காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷணம் -21
'' வித்யா ததாதி விநயம் '' என்பார்கள். யாவரையும் பள்ளிக்கு அனுப்புகின்றனர். முன் காலத்தில் குருவின் இடத்திற்கு குருகுல வாஸம் செய்ய அனுப்பினார்கள். சாந்தீபினி முனிவரிடத்தில் கிருஷ்ண பகவான் தொண்டு செய்து ஆசிரமத்தில் தங்கி பாடம் கற்றார். விஸ்வாமித்திரரிடம் ராமன் கற்றார். பல மகான்கள் ஆசிரியர்கட்கு பணிவிடை செய்தே பாடம் கற்றனர். சிறுவயதிலேயே கற்க வேண்டும். பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் கற்பது மட்டும் அல்ல கல்வி. ஆசிரியர்கள் கற்றுத் தருவது கொஞ்சமே. அதிலும் நீங்கள் சிறிதே கற்றுக் கொள்கிறீர்கள். ஆகையால் கால்பாகம் தான் ஆசார்யாத் பாதமாதத்தே பாதம் சிஷ்யஸ்ய மேதயா மாணவனின் சிரத்தையால் கால்பாகம் சித்திக்கிறது. பாதம் பிரம்ம சாதிப்ய : நண்பர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது மற்ற கால் பாகம். பாதம் கால க்ரமேணச அடுத்த கால் பகுதி நாளாவட்டத்தில் அனுபவத்தில் வருகிறது. அப்போதுதான் கல்வி பூர்த்தியாகிறது. சிரத்தையுடனும் ஒருமையுடனும் படித்து வீட்டில் அதனை தொடர வேண்டும். எதற்கு படிக்க வேண்டும் என்று கூட கேள்வி எழும். மனிதன் நல்லவனாக, நல்ல மனதுடன், ஸாமர்த்தியத்துடன் இருந்தால் தான் நாட்டிற்கு நல்லது. நல்ல கல்வி சிந்தனையினால் தான் நாடு செழிக்கும். உண்மை பேசி, பொறுமையை கடைபிடித்து, சண்டையின்றி இருந்தால் மனம் அமைதியுறும். அடக்கத்துடன் அற்றியர்களுடன் வாழ்ந்தால் அவர்களுக்கும் மனதில் அமைதி ஏற்படும். படித்தால் கர்வம் இல்லாமல் இருக்க முடியும். படித்தவர்கட்கு எல்லா இடத்திலும் மரியாதை கிடைக்கிறது. படித்ததினால் அடுத்தவர்க்கு உபயோகமாக இருக்க முடியும். பழமையான நமது கலாசாரம் வேறு எங்கும் கிடையாது. இந்த நாட்டில் திருட்டுத்தனமே கிடையாது என எழுதி வைத்து விட்டு போனார்கள் ஒரு காலத்தில். இப்போது படிப்பது டிகிரி வாங்குவதற்கு மட்டும் அல்ல. நம்முடைய பழமையான இதிஹாஸங்களில் கூறியுள்ள நியாயம் அநியாயம், ஸத்யம் அஸத்யம், புண்ணியம் பாபம் ஆகியவற்றினையும் ஆழ்ந்து படித்து அதன் படி நடக்க வேண்டும். பல மகான்களின் சாஸ்திரங்களை படிக்க வேண்டும். ஆசிரியர்கள் உங்களுக்கு சிரத்தையுடன் கற்றுத் தருகின்றனர். நீங்கள் தேச பக்தியுள்ளவர்களாகவும், நல்ல குணம் கொண்டவர்களாகவும் ஆகி உயர்ந்த நிலை அடைய உங்களை ஆசீர்வதிக்கிறோம்.
(13-12-97 ஆந்திராவில் உள்ள அல்லகட்டா என்ற ஊரில் பாரதி வித்யா உயர்நிலைப்பள்ளியில் ஆற்றிய தெலுங்கு உரையின் தமிழாக்கம்)