குலம், சாகை, சாத்ரன், சரணம் முதலியன : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“குலம், கோத்ரம் பார்க்கணும்” என்ற ஒரு வாக்யம் நம்மிடையே அடிபடுகிறது. (இந்தக் கொள்கையையே அடித்துப் போட்டுவிட வேண்டுமென்பதுதான் நம்முடைய நவீன நாகரிகக்காரர்களின்அபிப்ராயம்.) ஒரே ரிஷியின் வம்சத்தினுடைய பல கிளைப் பரம்பரைகளைச் சேர்ந்த எல்லோரும் ஒரு ‘கோத்ரம்’. ‘குலம்’ என்றால் இப்படி ஒரே கோத்ரமாக இருக்கிறவர்களில் கிட்டின உறவாக ஒன்று சேர்ந்திருக்கிறவர்கள். இந்தக் ‘குல’த்தில்தான் ஆதிகால ஸ்கூல் ஏற்பட்டதாக நான் சொன்னது. அப்போது ‘குருகுலம்’ என்ற பெயரைவிட ‘ரிஷிகுலம்’ என்ற பெயரிலேயே அது அதிகம் பேசப்பட்டது. குரு – சிஷ்யன் என்கிற போது ரக்தபாந்தவ்யம் (ரத்த உறவு) அதில் தெரியாமல், உறவுக்காரராக இல்லாத இருவர்களில் ஒருவர் சொல்லிக்கொடுப்பதாகவும், இன்னொருவர் கற்றுக் கொள்வதாகவுந்தான் தோன்றுகிறது. ஆரம்பகால ஸ்கூலோ ரக்தபாந்தவ்யமுள்ளவர்களிடையே அமைந்த ஒன்றாக இருந்தது. ஆதியில் பிதாதான் குரு என்று சொன்னேனல்லவா? தங்கள் மூதாதையான ஒரு ரிஷி கண்டுபிடித்த – அல்லது கண்டு கொண்ட ஒரு வித்யையைத் தங்களுக்குள் அவர்கள் பரப்பிக் கொண்டதால் அது ரிஷிகுலம் என்று பேர் பெற்றது.

அப்புறம் இப்படி அநேக ரிஷிகள் கண்டு கொண்ட வித்யைகளையும் மந்த்ரங்களையும் ரிஷிகுலங்கள் பல ஒன்றொடொன்று தொடர்பு கொண்டு பரஸ்பரம் பரிமாறிக்கொள்ளும் காலம் வந்தது. இப்படிக் கூட்டுச் சேர்ந்த அநேக குல கோத்ரர்கள் ஒரே விதமான ஆசரணைகளை மேற்கொண்டனர். அங்கங்கேயும் இப்படி வேறு வேறாகப் பல வேறு ரிஷிகளுடைய மந்த்ரங்களை ஒன்றாகத் திரட்டி ஒவ்வொரு பிரிவினர் அதை அத்யயனம் செய்வதாக ஏற்பட்டது. இப்படிக் கொஞ்சம் கொஞ்சம் வித்யாஸத்துடன் ஒரே வேதத்தில் ஏற்பட்ட பிரிவுகளைத்தான் சாகை (கிளை) என்பது. சரித்ர ரீதியாக வித்யாசாலை என்பது வளர்ச்சி கண்டதைப் பார்க்கும்போது, ரிஷிகுலங்களுக்கு அப்புறம் வருவது ஒவ்வொரு சாகையைச் சொல்லிக் கொடுத்த குருகுலங்களேயாகும். இங்கே ரக்த பந்துக்களிடமிருந்து கல்வி ப்ரசாரம் விரிவடைந்து, ஒரே வேதப் பிரிவைச் சேர்ந்த, ஒரே ஆசரணைகளைக் கொண்ட எல்லாரிடமும் பரவலாயிற்று. அப்புறந்தான் ஒரு வேதத்தின் ஒரு சாகை மாத்திரமில்லாமல் பல வேதங்கள், மற்றும் பல வித்யைகள் ஆகியவற்றையும் கற்றுக்கொடுப்பதாக குருகுலம் விரிவு பெற்றது.

மாணவன், வித்யார்த்தி, சிஷ்யன் என்றெல்லாம் நாம் சொல்லும் பையனுக்கு ‘சாத்ரன்’ என்று அக்காலத்தில் பேர் இருந்திருப்பதாகப் பாணினியின் வ்யாகரணத்திலிருந்து தெரிகிறது. ‘சத்ரம்’ என்றால் ‘குடை’ என்று தெரிந்திருக்கலாம். ஒரு குடை ஒருத்தன் தலைக்கு மேலே கவிந்துகொண்டு அவனை வெயில், மழைகளிலிருந்து காப்பாற்றுகிற மாதிரி, குரு என்பவரால் நன்றாக அரவணைக்கப்பட்டுக் கெடுதல்களிலிருந்து காப்பாற்றப்படுவதாலேயே சிஷ்யனுக்கு ‘சாத்ரன்’ என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து குருவுடைய உத்தமமான குணமும் அவருடைய அன்புப் பணியும் தெரிகின்றன. அதாவது கல்வி என்பது அறிவு ஸம்பந்தப்பட்டதாக மட்டும் இன்றைக்குப் போலில்லாமல், நல்ல குணத்தின் ஸம்பந்தமுள்ளதாகவும் இருந்தது என்பதறகாகச் சொல்கிறேன்.

வித்யாசாலைக்கு அப்போது சரணம் என்றே பேர் இருந்ததாகவும் பாணினீயத்திலிருந்து தெரிகிறது*. ‘சரணம்’ என்றால் கால். பாதம், பதம் என்று காலைச் சொல்கிறோம். ‘பரமபதம்’ என்று மிகவும் உயர்ந்த ஸ்தானத்தைச் சொல்லும்போதும் ‘பதம்’ என்ற வார்த்தை வருகிறது. கால் நம் உடம்பைத் தாங்கி நிற்கச் செய்வதுபோல, நம் உயிரைத் தாங்கி நிலைத்து நிற்கும்படி செய்யும் பெரிய ‘ஸப்போர்ட்’ தான் பதம். ‘சரணம்’ என்று இதே அர்த்தத்தில்தான் குருகுலத்துக்குப் பெயர் கொடுத்திருக்கிறது.

அத்யாபகர் என்று பொதுவாகச் சொல்லப்பட்ட டீச்சர் வேத அத்தயயன – அத்யாபனங்களில், அதாவது வேத text -களைச் சொல்வதிலும் சொல்லிக் கொடுப்பதிலும் ‘கனம்’ என்னும் முடிவு வரை போனவராக இருந்தால் அவரை “ச்ரோத்ரியர்” என்பதாகவும்; இப்படி மூலநூலான text – இல் தேர்ச்சி பெற்றிருப்பது மட்டுமில்லாமல் அதன் அர்த்தங்கள், தாத்பர்யங்கள் ஆகியவற்றை நன்றாக விளக்ககிக் கூறவும் வல்லவராயிருந்தால் ‘ப்ரவக்தா’ என்பதாகவும் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. ‘ப்ரவசனம்’ பண்ணுபவர் யாரோ அவர் ‘ப்ரவக்தா’

கொஞ்ச காலத்துக்குப் பிற்பாடு முதலிலே சொன்ன ஆசார்யர், உபாத்யாயர் என்ற இரண்டு விதமான டீச்சர்கள் உண்டானார்கள்.

ஒரே குருகுலத்தில் படிப்பவர்களை “ஸப்ரஹ்மசாரிகள்” என்றும் “ஸதீர்த்யர்கள்” என்றும் பாணினி சொல்லியிருக்கிறார். இதே பேர்கள் பிற்காலத்திலும் நீடித்தன. இங்கிலீஷில் class – mates என்கிறோம். வடக்கே “குருபாயிக்கள்” என்கிறார்கள்.


*வேதத்தில் மூலமான மந்த்ரங்களைச் சொல்வதான பாகத்துக்கு ஸம்ஹிதை என்றும், அந்த மந்த்ரங்களைக் கொண்டு எப்படி வைதிக கர்மாக்கள் செய்வது என்று விவரிக்கும் பாகத்துக்கு ப்ராஹ்மணம் என்றும் பெயர். ஸம்ஹிதா பாகங்களில் உள்ள ஒவ்வொரு பிரிவுக்கும், அதைக் கற்பித்த வித்யாசாலைக்கும் ‘சாகை’ எனப்பெயர் என்றும், இதேபோல் ப்ராஹ்மணத்தில் உள்ளவற்றுக்கு ‘சரணம்’ எனப்பெயர் என்றும் சிலர்ச் சொல்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is எழுத்தில்லாத போதனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  குருதக்ஷினை
Next