அரசாங்கமல்ல; மக்களும் சீடர்களுமே பொறுப்பு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

முற்காலத்தில் அரசர்களும் மஹாவித்வான்களாக இருப்பார்கள். ராஜ ஸதஸ்கள் அறிவாளிகள் நிறைந்ததாக இருக்கும். நன்றாக வித்வத் ஸம்பாவனைகள் செய்தும் ராஜமான்யங்கள் விட்டும் வித்வான்களையும், அதன் வழியாக வித்யைகளையும் வ்ருத்தி செய்தார்கள். இப்போது… நான் சொல்லவேண்டாம் – எஜூகேஷன் மினிஸ்ட்ரி, கல்ச்சுரல் அஃபேர்ஸ் மினிஸ்ட்ரி என்று இருந்தாலும், கொஞ்சத்தில் கொஞ்சமாவது கலாசார அபிவ்ருத்திக்கு அவர்கள் செய்வதை நாம் பாராட்டத்தான் வேண்டுமென்றாலும், ஏதோ குடியரசு நாளில் இத்தனாம் கோடி ஜனங்கள் உள்ள தேசத்தில் ஒரு பத்துப் பண்டிதருக்கு கௌரவம் பண்ணுவது ; ‘ஸான்ஸ்க்ரிட் ப்ரமோஷன்’ என்று ஏதாவது இரண்டு பழைய ஓரியண்டல் ஸ்கூல்களுக்கு ‘க்ரான்ட்’ கொடுப்பது; இரண்டு யூனிவர்ஸிடியில் ‘சேர்’ வைப்பது; ஒரு சில பேருக்கு ஸ்காலர்ஷிப் தருவது; க்ராமக் கலை உத்ஸவம் என்று ஏதாவது நாலைந்து நாள் பண்ணுவது – என்பதாகச் செய்வதெல்லாவற்றையும் கூட்டிக் கணக்கெடுத்தாலும் பொருளாதாரம், ராணுவம், நீர்ப்பாசனம் முதலியவற்றுக்குச் செலவழிப்பதில் நூறில் ஒரு பங்காவது வித்யாபிவ்ருத்திக்குப் போகும் என்று தோன்றவில்லை. அவற்றிலே காட்டுகிற இன்ட்ரெஸ்ட் இதில் யாருக்கும் இல்லை – எந்தக் கட்சிக்குமே இல்லை. ஆனாலும் வெளிதேசங்களும் நம் இமேஜை ப்ரொஜெக்ட், பண்ணிக் காட்டுவதற்காக மட்டும், நம்முடைய வித்யகைளையும் கலைகளையும் பற்றி நிறையப் பேசுவதாக ஏற்பட்டிருக்கிறது. இவற்றுக்காகச் செய்கிற ஏதோ கொஞ்சமும் ஈச்வர ஸம்பந்தமில்லாமலும் சாஸ்திரிய வழியில் இல்லாமலும் செய்யப்படுவதால் அவையும் உரியபடி ப்ரயோஜனப்படாமல் போகின்றன. இன்றைய ராஜாங்க ரீதியில் இதற்கு மேல் ஒன்றும் எதிர்ப்பார்ப்பதற்கில்லை. அவர்களைக் குறைகூடச் சொல்லவேண்டாம்.

ஆகவே பொதுவாக வித்யைகள் என்று எடுத்துக்கொண்டால் பொதுஜனங்களும், சாஸ்திரங்களை வளர்க்க வேண்டிய குருபீடங்கள் என்று எடுத்துக்கொண்டால் சிஷ்ய வர்க்கமும்தான் இப்போது விழிப்புணர்ச்சி பெற்றுப் பொறுப்பு எடுத்துக்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யணும். ஒரு விதத்தில் ராஜாங்க ரீதியில் நடக்காதது கூட நல்லதற்குத்தான் என்பேன். ஏனென்றால், அப்படி நடந்தால் ஜனங்கள் இவ்விஷயத்தில் அசட்டையாக இருந்துவிட முடியும். அப்படி இல்லாத போதுதான் ஸகல ஜனங்களும், “இவை நம்முடைய மஹத்தான பாரம்பர்ய ஸொத்து. இவற்றை நாம் ரக்ஷிக்க வேண்டும்” என்று ஸொந்த அக்கறையும் விசாரமும் காட்டி ஹ்ருதய பூர்வமாக ஈடுபட அதிக இடம் உண்டாகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is வாழ்க்கை முறையும் வயதும் தடையாகா
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அரைகுறை ஞானத்துக்கே ஆதரவு
Next