மாறு வேஷம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தாரா நகரம் என்பதுதான் அந்த ஊர். தற்போது Dhar என்று வழங்குகிறது. மத்யப்ரதேஷில் இருக்கும் ஊர். விக்ரமாதித்யனின் தலைநகரமாக வித்வத் ஸமூஹமும் கவி ஸமூஹமும் உன்னத ஸ்திதியிலிருந்து உஜ்ஜயினிக்குத் தெற்கில் நாற்பது ஐம்பது மைலுக்குள் “தார்” இருக்கிறது.

போஜ ராஜ்யத்தை விட்டு எங்கே ஓடினாலும் காளிதாஸனை லோகம் அடையாளம் கண்டு கொண்டாட ஆரம்பித்துவிடும். அப்படிக் கொண்டாட வேண்டாம் என்றே காளிதாஸனுக்கு இருந்தது. ப்ராண ஸகாவாக இருந்த போஜன் தன்னைத் திரஸ்காரம் பண்ணின விட்டு லோகத்தில் வேறு யாரும் தன்னை ஆதரிக்க வேண்டியதில்லை; அப்படி ஆவதற்குத் தான் விட்டால் அது அவனிடம் தனக்குள் உத்தமமான ஸ்நேஹத்துக்கே த்ரோஹம் செய்கிற மாதிரி என்று காளிதாஸன் நினைத்தான். அத்தனை உசந்த எண்ணம் அவனுக்கு இருந்தது. அதனால் ஊரைவிட்டு ஓடின அப்புறம், தான் காளிதாஸன் என்றே தெரியாமல் ஏதாவது மாறுவேஷம் போட்டுக்கொண்டு சுற்றுவது என்று முடிவு பண்ணினான். என்றைக்காவது ஒரு நல்ல காலம் பிறந்து மறுபடியும் தான் போஜனோடு சேரும்படியாக இருக்கலாமென்பதற்காக, இப்படி மாறுவேஷத்தில் உயிரை வைத்துக்கொண்டிருக்கலாமென்று நினைத்தான்.

என் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டான். என்று கதை! அதாவது, பைத்தியக்கார சாமியார் மாதிரி வேஷம் போட்டுக்கொண்டானாம்!

அவன் ஊரை விட்டுப் போன கொஞ்ச நாளுக்கு அப்புறம், போஜராஜாவினால் அவனில்லாமல் தாங்க முடியவில்லை. அதனால் அவன் குடுகுடுப்பாண்டி வேஷம் போட்டுக் கொண்டு காளிதாஸனைத் தேடிக்கொண்டு புறப்பட்டான். விநோதமான ஒரு விதத்தில் அவனைக் கண்டுபிடித்தான் என்று கதை*.

நான் சொல்ல வந்தது, ஒருத்தன் ராஜா என்பதற்காகக் கூட அவன் சொல்வதற்கெல்லாம் ஸலாம் போடுவது என்றில்லாமல் தங்கள் தன்மானப்படி மனஸ்ஸாக்ஷியை காப்பாறிக் கொண்டவர்களாக அநேக கவிகள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் காளிதாஸனும் ஒருவன் என்பதுதான்.


*இந்த ‘விநோதமான கதை’ ஸ்ரீசரணர்கள் பிறிதொரு ஸமயத்தில் விரித்துரைத்தபடி நம் நூற்பகுதிகளிலொன்றில் வெளியாகலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is காளிதாஸன் மறுப்பும் அதன் சிறப்பும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மரபுவழிக் கதைகளும் ஆராய்ச்சியும்
Next