரியத்தில் ஸத்வம்; இன்னொருத்தர் ரூபத்தில் ஸத்வம், காரியத்தில் தமஸ்; காரிய ஸத்வத்தை வைத்து வைஷ்ணவர் விஷ்ணுவை வணங்குகிறார்கள். ஸ்வரூப ஸத்வத்தால் சைவர் சிவனையே தெய்வமாககக் கொண்டாடுகிறார்கள். பட்சபாதமில்லாமல் யோசித்தால், இரு குணங்களும் இரு மூர்த்திகளிடமும் கலந்திருப்பதால் ஸாராம்சத்தில் இரண்டும் ஒன்றே என்று தெரியலாம். இரண்டையும் அன்போடு பக்தி செலுத்தி வழிபடலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is சிவராத்ரி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சிவ மயம் ; ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்
Next