‘ஸொந்த’ ஸர்க்காரின் அத்துமீறல்! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆக, துருக்க – வெள்ளைக்கார ஆட்சிகளில்கூட நம் சாஸ்த்ர ஸம்மதமாகவோ, சாஸ்த்ர ஸம்பந்தமுள்ளதாகவோ நிர்வாஹம் நடக்காவிட்டாலும் அதை அப்பட்டமாக மீறும்படி ஹிந்து ஸமூஹத்தைக் கட்டாயப் படுத்தி ராஜாங்கச் சட்டம் செய்வதென்பது இல்லை. இந்த மஹா பெரிய அத்துமீறல் தம்முடைய ‘ஸொந்த’மான ஸ்வதந்த்ர ஸர்க்காரால்தான் செய்யப்பட்டு வருகிறது! தேச ஸ்வதந்த்ரம் என்று சொல்லிக்கொண்டே தங்களுடைய ஸொந்த வாழ்க்கைமுறை, எண்ணப் போக்கு எல்லாவற்றையும் வெள்ளைக்கார வழிக்குப் பரதந்த்ரமாக்கிவிட்டவர்கள் நடத்தும் குடியரசின் ரூபம் இப்படியிருக்கிறது!

மத ஸம்பந்தமில்லாத ஸெக்யுலர் ராஜாங்கம் என்று பேர். ஆனாலும் கிறிஸ்துவ மதம், துருக்க மதம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் அவர்களுடைய மத ஸம்ப்ரதாயங்களின்படியே செய்யப் பூர்ண ஸ்வதந்திரம் தந்திருக்கிறதே தவிர ஹிந்துக்கள் என்று வரும்போது மட்டும் அவர்களுடைய மதக் கொள்கைகளை பாதிக்கும்படியாக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றே சட்டங்கள் வகுத்து வருகிறார்கள். இப்போது நடக்கும் ‘ஸெக்யூலரிஸம்’ என்பது ஹிந்து சாஸ்த்ரங்களை மீறுவது, அவற்றில் மரியாதையைக் கெடுப்பது என்பதுதான். முக்யமாக, சாஸ்த்ரகாரர்களுக்குத் தெரியாத, அல்லது பிடிக்காத ஸமத்வம் தங்களுக்குத்தான் தெரியும், அவர்கள் பாரபக்ஷமாகப் பண்ணியதையெல்லாம் தாங்கள் சீர்படுத்தவேண்டும்’ என்ற அபிப்ராயத்தில் கார்யங்கள் செய்துவருகிறார்கள்.

கோபித்துக்கொண்டு ப்ரயோஜனமில்லை. சாந்தமாக. ஸாத்விகமாக எடுத்துச் சொல்வதுதான் நம் கடமை. ஈச்வரனை நம்பி, அவனை ப்ரார்த்தித்துக்கொண்டு, ‘நம்முடைய பெரிய மரபையும் நாகரிகத்தையும் சீர்திருத்தம் என்ற பெயரில் சிதைத்துவிட்டால், அப்புறம் லோகம் பூராவுக்கும் வழிகாட்டியாக இருந்து அதுமாதிரியான ஒன்றை மறுபடி உண்டாக்கவே முடியாது’ என்பதைப் புதிதாக நிர்வாஹத்துக்கு வந்திருப்பவர்களுக்கு நன்றாக விளக்கிச் சொல்லவேண்டும். நல்ல வழிக்கு வருவார்கள் என்று நம்பி, கோபதாபமில்லாமல், ஈச்வர ஸ்மரணையோடு சொன்னால் நிஜமாகவே வழிக்கு வருவார்கள். புது நிர்வாஹம் சின்னக் குழந்தையாயிருக்கிறது. ஒரு குழந்தை எப்படி வீட்டுப் பெரியவரிடம், அவர் ஊருக்கே மதிப்பு வாய்ந்த ச்ரௌதிகள் என்றால்கூட, ஸ்வாதீனமாகப் போய் அவருடைய சிகையைப் பிய்த்து, குண்டலத்தை இழுத்து, அவர் மேலேயே அசிங்கம் பண்ணிக்கூட விளையாடுமோ அப்படித்தான் ஸொந்த ஸ்வாதீனத்தின் மேல் நம்முடைய குழந்தை நிர்வாஹஸ்தர்கள் பாரத தர்மத்தைப் பண்ணிக்கொண்டிருக்கிறார்களென்றும், அஞ்சு வயஸாகி ஸ்கூலில் போட்டால் குழந்தை அடங்கி, விஷயங்களைப் புரிந்துகொள்கிறது போல், இன்னும் கொஞ்ச காலம் போனால், நாமும் விடாமல் “வாத்யார்” பண்ணிக்கொண்டு தர்ம ந்யாயங்களைச் சொல்லிக்கொண்டேயிருந்தால் ஸரியாகி விடுவார்களென்றும் நம்புவோம்.

ஆனாலும் தற்போது அவர்கள் பண்ணுவது தப்பான சாஸ்த்ரம் அல்லது ஸம்ப்ரதாயத்தை ஸரி செய்வதாகநினைத்துக்கொண்டு செய்கிற தப்புதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is துருக்கர், வெள்ளையர் ஆட்சிகளில்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸொத்துத் தகுதி பற்றி
Next