அனைவரும் வித்வானாயிருந்த காலம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பழைய காலத்தைச் சேர்ந்த க்ராம மஹாஸபைகளின் சாஸனங்கள் இருக்கின்றன அல்லவா? அவற்றிலே ஒரு க்ராமத்தைச் சொல்லும்போது “அசேஷ வித்வத் ஜனங்கள்” அல்லது “அசேஷ வித்வத் மஹாஜனங்கள்” என்று குறிப்பிட்டிருக்கும். நம்முடைய மடத்து ஸ்ரீமுகங்களிலும் இந்த சொற்றொடர் இருக்கிறது. “சேஷம்” என்றால் “மீதி” என்று தெரிந்திருக்கும். “அசேஷ” என்றால் “மீதியில்லாமல்” என்று அர்த்தம். ஒரு க்ராமத்திலே உள்ள பொதுமக்களில் மிச்சம் மீதி இல்லாமல் அனைவரும் வித்வான்களாக இருந்தார்களென்பதையே “அசேஷ வித்வத் ஜனங்கள்” என்பது தெரிவிக்கிறது. அக்காலத்தில் ஸகலருக்கும் வித்வத் – அதாவது ஏதாவதொரு வித்யையில் பாண்டித்யம் – இருந்தது என்பதை இது தெரிவிக்கிறது. இதை அப்படியொன்றும் மிகைப்படுத்திச் சொன்னதாகக் கொள்வதற்கில்லை. ஏனென்றால் ப்ராமண இதரர்கள் பள்ளிக்கூடம் போகாவிட்டாலும் தங்கள் தங்கள் தொழிலில், அதற்கான வித்யையில், வித்வான்களாகவே இருந்தார்கள். ப்ராமணர்களை எடுத்துக்கொண்டால் இரண்டு வேதம், இரண்டு சாஸ்திரத்துக்குக் குறையாமல் வ்யுத்பத்தி (சிறப்பான தேர்ச்சி) உள்ளவர்களாக ஒவ்வொரு க்ராமத்திலும் பலபேர் இருந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கேற்றாற்போல் அக் காலத்தில் குரு பீடங்களிலும் நம்முடைய ஆசார்யாள், வித்யாரண்யாள் போன்ற பண்டித ஸிம்ஹங்கள் இருந்திருக்கிறார்கள். இந்தக் காலத்தில் பண்டிதர் என்று இருப்பவரையே, “வேதத்தில் ஒரு பதம் புரியவில்லை, அர்த்தம் சொல்லுங்கள்” என்று கேட்டால், “பாஷ்யத்தைப் பார்த்துக்கொண்டு வந்து பதில் சொல்கிறேன்” என்கிறார்! காலத்துக்கேற்ப குரு பீடத்தில் நான் இருக்கிறேன்.

அதனால் – ஒரு விதத்தில் self-interest (ஸ்வயநல அக்கறை) என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் – குரு பீடங்கள் நல்ல நிலைமையில் ஸகல சாஸ்த்ரங்களிலும் நல்ல ஞானத்துடன் விளங்கவேண்டுமென்பதற்காகவாவது ஸகல ஜனங்களும் நல்ல வித்வத் உள்ளவர்களாக ஆகவேண்டுமென்கிறேன். முன்னேயே சொன்னாற்போல, சிஷ்யர்களின் தரத்தைப் பொறுத்துத்தான் குரு உருவாகிறார். சிறந்த அறிவாளிகளாக சிஷ்யர் கூட்டம் இருந்துவிட்டால் அதற்குத் தகுந்தாற்போல் குருவும் தம் நிலையை உயர்த்திக் கொள்ளவேண்டுமென்று நிர்பந்தமாகவாவது ஏற்பட்டுவிடுகிறது. அவர்கள் ஒன்றைக் கேட்டு இவர் முழிக்கப்படாதல்லவா? அதனால்! ஆனபடியால் குரு பீடங்களிலுள்ள குருமார்கள் நன்றாக சாஸ்திரார்த்தம் அறிந்தவர்களாய் இருக்கவேண்டுமென்றால் பொறுப்பு சிஷ்யர்களதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வீணாகும் நேரம் வித்யைக்கு ஆகட்டும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  வாழ்க்கை முறையும் வயதும் தடையாகா
Next