ஸங்கடஹர சதுர்த்தி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

சந்த்ரனுக்கு இன்னொரு பெருமையும் கொடுத்தார் பிள்ளையார்.

ஸாதாரணமாக ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு குறிப்பிட்ட திதி விசேஷமானதாகும். அது வளர்பிறை, தேய்பிறை என்கிற இரண்டில் ஏதோ ஒன்றில் வருவதாகத் தானிருக்கும். முருகனுக்கு ஷஷ்டி என்றால் அது சுக்ல ஷஷ்டிதான், க்ருஷ்ண பக்ஷ ஷஷ்டியில்லை. பரமேச்வரனுக்குச் சதுர்தசி என்றால் அது க்ருஷ்ண பக்ஷ சதுர்தசிதான். அதற்கு மாஸ சிவராத்ரி என்று பெயர். ராமருக்கு நவமீ பூஜை என்றால் சுக்ல நவமிதான். க்ருஷ்ணருக்கு அஷ்டமி பஜனை என்றால் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமிதான். (கறுப்பன் க்ருஷ்ணன், வெள்ளை சிவன் இரண்டு பேருக்கும் க்ருஷ்ண பக்ஷம் தான்!) அம்பாளுக்குப் பௌர்ணமி – அது சுக்லபக்ஷத்தில் மட்டுந்தான் உண்டு. ஆனால் பிள்ளையாருக்கு மட்டும் சதுர்த்தி விசேஷமென்றால், சுக்லபக்ஷ சதுர்த்தி, க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி இரண்டுமே அந்த விசேஷத்துக்கு உரியனவாக இருக்கின்றன.

அவர் ஆவிர்பவித்தது சுக்ல சதுர்த்தியில்தான். அதனால் அவருக்கு ரொம்பப் பெரிய உத்ஸவமான பிள்ளையார் சதுர்த்தி சுக்ல பக்ஷத்தில்தானிருக்கிறது. அதே மாதிரி மாஸாமாஸமும் சுக்ல சதுர்த்தியில் வ்ரதம் இருப்பதுண்டு. அதோடுகூட ‘ஸங்கடஹர சதுர்த்தி வ்ரதம்’ என்றும் இன்னொன்று கேள்விப்பட்டிருக்கலாம். (‘ஸங்கடஹர‘ என்றால் ‘உபத்ரவங்களைப் போக்குகிற‘ என்று அர்த்தம். ஆனால் ‘ஹர’ என்ற இந்த முக்யமான வார்த்தையை விட்டுவிட்டு ‘ஸங்கட சதுர்த்தி’ என்றே சொல்கிறார்கள்!) இதுவும் விக்நேச்வரருக்கு (வேண்டுதலாக) இருக்கும் வ்ரதம்தான். இது சுக்ல சதுர்த்தியல்ல; க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தியேயாகும்.

இந்த ஸங்கட ஹர சதுர்த்தியைப் பிள்ளையாரேதான் ஏற்படுத்திக்கொண்டார். இது இந்த ஸமயத்தில்தான். தண்டனையை ரொம்பவும் குறைத்து, யாரும் சந்த்ரனை சுக்ல சதுர்த்தியில் பார்க்கப்படாது என்று சொன்னதுகூட அவருடைய கருணையுள்ளத்துக்குக் கஷ்டமாயிருந்தது. அதனால், அதைக் ‘காம்பன்ஸேட்’ செய்கிறதாக, க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தியில் அவனை எல்லோரும் கொஞ்சம் பஹுமானிக்கும்படிப் பண்ண வேண்டுமென்று நினைத்துச் சொன்னார். “க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தியில் வ்ரதமிருந்து எனக்குப் பூஜை பண்ணினால் நான் விசேஷமாக ப்ரீதியடைந்து எல்லா ஸங்கடங்களையும் போக்கடிப்பேன். இந்தப் பூஜை முடியும் போது ரோஹிணீ ஸமேதனான சந்த்ரனையும் பூஜை பண்ண வேண்டும்” என்றார்.

சந்த்ரன் ரோஹிணியிடம் மட்டும் அதீத ப்ரியம் வைத்திருந்ததைக்கூட மன்னிக்கிற அளவுக்குப் பிள்ளையாரின் அருள் உள்ளம் இளகியிருந்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'பால சந்த்ரன்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கண்ணனும் சந்த்ரனும்
Next