சாப விமோசனம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ராவேளைகளில் சந்த்ரனில்லாமல் லோகம் பலவிதமாகக் கஷ்டப்பட்டது. ஓஷதிகள் (மூலிகைகள்) சந்த்ரிகையாலேயே வளர்ப்பவையாதலால், இப்போது நிலா இல்லாமல் அவை வாடிப்போனதில் எங்கே பார்த்தாலும் வியாதிகள் உண்டாயின. எத்தனை பார்த்தாலும் போதுமென்ற த்ருப்தியைத் தராத பால் நிலவு இல்லாமல் ரஸிக ஜனங்கள் வருத்தப்பட்டார்கள்.

அதனால் தேவர்கள், ரிஷிகள் எல்லாரும் லோகத்திடம் பரிவுகொண்டு ப்ரம்மாவிடம் போய் முறையிட்டார்கள்.

எப்போதுமே மும்மூர்த்திகளில் முதல்வரான ப்ரம்மாவிடம்தான் முதலில் போய் வேண்டிக்கொள்வார்கள். அப்போது சில ஸமயங்களில் அவரே குறை தீர்த்துவைப்பார்; சில சமயங்களில், ரொம்பப் பெரிய அநுக்ரஹமாகச் செய்ய வேண்டியிருந்தால் அப்போது, தம்மிடம் பிரார்த்திப்பவர்களை விஷ்ணுவிடமோ ஈச்வரனிடமோ அம்பாளிடமோ அழைத்துக்கொண்டு போய், தாமும் சேர்ந்து முறையிடுவார். இப்படித்தான் புராணங்களில் இருக்கிறது.

சந்த்ரனை மறுபடி ஆகாசத்தில் ஸஞ்ஜாரம் பண்ணும்படிச் செய்யவேண்டுமென்று தேவ, ரிஷிகள் ப்ரம்மாவிடம் பிரார்த்தித்ததும் அவர், “மஹாகணபதி கொடுத்த சாபத்துக்கு நான் எப்படி விமோசனம் சொல்வது? பரமேச்வரனாலும் முடியாததாச்சே அது! ஆனபடியால் சாபம் கொடுத்தவரையே உபாஸியுங்கள். அவர் காலிலேயே விழுந்து பிரார்த்தனை செய்யுங்கள். அவருக்கு உகந்த திதியான சதுர்த்தியில் நக்த வ்ரதமிருந்து, விசேஷ பூஜை பண்ணுங்கள். மோதகம், அப்பம், பழம், தேங்காய் எல்லாம் நிறைய நிவேதனம் பண்ணி, மனஸ் உருக வேண்டிக்கொண்டு அவர் மனஸையும் உருக்கி அநுக்ரஹத்தை ஸம்பாதித்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்.

பொதுவாக வ்ரதமென்றால் பகலில் மட்டும் போஜனம் பண்ணிவிட்டு, ராத்ரி உபவாஸமிருப்பது வழக்கமென்றாலும் சில வ்ரதங்களுக்கு பகலில் உபவாஸமிருந்துவிட்டு ராத்ரி போஜனம் பண்ணவேண்டும். இப்படி மத்யான்னமெல்லாம் உபவாஸம், பூஜை, பாராயணம் என்று இருந்துவிட்டு ராத்ரி ஆஹாரம் பண்ணுவதுதான் நக்த வ்ரதம் என்பது. நக்தம் என்றால் ராத்ரி nocturnal என்று சொல்வது இதிலிருந்து தான்.

ஒவ்வொரு தெய்வத்துக்கு ஒவ்வொன்று முக்யம். சிவனுக்கு அபிஷேகம்; விஷ்ணுவுக்கு அலங்காரம்; பிள்ளையாருக்கு நைவேத்யம். ஒரு குழந்தையென்றால் அது எப்போது பார்த்தாலும் “ஹாவு ஹாவு” என்று எதையாவது தின்னத்தான் பறக்கும். கத்தியா, கபடாவா, வாயில் கொள்ளுமா கொள்ளாதா என்றில்லாமல் எதைப் பார்த்தாலும் வாயிலே அடைத்துக் கொள்ளத்தான் குழந்தை பறக்கும். அது என்ன விஷமம் பண்ணினாலும், “அப்பிச்சி தரேன்” என்று தான் ஸமாதானப்படுத்துகிறோம்! குழந்தைஸ்வாமியான பிள்ளையாருக்குக் குறைவில்லாமல் கொழுக்கட்டை, அப்பம், பொங்கல், தேங்காய், பழ வகைகளெல்லாம் நைவேத்யம் பண்ணவேண்டும். அவ்வையாரும் அவரை ஸ்துதிக்க ஆரம்பிக்கும்போதே “பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்” என்று சாப்பாட்டில்தான் ஆரம்பிக்கிறாள். இப்படியே, திருப்புகழிலும் எடுத்த எடுப்பில் “கைத்தலம் நிறைகனி அப்பமொ(டு) அவல் பொரி” என்று சாப்பாட்டு தினுஸுகளைத்தான் அடுக்கியிருக்கிறது!

தேவர்களெல்லோரும் ப்ரம்மா சொன்னபடியே பிள்ளையாரை மனோ வாக் காயங்கள் ஒன்றுபட்டுப் பூஜை பண்ணி வந்தார்கள். ஸமுத்ரத்துக்குள்ளே போய் சந்திரனைக் கண்டு பிடித்து, “நாங்கள் வேண்டிக்கொள்வது பெரிசில்லை. நீ தப்பை உணர்ந்து க்ஷமாபனம் (மன்னிப்பு) கேட்டுக் கொள்வதுதான் முக்யம். விக்நேச்வரரும் அப்போது சடக்கென்று மனஸ் இறங்கி அநுக்ரஹம் செய்துவிடுவார்” என்றார்கள்.

அவமானம், கஷ்டம் ஆகியவை வந்தால் அவையே அஹம்பாவம் பிடித்தவர்களுக்குக் கொஞ்சம் நல்ல புத்தியை உண்டாக்கிவிடுவது வழக்கம்.

சந்த்ரனுக்கும் இப்படி கொஞ்சம் நல்லறிவு உண்டாயிருந்தது. தேவர்கள் சொன்னபடி அவர்களோடு சேர்ந்து விக்நேச்வரரைப் பணிவோடு வழிபட ஆரம்பித்தான்.

கருணாமூர்த்தியான கணேசர் ப்ரஸன்னமானார். ப்ரார்த்தனைக்குச் செவி சாய்த்தார் – பெரிய செவி! ‘சூர்ப்ப கர்ணம்’ என்று சொல்லப்படுவது! (சூர்ப்பம் என்றால் முறம்.)

சந்த்ரன் பச்சாதபத்தோடு மன்னிக்கச் சொல்லி ப்ரார்த்தித்தான். பெரிய மனஸோடு பிள்ளையாரும் மன்னித்தார்.

சந்த்ரனைப் பார்க்கிறவர் அபவாதத்துக்கு ஆளாக வேண்டுமென்ற சாபத்தை ரத்து பண்ணினார் – ஒரு சின்ன கண்டிஷனோடு. “ஏன் அப்படியே ரத்து பண்ணாமல் ஒரு கண்டிஷன் போடுகிறேனென்றால், என் வாயிலிருந்து ஒரு தரம் வந்துவிட்ட வார்த்தை எதுவும் அடியோடு வீணாகப் போகப்படாது. அதோடுகூட, எந்தக் காரணத்துக்காகவும் கர்வப்படக்கூடாது. இவன் அழகுக்கு கர்வப்பட்டாற்போல் வித்யை, செல்வம், அதிகாரம் முதலான எதற்கு கர்வப்பட்டாலும் உலகம் ஏறெடுத்தே பார்க்காத அவமானநிலைக்குத்தான் ஆளாக வேண்டிவரும் என்று ஜனங்களுக்கு என்றென்றைக்கும் ஞாபகம் இருப்பதற்காக இவனுக்கு ‘துளிப்போற’வாவது தண்டனை இருக்கத்தான் வேண்டும். ஆகையினால் என் ஆவிர்பாவ தினமான சுக்ல பக்ஷச் சதுர்த்திகளில் மட்டும் எவரும் சந்த்ரனைப் பார்க்கக் கூடாது என்றும், மீறினால் மித்யாபவாதத்துக்கு ஆளாக வேண்டுமென்றும் ஆக்ஞை செய்கிறேன்” என்றார்.

எப்போதுமே சந்த்ரனைப் பார்க்கப்படாதென்பதைப் பரம க்ருபையோடு மாற்றி மாஸத்தில் ஒருநாள் மாத்திரம் பார்க்கப்படாது என்று செய்தார். அதை சுக்ல சதுர்த்தியாக வைத்ததால் தம்முடைய ஸம்பந்தம் நினைவு வரும்படியாகப் பண்ணினார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சாபத்தின் உட்கிடை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'பால சந்த்ரன்'
Next