ஆறு ச்லோகத் துதி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஜாதிச் சந்தஸ்களைக் கொண்டுதான் ‘ஷட்பதீ’யை ஆசார்யாள் செய்திருக்கிறார். அத்வைதி! ஆனால், அவர் காட்டாத variety (வேறுபாட்டு விசித்ரம்) இல்லை! இந்த ஸ்திதியிலுள்ள எல்லா ச்லோகங்களுமே ஆர்யா வ்ருத்தத்தில் அமைந்தவை. அவை ஒவ்வொன்றிலும் முதல் வரிக்கும் மூன்றாம் வரிக்கும் 12 மாத்திரைகள்; இரண்டாம் வரிக்கு 18 மாத்திரை; நாலாம் வரிக்கு 15 மாத்திரை. பாதம் பாதமாகக் கணக்குப் பண்ணிப் பார்த்தீர்களானால் பொழுது போக்காக இருக்கும்! உயிரெழுத்துக்களைக் கொண்டு எண்ணாமல் லகு, குரு மாத்திரை பார்த்து எண்ணினால்தான் இந்த ச்லோகங்களில் விதிப்படி ஏற்பட்ட ஒரு pattern(க்ரமம்) இருப்பதாகத் தெரியும். இல்லாவிட்டால் சீர் ஸரியில்லை என்று தோன்றிவிடும். ஆனாலும் ஆசார்யாளின் வாக் விசேஷம், ‘வ்ருத்த’ங்களுக்கே அதிகம் பழகி ‘ஜாதி’கைளப் புரிந்துகொள்ள முடியாத நமக்கும்கூட, இந்த ஷட்பதீ ச்லோகங்களை நாம் சொல்கிறபோதே அவற்றில் சீரில்லை என்கிற மாதிரி கொஞ்சம்கூடத் தோன்றாது. வார்த்தைகளும், சப்தங்களும் ஒன்றுக்கொன்று ரொம்பவும் இசைந்து, இந்த இரண்டும் அர்த்தத்தோடேயே இசைந்து செல்வதான அழகான போக்கிலேயே இந்த ஸ்தோத்ரம் அமைந்திருக்கிறது. குழந்தைகூட நினைவு வைத்துக்கொள்ளும்படியாக அவ்வளவு ஸுலபமாக இருக்கிறது.

பலச்ருதி மாதிரி இருக்கிற கடைசி ச்லோகத்தை விட்டு விட்டால் இதிலே ஆறு ச்லோகங்கள் இருக்கின்றன. (பலச்ருதியும் மேலே சொன்ன அதே மீட்டரில் இருப்பதுதான்.)

பலச்ருதி ‘மாதிரி’தான்; அசல் பலச்ருதி இல்லை. அசல் பலச்ருதி என்றால், ‘இந்த ச்லோகத்தைச் சொல்பவருக்கு இன்னின்ன பலன்கள் உண்டாகும்’ என்று உடைத்து வ்யக்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். இங்கே கடைசி ச்லோகத்தில் அப்படிச் சொல்லவில்லை. அதைப்பற்றிப் பிறகு சொல்கிறேன். கடைசி ச்லோகத்தைக் கடைசியில் தானே சொல்லவேண்டும்? முதல் ச்லோகத்திலிருந்து வரிசையாகச் சொல்லிக்கொண்டு போகிறேன். முதல் ச்லோகத்தை ஆரம்பிக்குமுன் இப்போது டைட்டில் ‘ஷட்பதீ’ என்பது என்ன என்று சொல்ல ஆரம்பித்தேன்.

இதிலே ஆறு ச்லோகங்கள், பலச்ருதி நீங்கலாக உள்ளன.

அதனால் ‘ஷட்-பதீ’, அதாவது, ‘ஆறு பதங்கள் கொண்ட நூல்’ என்று ஆசார்யாள் டைட்டில் கொடுக்கிற போது, ‘பதம்’ என்றால் ச்லோகத்தின் ஒரு பாகம் என்று அர்த்தம் கொடுக்காமல், ஒரு முழு ச்லோகத்தையே ‘பதம்’ என்று குறிப்பிடுவதாகத் தெரிகிறது. ‘பதம்’ என்ற வார்த்தை பல அர்த்தத்தில் ப்ரயோகமாகிறது. வேதத்தில் ‘பதம்’, ‘க்ரமம்’ என்று சொல்லிக்கொண்டே போய் ‘கனம்’ என்பதில் முடிப்பார்கள். மந்த்ர அக்ஷரங்களைப் பல தினுஸில் மாற்றி மாற்றிக் கோத்து வாங்கிச் சொல்வதுதான் ‘பதம்’, ‘க்ரமம்’, ‘கனம்’ எல்லாம். கனம் வரைக்கும் தேர்ச்சி பெற்றவரைத்தான் ‘கனபாடி’ என்பது. இங்கே ‘பதம்’ என்றால் வார்த்தை வார்த்தையாகப் பிரித்துச் சொல்வது.

காற்பகுதியை மட்டுமின்றி முழு ச்லோகத்தையே ‘பதம்’ என்று குறிப்பிடும் வழக்கமும் உண்டு. ஜயதேவரின் ‘கீத கோவிந்த’த்தை ‘அஷ்டபதி’கள் என்கிறோமே, இங்கே பதம் என்றால் ஒரு முழு செய்யுள் – stanza என்றே ஆகிறது. தமிழில்கூட ஒரு பதிகத்தையோ பாசுரத்தையோ குறிப்பிட்டு ‘அதில் எத்தனை செய்யுள் இருக்கிறது?’ என்று கேட்பதற்குப் பதில், ‘எத்தனை அடி இருக்கிறது?’ என்று கேட்கிறோம். இங்கே ‘அடி’ என்றால் செய்யுளின் ஒரு பாகம் என்று அர்த்தமாகாமல் முழு செய்யுள் என்றே ஆகிறது. இப்படியேதான் ஒரு கீர்த்தனம் என்று எடுத்துக்கொண்டாலும், நாலைந்து சரணம் இருந்தால் ‘எத்தனை அடிகள்?’ என்றே கேட்கிறோம். இதிலே இன்னொரு வேடிக்கை கூட! ச்லோகமாக இருந்தால், ‘பதம்’, ‘பாதம்’ என்கிறோம். பாட்டாக, கீர்த்தனமாக இருந்தால் ‘சரணம்’ என்கிறோம். ‘பாதம்’ என்பது போலவே ‘சரணம்’ என்றாலும் கால்தான் ‘அடி’ என்பதும் காலைக் குறிப்பதுதானே?

அடிமேல் அடிவைத்து முன்னே போவதை ‘பதேபதே’ என்று சொல்வார்கள்; step by step என்று அர்த்தம். இப்படியே பக்தியில் அடிமேல் அடிவைத்து ஒவ்வொரு ச்லோகத்தின் வழியாக முன்னேற வழி சொல்கிறதாலும் இது ‘ஷட் – பதீ’ என்று வைத்துக்கொள்ளலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is இருவகைச் சந்தங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சிலேடை மர்மம்
Next