மஹாகாலேஸ்வரர் - உஜ்ஜயினி, மத்தியப்ரதேசம் அகாலத்தில் மரணமடைவதிலிருந்து மக்களைக் காப்பாற்ற சிவபெருமான் உஜ்ஜயினியில் மஹாகாளேஸ்வரராக வீற்றுள்ளார்

மஹாகாலேஸ்வரர் - உஜ்ஜயினி, மத்தியப்ரதேசம்

அகாலத்தில் மரணமடைவதிலிருந்து மக்களைக் காப்பாற்ற சிவபெருமான் உஜ்ஜயினியில் மஹாகாளேஸ்வரராக வீற்றுள்ளார். ஏழுமோக்ஷபுரிகளில் ஒன்று உஜ்ஜயினி. மஹாபாரதத்தில் இதனை "அவந்திகா"என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மௌர்யர்களில் சிறந்தவனாகிய விக்ரமாதித்யனுக்கும் பிற்காலத்தில் ஹோலகர் அரசர்கட்கும் உஜ்ஜயினி தலைநகரமாக விளங்கியது. விக்ரமாதித்யன் காலத்தில் சிறந்து விளங்கிய புலவர் காளிதாசன் இங்கு வசித்து தனது அழிவற்ற இலக்கியங்களை உலகினுக்கு அளித்தார். உஜ்ஜயினியின் பெருமையை சீன யாத்ரிகனாகிய ஹ்வான்-ஸ்வாங் மிகவும் சிலாகித்து கூறியுள்ளார்.

சிம்மராசியில் குருவும், மேஷராசியில் சூரியனும், துலாராசியில் சந்திரனும் பிரவேசிக்கும் போது ஏற்படும் கும்பமேளா நிகழும் நான்கு இடங்களில் உஜ்ஜயினும் ஒன்று. பன்னிரெண்டு ஜ்யோதிர்லிங்க ஸ்தலங்களிலும் ஒன்று.