காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -22
இ ன்று பௌர்ணமி. கார்த்திகை மாதம். நம்முடைய தர்மம் ஸனாதன இந்து தர்மம். சிருஷ்டி காலத்தில் இருந்தே வருகிறது. சில ஆண்டுகட்கு முன்பு தோன்றியது என்று இல்லை. தர்மோ விஸ்வஸ்ய ஜகத:ப்ரதிஷ்டாதர்மம் தான் உலகினையே காப்பாற்றுகிறது. இந்த தர்மம் வேத, புராண, சாஸ்திர, இதிஹாஸங்களில் சொல்லப்பட்டுள்ளது. எப்படி சாப்பிட, செயல் எப்படி இருக்க வேண்டும், என்று சொல்லப்பட்டுள்ளது. இதில் சொல்லியுள்ளது போல் வேறு எந்த தர்மத்திலும் இவ்வளவு விரிவாக சொல்லப்படவில்லை. புத்தி, சக்தி, சிந்திக்கும் சக்தி, இதனை பயன்படுத்தும் வழியாவும் சொல்லப்பட்டுள்ளது. மனம், சரீரம், செயல் இவற்றிற்காக சொன்ன ஒரே தர்மம் நமது. ஸெளந்தர்யம் மிகவும் முக்கியம். மனம் அங்கு இங்கு என சஞ்சலப்படும். அதன் ஒருமைப்பாட்டிற்கு ஸங்கீத சாஸ்திரம் சொல்லப்பட்டுள்ளது. தபஸும், தானமும், தியாகமும் செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளது.
ஸம்ஸாரம் என்பது ஒரு மா கடல். ராமர் இலங்கைக்கு செல்லுமுன் சமுத்திரத்தில்
அணை கட்டினார். நாமும் இந்தக் கடலை கடக்க அணை கட்ட வேண்டும். ராமருக்கு பலர் உதவி செய்து தொண்டு ஆற்றினர். நமக்கு அங்ஙனம் செய்வதற்கு எவரும் இல்லை. நான்கு விதமான கஷ்டங்கள் உண்டு. நாம் செய்வதற்கு அடுத்தவர் செய்கிறார்கள் என்பதாலோ, நிர்பந்தத்தாலோ செய்வதில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக செய்கிறோம். பல விதமான பிரார்த்தனைகளை செய்கிறோம். மனதில் தோன்றியதை எல்லாம் பேசுகிறோம். நினைத்ததை செய்கிறோம். எப்போது கோபம் கூடாதோ அப்போது கோபம் வருகிறது. மனம் இந்த நிலையில் இருக்கிறது. இதற்கு என்ன செய்வது. சிரத்தையின்றி சிந்தனையின்றி கோபத்துடன் செயல்படுகிறோம். இதுவே கடல் '' தானேன அதானம் '' '' ஸத்யேன அன்ருதம் '' '' சிரத்தையா அசிரத்தா '' சாந்தேன கோப : தானத்தினால் தானம் இல்லாததையும் ஸத்தியத்தில் பொய்யையும் சிரத்தையினால் அசிரத்தையையும் சாந்தத்தினால் கோபத்தையும் போக்க வேண்டும். இரு நூறு ஆண்டுகட்கு முன்பு தியாகராஜர் இறைவனைப் பாடி நேரில் கண்டார். எத்தனையோ பேர் தவம் செய்துள்ளனர். பார்வதி தேவி, அர்ச்சுனன் போன்றவர்கள், இவர்கள் சுய நலத்திற்காக செய்தார்கள். பிரகலாதன், துருவன் ஆகியோர் ஈஸ்வர பக்திக்காக செய்தனர். பெயர், பதவி போன்றவைக்காக பலர் தவம் செய்தனர். வித்யா, வித்தம், பலம், யச : புண்யம் என்ற ஐந்து விஷயங்களை மனிதன் பெற வேண்டும் என்கிறார் ஆதிசங்கரர். நல்ல கல்வி முதலில் தேவை. இதனால் வினயமும், நல்பண்புகளும் ஏற்படும். வித்தம் நல்ல தொழில் இதுவும் தர்மத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். லக்ஷ்மீ ச மம தேஹி ஸெளக்யம் என பிரார்த்திக்க தேவி அருள்வாள். இங்ஙனம் கிடைத்தது தர்ம ஸம்விருத்தி ஹேது அதாவது தர்ம வழியில் நடந்து வாழ்வதற்கு அனுகூலமாக இருக்க வேண்டும். பலம், நல்ல ஆரோக்யம் உடலுக்குத் தேவை. சரீர மாத்யந்த கலு தர்ம ஸாதனம் என்று சொல்லியுள்ளது. சரீரம் திடகாத்திரமாகவும் நோயற்றும் இருந்தால்தான் தர்ம வழியில் நடக்க முடியும். சரீரம் புஷ்டியாக இருக்க ஆகாரம் எங்ஙனம் இருக்க வேண்டும் என கீதையில் சொல்லப்பட்டுள்ளது. ஆகாரம் நல்லதாக இருந்தால் தான் மனமும் தூய்மையாக இருக்கும். ஆஹார ஸுத்தி ஸத்வ ஸுத்தி என்பர்.
யச:புகழ். நம்மை பலர் நல்லவர் என்று சொல்ல ஏற்படும் புகழ். அடுத்தது புண்யம். நமது முன்னோர்கள் செய்தது, நாம் முற்பிறவியில் செய்தது, தற்போது செய்வது ஆக யாவும் சேர்ந்து வருவது. இது இறைவன் அருளால் தான் கிட்டுகிறது. நைமிசாரண்யத்தில் 18 புராணங்கள் சொல்லப்பட்டுள்ளன. இந்த புராணங்கள் இல்லை எனில், தான தர்மம், புண்ணிய பாபம் என்று எதுவும் நமக்குத் தெரிந்திருக்காது. சிவ பெருமானுக்கு பசுபதிநாதர் என ஒரு பெயர் உண்டு. பசுபதிநாதர் கோயில் நேபாளத்தில் காட்மாண்டுவில் உள்ளது. நாம் யாவரும் பசுக்களே. ஞானம் கிட்டும் வரையில் பசுக்களே. தென் நாட்டில் இருந்து ஒருவர் தான் பசுபதிநாதர் கோயிலில் பூஜை செய்கிறார். இங்ஙனம் தென்நாட்டில் விந்திய பர்வதத்திற்கு தெற்கே பிறந்த ஒருவரால் தான் அங்கு பூஜை செய்ய முடியும்.
நேபாளத்தில் விராட தகரம் உள்ளது. மஹாபாரதத்தில் பன்னிரெண்டு ஆண்டு வன வாஸமும் ஒரு ஆண்டு அஞ்ஞான வாஸமும் என்று பாண்டவர்களை அனுப்ப தங்களது அஞ்ஞான வாஸத்தை இந்த விராட நகரில் தான் பாண்டவர் கழித்தனர். தர்ம புத்திரர் காட்டிற்கு செல்லும் போது நல்லவர்கள் யாவரும் அவர் உடன் சென்றனர். உங்கள் யாவரையும் காப்பாற்றும் சக்தி எனக்கில்லை ஆகவே நீங்கள் இங்கேயே இருங்கள் என தரும புத்திரர் அவர்கட்கு வேண்டுகோள் விட அவர்கள் எங்களுடைய தேவைக்காக தாங்கள் ஏதும் செய்யத் தேவை இல்லை என பதில் அளிக்க, குல குருவான தௌம்யரின் அறிவுரைப்படி சூரிய பகவானை பிரார்த்தித்து அக்ஷய பாத்திரம் பெற்று யாவரையும் தரும புத்திரர் உபசரித்தார் என்பது வரலாறு. பாண்டவர்கள் விராட நகரம் வருவதற்கு முன்பு இந்த நகரில் மிகுந்த கஷ்டம் நிலவிவந்தது. இவர்கள் வந்த பின் நாடு மிகவும் சுபிக்ஷமாக மாறியது. இவர்கள் தங்கள் அஞ்ஞான வாஸத்தை விராட நகரில் கழிக்கின்றனர் என்பதை இந்த நாட்டின் சுபிக்ஷத்தைக் கொண்டு துர்யோதனன் தெரிந்து கொள்கிறான்.
ஹிமாசல பிரதேசத்தில் ஜ்வாலாமுகி என்று ஒரு இடம் உள்ளது. நெருப்பே அங்கு அம்பாள். வைஷ்ணதேவி கோயில், ஸ்ரீ நகரத்தில் சங்கராசார்யர் கோயில், குரு«க்ஷத்திரம், ஹரித்வார், பத்ரி, கேதாரநாத் ஆகிய இடங்களுக்குச் சென்று பிருந்தாவனத்தில் பிருந்தாவன துளசி கல்யாணம் செய்து வைத்து, இந்த உலகில் நடமாடும் தெய்வமாக இருந்த மஹாஸ்வாமிகளின் ஆராதனைக்காக காஞ்சீபுரம் செல்கிறோம். மனதில் பூரணமாக இருக்க அம்பாளை பூஜிக்க வேண்டும். இதன் மூலம் அம்பாளின் பூரண அனுக்கிரகத்தை பெற்று நீங்கள் நல்வாழ்வு வாழ ஆசீர்வதிக்கிறோம்.
(13-12-97 ஆந்திராவில் உள்ள அல்ல கட்டாவில் தெலுங்கில் ஆற்றிய உரையின் தமிழாக்கம்)