அம்பாளைப் பற்றிய பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. இவற்றில், ஆதி சங்கர பகவத் பாதர்கள் செய்த சௌந்தரிய லஹரியும் மூக கவி செய்த ‘பஞ்ச சதீயும்’ ஈடு இணை இல்லாமல் இருக்கின்றன. தேர்ந்த சைத்திரிகன் ஒருவன் அம்பாளின் ஸ்வரூபத்தை எழுதிக்காட்டுகிற மாதிரி, இவை அம்பிகையின் திவ்விய வடிவத்தை அப்படியே நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்திவிடும்; அவளுடைய மகிமையினால் நம் மனசு மூழ்கிக் கிடக்கும்படி செய்யும்.
கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியைக் கண்ணால் காணவும், மனஸால் அநுபவிக்கவும் செய்கிற வாக்சக்தி ‘சௌந்தரிய லஹரி’க்கும், ‘மூக பஞ்ச சதீ’க்கும் உள்ளது. கம்பீரம் அத்தனையும் ‘சௌந்தர்ய லஹரி’யில் அடங்கியிருக்கிறது; மார்த்தவம் (மிருதுத் தன்மை) முழுவதும் மூக பஞ்சசதீயில் உள்ளது.
‘மூகன்’ என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடிகொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து; ‘சத’ என்பது நூறு.
அதிலே காமாக்ஷியின் நிறத்தைச் சொல்லுகிறபோது செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் கூறியிருக்கிறார். கருநிறம் படைத்தவள் என்றும் சில ஸ்லோகங்களில் சொல்கிறார். ‘காச்மீர ஸ்தபக கோமாளாங்க லதா’ (குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளகக் கொடி) ‘பந்து ஜீவகாந்தி முஷா’ (செம்பருத்தியின் ஒளி படைத்தவள்) என்று சொல்கிறார். ‘தாபிஞ்ச ஸதபகத்விஷா’ (கருநீலக் காயாம்பூப்போல் ஒளிருகிறவள்) என்று கூறிகிறார்.
ஏன் இப்படி இரண்டு நிறங்களாகச் சொல்கிறார்? நமக்கு இப்படி ஒருத்தியையே இரண்டு நிறத்தில் சொல்வது புரியவில்லை. சரி, சங்கர பகவத் பாதர்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’யில் இதைப் பற்றி என்ன சொல்கிறார்?
“ஜயதி கருணா காசித் அருணா” என்கிறது ஸெளந்தர்ய லஹரி. நல்லதெற்கெல்லாம் உற்பத்தி ஸ்தானமாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்ம வஸ்து. பரப்பிரம்மமாகச் செயலின்றி இருந்தால் போதாது என்று அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்குத்தான் அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு உலகைக் காக்கும் கருணையினால் அருண வர்ணம் கொண்டு வெற்றியோடு பிரகாசிக்கிறது – ‘ஜகத் த்ராதும் சம்போ:ஜயதி கருணா காசித் அருணா’ என்கிறார் ஸ்ரீ ஆசாரியாள். சூரியோதயத்துக்கு முன்னால் கிழக்கில் பரவுகிற பிரகாசச் சிவப்புத்தான் அருணநிறம். ‘அருண நிறம்தான் கருணை நிறம்; அதுவே அம்பிகையின் நிறம்’ என்கிறார் ஆசாரியாள்.
கறுப்போ அழிவின் நிறம். தமோ குணத்துக்குக் கறுப்பை அடையாளமாகச் சொல்வார்கள். தூக்கம், மரணம், சம்ஹாரம் எல்லாம் கறுப்பு.
காருண்ய மூர்த்தியாக காமாக்ஷியைச் சிவப்பானவளாக மூகர் சொல்வதுதான் நியாயமாக்கப்படுகிறது. ராஜ ராஜேசுவரி, லலிதா மஹா திரிபுரசுந்தரி, ஸ்ரீவித்யா என்றெல்லாம் சொல்லப்படுகிற அம்பாளை மந்திர சாஸ்திரங்களும் செக்கச் செவந்த ஜோதிப்பிரவாகமாகவே சொல்கின்றன. அந்த ஸ்ரீ வித்யா அதிஷ்டான தேவதையின் ஸ்வரூப லக்ஷணங்களையே பூரணமாகக் கொண்டவள் காமாக்ஷி. எனவே, பரம்பொருளின் கருணை வடிவான அவளைச் சிவப்பாகச் சொல்வதுதான் பொருத்தம்.
‘ஸயன்ஸ்’ படிகூட இதுவே பொருத்தமாக இருக்கிறது. VIBGYOR – ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு சிவப்பு என்று ஏழு வர்ணங்களை ஸ்பெக்ட்ராஸ்கோப்பில் பிரித்திருக்கிறார்கள். நிறமில்லாத வெறும் சூரிய ஒளிதான் இப்படி ஏழு நிறங்களாகச் சிதறுகிறது. இதில் வெள்ளை, கறுப்பு – இரண்டும் இல்லை. ஒரு கோடியில் ஊதாவைக் கடந்தால் கறுப்பு. மறுகோடியில் சிவப்பைத் தாண்டினால் வெள்ளை. அதாவது வெளுப்புக்கு ரொம்ப ரொம்ப கிட்டே இருப்பது சிவப்புதான். நம் கண்ணுக்குப் பரம ஹிதமானது வெள்ளைதான். கொஞ்சம்கூட உறுத்தாது. ஆனால் அது நிறமே இல்லை. நிறம் என்று ஏற்பட்டபின் ரொம்பவும் ஹிதமாக, மிகக் குறைவாக உறுத்துவது (least disturbing colour) சிவப்புதான். இதனால்தான் போட்டோ எடுத்த ஃபிலிமைக் கழுவும்போது, அதில் வெறெந்த நிறத்தின் கிரணம் பட்டாலும் படம் அழிந்து விடும் என்று சிவப்பு விளக்கையே போட்டுக்கொள்கிறார்கள். நாம் சிவப்பு கண்ணைக் குத்துவதாக நினைத்தாலும் அதிலிருந்தே infra red என்கிற மிருதுவான நிறத்துக்குப் போகிறார்கள். இந்த infra வுக்கு மாறாக மறு கோடியில் உக்ரமான ultra violet (ஆழ்ந்த ஊதா) இருக்கிறது. அதற்கப்புறம் கறுப்பு. அம்பாளைக் கறுப்பு என்றும் கருநீலம் என்றும் மூகர் சொல்கிறார்; சிவப்பு என்றும் சொல்கிறார். வெள்ளையான சுத்தப் பிரம்மத்துக்கு மிகமிக நெருங்கியுள்ள சக்தி என்பதாலும், ‘கருணாமூர்த்தி’ என்பதாலும் சிவப்பு என்பதே பொருத்தமாயிருக்கிறது.
அம்பாள் கிருபையால் அவளைப் பிரத்தியக்ஷமாக செய்த மூகர் ஏன் கறுப்பு என்றும் சொல்கிறார்?