மனக் கலப்பில்லாத உயிர் உணர்வு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அந்த உயிர் மனஸின் கலப்பு இல்லாமல், மனஸின் எண்ணங்கள், இந்த எண்ணங்களின் விளைவாக ஏற்படும் கர்மா ஆகியவற்றின் பந்தம் இல்லாமல் தனியாக இருப்பதை உணர்வதுதான் அத்வைத மோக்ஷம். அது ஜட ஸ்திதி அல்லவே அல்ல. ‘ஜீவன்’ என்பதே ‘உயிர்’ என்பதாயிருக்க, அந்த உயிர் தத்வம், எப்படி ஜீவனில்லாத ஜடமாக இருக்க முடியும்?

“பின்னே மனஸின் கலப்பு இல்லாமல் அது மாத்ரம் இருந்த ஸ்திதிகளான நித்ரையிலும், மூர்ச்சையிலும் கொஞ்சங்கூட உணர்ச்சியே இல்லாமல் ஜடம் மாதிரித்தானே கிடந்தோம்?”

உணர்ச்சி இல்லாமல் ஜடம் மாதிரிக் கிடந்ததென்பது வாஸ்தவம் அப்பா. ஆனால், இப்படி இருந்தது மனஸ்தான்; உயிர் இல்லை. மனஸின் கலப்பில்லாத ஸ்திதி என்று நீயே சொன்னபடி, மனஸ் அப்போது உயிரைவிட்டுப் பிரிந்திருந்தது. அதனால், உயிரின் ஜீவசக்தி மனஸில் இல்லாமலிருந்தது. இக் காரணத்தாலேயே மனஸ்தான் ஜடமாயிற்று. உயிர் அப்போதும் ஜீவசக்தியோடு இருக்கத்தான் செய்திருக்கிறது. அதனால்தான் ஹ்ருதயம், ச்வாஸ கோசம் முதலானவற்றை அது வேலை செய்ய வைத்திருக்கிறது. இப்போது பகவான் செய்கிற பெரிய மாயையிலே நம் எல்லோருக்கும் மனஸின் உணர்ச்சியையே புரிந்துகொள்ள முடிகிறது; மனஸால் எதை உணரமுடியுமோ அதையே நமதாக க்ரஹித்துக் கொள்ள முடிகிறது. அதனால்தான் மனஸ் நின்றுபோனபின் உயிர் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நமக்கு எது புரிவிக்கும் கருவியாயிருக்கிறதோ, அது வேலை செய்யாமல் நின்று போன விட்டு எதை எப்படிப் புரிந்துகொள்வது? நாம் கண்ணை மூடிக்கொண்டவுடன் லோகம் தெரியாமல் போகிறாற்போல, நம் மனஸ் வேலை நிறுத்தியவுடன் நம்மால் எந்த அநுபவமும் பெற முடியவில்லை. அதனால் ஜடமாய்விட்டதாக நினைக்கிறோம். ஆனால், நாம் கண்ணை மூடிக்கொண்டவுடன் நிஜமாகவே லோகம் இல்லாமல் போய்விட்டதா என்ன? கடிகாரம் நின்று போய்விட்டால் நமக்கு ‘டைம்’ தெரியவில்லை. அதனால் காலமே நின்று போனதாகுமா என்ன?

மனஸ் போனபின் உள்ள உயிர்த் தத்வத்துக்கு உணர்ச்சி இருக்கிறது. அதுதான் ஸத்யமான, சாச்வதமான உணர்வே! `பேர் உணர்வு’ என்று அதைத்தான் சொல்கிறார்கள். சைதன்யம், ஞானம் என்பது அதைத்தான். அதற்கு ஞானம் இருக்கிறது என்பதுகூட ஸரியில்லை. அதுவே ஞானம், சைதன்யம், சித் ஸ்வரூபம், சின்மாத்ரம் என்றும் சொல்வார்கள். இங்கிலீஷிலும் அழகாகச் சொல்கிறார்கள்: மனஸ் அநேக விஷயங்களை உணருவதை, ‘அது conscious -ஆக இருக்கிறது’ என்று சின்ன ‘c’ போட்டுச் சொல்கிறார்கள்; ஜீவனுடைய ஜீவனான நிஜ தத்வம் தானே உணர்வாக இருப்பதை காபிடல் C போட்டு Consciousness என்கிறார்கள்.

‘மனஸில்லாதபோதும், அதற்கும் மேலான நம்முடைய உயிர் தத்வமாயிருப்பதுதான் நிஜத்தில் நாமாக இருக்க வேண்டும். அதை அண்டியே தனக்கு ஜீவகலையைப் பெறுகிற மனஸ் நிஜ நாமாக இருக்கமுடியாது. (உடம்பும் இப்படியே நிஜ நாமாக இருக்க முடியாது.) மனஸ் இல்லாமல் நாம் இருக்கிற நிலை உண்டு ஆனால் உயிர் இல்லாமல் இருக்கவே முடியாது என்பதாலேயே உயிர்தான் நாம் என்றாகிறது. ஏனென்றால், மனஸ் நாமென்றால், தூக்கத்தில் அது இல்லாதததால் நாமே இல்லை என்று ஆகிவிட வேண்டுமே!அப்படி ஆகவில்லையே!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நிஜ 'நாம்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆத்ம உணர்வும், மனோ வாழ்க்கையும்
Next