ஈசன் செய்வதற்கு சாஸ்த்ரம் எதற்கு? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஈச்வரனே தன் க்ருபை என்று காட்டிக் கொள்ளாமல் இவனை ஸாக்ஷாத்காரத்தில் சேர்த்தாலும் சேர்க்கலாம். இம்மாதிரி ஸித்தி அடைந்தவர்கள் பிற்பாடு சாஸ்த்ரம் செய்தால் அதில் ஈச்வர க்ருபையைக் சொல்வதற்கு இடமில்லை. அல்லது அவன் தன்னையும், தன் க்ருபா விலாஸத்தையும் ஸாதகனுக்கு நன்றாகத் தெரிவித்தாலுங்கூட, அப்போது இவர்கள், ‘அவன் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கொண்டு மேலே அழைத்துக்கொண்டு போகிறான். அவன் இப்படிப் பண்ணப் பண்ண அந்த அளவுக்கு நாம் புத்தி பூர்வமாக ஸாதனை பண்ணுவதும் போய்விடுகிறது; நம்மை மீறிய சக்தியே மேலே நம்மை ஏதோ பண்ணுவிக்கிறது’ என்றும் தெரிந்துகொண்டு விடுவார்கள்.

புத்தி பூர்வமாக ஸாதனை பண்ணுவதற்குத்தான் சாஸ்த்ரத்தில் வழி சொல்லிக்கொடுக்க முடியும். புத்தியை ஈச்வரன் கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு இவனைக் கருவி மாத்ரமாகக் கொண்டு பண்ணுவிக்க ஆரம்பித்தபின் சாஸ்த்ரம் எப்படி வழி சொல்லித்தர முடியும்? ஸாதகன் பண்ண வேண்டியதற்குத்தான் சாஸ்தரமே தவிர, ஈச்வரன் பண்ண வேண்டியதற்கு இல்லை. அதனாலேதான், “ஜீவன் புத்தி பூர்வமாக நிதித்யாஸனம் பண்ணும்வரை பண்ணட்டும். அப்புறம் அவனை ஈச்வரன் எடுத்துக்கொண்டு, தானே பண்ணவேண்டியதைப் பண்ண விட்டுவிடுவோம். அங்கே போய் நாம் ஒன்றும் ஒரு கோட்பாட்டையும் சொல்லிக்கொண்டு, ஜீவமனஸ் அதிலே போகும்படி இடம் பண்ணித்தர வேண்டாம். ஈச்வரனால் ‘ஓவர்பவர்’ செய்யப்படக்கூடியவனுக்கு நாம் எதுவும் சொல்லவேண்டாம். ‘நிதித்யாஸனம் பண்ணிக்கொண்டே போ; ஸித்தி தானே வந்துவிடும்’ என்று சொல்லி, விட்டு விட்டால் போதும்” என்று நினைத்து (அத்வைத) சாஸ்தரங்கைள் கொடுத்திருக்கிறார்கள். மாயைத் திரையை ஈச்வர க்ருபை கிழிக்கிறது என்று வ்யக்தமாகச் சொல்லாமல், நிதித்யாஸனத்தின் தீவ்ரத்திலேயே அது கிழிந்து விடுகிறது என்கிற மாதிரிச் சொல்லி, முடித்து விட்டிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அதிகாரிகளையட்டி உபதேச மாறுபாடு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆதிசங்கரரும் கூறும் ஈசனது ஞானக் கொடை
Next