மாயாசக்தியே ஞானமும் அளிப்பது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஈச்வரன் ஞான ஸ்வரூபி, அவனே ஞானம் தருபவன் என்கிற விஷயத்தைச் ‘சொல்லாமல் சொல்லும்’ ஸூக்ஷ்மமான முறையில் ஆசார்யாள் கேநோபநிஷத் பாஷ்யத்தில் வெளியிட்டிருப்பதாகத் தோன்றுகிறது. ‘யார் எது செய்தாலும் அது தன்னுடைய ஸொந்த சக்தியைக் கொண்டு அல்ல; ப்ரஹ்மத்தின் சக்தியைக் கொண்டுதான் எவரும் எதையும் செய்யமுடிவது’ என்று அம்பாள், இந்த்ரனுக்கு உபதேசித்ததாக அந்த உபநிஷத்திலே இருக்கிறது. மூலத்திலே அம்பாளை ‘ரொம்ப சோபையுள்ளவள், உமா என்றும் ஹைமவதி என்றும் பெயருள்ளவள்’ என்று தான் சொல்லியிருக்கிறது. ஆனால் ஆசார்யாளோ இதற்குப் பதம் பதமாகச் செய்த பாஷ்யம், வாக்யம் வாக்யமாகச் செய்த பாஷ்யம் ஆகிய இரண்டிலும் அம்பாளைத் திரும்பத் திரும்ப “வித்யா” என்று சொல்கிறார். “வித்யா” என்றால் ஞானம் என்றே அர்த்தம். ஞானம் என்றால் அத்வைதத்தில் ப்ரஹ்ம ஞானம்தான் – அதாவது ஜீவன் தன்னுடைய ஆத்மாவே ப்ரஹ்மம் என்று உணர்வதான அத்தைவ ஞானம்தான். உபநிஷத்தில் பலவிதமான உபாஸனைகளையும் வித்யா என்றே சொன்னாலும் அவற்றிலெல்லாம் அந்த உபாஸனையே ஸம்பந்தப்படுத்தி அதற்கு “இன்ன வித்யா” என்று அடைமொழி கொடுத்துப் பெயர் சொல்லியிருக்கும். இப்படியில்லாமல் வெறுமே வித்யா என்று மட்டும் சொன்னால் அது ப்ரஹ்ம வித்யாதான், அதாவது ஆத்மஞானம்தான். “சோபையுள்ளவற்றிலெல்லாம் பரம சோபையானது வித்யையே” என்று அம்பாளை வித்யாவாகச் சொல்கிற ஆசார்யாள் பாஷ்யம் பண்ணியிருப்பதால் அவர் அவளை ப்ரஹ்ம வித்யாஸ்வரூபிணியாகவே சொல்கிறார் என்று நிச்சயப்படுகிறது.

அவித்யா என்றால் அஞ்ஞானம். மாயையை ஆசார்யாள் அவித்யா என்றே சொல்வார். (அப்புறம் மாயைக்கும் அவித்யைக்கும் கொஞ்சம் வித்யாஸம் காட்டியும் ஒரு அபிப்ராயம் அத்வைதிகளுக்கிடையே எழுந்தது. அவர்கள் மாயை என்பது ஒன்றை இன்னொன்றாகக் காட்டும் ‘மாஜிக்’ மாதிரியான சக்தி என்றும், அவித்யா என்பது ஸத்யத்தைத் தெரிந்துகொள்ளாத அஞ்ஞான நிலை என்றும் ஒரு பாகுபாடு செய்கிறார்கள். ப்ரஹ்மம் மாயையோடு சேர்ந்துள்ளபோது ஈச்வரனாகிறது என்றும், அவித்யையில் கட்டுப்படும்போது ஜீவனாகிறது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். அது இருக்கட்டும்.) மாயா சக்தியோடு சேர்நது ப்ரஹ்மம் ஈச்வரனாயிருக்கிற போதும் அந்த ஈச்வரன் ஞான ஸ்வரூபியாகவே இருப்பதாக அத்வைதிகள் சொல்வதில் இன்னம் மேலேபோய் ஆசார்யாள் இங்கே அம்பாளை வித்யா என்றே சொல்கிறார். அம்பாளை ராஜ ராஜேச்வரியாக ஆராதனை செய்யும் உபாஸனைக்கே ஸ்ரீ வித்யை என்று பெயர் இருக்கிறது. அந்த ஆராதனையையும் ஆசார்யாள் யந்த்ர ப்ரதிஷ்டை, ‘ஸௌந்தர்யலஹரி’ ஸ்தோத்ரம் முதலியவற்றால் போஷித்திருக்கிறார். மாயையாகவே இருக்கிற அவளை மாயா நிவ்ருத்தியையே மோக்ஷமாகச் சொன்ன ஆசார்யாள் ஞானாம்பிகையான வித்யாவாகச் சொல்வதால் மாயையால் லோகத்தை நடத்தும் சக்திதான் அதிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது என்று அவர் காட்டுவது தெரிகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is குரு என்ற த்வைதம் இடறுவதில்லை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கர்ம பந்தம் ஈசனால்-ஞான ஸித்தியும் அவனாலேயே !
Next