அறவழி வாசகம்
சொல் விளக்கம்
1. அகத்தியர்: தென்னாட்டில் (பாண்டியநாட்டில்) பொதிகை மலையில் தங்கியிருந்து தமிழ் வளர்த்த பெருமையுடைய முனிவர். இவரியற்றிய நூல் அகத்தியம்.
2. இயற்பகை: சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் ஒருவர்.
3. உலகளந்தார்: திருமால் உலகை அளந்த திருக்கோலம்
4. உபமன்யு: கைலைமலையில் வாழ்ந்திருந்த ஒரு முனிவர். இறைவன் அருளால் பாற்கடலைப் பெற்றவர். சைவ சமய நாயனாரான சுந்தரமூர்த்தி நாயனாரின் (ஆலசுந்தரரின்) வரலாற்றை முனிவர்கட்கு எடுத்துக் கூறியவர்.
5. எறிபத்தர்: சைவ சமய நாயன்மார்களில் இவரும் ஒருவர். சிவனடியார்க்கு வரும் துன்பங்களைப் போக்க கையில் மழு ஆயுதத்தோடு விளங்கியவர்.
6. ஏகம்பர்: காஞ்சியில் உள்ள இறைவன் ஏகாம்பரநாதா. மாவடியில் எழுந்தருளியிருப்பவர். உமாதேவி பூஜை செய்த காலத்து, கம்பை ஆற்றில் வெள்ளம் வர அஞ்சி, இறைவனை (மணல் லிங்க வடிவில் இருந்த ஏகாம்பரர் திருவுருவை) தழுவித் காத்த கோலம்.
7. ஏனாதிநாதர்: சைவ நாயன்மார்களுள் இவரும் ஒருவர். வாள் வித்தை கற்றுக்கொடுக்கும் தொழிலை மேற்கொண்டு வாழ்ந்தவர்.
8. ஏகலைவன்: ஒரு வேடன், துரோணர் சிலையைத் தன் எதிரில் அமைத்து அவரையே நினைத்து வில் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவன். சிறந்த வில்லாற்றல் பெற்றவன்.
9. ஐயனார்: சாஸ்தா, ஐயப்பன் என்னும் பெயர்களுடைய தெய்வம்.
10. ஐராவதம்: இந்திரனின் வாகனம் - வெள்ளை யானை.
11. ஒட்டக்கூத்தர்: சிறந்த தமிழ்ப் புலவர் - கோவை, உலா, அந்தாதி போன்ற பிரபந்த வகைகளைப் பாடுவதில் வல்லவர். கம்பர், புகழேந்திப் புலவர் ஆகியோர் காலத்தவர்.
12. பட்டினத்தார்: சிறந்த துறவி.
13. மதுரகவி: பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களுள் ஒருவர்.
14. மங்கையர்க்கரசி: பாண்டியநாட்டை ஆண்ட கூன் பாண்டியனின் மனைவி. திருஞானசம்பந்தரை மதுரைக்கு வருமாறு செய்து அங்குச் சைவம் தழைக்கப் பெரும்பணி செய்த அம்மையார். பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க மூல காரணமாக இருந்த அம்மையார் இவரே.
15. மகாபலி: ஒர் அரசன். திருமால் வாமன அவதாரம் எடுத்து வந்து 3 அடி நிலம் கேட்டுப் பின் விசுவரூபம் எடுத்து உலகையும் விண்ணையும் ஈரடியால் அளந்து மூன்றாவது அடிக்கு இடம் கேட்டு அவன் தலையில் தன் காலை வைத்து அழுத்தி அவனையடக்கினார். இப் பெயரை மக்கள் வழக்கில் மாவலி என்று அழைப்பர்.
16. ஜனகர்: மிதிலையை ஆண்ட மன்னன் சிறந்த தவ வலிமை பெற்றவர். சீதா தேவியின் தந்தை.