காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -1
ந மது தர்மம் ஸனாதன தர்மம். இது வைதீக தர்மம்.''ஜந்துனாம் நர ஜன்மம் துர்லபம்''என்று ஒரு வழக்கு உள்ளது. மனிதனாக பிறக்கும் போது நாம் பெற்ற ஒரு அதிர்ஷ்டம். மனிதனுக்கும் மிருகங்களுக்கும் உள்ள வித்தியாசம் விவேக சக்தி ஒன்றே. விவேகம் என்றால் இது நல்லது, இது கெட்டது என பகுத்துப் பார்ப்பதே. மனிதனுக்கும் விவேகம் வேண்டும். அதனை வளர்ப்பது வித்யை. இது இரண்டு வகை. ஒன்று பௌதிகம். மற்றது அத்யாத்மகம். எதனை எப்படி செய்வது என்பது பௌதிக வித்யை. மனதிற்கு ஏற்படும் கஷ்டங்களைப் போக்குவது அத்யாத்ம வித்யை இதனை நமக்குக் காட்டுவது மதம். மனதிற்கு மதம் அவசியம். கஷ்டமில்லாமல் இருப்பதற்கு புத்தி தேவை. தயையுடன் கூடிய மனம் இருப்பதற்கு ஆரோக்யமான சரீரம் தேவை. இவையாவும் சேர்ந்திருக்க வேண்டுமெனில் மதம் தேவை.
எத்த்னையோ மதங்கள் இருந்தும் உற்பத்திக் காலம் தொட்டு வருவது நமது ஸனாதன தர்மம். நமது தேசம் போக பூமி. சாத்வீக பூமி. பரோபகாரம் செய்த பூமி. ஞான பூமி. பூமியினை பூமியாகப் பார்க்காமல் பூமா தேவியாகப் பார்க்கிறோம். நாம் செய்யும் தீமைகளை பொறுத்துக் கொள்ள பூமியினைப் பிரார்த்திக்கிறோம். ஸப்தகிரி ஒரு யக்ஞ பூமி. காஞ்சிபுரத்திற்கும் திருப்பதிக்கும் ஸம்பந்தம் உண்டு. துண்டீர மண்டலம் என்று அங்க, வங்க, கலிங்க, ஸெளராஷ்டிர போன்ற ஒரு நாடு. அதன் வடக்கு எல்லை ஸ்வாமி புஷ்கரணி தீர்த்தம்.
தர்மத்தைப் பின்பற்றினால் நல்ல மனமும் புத்தியும் தேக ஆரோக்யமும் கிட்டும். சாத்வீகமான சிந்தனையும், பக்தியும் தேவை. கௌரவம் என்று ஒன்று உண்டு. ஏதோ உடையினில் தான் கௌரவம் எனக் கொள்ளக் கூடாது. நமது பலமே ஆத்ம பலம் தான். ஆயுத பலம் அல்ல. வார்த்தையில், சிந்தனையில், செயலில் கௌரவமான நடைமுறை தேவை.
பால் பரண்டன் (Paul Brunton) என்ற வெளிநாட்டுக்காரர் பரமாச்சார்யர்களை வந்து சந்தித்தார். ஆயுதங்கள் அதிகமாக இருப்பதால் தான் யுத்தம் என அவர் சொன்னதற்கு ஆயுதம் தான் யுத்தத்திற்கு காரணம் அல்ல. மன சுத்தி இல்லாதது தான் காரணம் என்று பெரியவர்கள் சொன்னார்கள். மனமேவ மனுஷ்யாணாம் காரணம் பத்த ஹேதவே பயம் தேவை இல்லை. சந்தேகம் அவசியம் இல்லை. கர்வம் கூடாது. விஸ்வாசம் ஒன்று தான் தேவை. துஷ்ட சக வாசம் இல்லாமல் முன்னோர்கள் சதாசாரத்துடன் இருந்தால் யாவும் நன்றாக இருந்தது. சத்யம், தயை, கருணை, ஆடம்பரமின்மை, ஆகிய யாவும் உள்ளது தெய்வீக ஸம்பத்து. இதனால் ஞானமும் சாந்தியும் கிட்டும். இது கடையில் கிட்டுவது இல்லை. சாந்தமு லேக ஸெளக்யமு லேது என தியாகராஜர் பாடியுள்ளார். கர்வம் இல்லாமல் ஒரு சிறு வயது அரசன் இருந்தான் என ரகுவம்சத்தில் காளிதாஸர் சொன்னார். அழகு, வயது, அதிகாரம் இது மூன்றும் ஒரு சேர இருந்தும் கர்வம் இல்லாமல் இருந்தான் என்பதே இதன் கருத்து. வயோ ரூப விபூதினாம் ஏகேகம் மதகாரணம் ஸுதர்சனன் என்ற அரசன். அவனுக்கு ஆறு வயது. அவனை யாவரும் மஹாராஜா என்றனர். அப்போது அவன் எழுத்துக்களை படித்துக் கொண்டிருந்தான். வயது சின்னதாக இருந்தாலும் சக்தி அதிகமாக இருந்தது. வெள்ளியன்று ஸ்வாமி தரிசனம் செய்த போது ஸ்வாமியின் நகைகளை காட்டினார்கள். அதில் சின்னதாக ஒன்றினை காட்டினார்கள்.
அதற்கு பெயர் மஹா நீலம். அதுபோல சின்னவனாக இருந்தாலும் மஹாராஜா என்றார்கள். ந கேவலம் கண்டதி காலே விருத்தி என்பது சின்னது பெரிதாக உள்ளது. சரீரத்தினால் மட்டும் வளராமல் உலகத்திற்கு நன்மை செய்யக்கூடிய குணங்களும் வளர்ந்தது என்று சொன்னார்கள். நல்ல குணங்கள் வளர்ந்தால் தான் மனிதன் இல்லை எனில் மனிதன் அல்ல. கர்வம் இன்றி விவேகத்துடன் கூடிய குணங்கள் தான் மனிதனுக்குத் தேவை. தியாகம் செய்துதான் ஒன்றினைப் பெற முடியும். கெட்டதை தியாகம் செய்தால் நல்லது கிட்டும்.
நாரதர் என்றால் கலகம் என்றும், துர்வாஸர் என்றால் கோபம் என்றும் சொல்கிறோம். ஆனால் நாரதர் தான் பக்தியினைப் பரப்பினார். நாரத பக்தி ஸீதரம் என்று எழுதினார். தியாகராஜருக்கு உபதேசம் செய்தார். போதேந்திரர், ஸமர்த்த ராமதாஸ், பத்ராஜல ராமதாஸ், அன்னமாச்சார்யார் போன்றவர்கள் போற்றி வழிபட்ட பத்ததி இந்த பஜனை. எங்கெல்லாம் பஜனை இருக்கிறதோ அங்கெல்லாம் சூழ்நிலை நன்றாக இருக்கும். பஜனை ஏற்பட்டால் பக்தி அதிகரிக்கும். அடுத்தவர்கள் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும். நம்முடைய நன்மை பிறத்தியாரை பாதிக்கக் கூடாது. தனக்காகவும், உலகத்தாருக்காகவும் பிரார்த்தனை செய்து வாழ்வதுதான் நமக்கு அழியாத செல்வம் என்பதை மனதில் கொண்டு யாவரும் விளங்க ஆசீர்வதிக்கிறோம்.
(26, 27-01-96 தேதிகளில் திருமலையில் பல பீடாதிபதிகள் கலந்து கொண்ட மாநாட்டில் பால பெரியவர்கள் 27-01-96 அன்று மாலை நிகழ்த்திய தெலுங்கு சொற்பொழிவின் சுருக்கம்)
கலந்து கொண்டவர்கள் :
1. காஞ்சி காமகோடி பீடாதிபதிகள்
2. அஹோபில மட பிரதிநிதி ஸ்ரீமான் தேவநாதன்
3. பேரூர் சாந்தலிங்க ஸ்வாமிகள்
4. ஸ்ரீ குத்தாலம் ஸ்வாமிகள்
5. ஹம்பி ஸ்வாமிகள்
6. ஆண்டவன் ஸ்வாமிகள் (ஸ்ரீ ரங்கம்)
7. ஸ்ரீ கேசவானந்த பாரதி
8. வித்யாரண்ய பீட ஸ்வாமிகள்
9. கூடலி ஸ்வாமிகள்