சிவபெருமான், திருமால் இரண்டு பேரையும் உபாஸிப்பதற்கு நீண்டகாலமாக ஒரு விதி இருக்கிறது. லோக விவகாரங்களை நாம் அழகாக, தர்மமாக நடத்துவதற்கு ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையும், இந்த வியாபாரங்களிலிருந்து மனஸைத் திருப்பி ஆதார வஸ்துவில் ஒடுங்குவதற்கு சம்ஹார மூர்த்தியான பரமேசுவரனையும் தியானிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கேற்ப வெளியிலே பார்த்தாலும் மஹாவிஷ்ணுதானே திருபுவன சக்கரவர்தியாக இருக்கிறார்! பரமேசுவரனோ ஆண்டியாக பிச்சாண்டியாக இருக்கிறார். இருவரிடமும் இருக்கிற சொத்துக்களைக் கொஞ்சம் கணக்கெடுத்துப் பார்ப்போம். சிவனிடம் சாம்பல், எருக்கம்பூ, தும்பைப்பூ, ஊமத்தை, மண்டைஒடு, யானைத்தோல், பாம்பு – இவைதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விலை கொடுக்கமாட்டார்கள். விலைபோகாத வஸ்துக்கள்தான் சிவனிடம் உள்ளன. மஹாவிஷ்ணுவிடமோ கிரீட குண்டலங்கள், முக்தா ஹாரங்கள், பீதாம்பரம், கௌஸ்துப மணி எல்லாம் இருக்கின்றன. இவற்றுக்கும் எவரும் விலை நிர்ணயிக்க முடியாது. சிவனிடம் உள்ளதற்கு விலை மதிப்பு இல்லை. (valueless); விஷ்ணுவிடம் உள்ளதோ விலைமதிக்க முடியாதது (invaluable). எல்லாவற்றுக்கும் மேலாக மஹா விஷ்ணுவிடம் ஐசுவரிய தேவதையான மஹா லக்ஷ்மியே இருக்கிறாள். பரமசிவனிடம் இருக்கும் அம்பாளுக்கோ ‘அபர்ணா’ என்று பெயர். ஓர் இலை (பரணம்) கூட இல்லாதவள் என்று அர்த்தம். இலையைக்கூட உண்ணாமல் பரம தியாகியாகத் தபஸ் செய்தவள் அபர்ணா.
இதிலிருந்து லோகமெல்லாம் தர்மத்தோடு சந்தோஷமாக இருப்பதற்கு மஹாவிஷ்ணுவையும், வைராக்கியம் வருவதற்குப் பரமேசுவரனையும் ஆராதிப்பதில், பொருத்தம் இருப்பது தெரியும். மகாவிஷ்ணுவால் ஞானம் தரமுடியாது என்றோ, பரமேசுவரனால் லோக வியாபாரம் நன்றாக நடக்க அநுக்கிரகிக்க இயலாது என்றோ அர்த்தமில்லை. இரண்டு மூர்த்திகளை வழிபடுகிறபோது, இப்படி இரண்டு விதங்களில் ஆராதிப்பது ஒவ்வொரு விதத்தில் ஒவ்வொருவரிடம் சித்த ஒருமைப்பாடு (ஐகாக்ரியம்) கொள்வதற்கு உதவும்.
இந்த அடிப்படையில்தான் விடியற்காலையில் ஒவ்வொருவரும் எழுந்தவுடன் ‘ஹரிநாராயண ஹரிநாராயண’ என்று கொஞ்ச காலமேனும் ஸ்மரணம் செய்ய வேண்டும் என்றும், சாயங்காலத்தில் ‘சிவ சிவ’ என்று சிறிது பொழுதேனும் ஸ்மரிக்க வேண்டும் என்றும் பெரியவர்கள் விதித்திருக்கிறார்கள். வெகு சுலபமான சாதனம். எல்லோரும் இதை அவசியம் செய்ய வேண்டும்.
காலையில் லோகம் முழுக்கத் தூக்கத்திலிருந்து விடுபட்டு மலர்ச்சி அடைகிறது; சூரியன் பலபல என உதிக்கிறான்; உலக காரியங்கள் எல்லாம் தொடங்குகின்றன. எனவே குளிர்ந்த வைகறைப் போதில் நீருண்ட மேகம்போல் குளிர்ந்த ஜகத் பரிபாலகரான விஷ்ணுவின் நாமங்களை உச்சரிக்க வேண்டும். மாலையில் அவரவரும் வேலை முடித்து வீடு திரும்புகிறார்கள். மாடுகள் கொட்டிலுக்கு திரும்புகின்றன. பட்சிகள் கூட்டுக்குத் திரும்பிவிடுகின்றன. சூரியனும் மலைவாயில் இறங்குகிறான். இப்படி லோக வியாபாரங்கள் ஒடுங்கத் தொடங்குகிற அந்தப்போதில், நம் ஆட்டங்களையெல்லாம் ஒடுக்கி அமைதி தருகிற ஞானமூர்த்தியான பரமேசுவரனின் நாமாவை உச்சரிக்க வேண்டும்.
அண்டம் பிண்டம் இரண்டும் அடிப்படையில் ஒரே சரக்கானதால், வெளி உலக நடப்புக்கும் நம் அக உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருக்கிறது. உலகில் அருணோதயத்துக்கு முன்பு பட்சி ஜாலங்கள் விழித்துக்கொண்டு கூவத் தொடங்குகிற வேளையில், ‘லோகமெல்லாம் நன்றாக இருக்கவேண்டும்’ என்ற எண்ணத்தை மனஸில் நன்றாகப் பதிய வைத்துக் கொண்டு, ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனைத் தியானிப்பது எளிதில் கைவரும். இதேபோல் வெளியுலகம் ஒடுங்கித் தன்மயமாகி, இருள் கவிந்து வருகிற அந்தி வேளையில், இந்திரியங்களை ஒடுக்கி, சாந்தமாக சிவபெருமானின் தியானத்தில் அமிழ்வது சகஜமாகவும் சுலபமாகவும் இருக்கும்.
நம்முடைய மனோபாவத்தைப் பொறுத்து, இப்படி இரண்டு விதத்தில் உபாஸித்தாலும் இரண்டு மூர்த்திகளும் ஒன்றேதான் என்ற நினைப்பு போகக்கூடாது. காலையில் பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு சந்தியாவந்தனம் செய்த அதே மனிதர், பகலில் ஸுட் போட்டுக்கொண்டு ஆபீஸுக்குப் போகிறார். வெவ்வேறு காரியங்களுக்காக வெவ்வேறு வேஷங்களைப் போட்டுக் கொண்டாலும் ஆசாமி ஒருத்தர்தான். ஸ்வாமியும் ஒருத்தர்தான்.