எதற்கு வேண்டுவது? : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பகவானை எதற்காக ப்ரார்த்தனை பண்ணவேண்டும் என்பதில் அபிப்ராய பேதங்கள் உண்டு.

இந்த லோக வாழ்க்கையில் நமக்கு எண்ணி முடியாத கஷ்டங்கள், ச்ரமங்கள், க்லேசங்கள், துக்கங்கள் ஏற்படுகின்றன. சரீரக் கஷ்டம், மன சஞ்சலம், பண முடை, பயம், அவமானம் இப்படியாகக் கணக்கேயில்லாமல் அவதிப்படுகிறோம். இவை தீருவதற்கு வேறு வேறு வழிகளைத் தேடுகிறோம். உடம்பு ஸரியில்லை என்றால் டாக்டரிடம் போகிறோம். பணக் கஷ்டம் என்றால் கடன் கொடுக்கக் கூடியவர்களிடம் போகிறோம். ஆவிகள் சேஷ்டை என்றால் மாந்த்ரிகரிடம் போகிறோம். பலவிதமான ப்ரச்னைகள் தீர ராஜாங்க அதிகாரிகளிடம் போகிறோம். இப்படிப் பல பேரிடம் போனாலும், இந்தக் கஷ்டங்கள் தீர பகவானையும் ப்ரார்த்தனை பண்ணிக்கொள்கிறாம். நாம் கஷ்டம் தீர யாரைத் தேடிப் போகிறோமோ அவர்கள் நமக்கு அநுகூலமாக இருப்பதற்கு பகவானை ப்ரார்த்திக்கிறோம். டாக்டர் மருந்துதான் கொடுப்பார். அது நமக்குப் பலிக்க வேண்டுமே! இதற்காக பகவானை வேண்டிக்கொள்கிறோம். ஒருத்தர் ஸஹாயம் செய்வார் என்று அவரிடம் போகிறோம். ஆனால் போகிற வழியிலேயே நமக்கு ஒரு விபத்து வந்துவிட்டால் என்ன பண்ணுவது? இதற்காக ப்ரார்த்தனை பண்ணுகிறோம்.

இந்த மாதிரியெல்லாம் ப்ரார்த்தனை பண்ணுவது தப்பு என்று சிலபேருக்கு அபிப்ராயம். ‘நம் கர்மாவுக்காகத்தான் கஷ்டம் வருகிறது. பகவானேதான் இந்தக் கஷ்டங்களைக் கொடுத்துத் தண்டித்து, கர்மாவைத் தீர்க்கிறான். அதனால் இந்த மாதிரி லௌகிக விஷயங்களுக்கு ப்ரார்த்தனை பண்ணவே கூடாது. பகவானுக்கே நமக்கு எதை எப்போது, எப்படித் தரவேண்டும் என்று தெரியும். அதனால் அவனை எதுவும் ப்ரார்த்திக்கவே கூடாது. அவனை ஸ்மரித்தால் அது ஆனந்தமாக இருக்கிறதல்லவா? இந்த ஆனந்தம் ஒன்றுக்காக மட்டுமே ஸ்மரிக்க வேண்டும். பக்தி பண்ணுவதற்குப் பலன் பக்தியில் கிடைக்கிற மன நிறைவேதான். இந்தப் பெரிய நிறைவை விட்டுவிட்டு, பக்தியைச் சின்னச் சின்ன தற்காலிக நிறைவுகளுக்கு ஒரு உபாயமாக வைத்துக்கொள்வது ரொம்பவும் தப்பு. ஆகையால், அது வேண்டும், இது வேண்டும் என்று வேண்டவே கூடாது. எதற்காகவாவது ப்ரார்த்தனை பண்ணலாமானால் அது நம்முடைய ஆத்ம பரிசுத்தி ஒன்றுக்காகத்தான்’ என்று இப்படிச் சிலர் அபிப்ராயப்படுகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சிலேடை மர்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பகவானின் கருத்து
Next