தேவைப்படும் ஒரு புள்ளிவிவரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எனக்குத் தோன்றுகிறது – யோக்யர்களாக எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள், அப்படியில்லாமல் எத்தனை இருக்கிறார்கள் என்று எப்படியாவது கண்டுபிடித்து அதை போர்டில் போட்டால் எப்படியிருக்கும் என்று! ஒவ்வொரு ஊரிலும் தேசத்திலும் படித்தவர் பெர்ஸென்டேஜையும், போட்டு இப்படி அதற்கு நேரேயே யோக்யர்கள் பெர்ஸென்டேஜையும், போட்டால் என்ன தெரியும்? படித்தவர்கள் நிறைய இருக்கிற இடத்தில்தான் யோக்யர்கள் நிறைய இருக்கிறார்களென்று போர்ட் காட்டுமா?

“யோக்யர்கள் என்று கண்டுபிடிப்பது எப்படி ஸாத்யம்? இது என்ன நடைமுறைக்கு வரமுடியாத யோசனை?” என்று கேட்டால் அது ந்யாயம்தான்.

அடுத்த பக்ஷமாக ஒன்று தோன்றுகிறது. யோக்யர் – அயோக்யர் யார் யார் என்று லிஸ்ட் எடுக்க முடியா விட்டாலும்ட இன்னொரு லிஸ்ட் ஸுலபமாகத் தயாரிக்கலாம். போலீஸ் டிபார்ட்மெண்ட்காரர்களும் ஸிவில் கோர்ட்காரர்களும் ஒவ்வொரு ஊரிலும் இத்தனை ஜேபடிக்காரர்கள் இருக்கிறார்கள், வரி தராமல் இத்தனை பேர், ஸொத்துக்களை மோசம் செய்தவர் இத்தனை பேர், பெரிய திருட்டுக்களில் ஏமாற்றுப் புரட்டுக்களில் இத்னைபேர் பிடிபட்டிருக்கிறார்கள், இன்னும் வ்யபசாரம், கொலை முதலான குற்றங்கள் செய்தவர்கள், அப்பட்டமாகவே பொய்த் துப்பாக்கியைக் காட்டிக் கொள்ளையடிப்பவர்கள் ஆகியோர் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்றெல்லாம் புள்ளி விவரம் வைத்திருப்பார்கள். ஆள் இத்தனை பேர் என்று காட்டமுடியாவிட்டாலும், இந்த இனங்களில் இத்தனை கேஸ்கள் இருக்கின்றன என்று காட்ட முடியும்.ஆகவே, இந்த போர்ட்களில் படித்தவர் இத்தனை பேர் என்பதற்கு நேரேயே குற்றவாளிகள் இத்தனை பேர் என்று – அது முடியாததால் குற்றங்கள் இத்தனை நடந்திருக்கின்றன என்று – போட்டு வைத்தால் நமக்கு ப்ரயோஜனமான உண்மைகள் தெரியுமென்று நினைக்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கிராமப் புள்ளிவிவரங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  படிப்பும் குற்றமும்
Next