காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் 33 அனுக்கிரஹ பாஷணங்கள்
அனுக்கிரஹ பாஷண ம் -4
c ங்கள் எல்லாம் படிக்க வந்துள்ளீர்கள். ஆசிரியர்களிடத்தில் மிகவும் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு நல்ல கல்வி தான் உபகாரமாக இருக்கும். சென்ற இடம் எல்லாம் சிறப்பு நன்கு படித்தவருக்குத்தான் கிட்டும். செல்லா இடத்தில் தன் மதிப்பு. ஆனால் படிப்பு என்றால் பாடம் மட்டும் அல்ல. படிப்போடு நல்ல குணம், பழக்க வழக்கம் உள்ளது தான் படிப்பு. இதற்கு பாஷை தெரியாத இடத்திலும் மதிப்பு. நல்ல எண்ணமும் உபகார சிந்தனையுடன் கூடிய அறிவிற்குத்தான் சென்ற இடத்தில் எல்லா சிறப்பும். திருக்குறள் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். அதை நன்கு படித்து நல்ல குணத்துடன் விளங்க வேண்டும். மனிதனுக்கு சொத்து எவ்வளவு அவசியமோ அந்த அளவிற்கு நல்ல குணமும் தேவை. அது இருந்தால் தான் சொத்து நிலைக்கும். சொத்து கிடைப்பதற்கும், அது நிலைத்து நிற்பதற்கும் நல்ல குணம் வேண்டும். உயர்ந்தவனாக ஒரு மகானாக ஆக வேண்டுமானால் அதற்கு ஒரு கணக்கு இருக்க வேண்டும். தினமும் செய்த நன்மை என்ன தீமை என்ன என்று கணக்குப் பார்த்துக் கொள்ள வேண்டும். அடுத்தவர்கட்கு, உபகாரம், உதவி செய்ய வேண்டும். என்ற எண்ணம் சிறிய வயதிலிருந்தே வளர வேண்டும். உங்களால் முடிந்த உதவி செய்ய வேண்டும். நல்லதைப் பழக்கப்படுத்திக் கொள்ளத்தான் உங்களை உங்கள் பெற்றோர்கள் இங்கு அனுப்பியுள்ளார்கள். நல்ல அக்கறை, உழைப்பு, சோம்பேறித்தன்மை இன்மை, பக்தியுடன் இருத்தல் ஆகியவை இருந்தால் எல்லா செல்வமும் கிட்டும். நல்லவர்களாக வாழ்ந்தால் உங்களுக்கும், உங்கள் ஊருக்கும் நாட்டிற்கும் பெருமை.
நீங்கள் எல்லாரும் தஞ்சை கோயில் தரிசனம் செய்துள்ளீர்கள் என உங்கள் தலைமை ஆசிரியர் சொன்னார். அந்தக் கோயிலைக் கட்டி.ய அரசனை உங்களுக்குத் தெரியும். எத்தனை ஆண்டுகட்கு முன்பு என்றால் தெரியுமா? (சுமார் 1000 ஆண்டுகள் என்றனர் மாணவிகள்) அந்த அரசனின் மற்றொரு பெயர் சிவபாத சேகரன். இநத்ப் பெயர் சிவாலயங்களைக் கட்டியதால் ஏற்ப்பட்டது. பெரிய கோயில் ஈசன் பெயர் என்ன? (மாணவிகள் ப்ரகதீஸ்வரன்.) வடக்கே சென்று அவர் வெற்றி கொண்டு ஒரு கோயில் கட்டியுள்ளார். அந்த கோயில் எது?அங்கு சரஸ்வதி தேவியின் விக்கிரகம் மிகவும் அழகாக உள்ளது. தஞ்சாவூரில் சரஸ்வதிக்கு என ஒரு கோயில் உண்டு. கூத்தனூர் என்ற ஊரிலும் சரஸ்வதிக்கு ஒரு கோயில் ஊண்டு. தஞ்சாவூர் கோயில் கட்டுவது என்பது மிகவும் கஷ்டம். இதற்கு சில கணக்குகள் உண்டு. கருங்கற்களால் கட்டியுள்ளனர். கருங்கல் கிடைக்காத இடத்தில் சாரம் கட்டி 20 டன் எடையுள்ள ஒரு கல்லை விமானத்தில் கட்டியுள்ளனர். அதற்கு பூஜை ஏற்பாடு செய்ய நிலம் தானம் யாவும் செய்து இருக்கிறார். வேலை என்று எடுத்துக் கொண்டால் அது முழுமையாகவும், தொடர்ந்தும், அழகாகவும் சிக்கல் இல்லாமலும், கம்பீரமாகவும் இருக்க வேண்டும். பொறுப்பாக, அழகாக நிலைத்து நிற்க, யாவரும் போற்றும் படியாக, புகழும் படியாக இருக்க வேண்டும். அந்த அரசன் இல்லை எனினும் அவன் பெயர் உள்ளது. நல்ல பெயரினைப் புகழ் என்பர். உங்கள் பாடத்தில் உள்ள வரலாற்றினை நன்கு படித்து நம்மைப் போன்று மற்றவர்களும் இருக்க வேண்டும், எல்லா உயிர்களும் நன்கு இருக்க வேண்டும், அடுத்தவர் நன்றாக இருக்க இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும்.
என்ற நல்ல குணத்துடன் எல்லாரிடமும் நன்கு பழகி வாழ வேண்டும் என்ற எண்ணம் கொள்ள வேண்டும். அமைதி என்றால் நல்ல தூக்கம் வர வேண்டும். தூங்குவதே அல்ல. அடக்கமாக கவனமாக இருந்து, எதிர்த்துப் பேசாமல், கவுரவம் என்பதை நல்ல விஷயத்தில் பாராமல், வீட்டிற்கும் உபயோகமாக இருந்து நாம் வேலை செய்து பழகிக் கொண்டு இருக்க வேண்டும். பெற்றோர்களும் பிள்ளைகளிடத்தில் அன்போடு இருக்க வேண்டும். சாப்பாட்டில் விஞ்ஞானம் இருக்கிறது. சித்த வைத்தியத்தில் எதை தவிர்க்க வேண்டும் என உள்ளது. அதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். மனது நல்லதை கிரகித்துக் கொள்வது, இதற்கு நல்ல புத்தி சக்தியும் கவனமும் தேவை. ஆரம்பத்திலிருந்தே நன்றாக படிக்க வேண்டும். கம்பராமாயணம், கந்த சஷ்டி கவசம் முதலியவற்றிலிருந்து படித்து உங்களுக்கும், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்கட்கும் நல்ல பெயர் கிடைக்குமாறு நடந்து கொள்ள வேண்டும். நல்ல எண்ணமும் பரஸ்பர நம்பிக்கையும் தேவை. நல்ல முறையில் நீங்கள் மேன்மையுற ஆசீர்வதிக்கிறோம்.
(29-02-96 அன்று தொட்டியம் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலும் பால பெரியவர்கள் ஆற்றிய உரை.)