இரண்டு ராஜாக்கள் : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

மஹாவிஷ்ணு மீனாக்ஷியை ஸுந்தரேசுவரருக்கு தாரை வார்த்துக் கொடுத்தார். மதுரையில் இந்த ஐதிஹ்யம் சிற்பத்தில் வெகு அழகாக இருக்கிறது. அம்பாள் பத்மநாப சகோதரியாகவும், பரமேசுவர சக்தியாகவும் இருப்பதை அப்படியே கண்ணுக்கு முன்னால் கொண்டுவந்து காட்டுகிறது இந்தச் சிற்பம். இதைப் பார்த்துக் கொண்டேயிருந்தால் நம் மனஸில் சைவ வைஷ்ணவ பேத பாவம் போயே போய் விடும்.

பிரம்மத்தில்தான் ஸர்வ சக்தியும் இருக்கிறது. அந்த சக்தியால்தான் சகல பிரபஞ்ச காரியங்களும் நடக்கின்றன. பிரம்மமே பரமேசுவரன்; சக்தியே அம்பாள்; அந்தச் சக்தியால் ஜகத்தை எல்லாம் பரிபாலிக்கிறவரே மஹா விஷ்ணு என்று பிரித்துச் சொன்னாலும், இவர்களும் கடைசியில் ஒருவருக்கொருவர், வித்தியாசமே இல்லாதவர்கள்தான் என்று தெரிகிறது. பிரம்மம், அதன் சக்தி, அந்தச் சக்தி செய்கிற காரியம் எல்லாம் வேறு இல்லை அல்லவா?அநேக தெய்வங்களுக்குள் தங்களுடைய பரமாத்ம ஸ்வரூபத்திலேயே எப்போதும் இருக்கிற மும்மணிகள் – ரத்ன த்ரயம் – இம்மூவரே என்று அப்பைய தீக்ஷிதர் நிலைநாட்டியிருக்கிறார்.

சாந்தமாக இருக்கிற பிரம்மம் சிவன், காரியங்கள் செய்து பரிபாலிக்கிறவர் மகாவிஷ்ணு என்று சொன்னாலும், இப்படிப்பட்ட வித்தியாசம் கற்பிப்பதுகூட முழுக்கச் சரியில்லை என்று உணர்த்துகிற வகையில் இரண்டு ராஜாக்களைப் பார்க்கிறோம். ஒருத்தர் ரங்கராஜா, மற்றவர் நடராஜா. ரங்கராஜா இருக்கும் ஸ்ரீரங்கத்தைத்தான் வைஷ்ணவர்கள் ‘கோயில்’, ‘கோயில்’ என்று சொல்கிறார்கள். அதே மாதிரி சைவர்களின் ‘கோயில்’ என்றால் அது நடராஜா இருக்கிற சிதம்பரம்தான். இந்த இரண்டு மஹா க்ஷேத்திரங்களில் உள்ள ரங்கராஜா, நடராஜா இரண்டு பேரும் தென்திசையையே பார்த்துக் கொண்டிருப்பது விசேஷம். தெற்கு யமனின் திக்கு. நமக்கு மரண பயமில்லாமல் நம்மை அமரமாக்குகிற மூர்த்திகளாதலால் யமனுக்கு எதிர் முகம் காட்டுகிறார்கள்.

ரங்கம் அல்லது அரங்கம் என்றால் சபை. சிதம்பரத்தில் நடராஜா இருக்கிற சந்நிதியை சபை என்றுதான் சொல்கிறோம்.

சபையில் நர்த்தனம் செய்வதுதான் பொருத்தம். ஆனால் இந்த இரண்டு சபைகளில் ஒருத்தர்தான் நர்த்தனம் செய்கிறார். சாந்த நிலையில் பிரம்மமாக இருக்கப்பட்டவர் என்று நாம் சொல்கிற சிவன்தான் நடராஜாவாக ஆனந்தக் கூத்தாடுகிறார். ஜகத் பரிபாலகரான மஹாவிஷ்ணுவையோ திருவரங்கத்தில் பரம சாந்தமாக உறங்குகிறார். சிவபெருமானுக்கும் திருமாலுக்கும் நாம் பங்கீடு செய்கிற தொழில்களின்படி பார்த்தால் இது தலைகீழாக அல்லவா இருக்க வேண்டும்? இதிலிருந்து என்ன தெரிகிறது? முத்தொழில், ஐந்தொழில் என்றெல்லாம் பிரித்து, நாம் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூர்த்தியைச் சொன்னாலும்கூட, இதுவும் நம் சிற்றறிவுக்கு எட்டுவதற்காக பராசக்தி எடுத்துக்கொண்ட பல தோற்றங்கள்தான். அந்த மூர்த்திகள் அடியோடு பிரிந்து பிரிந்து இருப்பதாக நினைக்கக்கூடாது. இதைத்தான் இரண்டு ராஜாக்களும் நமக்கு உணர்த்துகிறார்கள். இவருடைய காரியத்தை அவரும் அவருடைய காரியத்தை இவரும் செய்கிற மாதிரி இரண்டு சபைகளில் நடிக்கிறார்கள். எல்லாவற்றையும் ஒடுக்கிக்கொள்பவர் ஆட்டமாக ஆடுகிறார்; ஆட்டி வைத்துப் பரிபாலிக்க வேண்டியவரோ தூங்குகிறார்.

தெற்கே பார்த்துக்கொண்டிருக்கிற இன்னொருத்தர் தக்ஷிணாமூர்த்தி. இவர் பரமஞான மூர்த்தி. காரியமேயில்லாத ஏகவஸ்துவான சாக்ஷாத் பிரம்ம ஸ்வரூபம். அவருடைய சித் (ஞான) சக்திதான் அம்பாள். அந்த சைதன்யம்தான் சிவ விஷ்ணுவாக, மும்மூர்த்திகளாக, முப்பத்து முக்கோடி தேவதைகளாக, புல், பூண்டு, பசு, பட்சி, மநுஷ்யர்கள் உட்பட சகலமாகவும் ஆகியிருக்கிறது. இவற்றிலே குறிப்பாக பாரத தேசம் சிவபெருமான், திருமால் இவர்களை முழுமுதல் கடவுளாக வழிபடுவதால், நாம் பேத புத்தி இல்லாமல் இவ்விருவரையும் வழிபட வேண்டும். நாம் மனஸில் எந்நாளும் மறவாமல் பொறித்து வைத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால்,

பராசக்தியின் மற்றொரு உருவமே திருமால்; பராசக்தியை விட்டுப் பிரிக்க முடியாத ஆதாரப் பொருளே சிவன்.

எல்லாவற்றுக்கும் உள்நின்று இயக்குகிற அந்தச் சக்தியை நாம் பக்தி செய்தால், தாயாக வந்து ஞானப்பால் கொடுத்து நம்மை ரக்ஷிக்கிற அம்பாளாகிறாள்.

அவளது அநுக்கிரகம் இல்லாவிட்டால், நாம் சவத்துக்குச் சமம்தான். நாம் செய்கிறதாக நினைக்கிற சகல காரியங்களுக்கும், எண்ணங்களுக்கும் அவள் தருகிற சக்திதான் காரணம். எவருக்குமே நம் சக்தியினாலேயே காரியங்களைச் செய்துகொள்கிறோம் என்று அகம்பாவம் படக் கொஞ்சம்கூட நியாயம் இல்லை. நம்மை நடத்தி வைக்கும் அந்தப் பராசக்தியை நினைத்து, நாள்தோறும் ஒரு நிமிஷமாவது, ‘என் சிறு சக்தி உன்னிடமிருந்து தெறித்த ஒரு திவலைதான்; இதை உன் சித்தப்படியே நடத்திவையம்மா’ என்று அர்ப்பணம் பண்ணுவோம்.

இதுவே மநுஷ்ய குணங்களில் முதலாவதாகச் சொல்லப்படுகிற நன்றி;

இதே பூஜை;

இதே ஸ்நானம் – அகம்பாவ அழுக்கைத் துடைத்து நம் உயிரைச் சுத்தமாக்குகிற ஸ்நானம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஒற்றும் உணர்த்தும் உத்தமத் தலங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  ' பகவான் யார் ?' பகவத் பாதர் பதில்
Next