இம்மாதிரி, பேர், புகழ், பணம், ஆதரவு எதையும் எதிர்பார்க்காமல் அநேக குடும்பங்களில் வித்யைகளுக்கே தங்களை அர்ப்பணித்துக்கொண்டு வருபவர்களையும் நான் ஒன்று, இரண்டு இடத்தில் பார்த்திருக்கிறேன். நான் எத்தனையோ ஊர் சுற்றி எவ்வளவோ பார்த்திருப்பதில் இப்படியும் பார்த்தது எனக்குச் சொல்லி முடியாத ஸந்தோஷமாயிருந்தது.
இவற்றில் ஒன்று எங்கே எப்போது என்றால் 1927-28 வருஷங்களில் மலையாள தேசத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். அங்கே திருவஞ்சிக்களம் என்று ஒரு ஸ்தலம். (திரு அஞ்சைக்களம் என்பதே ஸரியான பெயர்.) பழைய காலத்தில் அதுதான் மலையாள தேசத்துக்குத் தலைநகரமாயிருந்தது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரப் பெருமாள், அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமாள் (இரண்டு பேரிலும் ‘பெருமாள்’ இருக்கிறது.) ஆகிய ராஜ – பக்தர்கள் இருவரும் திருவஞ்சிக்களத்திலிருந்துதான் ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். தேவாரத்தால் போற்றப்பட்டுப் ‘பாடல் பெற்ற ஸ்தலம்’ என்று கூறப்படுகிற க்ஷேத்ரங்களில் “ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு” என்பதாக மலையாளத்திலிருக்கும் க்ஷேத்ரம் இதுதான். இதே மலையாள தேசத்தில் (ஆழ்வார்களின் பாசுரங்களைப் பெற்றவையான) நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் பதின்மூன்று இருக்கின்றன. திருவஞ்சிக்களத்துக்குப் பக்கத்தில் ப்ரஸித்தமான பகவதி க்ஷேத்ரம் ஒன்று இருக்கிறது. கொடுங்கலூர் என்று பெயர். வெள்ளைக்காரர்கள் அதைத்தான் ‘ரோங்கனூர்’ என்று ஆக்கியிருக்கிறார்கள் அந்த ஊரிலும் அதைச் சுற்றியுள்ள சில ஊர்களிலுந்தான் நான் சொன்னபடி அநேக வித்வான்கள் வெளியுலகத்தின் ஆதரவைப்பற்றி நினைக்காமல் அநேக சாஸ்திரங்களை அப்யஸித்துக் கொண்டிருப்பது.
கொடுங்கலூரிலும், இந்தச் சுற்றுப்புற ஊர்கள் ஒவ்வொன்றிலும் ராஜா என்று ஒருத்தர் இருக்கிறார்.
மலையாளத்திலேயே பொதுவாக ராஜாக்கள் அதிகம். அங்கே பெரும்பாலும் “மருமக்கத் தாயமுறை” என்ற முறைப்படியே ராஜ்யமோ, மற்ற ஸொத்தோ அடுத்த தலைமுறைக்குப் போய்க் கொண்டிருந்தது. அதாவது அப்பா – பிள்ளை என்று பிதுரார்ஜிதமாக மற்ற இடங்களிலெல்லாம் ஸொத்து, ராஜ்யம் ஆகியவை போகின்றனவென்றால், மலையாளத்தில் மட்டும் அம்மா வழியில் மாதுரார்ஜிதமாகப் போவதாகவும் இருந்தன. ஆனாலும் அம்மா என்றால் அவள் ஸ்த்ரீ. அவள் எப்படி ஸொத்துப் பரிபாலனம் செய்வாள்? அதனால் அவளுடைய அண்ணா – தம்பிக்கு ஸொத்துப் போகும். ஆனால் இந்த அண்ணாவோ தம்பியோ கண்ணை மூடுகிறபோது தங்கள் பிள்ளைக்கு (ஸொத்தை) எழுதிவைக்க முடியாது. அந்த ஸஹோதரியின் பெண்ணுக்குத்தான் ஸொத்துப் போகும். முன்னே சொன்ன மாதிரியே அதை இந்தப் பெண்ணுடைய ஸஹோதரன்தான் பரிபாலனம் செய்வான். இவன் இதற்கு முன் ஸொத்தை நிர்வஹித்தவனுக்கு மருமான் (மருமகன்) தானே? இப்படி மாமா – மருமகன் என்று ஸொத்து நிர்வாஹம் போவதாலேயே இதற்கு “மருமக்கத் தாயமுறை” என்று பெயர். “தாய” என்றால் தாயார் ஸம்பந்தப்பட்டது என்று அர்த்தமில்லை. Taaya இல்லை, Daaya ‘தாயம்’ என்பது ஸம்ஸ்க்ருத வார்த்தை. அதற்கு ‘ஸொத்தின் பாகம்’ என்று அர்த்தம். இப்படி பிதுரார்ஜிதத்தில் பங்கு உடையவர்களுக்குத்தான் “தாயாதி” என்று பேர்.
கொடுங்கலூர்ப் பகுதியில் இருந்த அநேக ராஜாக்கள் இவ்வாறு மருமக்கத் தாயமுறையில் ராஜாவாக இருந்தவர்கள். பேர்தான் ராஜா. நாம் ‘மிடில் – க்ளாஸ்’ (மத்யதர வகுப்பினர்) என்று சொல்பவர்களைவிடவும் அந்த ராஜாக்களின் வருமானம் ஸ்வல்பமாகவே இருக்கும். நம் ஊரில் பரம ஏழைக்குத்தான் கஞ்சி ஆஹாரமென்றால், அங்கே இந்த ராஜாக்களின் முக்ய ஆஹாரமே கஞ்சிதான்! நம் ஊரில் கஞ்சி சாப்பிடுகிற கலயம், கப்பரை என்று ஏழை மண்ணிலோ, சுரைக் குடக்கையிலோ ஒன்று வைத்துக் கொண்டிருக்கிறானென்றால், அந்த ராஜாக்களோ இந்தக் கலயம் – கப்பரைகூட வைத்துக்கொள்வதில்லை. அந்த ப்ரதேசங்களில் பலாமரம் செழிப்பாக வளரும். அந்தப் பலா இலைகள்தான் இந்த ராஜாக்களுக்குப் பாத்திரம் பொருளாதார சூழ்நிலை இப்படியிருந்தாலும் வித்வத்திலே அவர்கள் அத்தனை பேரும், அவர்களைச் சேர்ந்தவர்களுங் கூட, ஆச்சர்யப்படும்படியான தேர்ச்சி பெற்றிருந்தார்கள். புருஷாள் மட்டுமின்றி ஸ்த்ரீகளும் இப்படியே ஏதாவதொரு சாஸ்திரத்தில் நல்ல யோக்யதை ஸம்பாதித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இவர்களாக வெளியிலே ப்ராபல்யத்துக்கு ப்ரயாஸைப் படாவிட்டாலும், தானாகவே இவர்களில் ரொம்பவும் தேர்ச்சி பெற்றவர்களில் சிலர் பெயர் வெளியில் பரவியிருக்கிறது. இப்படி ஒரு ராஜா மஹாமஹோ பாத்யாயா பட்டம்கூட வெள்ளைக்கார ராஜாங்கத்திடமிருந்து பெற்றிருக்கிறார். பெயரளவில் ராஜாக்களாக இருந்துகொண்டு கஞ்சியைக் குடித்துக் காலங்கழிப்பவர்களாக நம்முடைய வேத சாஸ்திரங்களையும் மற்ற பூர்விகக் கலைகளையும் வ்ருத்தி பண்ணிக்கொண்டு வந்த இவர்களை வித்வத் ஸமூஹம் முழுதும் ‘ஐடியலாக’க் கொள்ளவேண்டும்.
மலையாளத்தில் நான் வித்வத் – ஊரைப் பார்த்தது (ஆயிரத்துத் தொள்ளாயிரத்து) முப்பதுக்கு முந்தி. இதே மாதிரி இன்னொன்று நான் பார்த்து அப்படியும் ஏறக்குறைய நாற்பது வருஷத்துக்கு அப்புறம். அது மலையாளத்தில் இது தெலுங்கு தேசத்தில் அப்போது பார்த்தது வித்வத் – ஊர். இப்போது பார்த்தது அப்படியே ஒரு ஊர் முழுக்க இல்லை, இது வித்வத் – குடும்பம்தான். ஆனாலும் அந்தக் குடும்பமே ரொம்பப் பெரிசாக இருந்ததால், “சாஸ்திரங்களிலேயே அத்தனை பேரும் ஈடுபட்டிருப்பதாக இப்படியும் ஒரு குடும்பமா?” என்று ஆச்சர்யப்படும்படியாகவும், ஸந்தோஷப்படும்படியாகவும் இருந்தது.
“ஹரி ஸோதருலு” என்று அவர்களைச் சொல்லுகிறார்கள். தெனாலி கிட்டேயுள்ள ஈப்பூரைச் சேர்ந்த அண்ணா தம்பிகள் ஐந்து பேர். நான் அவர்களைப் பார்த்தது பெஜவாடா (விஜயவாடா) வில் அவர்களுக்கு உள்ள வீட்டில். பெரியவர் பெயர் ஹரி வேங்கடஸூப்பையா. அவருக்கு நாலு தம்பிகள். அஞ்சு பேரும் ப்ராசீனமான முறையில் ஒவ்வொரு சாஸ்திரம் படித்து நல்ல வித்வத்தோடு இருக்கிறார்கள். வேதம், வேதபாஷ்யம், ஸ்ம்ருதிகள், புராணம் என்று ஒவ்வொன்றில் ஒருத்தர் ஸ்பெஷலைஸ் பண்ணியிருக்கிறார். இதெல்லாவற்றையும் ஒன்றுக்கொன்று சேர்த்துத் தொகுத்துப் புஸ்தகம் போட்டிருக்கிறார்கள். அதுகூடப் பெரிசில்லை. தங்களுக்கு அடுத்த தலைமுறையிலும் இந்த வித்யா ஸம்பத் வீணாகிவிடாமல் தங்களுடைய பசங்களுக்கும் நன்றாக சாஸ்திராப்யாஸம் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் நான் பெரிசாக நினைக்கிறேன். தங்களகத்துக் குழந்தைகளுக்கு அஞ்சு வயஸு ஆச்சோ இல்லியோ ஸம்ஸ்க்ருத பாடம் ஆரம்பித்துவிடுகிறார்கள். பாடம் என்று புஸ்தகத்தோடு கட்டிப்போடாமல் ஸரளமாக ஸம்ஸ்க்ருதத்திலேயே பேசுவதற்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். ஏழெட்டு வயஸு வாண்டுகள் பளிச்சுப் பளிச்சென்று ஸம்ஸ்க்ருதத்தில் பதில் சொல்வதைக் கேட்க ஆனந்தமாயிருந்தது.
பூர்வகாலத்தில் ‘அசேஷ வித்வத்ஜனங்கள்’ என்னும்படியாக ஊர் பூராவும், பெண்டுகள்கூட பாண்டித்யத்தோடு இருந்தார்கள். சாணி தெளிக்கிறவள் ஸம்ஸ்க்ருதத்தில் போடு போடு என்று போடுவதைக் கேட்டே, வாதத்திற்கு வந்த வெளியூர் வித்வான் கம்பி நீட்டிவிட்டார், கிளிப்பிள்ளைகள் கூட தங்களுக்குள் பெரிய தர்க்க சாஸ்திரவாதங்கள் பண்ணிக்கொண்டிருந்தன – என்றெல்லாம் கதைகளில் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அதற்கு நம் காலத்திலும் ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் துளியாவது ‘ஸாம்பிள்’ மாதிரிப் பார்க்க முடிந்தது.
வித்வான்கள் வித்யையை ஈச்வரோபாஸனையாக, அதாவது வேறு ப்ரதிப்ரயோஜனம் எதிர்பாராமல், பேணி வளர்த்துக்கொள்ள ப்ரயத்னம் பட்டால் எப்படியாவது அவை உயிரைப் பிடித்துக்கொண்டு வ்ருத்தியாகிவிடும். அவர்களும் உயிரைப் பிடித்துக்கொண்டு காலம் தள்ள ஈச்வரன் கைகாட்டாமல் போகமாட்டான்.
இப்படி பலர் இருந்துமிருக்கிறார்கள். பரமபக்தரான த்யாகையர்வாள் போன்றவர்கள்தான் ராஜ ஸம்பாவனை, பேர், புகழ் முதலியன வேண்டாம் என்று ஒதுக்கி, ஒதுங்கி அவர்கள் பாட்டுக்கு இருந்தார்களென்றில்லை. மஹாவித்வான்களிலுங்கூடப் பணவசதி, பாராட்டு, ப்ராபல்யம் வேண்டாம் என்றே இருந்தவர்களுண்டு.
வித்வானாக இருக்கிறவர் பணத்தைத் தள்ளுவதைவிடப் பாராட்டைத் தள்ளுவது ச்ரமம். தனக்கு நல்லபுத்தி இருக்கிறது, நிறையத் தெரிந்து கொண்டிருக்கிறோம், ஆராய்ச்சி செய்து பெரிசாக எழுதியிருக்கிறோமென்றால் உடனே இதை லோகம் ரெகக்னைஸ்’ செய்யவேண்டும், தன்னைப் புகழவேண்டும், மரியாதை பண்ண வேண்டும் என்ற எண்ணங்களும் ஏற்பட்டுவிடுகின்றன. ஒரேயடியாக வித்யா கர்வம் ஏறி, ‘இந்த உலகத்துக்கு நம்மைப் புரிந்து கொள்ள சக்தி உண்டா? நம்மைப் பாராட்ட அதற்கு யோக்யதை உண்டா?’ என்று நினைக்கிற அளவுக்கும் சில வித்வான்கள் போய்விடுகிறார்கள். ஆதலால் அவர்கள் வித்வத்துக்காகப் பாடுபடுகிறது போலவே, அல்லது அதை விடவும் விநய ஸம்பன்னர்களாவதற்கும் பாடுபட வேண்டும்.