இன்னல் தருவதும் அவள் இன்னருளே ! : தெய்வத்தின் குரல் (முதல் பகுதி)

அம்பாள் கருணாமயமானவள், அருளே உருவானவள் என்கிறோம். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் முடிவில் அவளை ‘ஒரு காரணமும் இல்லாமல் கருணை செய்கிறவள்’ (அவ்யாஜ கருணாமூர்த்தி) என்று சொல்லியிருக்கிறது.

ஆனால் லோகத்தில் கணக்கு வழக்கே இல்லாமல் கஷ்டங்களும் இருக்கின்றன. எனக்குத்தான் தெரியும். ஜனங்களுக்கு எத்தனை தினுசான கஷ்டங்கள் இருக்கின்றன என்று. என்னிடம் வருகிறவர்களெல்லாம் ஏதாவது கஷ்டத்தைச் சொல்கிறார்கள். பூஜை, புனஸ்காரம், க்ஷேத்திராடனம், தீர்த்தாடனம் செய்கிறவர்களுக்கும் சொல்லி முடியாத கஷ்டங்கள் வருகின்றன. இந்தச் சமயத்தில் சில பேர் ரொம்பவும் மனசு வெதும்பி ‘ஐயோ! நான் இத்தனை பூஜை பண்ணினேனே, பக்தி வைத்தேனே, அம்பாள் எனக்குக் கஷ்டத்தையேதானே கொடுத்துக் கொண்டிருக்கிறாள்! கருணாமூர்த்தி, கருணாமூர்த்தி என்று அவளைச் சொல்கிறீர்களே, என் விஷயத்தில் அவளுக்குக் கண் இல்லையே’ என்று துக்கப்படுகிறார்கள். அம்பாளிடம் கோபம்கூட அடைந்து விடுகிறார்கள். ஆனால் என்னைக் கேட்டால் கஷ்டம் தருவதே அம்பாளின் கருணைதான்; பார்க்கப்போனால் இதுதான் பெரிய கருணை என்று தோன்றுகிறது.

நாம் இப்போது செய்கிற நல்லதை மட்டும் நினைத்துப் பார்த்து நமக்குக் கஷ்டம் வருவது நியாயமா என்று பிரலாபிக்கிறோம். தெய்வத்தை நொந்து கொள்கிறோம். ஆனால் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நாம் ஒவ்வொருத்தரும் நல்லது மட்டும்தானா செய்திருக்கிறோம்? நம்மை நாமே அலசிப் பார்த்துக் கொண்டால் நாம் எத்தனை தப்புகள் பண்ணியிருக்கிறோம். காரியத்தில் செய்யாவிட்டால்கூட மனஸினால் எத்தனை மகாபாவங்களைப் பண்ணியிருக்கிறோம் என்பது தெரியும். இதெல்லாம் இப்போதைய – அதாவது இந்த ஜன்மத்து – விஷயம். இதற்கு முன் ஜன்மங்களில் நாம் என்ன செய்தோம் என்பது தெரியாது. இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்கிறது அம்பாள் போட்ட சட்டம். பூர்வ ஜன்மங்களில் வினையை விதைக்கிறோம்; அதற்கு அவள் தருகிற பலனை, கஷ்டத்தை இப்போது அறுவடை செய்கிறோம். வாஸ்தவத்தில் நம் தோஷங்கள், பாவம் நமக்குப் பூரணமாகத் தெரிந்துவிட்டால் அம்பாள் நமக்குத் தருகிற இத்தனை கஷ்டமும்கூடப் போதாது என்றுதான் ஆகும். அப்போது நாமே பச்சாதாபப் படுவோம். ‘இத்தனை கஷ்டத்துக்கிடையில் அவளை நினைத்துக் கதிமோக்ஷம் தேடிக் கொள்கிற வழி கொடுத்திருக்கிறாளே! இது அதிகப்படி (Extra) கருணை அல்லவா! நமக்கு லாயக்கு இல்லாவிட்டாலும் அவளாகப் பொழியும் கருணையல்லவா! இதைப் புரிந்து கொண்டு சந்தோஷப்படாமல், அவளையே குறை சொல்வது எத்தனை அநியாயம்? ஏற்கனவே பண்ணின தப்பெல்லாம் போதாது என்று, அவளையே குறை சொல்கிற இந்தப் பெரிய தப்பையும் பண்ணுகிறோம்!’ என்று உணருவோம்.

குழந்தை மண்ணைத் தின்கிறது. அம்மாக்காரி அதன் கைகளைத் துணி போட்டுக் கட்டுகிறாள். அதற்கு மகா கோபம் வருகிறது. ‘அம்மாவாம், அம்மா! கொஞ்சம்கூட இரக்கம் இல்லாதவள். இவள்தான் நமக்குப் பரம துரோகி’ என்று நினைக்கிறது. காரணம் இல்லாமலா அம்மா கட்டிப் போட்டாள்? குழந்தையைப்பற்றி அவளுக்கு இல்லாத அக்கறையா? குழந்தை தனக்குத் தானே சத்ருவாக இருந்துகொண்டு, அம்மாவை சத்துரு என்று நினைக்கிறது.

நாம் எத்தனை பெரியவர்களாக இருந்தாலும் என்னென்ன புரட்டுக்கள் புரட்டினாலும், வாஸ்தவத்தில் இந்தக் குழந்தை மாதிரிதான் இருக்கிறோம். நம்முடைய பழைய தப்புக்கு அவள் தண்டனை தருவது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபட முடியவில்லை. நமக்கு அந்த சக்தி இல்லை. கட்டிப் போட்டுவிட்டாள் என்று குற்றம் சாற்றுகிறோம். குழந்தை மண்ணைத் தின்னப் போகிற மாதிரி நம் அதே பழைய தப்புகளைப் பண்ணாமலிருப்பதற்காகத்தான் கஷ்டம் என்கிற கட்டை ஜகன்மாதா போட்டிருக்கிறாள். கஷ்டம் வந்தால், ‘நாம் பூர்வத்தில் பண்ணின பாவத்தாலேயே இது வந்தது; ஆனபடியால் இந்த ஜன்மத்தில் தப்பு பண்ணினாலும் இதுமாதிரியே கஷ்டங்கள் இனியும் வந்து கொண்டேயிருக்கும்; அப்படித் தப்புப் பண்ணாமலிருக்க புத்தி தர வேண்டும் என்று அம்பாளைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பதுதான் நமக்கு விமோசனம் என்று தெளிய வேண்டும்.

நாம் நல்லது என்று நினைக்கிற சௌக்கியங்களை அம்பாள் தருகிறபோது மட்டும் கருணை என்று நினைக்கிறோம். அவற்றைப் பெற நமக்கு யோக்கியதை இல்லாதபோதுகூட அவள் அநுக்கிரஹிப்பதால் இதை காரணமில்லாத கருணை என்கிறார்கள். கஷ்டமோ ஒரு காரணத்துக்காக உண்டான கருணை. நாம் பூர்வத்தில் செய்த தப்பு அதற்குக் காரணம். இந்த மாதிரி இனிமேல் செய்யக்கூடாது என்று உணர்த்துவதற்காக, நம்மை நாமே நல்லவர்களாக்கிக் கொள்வதற்காக கஷ்டத்தைத் தருகிறாள். நல்லது என்று நாம் நினைக்கிற சௌக்கியங்களால் பலவிதமான அனர்த்தங்களும் நமக்கே உண்டாகலாம். எனவே, நமக்கு சௌக்கியம் தந்து நல்லதைச் செய்கிற கருணையைவிட, நம்மையே நல்லவர்களாக்கிக் கொள்ளச் செய்வதைக் காரணமாகக் கொண்டு கஷ்டத்தைத் தரும் கருணைதான் விசேஷமானது என்று எனக்குத் தோன்றுகிறது. காரணமில்லாமல் நல்லதைக் கொடுப்பது அவளுடைய ஸ்வபாவமான கருணை என்றால், நம்மைச் சோதித்துத் திருத்த வேண்டும் என்ற காரணத்தோடு அவள் கஷ்டத்தைக் கொடுக்கிறாளே, இந்தக் காரணக் கருணை அதைவிட உயர்ந்தது என்று தோன்றுகிறது. நாம் கொஞ்சம் கொஞ்சம்தான் பார்க்கிறோம். இதற்கு முந்தியோ பிந்தியோ நமக்குத் தெரியவில்லை. அதனால் இந்தச் சின்ன இடைவெளிக்குள் ஏற்படுகிற கஷ்டத்தைப் பார்த்து நமக்குக் கெடுதல் என்று நினைத்து விடுகிறோம். முக்காலமும் தெரிந்து பார்த்தோமானால், அவள் நமக்குக் கொஞ்சம்கூடக் கெடுதலே செய்வதில்லை என்று புரியும்.

கழுதை மேலே உப்புப் பொதி போட்டுக்கொண்டு ஒருத்தன் வேற்று ஊர் சந்தைக்குப் போனான். அந்தக் காலத்தில் உப்பு மூட்டையை மாட்டு மேலே, கழுதை மேலேதான் போட்டுக்கொண்டு போவார்கள். அப்படி போனான் இந்த வியாபாரி. போகிறபோது வழியில் திடீரென்று மழை பிடித்துக்கொண்டு வெளுத்துக் கட்டி விட்டது. உப்புப் பொதி என்ன ஆகிறது? எல்லாம் கரைந்து போயிற்று. வியாபாரிக்கு ஸ்வாமி மேலே மகா கோபம் வந்துவிட்டது. ‘ஏழை என் வயிற்றில் இந்தத் தெய்வம் அடித்துவிட்டதே. கருணையில்லாத சாமியை இனிமேல் கும்பிடுவதில்லை’ என்று முடிவு பண்ணிவிட்டான். வீட்டுக்குத் திரும்ப நடையைக் கட்டினான், வருகிற வழி காட்டு வழி. இருந்தாலும் இவன் மாதிரி பல வியாபாரிகள் கூட வந்த தைரியத்தில் காட்டு வழியாக வந்தான். காட்டிலே திருடர்கள் இவர்களை எதிர்ப்பார்த்துக் கொண்டு மறைந்திருந்தார்கள்.

சந்தையிலே விற்பனை நடத்தி வியாபாரிகள் நிறையப் பணம் கொண்டு வருவார்கள்; துப்பாக்கியால் சுட்டு அவர்களிடம் இருக்கிற பணத்தை எல்லாம் பிடுங்கிக்கொள்ளலாம்’ என்று திருடர்கள் ஆசையாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கி வைத்துக் கொண்டிருக்கிறவர்களிடம் வியாபாரிகள் எத்தனை பேர் இருந்தாலும் என்ன செய்ய முடியும்? எல்லாரும் நடுநடுங்கிப் போனார்கள். அந்தக் காலத்திலே தோட்டா துப்பாக்கி கிடையாது. வெடிமருந்து கெட்டித்துத்தான் அதை வைத்து சுடுவார்கள். துப்பாக்கி சூட்டுக்கு ஆளே அகப்பட்டாலும் சரி; இல்லாவிட்டாலும் அவரவரும் உடைமைகளைப் போட்டுவிட்டுத் திக்குக்கு ஒருத்தராக ஓடி விடுவார்கள். எப்படியானாலும் திருடர்களுக்கு வேட்டைதான்! இன்றைக்கும் இப்படி மருந்து போட்டுச் சுட்டார்கள். ஆனால் மருந்து வெடிக்கவேயில்லை. பெரிதாக மழை பெய்திருந்தது அல்லவா? தோட்டாவாக இருந்தால் எந்த மழைக்கும் ஈரம் தாக்காது. மருந்து அப்படியில்லை. ஈரம் ஜாஸ்தியானால் வெடிக்காது. துப்பாக்கியால் சுட்டதெல்லாம் வெறும் புஸ்வாணமாயிற்று. இப்போது ஆயுத பலம் இல்லாத திருடர்களுக்குப் பயம் எடுத்தது. வியாபாரிகள் பணத்தை போட்டுவிட்டு ஓடுவதற்குப் பதில், திருடர்களே துப்பாக்கிகளைப் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார்கள். முதலில் சொன்னேனே, அந்த வியாபாரிக்கு இப்போதுதான் தெய்வத்தை நிந்தித்தது எவ்வளவு தப்பு என்று புரிந்தது. ‘மழை வந்ததால் உப்புதான் போச்சு; மழை வராவிட்டால் உயிரே போயிருக்கும். இந்த மழையினால் சின்னக் கஷ்டத்தைத் தந்து, அதே காரணத்தினால் பெரிய கஷ்டத்திலிருந்து தப்புவித்தாய். உன் கருணையை என்னவென்று சொல்வது?’ என்று ரொம்பவும் மனசு உருகி வேண்டிக் கொண்டான். இப்படிக் கதை.

முந்தி என்ன, பிந்தி என்ன என்று தெரியாமல் கஷ்டம் வருகிற சமயத்தை மட்டும் பார்க்கிறோம். அம்பாளுக்குக் கருணை இருந்தால் ஏன் கஷ்டம் வருகிறது என்று கேள்வி போடுகிறோம். முந்தி நாம் செய்த கர்மம், பிந்தி நமக்கு இந்த கஷ்டத்தாலேயே வரப்போகிற நன்மை இவை மட்டும் தெரிந்துவிட்டால் நாம் இப்படிச் செய்யமாட்டோம். அது தெரியாதபடி மனிதனை வைத்திருக்கிறாள். அதுவும் அவள் விளையாட்டுத்தான்.

இதெல்லாம் தெரியாதபோதே மநுஷ்யனுக்கு இத்தனை, ஆணவம், அகங்காரம் இருக்கிறதென்றால் திரிகாலமும் தெரிந்தால் இவனுடைய அதிக்ரமத்துக்கு எல்லையே இல்லாமல் போய்விடும். இவன் அடங்கிக் கிடக்கவேண்டும் என்றே இப்படி வைத்திருக்கிறாள். ஆனால் இந்த ஸ்திதியிலும் கூட ‘நமக்கு முந்தியும் தெரியவில்லை. பிந்தியும் தெரியவில்லை’ என்பதையாவது நாமே தெரிந்து கொள்ளலாம். முக்காலமும் தெரிந்த மகான்கள் சொல்வதை நம்பலாம். சகல ஜகத் வியாபாரமும் காரண காரிய ரீதியில் சட்டம் போட்ட மாதிரி நடக்கிறதைப் பார்த்தே, ‘நம் மநுஷ்ய வாழ்க்கையும் இப்படித்தான் இருக்க வேண்டும்; நாம் கஷ்டப்படுகிறோம் என்றால் அதற்குக் காரணம் இருக்க வேண்டும்; இனிமேல் இந்தக் கஷ்டம் வரக்கூடாது என்றால் அவள்தான் கதி’ என்று புத்தி பெறலாம்!

அம்பாள் நம்மைக் கஷ்டப்படுத்தி ஸந்தோஷப்படுபவள் அல்ல. இப்படி நாம் நினைக்கவே கூடாது. எல்லாக் காலத்திலும் நமக்குப் பந்துவாக, சகாயமாக இருப்பது தாயும் தந்தையுமாய், அம்மையப்பனாக இருக்கிற அவள்தான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is ஆசாரியாள் காட்டும் அம்பாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - முதல் பாகம்  is  சிவத்தின் சக்தி ; நாராயண ஸஹோதரி
Next