சுபாஷிதானி - நல்லுரைகள் ' சுபாஷிதானி ' - சான்றோர்களின் ஞானம் - அனுபவம் - அன்பு ஆகியவற்றில் விளைந்த நல்லுரைகளின் கோவை வடமொழி மூலமும் தமிழில் பொருளு

சுபாஷிதானி - நல்லுரைகள்

' சுபாஷிதானி ' - சான்றோர்களின் ஞானம் - அனுபவம் - அன்பு ஆகியவற்றில் விளைந்த நல்லுரைகளின் கோவை. வடமொழி மூலமும் தமிழில் பொருளுரையும் அழகாகத் தொகுக்கப்பட்டுள்ளன. பளிச்சென்று மனத்தில் பதியும் வண்ணம் உள்ள உரைகள் முத்தும் பவளமுமாய் திரட்டித் தரப்பட்டுள்ளன.


1. தர்மம் பேணி வளர்க்கப் பெறும் நம்மை அது பேணி வளர்க்கிறது.

2. மன நிறைவு பெருஞ்செல்வம்.

3. திடீரெனக் குவியும் மேகம் போல், செல்வம் குவியும். அவ்வாறே விலகும்.

4. திடீரெனக் குவிந்த செல்வம் யாரை மயக்காது?

5. கெட்ட எண்ண முள்ளவர் காரணமின்றி விரோதம காட்டிக் கொடுஞ் செயல் புரிவர்.

6. தகாத செயல், நம்பத்தகாத செய்தி, பிறரது ரகசியம் இவற்றை வெளியிடாதே.

7. நல்வழி செல்பவன் நற்குலத்தில் பிறவாதிருத்தாலும் (நல்வழி செல்லாத) நற்குலத்தில் பிறந்தவனைவிட மேலானவன்.

8. நன்றியற்றவன் துன்புறும் போது எவரும் துணை புரியமாட்டார்.

9. தகாத செயலைத் தக்கச் செயலாகக் கருதுபவன் போக்கிரி.

10. உயிர் துறக்கும் நிலையிலும் தகாததைச் செய்யக் கூடாது.

11. வீட்டுக் கொல்லைப் புறத்தில் தேன் கிட்டிடல் ஏன் மலையேற வேண்டும்?

12. கோபத்தைக் கோபமின்மையால் வெல்ல வேண்டும்.

13. கலங்காதிருத்தலே பெரியோரின் பெருமைக்கு இலக்கணம்.

14. குருடனாயினும் அசையாதிருந்தால் ஓரடி நகர முடியாது.

15. நற்குணமில்லாதவனின் அழகு வீண்.

16. (நம்பி) மடி மீதேறித் தூங்குபவனைக் கொல்வதில் ஏது ஆண்மை?

17. நல்லோர் ஏற்றுக் கொண்டபடி நடப்பர். (தந்த உறுதி மொழியைக் காப்பாற்றுவர்) .

18. நல்லொழுக்கத்தின் பாதுகாப்பிலுள்ள நற்குலப் பெண்களின் நடைமுறை சிந்தைக் கப்பாற்பட்டது.

19. புண்யமெனும் மரம் எண்ணிப் பார்த்திராத நற்பயனை உடன் தரும்.

20. சிந்திக்க முடியாதவற்றை வீண் வாதத்தினுட்படுத்தக் கூடாது.

21. சுகமும் துக்கமும் நேரும் தருணம் தெய்வத்திற்கும் தெரியாது.

22. முதுமையும் சாவுமில்லாதவன் போல் அறிஞன் கல்வியையும் பொருளையும் சேர்க்க வேண்டும்.

23. தானே பேரறிவாளனென அகந்தை கொண்டு முறையறியாமல் வீண் பிடிவாதத்துடன் செயல்படுபவன் அழிவான்

24. தன்னையே கட்டுக்குட்படுத்த இயலாத மக்கள் தலைவன் எதிரிகளை எப்படி அடக்குவான்?

25. அறியாமை யாரைத்தான் கேலிக்கு ஆளாக்காது?

26. இதயத்தைப் புரிந்து கொள்ள முடியாதவரிடம் நட்பும் விரோதமாகிவிடும்.

27.அளவுக்கு மீறிய உணவும், வரம்பு மீறிய பேச்சும், உடன் உயிரைப் போக்கும்.

28. வரம்பு eP வழங்கியதால் பலி கட்டப்பட்டான். அதிகச் செருக்கால் துர்யோதனனும், அதிகச் சபலத்தால் ராவணனும் அழிந்தனர். எதிலும் வரம்பு மீறுவது தவிர்க்கத் தக்கது.

29. அதிகப் பழக்கத்தால் அவமதிப்பும், அடிக்கடி அணுகுவதால் ஆதரவின்மையும் நேரும்.

30. பற்றி எரிய இயலாதவற்றில் விழுந்த b தானே அணைந்து விடும்.

31. விதி பாராமுகமாக இருக்கையில், மனிதயத்தினமும் வீணாகும் போது, முழு மனத்துடன் உழைக்கிற ஏழைக்குக் காட்டிற்கு ஒடுவதைத் தவிர வழி ஏது?

32. அற்பனின் திமிர் அளவிற்கு eP வெளிப்படும்.

33. நற்செயலோ தீச் செயலோ மிகத் தீவரத்துடன் செய்யப் பட்டால் உடன் பலன் தரும்.

34. அறிவிற்குப் புலப்படாமலையே முதுமை மனிதனின் ஆற்றலைக் குறைத்துக் கொண்டே முன்னேறுவதுபோல், தூக்கமும் மனிதனின் ஆளுமையைக் குறைத்துத் தான் வலிவடையும்.

35. அதர்மம் என்ற நச்சு மரத்திலிருந்து இனிய காய்க் காய்க்குமா?

36. மனிதனின் நற்செயலுக்கான புகழ் பதிவிரதைபோல் அவனை விட்டலாகாது.

37. குணத்தையும் தோஷத்தையும் பொருட்படுத்தாமல் மனம் நாடுவதை

38.பிறரது பொருளை நாடாமை, எல்லா உயிரிடத்திடமும் நல்லிணக்கம், செய்கிற செயலுக்குப் பின் விளைவு உண்டு என்ற நம்பிக்கை இவை மனத்தால் புரிகிற நற்செயல்கள்.

39. நல்லவனாயினும், தக்க பாத்திரம் எனினும் உரிய தருணமில்லாதபோது யாசித்தால் அவனிடம் தானம் தருபவன் கோபிப்பான்.

40. மேலோர் செல்லாத வழியில் செல்பவருக்கு ஏது நன்மை?

41. மேலேரல்லாதவருடன் சேருவதைவிட மேலோரை எதிர்ப்பதே மேல்.

42. அண்டி நிற்கத் தக்கவரது துணையின்றி அறிஞரோ, மகளிரோ கொடிகளோ பெருமை பெறுவதில்லை.

43. கரும்பில்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரை.

44. தலைவனின் நன்மையை விரும்பினால் (நன்மை கூறப்) பணிக்கப் படாவிட்டாலும் நன்மை கூற வேண்டும்.

45. மனம் தளராதிருத்தல் மேன்மையின் வேர்.

46. நல்லோர் சென்ற வழியை முழுவதும் பின் பற்றிச் செல்ல இயலாவிடில் சிறிதளவாவது அவ்வழியே செல்ல வேண்டும். அவ்வழியிலிருப்பவன் துயருறுவத்ல்லை.

47. வேறு தெடிதுயர்ந்த மரமில்லாத இடத்தில் ஆமணக்கஞ் செடியும் மரமாகி விடும்.

48. உற்சாகமின்மையே எல்லா துன்பங்களுக்கும் நுழை வாயில்.

49. திறமைக்கு அழகு செருக்கடையாமை.

50. மரம் தலையால் கடுஞ்சூட்டை அனுபவிக்கிறது. தன்னை அண்டியவருக்கு நிழலால் சூட்டைத் தணிக்கிறது.

51.காதலால் குருடான மனமுள்ளவருக்கு பகுத்தறிவு ஏது?

52. நடைமறை பழகாமல் கற்பதோடு மட்டும் நின்ற கல்வி மனத்தை மகிழ்விப்பதாயினும் கிளிப்பிள்ளை கற்ற அளவுதான். அதனால் என்ன பயன்?

53. நல்லோரின் வழியைப் பின்பற்றிப் பெற்றது சிறிதளவேயாயினும் அது பெரிதே.

54.தீய எண்ணத்தை உள்ளத்தினுள் நன்கு மறைத்து வைத்தவரைக் கண்டிப்பவர் சூரியனின் புதல்வன் மாயனே.

55. உள்ளத்து வலிவில்லாதவருக்கு வழி காட்டுதல் பயன்படாது.

56. குருடனுக்கு விளக்கும், செவிடனுக்குப் பாட்டும் வீண்.

57. கண்ணால் குருடன் மேல். தர்மத்தில் குருடன் மேலானவல்ல.

58. குருடனை விஞ்சுபவன் எவன்?

59. உணவளிப்பது மிகச் சிறந்தது. கல்வியளிப்பது அதனைவிடச் சிறந்தது. உணவால் உண்ட வேளைக்கு மட்டும் மன நிறைவு, கல்வியால் வாழ்நாள் முழுதும் மன நிறைவு.

60. பிறருதவியால் பதவிபெற்ற நீசன் பெரும்பாலும் அணுக எளியவனாகமாட்டான்.

61. மக்கள் பிறரது செல்வத்தையும் தனது அறிவாற்றலையும் ஸமமாக எடை போடுவதில்லை.

62. போலியான அறிவு முதிர்ச்சியைக் காட்டுகிற விதண்டைப் பேச்சால் அநியாயத்தை நியாயமாகவும், நியாயத்தை அநியாயமாகவும் திரித்துக் காட்டுகிற அந்த அற்பமான கல்வியால் என்ன பலன்?

63. நேர்மையற்ற வழியில் செல்பவனது செல்வம் நீடித்திராது.

64.வம்ச வழியே கல்வி பெற்ற அறிஞருக்கும் வம்ச வழியே செல்வம் பெற்ற தனிகருக்கும் இதயம் செருக்குறாது.

65. அபகாரம் செய்தவனிடத்திலும் நல்ல முறையில் பழகுபவனே நல்லவன்.

66. கல்விபெற்ரும் அகந்தையால் கண் மூடியவர் அடிவைக்கத் தகாத இடத்தில் அடிவைப்பர்,

67. வெளியில் நின்று பார்ப்பவனுக்குக் குறை மட்டும் தெரியும்.

68. தன்வந்தரியே மருத்துவராயினும் ஆயுள் முடிந்தவனிடம் என்ன செய்வார்?

69. தன் பேச்சில் அழகு கண்டு மகிழ்பவர் உண்டு. பிறர் பேச்சில் திருப்தி பெறும் நல்லோர் எத்தநை பேர்.

70. தன் உடலையும் புலனின்பத்தையயும் விடப் புகழையே செல்வமாக மதிப்பவருக்குப் புகழே மிகப் பெரிது.

71. காமத்தால் குருடானவன் ஒரு தனிப் பிறவி. பகலிலும், இரவிலும் அவன் எதனையும் காணமாட்டான்.

72. அவனவன் தனக்குரிய வாய்ப்பையே எதிர்பார்ப்பான்.

73. நெருக்கடிகள் (தாம் நிகழ்வதற்கு முன்) இவன் மென்மைமிக்கவன்.. (தாங்க இயலாதவன்) இவன் திடமானவன் (தாங்குபவன்) எனவா எதிர்பார்க்கும்?

74.பலரறியாதிருப்பினும் மற்றவரால் இயலாத பணியைச் செய்து முடிப்பதே மனிதருக்குப் புகழ் தருவதாகும்.

75.ஆற்றல் மிக்கவனும் தன் ஆற்றலை முறைப்படி வெளிப்படுத்தாதிருந்தால் அவமதிக்கப்படுகிறான்.

76. அந்தந்த நேரத்திற்குப் பொருந்தாததைக் கூறுபவன், பிருஹஸ்பதியாயினும் தன் அறிவின்மையை வெளிப்படுத்துவதுடன் நிலைத்த அவமதிப்பையும் பெறுகிறன்.

77. உழைப்பும் அறிவாற்றலும் மிக்கவனால் அடைய இயலாததொன்றுமில்லை.

78. கேட்பவன் விரும்பாவிடினும் தக்க நல்வழி கூறுபவன் அரிது. அப்படிச் சொல்வதைக் கேட்பவனும் அரிது.

79. கெட்டதோ, நல்லதோ விதி எழுதியதை எவனால்மாற்ற இயலும்?

80. இரும்பும் காய்ச்சப் பெறின் மென்மை பெறும் எனில் மனிதர் எம்மாத்திரம்?

81. தற்பெருமையில்லாதவருக்குச் செல்வமும், ஆயுளும் ஒரு பொருட்டாகுமா?

82. நல்லவன், தன் கோரிக்கை வீணாகுமோ என்ற பயத்தால் தன் விருப்பத்திற்கு உரிய பொருளையும் கேட்காமல் நடு நிலையைக் கடைபிடிப்பான்.

83. இன்றைய வாழ்வில் நன்மையையும் மறுமையில் மேன்மையையும் பெற உதவுவதே தர்மம்.

84. மந்திரமாகத் தகாத எழுத்து கிடையாது. மருந்தாகப் பயன்படாத வேரும் பணிக்கு உதவாத மனிதனும் கிடையாது. உரியபணியில் பொருத்துபவர் அங்கு இல்லை.

85. காலால் தன்னைத் தீண்டியவனை ரத்தம் குடிக்கவா பாம்பு கடிக்கிறது? காலால் தன்னைத் தீண்டியதைப் பொறுக்காததால் (அவமதிப்பைப் பொறுக்காதலால்) அல்லவா தீண்டியது?

86. பொறாமையின்றி விருப்பு வெறுப்பின்றி தன்னை எவருக்கும் எதிரியாக்கிக் கொள்ளாத ஒருவனால்தான்

மக்களின் ஆதரவைப் பெரமுடியும்.

87. (திருப்பாற்கடலிலருந்து தோன்றிய) அமுதம் ராஹ§விற்கு அழிவைத் தந்தது. விஷம் சிவபெருமானது கழுத்தணியானது.

88. அறிவில்லாதவனது செல்வம் கேடுவிளைவிக்கும்.

89. ஏழ்மையால் வருந்துபவனுக்கு யாசிக்கத்தகாதவர் என எவருமில்லை. பெரியோருக்கு உதவத் தகாதவன் என எவருமில்லை.

90. நல்லோரது உபதேச மொழி என்றும் தானும் இகழப்பெறாதது.

91. முந் செய்த வினைகளின் பின் விளைவு எதிர்பார்ப்பிற்கு மாறுபட்டிருக்கும்.

92. காக்கக் கடமைப்பட்டவர் காக்காத போது அது தெய்வத்தால் காக்கப்படுகிறது.

93. பிறர் மனம் புண்பட நடப்பது நல்லோர் வழியில்லை.

94. பொருளை இழந்தது, மனத்தாபம், வீட்டினுள்ளவரின் நடைமுறை பிசகுதல், ஏமாற்றம், அவமதிப்பு இவற்றை அறிவாளி வெளியிடக்கூடாது.

95. மனம் நாடியதனைத்தும் பொருட்படுத்தத் தக்கதல்ல. அவற்றைப் பெறுவதால் மட்டும் இன்பம் சிறிதுமில்லை என்பதே உண்மை.

96. பொருள் நாட்டம் மிக்கவருக்கு, குருவும் (பெரியவர்களும்) இல்லை. உறவினருமில்லை.

97. பெண் எனும் செல்வம் பிரரது உடமையல்லவா?

98. உதவி நாடி வந்தவனுக்குக் கொடுப்பதற்கல்லாமல் செல்வத்திடம் என்ன உரிமை?

99. அரைகுறையாக நிரம்பிய குடம் சத்தம் போடும் (தளும்பும்) .

100. சாணை தீட்டப் பெறாதவரை சிறந்த ரத்தினங்களும் அரச கிரீடத்தில் இடம் பெறுவதில்லை.

101. கிடைக்கப் பெறாத பொருளை நாடுபவனுக்கு, அது கிடைக்காத வரை ஏக்கம், பெற்றபின் அழிவதால் ஏற்பட்ட வருத்தம் என்ற இரு நிலைகள் உண்டு.

102. கிடைக்கமுடியயாததை எளிதில் பெறமுடியும் எந நினைப்பது கானல் நீரைத் தேடித்திக்கு தெரியாமல் அலைகிற நிலை தரும்.

103. அரசரிடமிருந்து நேரிடையாகச் செல்வம் பெறாதவரும் அவரை அண்டி வாழ்வதாலேயே செல்வம் பெறுவர். நீர் நிலை அருகே உள்ள பெரு மரம் பசுமை பெறுவதைப் பார்.

104. பெரியோர்களின் நடைமுறையை உலகில் பொது மக்களிடையே காண்பதரிது. இனம் கண்டறிய இயலாதது. அறிவிலிகளே அந்த நடைமுறையை வெறுப்பர்.

105. அற்பர்களின் செயல் முறையைப் பொருட்படுத்தாது இருப்பதே தீரர்களுக்கு அழகு.

106. அற்பப் பொருளுக்காக மிகுந்த உழைப்பு. கொசுவை அடிக்கக் கும்டாந்தடி.

107. அற்பத்திற்காக பலவற்றை இழக்க முற்படுகிற c ஆராயத் தெரியாத முட்டாளாகக் காணப்படுகிறாய்.

108. குறைந்த சொற்களால் அழகாக்ப் போசுபவனே சிறந்த பேச்சாளன்.

109. உருவில் சிறியவனாயினும் கொடிய நோய் போல் செயல்படுகிற எதிரியின் வளர்ச்சி பெரும் கேடு விளைவிப்பதற்கே.

110. அவமதிப்பால் ஒடிந்த அன்பை ஒட்டிப் புதுப்பிக்க எவரால் முடியும்?உடைந்த முத்து அரக்குப் பூச்சால் இணையாது.

111. நல்லதோ, கெட்டதோ தான் செய்த செயலின் பின் விளைவை அனுபவிக்க வேண்டியதே.

112. உரிய ஸமயத்தில் சொன்ன சொல் அழகும் சிறப்புமற்றதாயினும் நன்கு விளங்கும்.

113. பொருட்படுத்தத் தகாததைப் பெற உழைப்பவன் முட்டாள்.

114. மாறுபட்ட சூழ்நிலைதான் கட்டுப்பாடு மாறுபடக் காரணமாகிறது.

115. கல்வியறிவற்ற வாழ்க்கை சூன்யம். உறவினரற்ற வெளி உலகம் சூன்யம்.புதல்வனில்லாத வீடு சூன்யம். ஏழ்மைக்கு எங்கும் சூன்யம்.

116. சிறப்பறியாதவன் சிறப்பை உணர்பவர்களால் அணுகப் பெறுவதில்லை.

117. மக்களை ஆள்வது ஒய்வில்லாத பணி.

118. பிழைக்க வழியற்ற தேசத்தையும், துன்பத்தை விளைவிக்கிற தொழிலையும், வஞ்சகனான நண்பனையும் உயிரை வாங்குகிற சொத்தையும் தவிர்க்க வேண்டும்.

119. நிலையற்ற மனப்போக்குள்ளவனின் பரிவும் பயம் தரும்.

120. மனம் சிதறாதிறுப்பது வரவிருக்கின்ற பணி நிறைவின் அடையாளம்.

121. ஒழுக்கமின்மை எவரைத் தான் இளப்பத்திற்கு ஆளாக்காது?

122. தந்தைக்குத் தன் மகள் நல்ல மருமகனிடம் ஒப்படைக்கப்பட்டால், கவலைக்குரியவளாகாள்.

123. நெருக்கடியில் கலங்காதவன் மங்களமான நிறைவை அடைகிறான்.

124. அமங்களமான (மன நிலையை கெடுக்கின்ற) சித்திரங்களும், வஞ்சகமான நண்பர்களும் மறைந்து நின்று கொல்பவர்.

125. பணத்திமிரால் குருடான தீயவனுக்கு ஏழ்மை சிறந்த கண்மை.

126. தீயவருடன் இணக்கத்தால் நல்லோரும் நிலை மாறுகின்றனர்.

127. தீயவருடன் பேசுதல், பேச்சில் கொடூரம், கோள் சொல்லுதல், பொய் இந்த நான்கும் வாயால் செய்கிற தீமைகள். இத்தகைய பேச்சோ இப்படி பேச நினைப்பதோ கூடாது.

128. செய்ததில் மன நிறைவுறாத அந்தணன் கெடுவான். செய்தது போதுமென எண்ணுகிற அரசன் கெடுவான்.

129. பெற்றதில் மன நிறைவடையாதிருத்தலே செல்வம் பெருக வழி.

130. பெற்றதில் மனநிறைவின்மைக்கு எல்லையில்லை.

131. அனுகூலமான விதி சாதிக்க இயலாததையும் விளையாட்டாகச் சாதித்துத் தரும்.

132. தீரர் ஒன்றைச் செய்து முடிக்க முயன்றபின் அப்பணி நிறையுமுன் மனம் மாறித் திரும்ப மாட்டார்.

133. பிறரைத் துன்புறுத்தாதிருத்தலே பெரும் தர்மம்.

134. வலிவு மிக்கவனை எதிர்ப்பது கெட்டமுடிவைத் தரும்.

135. விதியால் சபிக்கப்பட்டவருக்கு முன்னதாகக் கிட்டியதும் தப்பி ஒடிவிடும்.

136. விதி தடம் புரண்டால், எது தடம் புரளாது?

137. கழுத்துவரை நீரில் அமிழ்ந்திருந்தாலும் நாய் நக்கியே பருகும்.

138. காமத்தாலும், பேராசையாலும் இழுபட்டவர் பின் தொடர்கிற அபாயத்தைக் காணமாட்டார்.

139. பெரியோரின் ஆணை ஆராய்விற்கப்பாற்பட்டது.

140. அரசாட்சியால் எதிர்பார்க்கிற பயன் இட்ட ஆணை நிறைவேறுவது. தவத்தால் எதிர்ப்பார்ப்பது பரம்பொருளிடம் இணைவது. கல்வியின் நோக்கம் சூழ்நிலை உணர்வது.செல்வத்தின் நோக்கம் தானமும் அனுபவமும்.

141. தன் ஆசை நிறைவேறவே அணைத்தும் விரும்பப்படுகிறது.

142. சுயபுத்தி சுகம் தரும். பிறரது புத்தி அழிவைத் தரும்.

143. தன்னை மட்டும் நிரப்பிக் கொள்பவன் (சுயநலமே குறியாக நிற்பவன்) கட்டிய மனைவியாலும் கைவிடப்படுவான்.

144. தன்னையே வீழ்த்திக் கொள்பவன் பிறரை தூக்கி விடுவது எங்ஙனம்?

145. சுயக் கட்டுப்பாடே தன் வளர்ச்சிக்கு ஆணிவேர்.

146. தானே தனக்கு உதவுகிற சுற்றம். தானே தனக்கு எதிரி.

147. நல்லோர் தனக்கெனச் சேமிப்பது மேகம் போல் பிறருக்கு வாரி வழங்கவே.

148. முதலில் பொய் சொல்லத் தொடங்கப் பிறகு உலகம் அவனை நிந்தித்து ஒதுக்குவதில் முடிந்தது.

149. ஆபத்து நேரத்திலும், கஷ்டத்திலும் அறிவாளி உற்சாகமிழப்பதில்லை.

150. ஆபத்திலும் மன உறுதியுடன் செயல்படுபவரைச் செல்வம் தானே நாடுகிறது.

151. ஆபத்து நேரத்தில்தான் பெரியோர்களின் சக்தி வெளிப்படும், செழிப்புள்ள போதல்ல.

152. ஆபத்தில் எவனது அறிவு தெளிவுடன் இயங்குகிறதோ அவனே தீரன்.

153. செழிப்பை விரும்புபவன் ஆபத்திலும் மனத்தை இழக்கக் கூடாது.

154. ஆபத்திலகப்பட்டவனைக் காப்பதில் தளர்கிற உயிரோ ஆற்றலோ இருந்தென்ன பயன்.

155. தன் தேசத்தில் வசிப்பவன் ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில் அவனது துயரைத் துடைப்பது அரசனின் கடமை.

156. ஆபத்தில் சிக்கியவனது துயரைத் துடைக்கவே மேலோரிடமுள்ள செல்வம் பயன் படும்.

157. அறிஞரின் பாராட்டுதலை ப் பெறும் வரை செய்முறைச் சிறப்பைப் பெற்றதாக மதிக்கமாட்டேன்.

158. எதிர்படுகிற மங்கள நிகழ்ச்சி செய்த பணியின் நிறைவை உறுதிப்படுத்தும்.

159. உயிரின் இறுதிவரை செல்வத்தைத் தேட வேண்டும். அது கிடைத்தற்கரிது எனக் கருதக்கூடாது.

160. மாமரம் பழுத்தால் வணங்கி நிற்கும். ஆமணக்கு பழுத்தால் தலை நிமிர்ந்து நிற்கும்.

161. சேமிப்பிலும் கஷ்டம், செலவிலும் கஷ்டம், பொருள் கஷ்டத்தின் இருப்பிடம்.

162. தொடங்கிய பணியைச் சிறந்தவர் கைவிடமாட்டார்.

163. தொடங்கிய பணி செயற்கெளியதல்ல வெனினும் நடுவில் ஒய்வு மேலோருக்கு ஏது?

164. தொடக்கத்திற்கேற்ப முன்னேற்றம்.

165. நேர்மையற்றவரிடம் நேர்மை நல்வழி அல்ல.

166. துயருற்றவனைக் காக்கவே ஆட்சியாளருக்கு ஆயுதம் தேவை. ஒரு தீதும் செய்யாதவனை அடிக்க அல்ல.

167. பெருந்தன்மையை இயல்பாகக் கொண்டவருக்கு எதில் பொறாமை வரும்?

168. பெருந்தன்மையுள்ளவர் தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்.

169. கல்வி சோம்பலால் தடைபடும்.

170. சந்தன மரம் நச்சுப்பாம்புகளால் சுற்றப்பட்டாலும் விஷமாகுமா?

171. முன் பிறவியில் ஏற்பட்ட அன்புத் தொடர்பு இப்பிறவியில் எளிதில் பிணைக்கும்.

172. அண்டி நிற்குமிடத்தை ஒட்டிச் சிறுமையும், பெருமையும் கிட்டும். விந்தியமலையில் மலை போல் காட்சி தருகிற யானைகள் கண்ணாடியில் மிகச் சிறியவையாகும்.

173. உணவு தூயதாயின் உள்ளம் தூயதாகும்.

174. நட்பு கூட ஏழடி நடப்பதற்குள் அமையும் என்பர்.

175. தானமோ பிறருக்கு உதவுவதோ நம் விருப்பத்தை ஒட்டியது. அதன் பயன் அதைப் பெறும்வரை ஒட்டி இருக்கும்.

176. ஒருவனுடன் ஆழ்ந்த நட்பை விரும்பினால், அவனுடன் பேச்சால் கலகம், பணத் தகறாறு, அவன் மனைவி பற்றிய அவதூறு இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

177. தானே தன் சிறப்பைப் பெரிதாகக் கூறுபவன் இந்திரனாயினும் மதிப்பிழக்கிறான்.

178. பெரும் விறகுப் பொதியை எரிக்கிற நெருப்பும் ஒளியால் சூரியனை மீற முடியாது.

179. பெருமனம் கொண்ட பெரியோர் மனம் சில ஸமயம், பாறை போன்று கடினமாயிருக்கும். உதவி புரிந்த உடன் தூர விலகிச் செல்வர், செய்த உதவிக்குப் பிரதியாக ஏதேனும் எதிர் பார்க்க நேருமோ என்ற பயத்தால்.

180. அன்பிற்குரியவனை அறவழியில் இணைக்க வேண்டும்.

181. அன்பிறகுரியவரின் பிரிவு பெண்களுக்குத் தாங்க வொணாத துயரைத் தரும்.

182. அன்பிற்குரியவர் மூலமே தான் சோகம் நேரும்.

183. அசூயை பகுத்தறிவிற்கு எதிரி.

184. தவிர்க்கத்தக்க ஹிதமற்ற வழியிலிருந்து சிறிது சிறிதாக விலக வேண்டும். அதே போன்று ஹிதமானவற்றையும் சிறுகச் சிறுகப் பழக வேண்டும். அதற்கான முறை பின் வருமாறு. ஒவ்வாதது பழக்கப்பட்டிருந்தால் நான்கில் ஒரு பங்கு அதில் குறைத்துப் பழகலாம். அதுவும் துன்பம் தந்தால் 16ல் ஒரு பங்கைத் தவிர்க்கலாம். ஹிதமானதைப் பழகும் போதும் நடு நடுவே 1-2-3 நாட்கள் வெளிவிட்டுப் பழகலாம்.

185.எதேச்சையாக நேர்ந்த பழக்கமும் உயர்வைத் தரும்.

186. பெரும் இடையூறுகளே மக்களின் உயர்வின் பொருட்டும் நேரலாம்.

187. படிப்படியாக நேர்கிற முன்னேற்றமே பெரியோரின் மனத்தை அதிகம் கவரும்.

188. வாய் வீரனை விடச் செயல் வீரன் மேலோங்கி நிற்கிறான்.

189. தன் மக்களுக்கேற்படுகிற ஆபத்தை மேலோர் காண விரும்பமாட்டார்.

190. உற்சாகமொன்றையே சிறப்பாகக் கொண்ட வீரனின் இதயத்தில் துயரம் இடம் பெறாது.

191. பெருமனமும் பெரு நடைமுறையும் கொண்டவருக்கு உலகமே குடும்பம்.

192. பெருமனம் கொண்டவனை லக்ஷ்மி தானே சென்றடைவாள்.

193. பெருமனமுள்ளவனுக்குப் பணம் புல்லுக்குச் சமம். சூரனுக்கு மரணம் புல்லுக்குச் சமம். பற்றற்றவனுக்கு வீடு புல்லுக்கு சமம்.

194. சூரியன் உதித்தபின் மின்மினிப் பூச்சியோ சந்திரனோ ஒளி தராது. உள்ளத்தில் ஆத்மானந்தம் தோன்றிய பின் "நான்", c இந்த உலகம், என எதுவுமில்லை.

195. பூ முன்னதாகத் தோன்றும், பிறகு காய் , மேகம் தோன்றுவது முன் மழை நீர் பின்னர், காரண காரியங்களுக்கு இதுவே வரிசை.

196. சூரியன் சிவந்தவனாகவே (பற்றுள்ளவனாகவே) உதித்துச் சிவந்தவனாகவே மறைகிறான்.

197. பணிகள் நன்முயற்சியில் மட்டும் நிறைவுறும்;மனக்கோட்டையால் அல்ல.

198.முயற்சிமிக்க ஈடுபாடே மனிதனின் அடையாளம்.

199. முயற்சியின் பணியில் ஈடுபடுகிற உயர்ந்த மனிதனையே லக்ஷ்மி நாடுவாள்.

200. முயற்சியுடன் பணியில் ஈடுபட அங்கு ஏழ்மை இருக்காது.

201. நடத்தை கெட்ட எவன் பிறருக்கு இன்பமளிப்பான்?

202. மேனிலையடைந்தவன் அவமதிப்பைப் பொறுக்க மாட்டான்.

203. எதிரி தனக்கு இடையூறு விளைவித்துக் கொண்டேயிருந்தாலும் தான் உதவி செய்வதில் முனைந்திருக்க வேண்டும்.

204. பிறருக்கோ தனக்கோ உதவாமல் ஏடுகளைத் தொகுப்பதுடன் நின்று சுமையாகிவிட்ட கல்வியால் ஏது பயன்?

205. உபகாரமும் ஒழுக்கம் கெட்டவனுக்குச் செய்யக் கூடாது.

206. இயல்பாகப் பிறருக்கு உதவிய பின் அவர்களுக்குப் பெரியோர் இடையூறு விளைவிக்கமாட்டார்.

207. பிறர் தாமே தனக்குக் கேடு விளைவித்துக் கொள்வதில் முனைந்த போதும் நல்லோர் நல்வழி காட்டுவதில் முனைவர்.

208. மூர்க்கனுக்கு வழிகாட்டுவது அவனை வெறிக்கு ஆளாக்கும். அமைதிக்கல்ல.

209. அழிவை நெருங்குபவன் இதமான நல்வார்த்தையைக் கேட்க மாட்டான்.

210. உடல் சிறுத்தவனாயினும் நடைமுறை அறிந்தவனாயின் அவனை சூரர்களும் வெல்ல முடியாது.

211. அறிவாளி எளிய நற்செயல்முறை பற்றி சிந்திக்கும் போதே செயல்முறைப் பிழையால் நேரவிருக்கிற அபாயத்தையும் எதிர் நோக்க வேண்டும்.

212. வழிமுறையறிந்து செய்ய முடிவதை வன்முறையால் செய்ய இயலாது.

213. நல்லுபாயமும் தைரியமுமே இடுக்கண்ணை எதிர்க்கிற இரு ஆயுதங்கள்.

214. சிறுகச் சிறுகச் சேமித்த செல்வத்திற்கு தானம் ஒன்றே பாதுகாப்பு.

215. எது இவனால் தாங்க முடியாதது. எது இவனால் தாங்கக் கூடியது என விபத்துக்கள் தள்ளி நின்று சிந்திக்கமாட்டா.

216. நற்செயல் என்ற விதை நல்லவயலில் விதைக்கப்பட பெரும் நற்பயனைத் தரும்.

217. கரிக்கட்டி சூடானால் பொசுக்கும். சில்லிட்டால் கையைக் கரியதாக்கும்.

218. நேர்மை ஒருவனால் எளிதில் கடைபிடிக்க இயலுமானால் பிறருக்குக் கேடு விளைவிப்பது அவனது சுயநலமாக இராது.

219.கடனை வைத்த தந்தை எதிரி, ஒழுக்கம் கெட்ட தாய் எதிரி. அடங்காத மனைவி எதிரி. அறிவற்ற பிள்ளை எதிரி.

220. கடன், எதிரி, நோய் இவற்றை மீதமில்லாமல் செய்ய வேண்டும்.

221. செல்வச் செழிப்பு சித்தத்தை குழப்பும்.

222. இருவரது மனமும் ஒன்றாகி இணைந்து விட்டால், நடவாதது ஏது?

223. இரவில் ஒரே மரத்தை வந்தடைந்த பல்வகைப் பறவைகள் விடிந்ததும் பத்து திக்குகளிலும் பறந்து சென்று விட்டன. இதில் வருந்த என்ன இருக்கிறது? (உற்றார், உறவினர், நண்பர் எனச் சிறிதுநேரம் கூடி வாழ்பவர் இயல்பாகப் பிரியும் போது வருந்துவது ஏன்?)

224. விஷமோ அருந்தியவன் ஒருவனை மட்டும் கொல்லும். கடனோ பிள்ளை பேரன் என எல்லோரையும் கொல்லும்.

225. சந்திரனது ஒளி வட்டத்தில் அவனது மரு மறைவது போல் சிறப்புகள் எண்ணற்றுக் கூடும்போது ஒரு குறை மறைந்துவிடும்.

226. உயிருடனிருந்தால் நூறாண்டுகளுக்குப் பின்னராவது ஆனந்தம் வந்தடையும்.

227. இடம் பொருள் ஏவலுக்கேற்ற சொல், தியாகத்தால் ஒளிர்கிற செல்வம், நல்லொழுக்கத்தால் மிளிர்கிற கல்வியறிவு இவை எப்போதும் நல்லோரால் மதிக்கப் பெறுபவை.

228. நாடியதை அடைவதில் முனைந்துள்ள மனத்தையும், பள்ளத்தை நோக்கிப் பாயும் நீரையும் எவனால் எதிர்த்துத் திசை திருப்பமுடியும்?

229. நல்லோரின் தொண்டையில் (பேச்சில்) அமுதமுள்ளது.

230. உலோபிக்கு வெளியிலுள்ள உயிர் அனேகமாக அவன் சேமித்த செல்வமே.

231. கருணையால் இளகிய மனமுள்ள நல்லோர் எல்லோருக்கும் காரணமின்றி பந்துக்களாவர்.

232. பெரியோர்களை அண்டி நிற்பது அவசியம்.

233. உலகை அணைத்துச் செல்வது அவசியம்.

234. (எண்ணத்துடன் நில்லாமல்) செயல் புரியத் தொடங்குபவனிடமே லக்ஷ்மி தங்குவாள்.

235. கல்பக விருட்சமாயினும் அதிருஷ்டமில்லாதவனிடம் புரசமரமாகிவிடும்.

236. கட்டுப்பாடுள்ளவரை அழிக்கின்ற கலியில் வித்தைகளும் இளைத்துவிடும்.

237. பிறரது இல்லத்தில் தங்குவதும், பிறர் தருகிற உணவும் கொடும் கஷ்டம்.

238. தனது குடும்பத்தைப் போஷிப்பதில் பொருளை செலவிடுவது தியாகமா? (கடமையல்லவா?)

239. இம்மையில் எதனிடமிருந்து பயம்?மரணத்திலிருந்து தானே?

240. நல்லோரிணக்கம் யாருக்குத்தான் நன்மைதராது?

241. இளமை பெரியோரின் கட்டுக்குட்படாவிடில் தறிகெட்டலையாதா?

242. தனித்து சுகமோ, துக்கமோ எவருக்கு ஏற்படுகிறது?சக்கரம் சுழல்வது போல் கீழும் மேலும் நிலை மாறுபடுகிறது.

243. எவன் அறிஞன்?நல்லது கெட்டது பகுத்தறிபவன்.

244. சிறந்த நல்வழி எது?அறவழி?

245. எவன் தூயவன்?மனத்தூய்மை உள்ளவனே.

246. எது தூக்கம்?மனிதனின் அறியாமையே.

247. துயரமெனும் மரத்தின் வேர் கெட்டவருடன் இணைவதே.

248. காமநோய் பிடித்தவனுக்குப் பயமோ, வெட்கமோ இருக்காது.

249. காமத்தால் துயருற்றவர் அறிவுள்ளது அறிவற்றது என இனம் கண்டறியும் இயல்பு குன்றியவர்களே.

250. உரிய நேரத்தில் பயன் பெறாத கல்வி கல்வியல்ல, செல்வம் செல்வமல்ல.

251. நேரம் நேரும் போது எதிரியும் நண்பனாவான். ஆனால் எப்போது மல்ல.

252. உரிய நேரத்தில் தொடங்கப் பெற்ற உபாயங்களே பயன் தருகின்றன.

253. உரிய வேளையில் சிறிதளவு தந்ததும் பெரிதாகும். வேண்டாத போது அதிக அளவில் தந்தாலும் என்ன பயன்?

254. தீர்த்த யாத்திரை பலன் தர நாளாகும். நல்லோரிணக்கம் உடன் நன்மை தரும்.

255. வினைபயன் தரும் வேளையை மீற முடியாது.

256. தக்க செயல், தகாத செயல் என வரையறுப்பதில் பேரறிவாளனும் குழம்புவான்.

257. கல்வியறிவு கற்பகக் கொடி போல் எதனைத் தான் சாதிக்காது?

258. பெருமைக்கு எது அடிப்படை? பிறரிடம் வேண்டிப்பெறாமை.

259. எது ஜட நிலை? திறமையிருந்தும் செயல் பழகாதது.

260. எது ஜட நிலை?சொல்லிக் கொடுத்தும் மனத்தில் பதியாதிருப்பது.

261. எது நல்வாழ்வு?பிறர்குறை காண முடியாது வாழ்வது.

262. எழுத்தறிவில்லாதவன் வாழ்ந்தென்ன பயன்?

263. பால் தராத பசுவால் என்ன பயன்?விரும்பியதை நிறைவு பெறச்செய்யாத பரிவால் என்ன பயன்?

264. துக்கம் எது?மன நிறைவின்மையே.

265. பிழைப்பைக் காக்காத, திறமையிருந்து என்ன பயன்?

266. மனிதரிடத்தில் மிக மிக விரும்பத்தக்கது எது?தனக்கும் பிறருக்கும் நன்மை பயக்கும்படி வாழ்வது.

267. எது சிறுமை?நீசனிடம் வேண்டி நிற்பது.

268. தேவையுள்ளவனுக்குப் பயன் படாத செல்வமிருந்து என்ன பயன்?

269. ஸ¨ரியன் தனக்கு முன்னதாக அருணனை வைத்திராவிட்டால் அருணன் இருட்டை பிளந்து விலக்குபவனாக முடியுமா?

270. எது விஷம்?பெரியோரை மதிக்காதிருப்பது.

271. எது ஸத்தியம்?உயிரனத்திற்கு நன்மை தருவது.

272. தவறான இடத்தில் பயன்படுகிற கற்றறிவால் எதைச் சாதிக்க முடியும்?

273. எது சுகம்? உலகில் மக்கள் நோயற்றிருப்பதே.

274. எது சுகம்?எதிலும் பற்றின்மை.

275. வாலிபமும் செல்வமும் குறுகிய காலத்தில் பயன்படுபவையே.

276. பெருமனம் படைத்தவன் தனக்கு ஒருவன் தக்க ஸமயத்தில் உதவியதை உணர்ந்து மகிழ்ந்த நிலையில் திருப்பி எதைத்தான் தரமாட்டான்?

277. எது நிலை மதிக்க முடியாதது? நேரத்தில் உதவியது.

278. இனிய உடலமைப்புள்ளவர்களுக்கு எதுதான் அழகு ஊட்டுகிற அணியாகாது?

279. படபடப்புடன் செயல் புரிபவனுக்கு எல்லாமே திறமையைக் குலைக்கும்.

280. மனத்திடமுள்ளவனுக்கு எது களைப்பு தரும்?

281. மன வலிவுள்ளவனுக்குச் செய்ய இயலாதது எதுவுமில்லை.

282. நண்பர்கள் தனக்கு உதவுமாறு தூண்டிய பிறகே நண்பர் விரும்பியதையும் அவர்களுக்கு நல்லதையும் செய்வார்கள் எனில் அப்படி உதவுகிற நண்பர்கள் ஆத்ம திருப்தி பெற முடியுமா?

283. எது ஏற்கத்தக்கது?பெரியோரின் சொல்.

284. எதில் முயற்சி தேவை?கல்வியளிப்பதில், நல்ல மருத்துவமளிப்பதில், பொருள் வழங்குவதில்.

285. வாழவகையற்ற நாட்டில் பொருளீட்டுவதும், கெட்ட பிள்ளையைப் பெற்றவன் (தன் மறைவிற்குப் பின்) எள்ளும் நீரும் கிட்டும் என எதிர்பார்ப்பதும் கெட்ட மனைவியையடைந்து வீட்டில் சுகம் எதிர்பார்ப்பதும் , கெட்ட மாணவனுக்குக் கல்வி புகட்டி புகழ் எதிர்பார்ப்பதும் எங்ஙனம் நிறைவேறும்?

286. கெட்ட உணவால் பகல் வீணானது. தவறான சிந்தனையால் இரவு வீணானது. கெட்ட பேச்சால் வாய் வீணானது. தேவைப்பட்டபோது கொடுக்காததால் பணம் வீணானது.

287. ரகசியமாக தான் செய்த கெட்ட செயலில் உதவிய பணியாளரிடம் எஜமானன் பணிய நேரிடும்.

288. கெட்ட அரசனால் தேசம் அழியும். கெட்ட பேச்சால் நட்பு அழியும். கலகத்தால் வீடு அழியும். கெட்ட செயலால் புகழ் அழியும்.

289. அறிவாளிகள் தன்பணி நிறைவுற, தவறான நேரத்தில் முன் வரமாட்டார்.

290. இம்மையில் உரிய பணிகளைச் செய்து கொண்டே நூறாண்டுகள் வாழத் திட்டமிடவேண்டும்.

291. குலச் செருக்கை விடு- அதன் வருங்காலம் மறைந்துள்ளது. செல்வச் செருக்கை விடு- அது கண்ணெதிரே மறையும். கல்விச் செருக்கை விடு- அது விலை கொடுத்து வாங்கக் கூடியது. அழகுச் செருக்கை விடு - காலம் அதனை விழுங்குமே.

292. நற்குலத்தோருடன் தொடர்பும் அறிவாளிகளுடன் நட்பும், உறவினருடன் கூடுவதும் கொண்டவன் அழியமாட்டான்.

293. கந்தலாடையும் அழுக்கின்மையால் அழகாகத் தோன்றுகிறது.

294. தகாத இடத்தில் நுழைவதால் நல்லவனும் தாக்கப் பெறுவான். அக்னி தேவனும் இரும்புத் துண்டில் இருந்தால் கம்மாரரால் சம்மட்டியடி பெறுகிறார்.

295. செய்ததை மறுபடி செய்வதற்கில்லை. இறந்தவன் மறுபடி இறப்பதில்லை. சென்றதைப் பற்றி வருந்துவதற்கில்லை. இதே வேதமறிந்தவரின் நிச்சயம்.

296. செய் நன்றி மறந்தவர் பணத்தாசையால் குருடாகி செய்த உதவியையும் கருத்தில் கொள்ள மாட்டார்.

297. நன்றி கெட்டவர் வெகு நாட்களின் உழைப்பால் விரும்பியதைப் பெற்றிருந்தும் கட்டாயம் வீழ்ச்சியடைவர்.

298. செய்நன்றி மறந்தவனுக்கு கழுவாய் கிடையாது.

299.நன்றியறிவுள்ளவனும் நல்ல சுற்றமுள்ளவனுமான பிரபுவிற்குச் செய்த பணிவிடை வீணாவதில்லை.

300. நேரம் கடந்த செயல் வீண்.

301. காரியம் முடிந்ததும் எஜமானனை எதிர்ப்பான். திருமணமானதும் தாயை எதிர்ப்பான். குழந்தை பிறந்ததும் கணவானை எதிர்ப்பாள். நோய் நீங்கியதும் மருத்துவரை எதிர்ப்பர்.

302. செல்வம் கஞ்சனைப் பின் தொடரும்.

303. கிருபணனைப் போல் வள்ளல் இதுவரை தோன்றியதுமில்லை. இனித் தோன்றப் போவதுமில்லை. அவன்தான் கையால் தொடாமலேயே (இறந்ததும்) அனைத்தையும் பிறருக்கு வழங்குகிறானல்லவா?

304. இளைத்தவனிடம் எவனுக்கு கரிசனம் உள்ளது?

305. எவை திருடர்கள்?நாம் நாடுகிற பொருள்களே.

306. அறியாமையில் சிலரும், கவனக் குறைவால் சிலரும், அறிவால் ஏற்பட்டதிமிரால் சிலரும் அழிந்தனர். சிலர் இவ்வாறு அழிந்தவர்களால் அழிக்கப்படுகிறார்கள்.

307. பணியின் தொடக்கமும் அதற்கான முயற்சியும் வீணாகும்படி செயல்புரிபவர் அவமதிப்பிற்கிடமாக ஏன் ஆகமாட்டார்?

308. எவர் நிலவு போன்று மன அமைதி தருபவர்?நல்லோரே.

309. நல்லோரிடம் செய்த கோரிக்கை விரும்பியதைத் தருவதாக ஆகாதா?

310. பெரும் பேராசையால் அறிவு குருடான நிலை எவருக்குத் தான் கேடு விளைவிக்காது?

311. எவன் விழித்திருப்பான்?பகுத்தறிவுள்ளவன்.

312. திறமை மிக்கவருக்கு அதிகச்சுமை ஆவது எது?கடும் உழைப்புள்ளவருக்கு எது தூரம்?கல்வியால் சிறந்தவனுக்கு எது வெளிநாடு?அன்புடன் பேசுபவருக்கு மாற்றான் எவன்?

313. எது கடமை?ஜீவகாருண்யம்.

314. செல்வத்தால் திருப்தி பெறாதவன் எவன்?

315. எது நரகம்?பிறருக்கு அடிமையாயிருப்பது.

316. எவன் குருடன்?தவறான செயலில் ஈடுபட்டவன். எவன் செவிடு?தவறான செயலென்று குறிப்பிடும் போதும் கேளாதவன். எவன் ஊமை?உரிய நேரத்தில் இனிதாகப் பேச அறியாதவன்.

317. பாராட்டத் தக்கவரைப் பற்றி அவச்சொல்லா?ஒழுக்கம் கெட்டவரிடம் செல்வமா? திடீரென ஏற்பட்ட அற்பச் செழிப்பு நன்னடத்தையுள்ளவரையும் தூக்கி எரியும்.

318. செல்வம் சேர்ந்தும் செருக்கடையாதவன் எவன்?

319. எந்த யாசகன் பெருமையடைந்திருக்கிறான்.

320. காமத்தால் மனம் குருடனானவனின் இதயத்தில் பகுத்தறிவிற்கு ஏது இடம்?

321. கெட்டவனின் வலையில் விழுந்த எவன் நலத்துடன் வாழ்ந்திருக்கிறான்?

322. எவன் எதிரி?முயற்சியின்றி சோம்பித்திரிபவன்.

323.கெட்ட பழக்கமுள்ள எவன் தான் செல்லும் வழி நேரானதா நேரல்லாதா என்று உற்று நோக்குகிறான்?

324. தன் தலையின் நிழலையும் விதியின் போக்கையும் தாண்டிச் செல்பவன் எவன்?

325. பெரியோர்களின் செயல் நிறைவு, அவர்களின் மன வலிவை ஒட்டியது. சாதனங்களையல்ல.

326. விதி எதிர்க்கும் போது நண்பனும் எதிரியாவான்.

327. கோபத்தைப் பொறுமையாலும், பேராசையைக் கிடைத்ததில் மகிழ்ச்சியாலும் எப்போதும் அடக்குவாய்.

328. கோபம் எளிதில் வெல்ல இயலாத எதிரி. பேராசை தீராநோய். எல்லா உயிரினத்திற்கும் நன்மை புரிபவனே நல்லவன். பரிவில்லாதவன் கெட்டவன்.

329. கோபம் அறிவிற்குப் பெருந்தடை.

330. உழைப்பால் ஏற்பட்ட களைப்பு பயன் கண்டதும் நீங்கும். புத்துணர்ச்சி வரும்.

331. நொடிக்கு நொடி சிறு சிறு துளியாக கல்வியையும், பொருளையும் சேமிக்க வேண்டும்.

332. நொடிக்கு நொடி புதுப்புது தோற்றம் பெறுவதே அழகின் சிறப்பு.

333. வெளிப் பொருள் நாட்டம் மிக்க முட்டாள் பகுத்தறிவதைப் பொறுக்க மாட்டான்.

334. பொறுமை எனும் கத்தியைக் கையில் ஏந்தியவனை துஷ்டன் என்ன செய்ய முடியும்?

335. பொறுமைக்கீடான தவமும், மனநிறைவிற்கீடான சுகமும், பேராசைக்கு நிகரான நோயும், தயையை விடப் பெரிய தர்மமும் இல்லை.

336. கடலின் உப்புநீரைக் குடித்து மேகம் இனிய நீரைப் பொழிகிறது.

337. நொடித்த நிலையிலும் நற்குலத்துதித்தவன் ஒழுக்கத்தை கைவிடமாட்டான்.

338. தன்னைப் புகலிடமாக அடைந்தவன் அற்பனாயினும் நல்லோருக்கு அவன் தன்னைச் சார்ந்தவன் என்ற அபிமானமிருக்கும்.

339. பசியால் துன்புற்றவனுக்கு சுவையோ, வேளையோ (பக்வமோ) இல்லை. கல்வி பற்றிக் கவலைப் படுபவனுக்கு சுகமோ,துக்கமோ இல்லை.

340. துஷ்டன் கடுகளவுள்ள பிறர் குறையைக் கண் காணிப்பான். வில்வக்காயாளவு பெரியதன் குறையைக் காணாதிருப்பான்.

341. மனித இயல்பு முன் செல்பவரைக் குருட்டுத் தனமாகப் பின் தொடரும். உண்மை நிலை கண்டறியாது.

342. வயது கடந்த பின்னும் கட்டாயமாகக் கல்வி பெற வேண்டும். இப்பிறப்பில் பயன்படாவிடினும் மறு பிறவியில் எளிதில் அது கிட்டும்.

343. குணச் சிறப்பை அழகும், குலத்தை ஒழுக்கமும், கல்வியை அறிவும், செல்வத்தை அதன் அனுபவ இன்பமும் அழகுபடுத்தும்.

344. குருவின் பணிவிடையைலோ, நிறையச் செல்வமளித்தோ, கற்பதில் ஆர்வத்தாலோ கல்வியைப் பெறலாம். நான்காம் உபாயம் ஏதுமில்லை.

345. குணங்களே பெருமைக்கு இட்டுச் செல்பவை. கூட்டமல்ல.

346. பிரிவால் ஏற்படும் கொடிய துயரத்தையும் மறுபடி சேர்வோம் என்ற எதிர்பார்ப்பு பொறுத்துக் கொள்ளச் செய்கிறது.

347. அறிவாளிகள் அன்புடன் பாபிகளின் வீட்டில் நுழைய விரும்புவதில்லை.

348. நல்லெண்ணமுள்ளவர் பெரியோருக்குப் பணிவிடை புரிந்து தமக்கு அவர்களை அனுகூலமாக்குவதையே பெரிதும்.

349. விதி அனுகூலமாக இருக்கையில் கற்களும் கசியும்.

350. துன்பமும் இன்பமும் சக்கிரம் போல் சுற்றிவரும்.

351. கண்ணால் தூய்மை உணர்ந்து காலடி வைப்பாய். துணியால் வடிக்கட்டி நீர் பருகுவாய் உண்மையால் தூய்மை பெற்ற

பேச்சைப் பேசுவாய்.

352. செல்வத்திற்கு நான்கு சுற்றத்தினர். தர்மம், அக்னி, அரசன், திருடன் என. தர்மமே மூத்தவர். மூத்தவரை அவமதித்தால் மற்ற மூவரும் கோபமடைவர்.

353. ஒரு காலை ஊன்றி மற்ற காலை வைத்து அறிவாளி நடப்பான். அடிவைக்க வேண்டிய இடத்தை உற்று நோக்காமல் முன்னிருந்த இடத்தை விட்டுப் பெயரக்கூடாது.

354. ஆபத்து வருமுன்னரே அதற்கான எதிர்நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டும். வீடு நெருப்பு பிடித்து எரிந்த பின் கிணறு வெட்டுவது தகுந்ததல்ல.

355. ஜநநீ (தாய்) , ஜநகர் (தந்தை) , ஜாந்ஹவீ (கங்கை) , ஜநார்தநர் (நாராயணர்) , ஜன்மபூமி (தாய்நாடு) என ஐந்து ஜவை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் வழிபாடு பெற்றவர்கள்.

356. தாயும் தாய் நாடும் ஸ்வர்கத்தை விட பெருமைமிக்கவை.

357. பிறரது மனம் திருப்தியடையச் செய்வதில் தேர்ந்தவனாக மக்களின் நோக்கத்தைக் கண்டுபிடித்து அவனவன் மகிழும்படி அனுகூலமாக நடக்க வேண்டும்.

358. வயதின் முதுமையால் உருவிழந்தோ, வயிற்றுனுட்சென்றதால் செரித்ததோ ஜீர்ணமானதல்ல. மனத்தால் ஏற்கப்பட்டுச் சுய உணர்வானதே ஜீர்ணம்.

359. இனத்தைக் கொண்டே ஒருவன் தண்டிக்கப் பெறுவதோ பாராட்டப் பெறுவதோ சில இடத்தில் நடைபெறலாம். அவனவனது நடைமுறையைக் கொண்டு தண்டிக்கப் பெறுவதோ பாராட்டப் பெறுவதோ நடைபெற வேண்டும்.

360. கடும் உழைப்பை யட்டியே மேன்மைகள் ஏற்படும். வேறு உபாயம் இல்லை.

361. வாதங்களில் தீர்மானம் ஏற்படுவதில்லை.

362. அவனவனது மனத்தை ஈர்த்த பொருளே அவனவனுக்கு இனியது.

363. எள்ளளவு செய்த உதவியை மலை போல் நல்லவர் மதிப்பர்.

364. பேராற்றல் மிக்கவருடைய வயது முக்கியமாக கொள்ளப்படுவதில்லை.

365. அறம், பொருள், இன்பம் என்ற மூன்றிற்கும் பயன்படாத எந்தப் பணியையும் தொடங்கக்கூடாது. இம்மூன்றிற்கும் விரோதமின்றி எல்லாப் பணிகளிலும் நடுநிலை நின்று ஒவ்வொரு அடியையும் வைக்க வேண்டும்.

366. பிறருக்கு அளிப்பது, இனிய பேச்சு, தைர்யம், உசிதமறிதல் இவை நான்கும் கூடப்பிறந்த குணங்கள். பழக்கத்தால் வருபவையல்ல.

367. கொடுப்பதை மனமொப்பிக் கொடுக்க வேண்டும். பிறகு அது குறித்து நோகக் கூடாது.

368. முறை தவறிக்கற்ற கல்வி விஷமாகும்.

369. நெருக்கடியில் துயரடைந்தவருக்குத் துணையாக,கோபமடைந்தவரை ஸமாதானப் படுத்துபவராக, பயந்தவருக்கு நம்பிக்கை தருபவராக இருத்தல் வேண்டும்.

370. கெட்ட மனிதன் சேமித்த செல்வம் அரசராலும் திருடராலும் அனுபவிக்கப் பெறும்.

371. சீடனின் மனக்கொதிப்பை (மனத்திலுள்ள ஐயத்தை ) ப் போக்குகிற குரு கிடைப்பது அரிது.

372. நன்கு பிரிந்ததை இணைப்பது கடினம். இணைந்ததைப் பிரிப்பதும் கடினம். பிரிந்தபின்

இணைந்த அன்பு துக்கத்தையே தரும்.

373. உடலழிவதையும் நல்லவர் விரும்பி ஏற்பர். வழி தவறிய செயலை அல்ல. (கட்டுப்பாடின்மையை அல்ல)

374. வலிவு மிக்கவராலும் விதி மீற முடியாது.

375. பிறரைத் துன்புறுத்தித் தான் சுகம் பெற ஏற்படுகிற உடலுணர்வையும் பெண்ணை பலாத்காரத்துடன் அனுபவிப்பது, திருட்டு ஹிம்ஸை முதலானவைகளையும் கட்டாயம் தடுத்து அடக்க வேண்டும்.

376. உடல் வாக்கு மனம் இவற்றின் செயல்களை களைப்பு ஏற்படுத்துவதற்கு முந்னரே நிறுத்த வேண்டும்.

377. சூதாட்டம், வேறு புத்தகப் படிப்பு, வாத்யம், நாடகத்தில் ஆர்வம், காமம், சோம்பல், தூக்கம் இவை ஆறும் கல்விக்கு இடையூறு விளைவிப்பவை.

378. பிறர் கோரியதை நிறைவுறச் செய்பவன், பிறரிடம் எதனையும் கோராதவன் என்ற இருவர் இதுவரை உலகில் தோன்றவுமில்லை. இனித்தோன்றப் போவதுமில்லை.

379. ஏழை,ஆனால் ஆசைப்படுபவன், எதற்கும் சக்தியற்றவன், ஆனால் கோபம் கொள்பவன். இவ்விருவரும் என்றும் சுகம் பெறுவதில்லை.

380. எல்லாம் வல்லவன், ஆனால் பொறுமையுள்ளவன், ஏழை ஆனால் வாரி வழங்குபவன் என் இவ்விருவரும் ஸ்வர்கத்தை தாண்டி நிற்பவர்.

381. அறவழியில் தவறியவன் எல்லாவற்றிலும் தவறி விழுவான்.

382. உயிரினத்திற்கும் பரிவு, பிறருக்கு உதவுதல், தானம், பொறுமை, அசூயையின்மை, உண்மை பேசுதல், பேராசையின்மை, மனத்தெளிவு இவை தர்மத்தின் கோலங்கள்.

383. அறம் பொருள் இன்பம் முக்தி என்ற நான்கில் ஒன்று கூட இடம் பெறாதவனின் வாழ்க்கை ஆட்டுக்கழுத்தில் முலை போன்று தொங்கும் சதைபோல் பயனற்றது.

384. கடமையுணர்வும் பெற்ற பொருளைக் காக்கும் திறமையும் அவற்றை அறிவதற்கான ஆர்வமுமில்லையெனில் அவனுக்குக் கல்வி வழங்குவது நல்ல விதையை உவர் மண்ணில் விதைப்பது போல் வீணே.

385. சாஸ்திரம் அல்லது கலை கல்லாதவன், உழைப்பதில் ஆர்வமில்லாதவன், வீணாக மனக்கோட்டை கட்டுபவன், உற்றார் உறவினரிடம் தோற்றவன் இவர்களது வாழ்க்கை வீண்.

386. இவன், தனக்கு எதிரி என்றோ, இவனுக்கு தான் எதிரி என்றோ விளம்பரப்படுத்தக் கூடாது. தனக்கு நேர்ந்த அவமானத்தையும் தன் யஜமானன் தன்னிடம் அன்புடன் நடவாததையும் வெளிப்படுத்தக்கூடாது.

387. நாளை என்ன நடக்கவிருக்கிறது என எவரும் அறியார். அதனால் நாளை செய்ய வேண்டியதை இன்றே அறிவாளி செய்வான்.

388. செயல்பட வேண்டிய வேளையைத் தள்ளிப் போடக்கூடாது.

389. இரவில் மரத்தடி, குறுக்குப் பாதை, கல்லறை, நாற்சந்தி, கோயில் இவற்றில் தங்காதே. கசாப்பு, காடு, பழையவீடு, மயானம் இவற்றில் பகலிலும் தங்காதே.

390. முதலை தன்னிடத்திலிருக்கும் போது பெரும் யானையையும் இழுக்கும். தன்னிடமகன்றால் நாயாலும் அவமதிக்கப் பெறும்.

391. அன்புக்குகந்தவரின் நினைவில்லுள்ளவரை ஒருவன் இறக்கவில்லை.

392. கூட்டத்தில் முன் செல்லாதே. கார்யம் பலித்தால் கிட்டும் பயன் ஒரே விதம். கார்யம் கெட்டிடில் முன் நிற்பவன் அடிபடுவான்.

393. சலன இயல்புள்ள மனத்தை ஒட்டித் தானும் சுழலக்கூடாது.

394. கல்வியைப் போன்ற உற்றாரோ நோயைப் போன்ற எதிரியோ இல்லை.

395. செயல் புரிகிற நேரத்தை மிகவும் தள்ளிப்போடக் கூடாது;கோபத்தையோ சந்தோஷத்தையோ ஒட்டி உடன் செயல் புரியக்கூடாது.

396. தன் மக்கள் மீது ஆபத்து நேர்வதை உணரவோ, உணராமல் இருக்கவோ, காணவோ, உதாசீனப்படுத்தவோ சுற்றத்தான் ஒப்பமாட்டான்.

397. பெற்றபின் தனத்தை இழந்தவனைப் போல் தனமே இல்லாத ஏழை வருந்த மாட்டான்.

398. ஆற்றைக் கைகளால் கடக்கக்கூடாது. தீச்சூழலை நோக்கிப் போகக்கூடாது.

399. தேவர்கள் ஒருவனை காக்க விரும்பினால் தடி கொண்டு இடையனைப் போல் மிரட்டி வழிகாட்ட மாட்டார்கள். எவரைக் காக்க விரும்புகின்றனரோ அவனுக்கு நல்லறிவைத் தருவர்.

400. ஒருவரிடம் விரோதம் பாராட்டமாட்டார். பிறரிடம் யாசிக்க மாட்டார். பிறரை நிந்திக்க மாட்டார். கூப்பிட்டால் வரமாட்டார் என்பதால் இறைவனும் கல்லானார்.

401. தர்மத்தால் வளர்ச்சி பெற்றவரிடம் வயது மதிக்கப் படுவதில்லை.

402. பேசுபவர் யார் என்பதில் ஆர்வமின்றி பேசப் பெறுகிற பொருளின் சிறப்பையே அறிவாளிகள் மதிப்பர்.

403. போக்கிரி பாராட்டப் பெறுவதால் மட்டுமே அனுகூலமாவான்.

404. பிறரது பொருளில் பேராசை அமைதிக்கு பயன்படாது.

405. மரத்தைப் பெயர்ப்பதில் உள்ள காற்றின் வேகம் கற்குவியலில் வலிவிழக்கிறது.

406. இந்திரியங்களைத் துன்புறுத்தவும் கூடாது. அதிகமாக லாலனையும் செய்யக் கூடாது.

407. அறிவிற்கும் இந்திரியங்களுக்கும் அதிக சுமை தரக்கூடாது.

408. எல்லாம் வல்லவரின் அறிவு நேர் வழியில் செல்லும்.

409. தனக்கு உதவியவனுக்குத் திருப்பி உதவ முன் உதவியவன் விபத்துக்குள்ளாவதை எதிர்பார்க்கிறான்.

410. தாமரை இலைமேல் உள்ள நீர் போல் நிலை கொள்ளாதது எது?

411. அறிவில்லாவிடில் பகுத்தறிவில்லை.

412. இளம் வயதில் மனமடங்கியவனே சாந்தியுள்ளவன். முதுமையால் உடல் வலிவிழந்த நிலையில் சாந்தி எவருக்கு வராது?

413. சோகத்தில் ஆழ்ந்து விடக்கூடாது. வெற்றியில் செருக்கும் தோல்வியில் நொந்து கொள்வதும் கூடாது.

414. தனது மேன்மையை விரும்புபவன் தன்னிச்சையாகச் செயல் படக்கூடாது.

415. நட்பு தூரத்தியிருப்பதால் குலையாது.

416. எல்லோரும் எல்லாவற்றையும் அறிவதில்லை.

417. பிறர் மனநிலை உணர்ந்தவன் நெருக்கடியில் தளர்வதில்லை.

418. மனம் தளர்வதால் ஆபத்து சிறிதும் விலகாது.

419. தயை, அனைவரிடம் நட்பு, தானம், இனிய பேச்சு இவற்றைவிடச் சிறந்தது மனத்தைக் கவர்வது மூவுலகிலும் எதுவுமில்லை.

420. வாயால் நெருப்பை ஊதக் கூடாது. தலை தாழப் படுக்கக் கூடாது. தலை தாழப் படுக்கக் கூடாது.

421. உடலுறுப்புகளை இயல்பிற்கு மாறாகச் செயல்படுத்தக் கூடாது. குந்தி அதிகநேரம் உட்காரக்கூடாது.

422. தெய்வ வழிபாட்டின் போது வேறு செயல் செய்யக்கூடாது. மழை பெய்யும் போது ஒடக்கூடாது.

423. அறவழி மீறுவது நீண்ட செழிப்பைத் தராது.

424. பொய்யைப் போன்று பெரும் பாபமில்லை.

425. சோதித்துப் பார்க்காமல் ஒன்றில் ஆழ்ந்து இறங்கக்கூடாது. இந்திரியங்களின் வசத்தில் செயல்படக்கூடாது.

426. பிறரது திறமையை நம்பிச் செயலைத் தொடங்கக்கூடாது. பணியில் இருவரது கணிப்பும் ஒத்துப் போகாது.

427. சோம்பேறியோ அடம்பிடிப்பவனோ, வஞ்சகனோ, மக்களின் கூக்குரலுக்குப் பயப்படுபவனோ உடனுக்குடன் பலனை எதிர்பாப்ப்பவனோ பொருளைப் பெறமுடியாது.

428. சின்னஞ் சிறு குறை பெரும் நற்செயலைப் பாதிக்காது.

429. கெட்டவருடன் இணைந்து எதனையும் செய்யக் கூடாது.

430. வாயை மூடிக்கொள்ளாமல் தும்மல், சிரிப்பு, கொட்டாவி இவற்றை வெளிப்படுத்தக் கூடாது. மூக்கைக் காரணமின்றி நோண்டக் கூடாது. பூமியைக் கீறக் கூடாது.

431. காமத்திற்கு ஈடான நோயோ, மோகத்திற்கு ஈடான எதிரியோ, கோபத்திற்கு ஈடான நெருப்போ, அறிவிற்கு ஈடான இன்பம் தருவதோ இல்லை.

432. மக்களுக்கு சுகமும், துக்கமும் இல்லாத நிலை கிடையாது.

433. மேகத்திற்குச் சமமான நீரில்லை. சுய வலிவிற்கு ஈடான வலிவில்லை. கண்ணைப் போன்று ஒளியில்லை. உணவைப் போன்று இனியதில்லை.

434. உதிக்கிற சூரியன், மறைகிற சூரியன், பரவிய ஒளி, அமங்களமான ஒளி, மனத்திற்குப் பிடிக்காத ஒளி, இவற்றை உற்று நோக்கக் கூடாது.

435. தனித்திருப்பவனும் எல்லாவற்றையும் நம்புபவனும் எதிலும் ஐயப்படுபவனும் இன்பம் பெறமாட்டான்.

436. பெரியோர் நேரத்தை வீணே கழிக்கமாட்டார்.

437. நீரைக்கடல் கோரிப் பெறுவதில்லை. எப்போதும் நீரால் அது நிரப்பப்டுகிறது. தன்னைத் தகுந்தவனாக்கிக் கொள்ள வேண்டும். தகுதியுள்ளவனைச் செல்வம் தானே சென்றடைகிறது.

438. முழங்காலை மேல் தூக்கி வெகு நேரம் இருக்கக்கூடாது தலையால் பெருஞ் சுமை சுமக்கக் கடாது.

439. கற்பவனுக்கு அறியாமை இல்லை. ஜபிப்பவனுக்குப் பாபமில்லை. மௌனமிருப்பவனுக்குக் கலகமில்லை.

440. தாமரை தன் காலில் நிற்கும் வரை வருணனும், சூரியனும் நண்பர்கள். தன் நிலை

தவறினால் அவ்விருவருமே வாடவும், உலரவும் காரணமாகின்றனர்.

441. பிறர் அறியாமல் விளம்பரப்படுத்தாமல் ப்ரதிபலனை எதிர்பாராமல் பிறர் துயரைத் துடைக்கத் தந்த அற்பப் பொருளும் மிகப் பெரிதாகும்.

442. பிறருக்கு உதவவே மரங்கள் காய்க்கின்றன. ஆறுகள் ஒடுகின்றன;பசுக்கள் பால் கறக்கின்றன.நல்லோரது செல்வம் பயன்படுகிறது.

443. அதிகக் கொடூரமானது, பிறரது குறையைக் கூறுவது, பொய், நேரத்திற் கொவ்வாதது இப்படிப் பேச நேர்ந்த்தால் அதன் வேகத்தை அடக்க வேண்டும்.

444. பிறருக்கு இடையூறு விளைவித்துத் தனக்குச் செல்வம் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

445. பிறருக்கு வழி காட்டும்போது எல்லோரும் நல்வழி நடப்பவராகின்றனர். சுய காரியம் நேரும் போது நல்வழி நடப்பதை மறந்து விடுகின்றனர்.

446. திறமை எங்கும் செயல் நேர்த்தியை உண்டாக்குகிறது.

447. காதால் பருகத் தக்க அமுதம் எது?நல்லோர் உபதேசம் இங்கு பொருந்தும்.

448. புல் கொடுக்கப் பசு பால் தருகிறது. பால் கொடுக்கப் பாம்பு விஷம் தருகிறது. இப்படி இவ்விரண்டும் மாறுபாட்டுடன் பெறுவதற்கேற்றதான தகுதியும், தகுதியின்மையும் பெற்றுள்ளதைப் பகுத்தறிய வேண்டும்.

449. காலைக் காலால் மிதிப்பதோ சொரிந்து விடிவதோ சுத்தி செய்வதோ கூடாது.

450. ஆயாசமின்றி குடிநீர், பயமூட்டிய பின் இனிய உணவு, எது நல்லது?ஆராய்கிறேன். எதில் அமைதியோ அதுவே சுகம்.

451. நடைமுறையும் பேச்சும் எண்ணமும் பாபவழியில் கொண்டவர், புறங்கூறுபவர், கலகத்தில் இன்பம் காண்பவர், பிறரது மர்மத்தைக் குத்தும்படி பரிகசிப்பவர், பேராசை உள்ளவர், பிறரது வளர்ச்சியைப் பொறுக்காதவர், அடம்பிடிப்பவர், பிறரை குறை கூறுவதில் ஆர்வமுள்ளவர், சஞ்சலமனமுள்ளவர், எதிரியை அண்டுபவர் நற்குண மற்றவர், கடமை தவிர்த்தவர், இத்தகைய கேடுகெட்ட மனிதர் தவிர்க்கத் தக்கவர்.

452. ஆற்றின் பிரவாகம், கொடியில் பூக்கள், சந்திரனின் நிலவு இவை மறைந்து மறுபடி வெளிப்படும். மக்களின் வாலிபம் அப்படியல்ல.

453. முதலில் பேசத்தொடங்குபவன், இனிய தோற்றமுள்ளவன், உரிய நேரத்தில் இதமாக, அளவிற்கு உட்பட்டு, இனிதாக பொருளுள்ள பேச்சுடையவன், தன்னைக் கட்டுப்படுத்துபவன், மனிதன் இவ்வாறு ஆகவேண்டும்.

454. புதிதாக அறிமுகமாகுபவரிடம் அதிகப் பரிவு, வெகு நாளாகத் தன்னை அண்டியவரிடம் ஆதரவின்மை., தன்னிச்சையாகப் பெரும் செருக்குடன் விளையாட்டுப் போன்று

நடைமுறை, இவை பிரபுக்களின் இயல்பு. எளிதில் பிறரால் உணரக்கூடியது.

455. புறங்கூறுதல், வலிவிற்கு மீறிய செயல்முறை, துரோகம், பொறாமை, அசூயை, சேமித்த பொருளை வீணடித்தல், சுடு சொல், கடும் தண்டணை என்ற எட்டும் கோபத்தின் பின் விளைவு. இவை பழகக் கெட்ட பழக்கங்களாகி தவிர்க்க முடியாததாகும்.

456. உலகத்தின் இயல்பை நினைவில் கொள்ள வேண்டும். ( மாறி மாறித் தோன்றுவதே அதன் இயல்பு. ) நல்லதால் நல்லதும் கெட்டதால் கெட்டதும் விளையும் என்ற காரணம் - பின் விளைவு இவற்றின் தொடர்பை ஐயமின்றி நினைவில் கொள்ள முயற்சியும் கொள். செய்தது போதுமென்று நம்பியிராதே. உடல் மனவலிவைத் தளர விடாதே. அவதூறு நேர்ந்ததைத் தொடர்ந்து நினைக்காதே.

457. சேற்றை அலம்பி அகற்றுவதைவிட சேறு ஒட்டாதபடி நடப்பதே நல்லது.

458. எங்கும் பிறருக்குப் பொறுப்பாளி (ஜாமீன்) யாகாதே.

459. என் நடைமுறை கால்நடைப் பிராணியுடையது போன்றுள்ளதா, நல்லோருடையது போன்றுள்ளதா எனத்தன் நடைமுறையைத் தினமும் சீர்த் தூக்கிப் பார்ப்பாய்.

460. இரவில் ஓளி தருபவன் சந்திரன். பகலில் ஓளி தருபவன் ஸுர்யன். மூவுலகிற்க்கும் ஒளி தருவது தருமம். குலத்திற்கு ஒளி தருபவன் நன்மகன்.

461. சூழ்நிலைக் கேற்ப பேசுபவன், நல்லெண்ணத்திற்கேற்ப இனிதாக பேசுபவன், தன் சக்திக் கேற்பக் கோபிப்பவன், இவர்கள் அழிவதில்லை.

462. உயிருக்குக் கேடு விளைவிப்பது, திருட்டு, பிறர் மனைவியைத் தீண்டுதல் இந்த மூன்றும் உடலாலான பாபங்கள். எந்நிலையிலும் தவிர்க்கத் தக்கவை.

463. பெரும்பாலும் பாழும் விதி செல்லும் வழியில் தான் ஆபத்துக்களும் நேர்கின்றன.

464. மக்கள் பெரிதும் விரும்புவது எது?உயிர்.

465. பிரியமாயினும் ஹிதமில்லாதவரைச் சொல்லாதே.

466. பிரியமான பொருளாயினும் கூச்சத்திற்குக் காரணமாயின் தவிர்க்கத் தக்கதே.

467. அறிவு, கல்வி, வயது, ஒழுக்கம், தைரியம், நினைவாற்றல், மன அமைதி இவற்றின் காரணமாக, பெரியோரை மதித்துப் பின்பற்றுபவர், முதியவர், உலகியல்பு அறிந்தவர், மனக்குறை இல்லாதவர், எல்லோரிடமும் சமமாகப் பழகுபவர், அமைதியுள்ளவர், சுயக் கட்டுப்பாடு மிக்கவர், நல்வழி கூறுபவர், இவர்களை எப்போதும் அண்டிப் பணிவிடை செய்ய வேண்டும். இவர்களைப் பற்றிக் கேட்பதாலும் இவர்களைப் பார்ப்பதாலும் புண்யமுண்டு.

468. நற்பணிகளில் உதவுகிற நண்பர்களுடன் அன்புடன் பழகுவாய். மற்றவரைத் தூர

விலக்குவாய். பிழைக்க வழியற்றவர். நோயுள்ளவர், துயருற்றவர் இவருக்கு இயன்றவரை உதவுவாய்.

469. ஊக்கமின்றி எதிலும் பயந்து பயத்தைத் தீர்க்கத் தன்னைக் காப்பவனாக, மழையில் நனைந்த பாய்போல் நின்ற நிலையிலேயே உருக்குலைவான்.

470. கள்போல் சுயநிலை மறக்கச் செய்வது எது?பாசம்.

471. அறிவாளி மரணத்தை மக்களின் இயல்பாகவும், வாழ்வதைச் செயற்கையாகவும் கூறுவர்.

472. வினை புரிந்தவரை சுகதுக்கங்கள் தாய்ப் பசுவைக் கன்று போல் பின் தொடர்கின்றன.

473. நண்பன், உறவினன், சுற்றத்தார், தன் அறிவாற்றல், தைர்யம், இவற்றின் வலிவை ஆபத்தெனும் உரைகல்லில் உரைத்து அறிகிறான்.

474. இல்லை என்பதை தெரிவிக்க ஆறு முறைகள் - மவுனம், காலத்தை தாமதப் படுத்தல், வெளியே சென்று விடுவது, தரையை உற்று நோக்குவது, புருவத்தை நெரிப்பது, பராமுகமாக பேசுவது என.

475. பொறுப்பின்றி செயல்படுபவன் தன் மக்களாலும் பிறராலும் தாக்கப் பெறுவான்.

476. ஒன்றை விரும்பிப் பெற்ற பின்னும் அதில் ஆசை வளர்ந்து கொண்டே இருக்கும். (அது நாடத்தக்கதல்ல) எதனைப் பெற்றதும் அதனை மறுபடி பெற ஆசை தோன்றாதோ அதுவே நாடகத்தக்க பொருள்.

477. உலகை வசப்படுத்துகிற ஒரே செயலாக - பிறரைப் பற்றி அவதூறு கூறுவதென்ற பயிரை மேயச் செல்கிற பேச்சாகிற மாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

478. செல்வமும், குலமும் ஒத்தவரிடையே தான், நட்பும் திருமணமும் நிலைக்கும். செழிப்புள்ளவருக்கும் செழிப்பில்லாதவருக்கும் இடையே இல்லை.

479. நன்மதிப்போ அன்போ சுற்றமோ கல்விக்கான வாய்ப்போ இல்லாத ஊரில் ஒருநாள் கூடத் தங்கக்கூடாது.

480. எத்தகையவருடன் கூடிப் பழகுகிறானோ, எத்தகையவரிடம் பணிபுகிறானோ, எப்படி ஆக விரும்புகிறானோ அப்படி மனிதன் ஆகிறான்.

481. நேர்மையுடன் பழகுபவனுக்கு மிருகங்களும் துணை புரிகின்றன. நேர்மையற்ற வழியில் செல்பவனைக் கூடப் பிறந்தவனும் விலக்கிவிடுகிறான்.

482. சிறுவனாயினும் யுக்திக்குப் பொருந்துமாயின் அவன் சொல்லை ஏற்க வேண்டும். சூரிய ஒளியில் புலனாகாததைத் தீபம் விளக்காதா?

483. எதனை நாடுகிறானோ, நாடியதைப் பெறுவதில் ஈடுபடுகிறானோ நடுவில் தளர்ந்து பின்

வாங்காதவரை, அவன் அதைப் பெறுவது உறுதி.

484. அரசன், குலமகள், அந்தணன், மந்திரி, ஸ்தனம், பற்கள்,கேசம், நகம் மனிதன் இவர்கள் நிலை நழுவிவிட்டால் சோபிப்பதில்லை.

485. ஏமாற்றுபவனுக்கு உற்றார் உறவினரில்லை. அவனது ஆயுளும் நீளாது.

486. நேர்மையற்ற வழியில் பெற்ற செல்வத்தை விட ஏழ்மையே மேல். வீக்க நோயால் படுத்திருப்பதை விட உடலின் இளைப்பே மேல்.

487. தன்னடக்கமுள்ளவரின் இதயம் தீச்செயலைப் பொறுக்காது.

488. நல் வழிவந்த செல்வத்தால் தர்மமும், தொடர்ந்த பயிற்சியால் கல்வியும், நல்லோரால் அரசனும், நல்ல மாதரால் வீடும் பாதுகாக்கப் பெறுகிறது.

489. அறிவாளியே அறிவாளிகளின் உழைப்பை அறிவர். மலடி கடும் பிரஸவ வேதனையை அறியாள்.

490. சுயமுயற்சியின்றி விதியை நம்புபவன் மதிற்சுவற்றின் மீதுள்ள சிங்கப் பதுமைபோல் அவன் தலையில் காக்காய் அமரும்.

491. கடலில் பெய்த மழை வீண், வயிறு நிறைந்தவனுக்கு உணவிடுவது வீண். செல்வந்தனுக்குத் தானம் வீண். பகலில் தீபம் வீண்.

492. தேளுக்குக் கொடுக்கில் விஷம். ஈக்குத் தலையில் விஷம். தக்ஷகனுக்கு பல்லில், தீயவனுக்கு உடலெங்கும் விஷம்.

493. கிணறு வெட்டுபவன் கீழும், உப்பரிகை கட்டுபவன் மேலும் செல்வது போல் மனிதன் தன் செயலுக்கேற்ப கீழும், மேலும் செல்கிறான்.

494. தொடர்ந்து செல்வதால் வழி கடக்கப் படுகிறது. தொடர்ந்து உடுத்துவதால் துணி கந்தலாகிறது. தொடர்ந்து ஏறுவதால் மலை உச்சி ஏற முடிகிறது. தொடர்ந்து படிப்பதால் கல்வியும், தொடர்ந்து சேமிப்பதால் செல்வமும் சேர்கின்றன.

495. ஒழுக்கச் சுமையுள்ள மனைவியும், பூச்சுமை கொண்ட கொடியும், பொருட்சுமை கொண்ட பேத்தும் விளக்க இயலாத பெருமை பெறுகின்றன.

496. ஒழுக்கம் என்பது காட்சிப் பொருளல்ல. கடும் இருட்டிலும் அது ஒளிரும். ஒப்பந்தப்படி நடப்பவன், உண்மையில் உறுதியுடன் நிற்பவன், நன்றியுணர்பவன் இவர்களிடம் இதனைக் காண முடியும்.

497. நல்லொழுக்கம், பேராற்றல், சோம்பலின்மை, கல்வியறிவு, நண்பர் குழாம் இவ்வைந்தும் திருடரால் அபகரிக்க இயலாத குறையாத GF.

498. பேராற்றல் தடையாலும், கல்வி மறதியாலும், நுண்ணறிவு பிறரது அங்கீகாரம்

பெறாததாலும், நேர்மை எஜமானனுக்கு உவப்பாகாததாலும் நிலைத்து நிற்பதில்லை.

499. உண்மை பேசுபவன், கோபமில்லாதவன், உள்ளே தன் ஆத்ம நிலையைக் காணப் பொறிகளைச் செலுத்துபவன், அமைதியுள்ளவன், நன்னடை முறையில் ஆர்வமுள்ளவன், நித்திய ரஸாயன முறை கொண்டவன்.

500. தயை நிரம்பிய இதயம், ஸத்யத்தால் அழகுற்ற பேச்சு, பிறருக்கு உதவுவதில் ஆர்வமிக்க உடல், இம்மூன்றும் பெற்றவனிடம் கலி என்ன செய்யும்?

501. நல்லோருடன் கூடி இருக்க வேண்டும். நல்லோருடன் கூடிப் பழக வேண்டும். நல்லோருடன் நட்பும் கருத்துப் பரிமாறுதலும் கொள்ள வேண்டும். தீயோருடன் எதுவும் செய்யக் கூடாது.

502. தனது மனைவி,தன் உணவு, தன் செல்வம், இவற்றில் போதுமென்ற மனநிறைவு கொள். தானத்திலும் உழைப்பிலும் கற்பிப்பதிலும் போதும் என்று எண்ணாதே.

503. வாரி வழங்குபவனே மக்களுக்கு இனியவன். எதிர்பார்ப்பின்றி வழங்க மனமுள்ளவனே மகான்.

504. பரபரப்பு நட்பையும், உடல்வாகு உணவின் தரத்தையும், வினயம் குலப் பெருமையையும் பேச்சு தேசத்தையும் காட்டும்.

505. பிறருக்குப் பயன்படுபவதே செல்வம். நோய் போன்று தான் மட்டும் அனுபவிக்கத் தக்கதல்ல.

506. செல்வம் உண்மையையும், புகழ் தியாகத்தையும், கல்வி பயிற்சியையும், அறிவு வினையையும் தொடரும்.

507. செருக்கைக் கொடுக்காததே செல்வம். வேட்கையற்றவனே சுகமுள்ளவன்.

508. எல்லா உயிரினத்தின் நடைமுறையும் சுகம் பெறும் பொருட்டே. தர்மமின்றி சுகமில்லை. அதனால் தர்மத்தில் நாட்டமுள்ளவனாக வேண்டும்.