திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
வன்பார்த்தான் பனங்காட்டூர்
திருப்பனங்காடு
மக்கள் வழக்கில் திருப்பனங்காடு என்று வழங்குகிறது. காஞ்சிபுரத்திலிருந்து கலவை, பெருங்கட்டூர் செல்லும் பேருந்தில் ஏறித் திருப்பனங்காடு கூட்ரோடில் இறங்கி, (திருப்பனங்காடு செல்லும்) பாதையில் 2 A.e. சென்றால் ஊரையடையலாம். நடந்து செல்லும் போது வழிக்களைப்பு தெரியாதவாறு சாலை ஓரத்தில் புளிய மரங்கள் நிழல்தந்து உதவுகின்றன. ஊர்க்கோடியில் கோயிலுள்ளது. நல்ல சாலை. தனிப்பேருந்தில், காரில் வருவோர் கோயில்வரை செல்லாம். பனையைத் தலமரமாகக் கொண்ட பாடல் பெற்ற தலங்கள் ஐந்தினுள் இதுவும் ஒன்று. ஏனையவை (1) திருப்பனந்தாள் (2) திருப்பனையூர் (3) திருவோத்தூர் (4) புறவார் பனங்காட்டூர் என்பன.
சுந்தரரிடம் இறைவன், 'நான் பனங்காட்டிற்கும் வன்பாக்கத்துக்குமாய் இருப்பவன்', என்றருளியமையாலும், புறவார் பனங்காட்டூரினின்றும் வேறுபாடறியவும் இத்தலத்தை 'வன்பார்த்தான் பனங்காட்டூர்' என்று சுந்தரர் பாடியுள்ளார். பனைமரக்காடாக இருந்தமையால் 'பனங்காடு' (தாலவனம்) என்று பெயர்பெற்றது.
வன்பாக்கம் என்னும் ஊர் - இவ்வூருக்குப் பக்கத்தில் உள்ளது. அதுவே இன்று வெண்பாக்கம் - வெம்பாக்கம் என்று வழங்குகின்றது. இது பாடல் பெற்ற தலமன்று. திருப்பனங்காடு தான் பாடல் பெற்றது.
சிறிய ஊர். நகரத்தார் திருப்பணி பெற்ற கோயில். கோயிலின் எதிரில் பெரிய குளம் உள்ளது. இதற்குச் "சடாகங்கை" என்று பெயர் அகத்தியர் பூசித்தபோது, இறைவன் சடாமுடியிலுள்ள கங்கை, தீர்த்தமாக வெளிப்பட்டது. இக்குளக்கரையில் கங்காதேவி சிலையுள்ளது. மாசிமகத்தில் தீர்த்தவாரியும், தெப்பமும் இதில் நடைபெறுகின்றன.
அகஸ்தியர், புலஸ்தியர் முதலியோர் வழிபட்ட தலம். வடலூர் வள்ளற்பெருமான் வாக்கிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது.
"நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சை தொண்டர்
குலாவு திருப்பனங்காடு நன் மாகறல் கூற்றம் வந்தால்
அலாய் என்று அடியார்க்கு அருள்புரி ஏகம்பர் ஆலயமே."
(பட்டினத்தடிகள்)
இத்தலத்தில் கண்வ முனிவர் வழிபட்டதாகவும் செய்தி சொல்லப்படுகிறது. இக்கோயிலில் இரண்டு சுவாமி சந்நிதிகளும் இரண்டு அம்பாள் சந்நிதிகளும் உள்ளன. அகத்தியர் வழிபட்ட மூலமூர்த்தி ஒன்று. மற்றொன்று புலஸ்திய மகரிஷி வழிபட்டது.
சுவாமி 1. தாலபுரீசுவரர், அகத்தியர் வழிபட்ட மூர்த்தி, சுயம்பு,அம்பாள்-அமிர்தவல்லி.
சுவாமி 2. கிருபாநாதேசுவரர், புலஸ்தியர் வழிபட்ட மூர்த்தி, அம்பாள் - கிருபாநாயகி
தலமரம் - பனை. கோயிலுக்கு உள்ளும் வெளியிலும் இருபனை மரங்கள் உள்ளன.
தீர்த்தம் - சடாகங்கை. கோயிலுக்கு எதிரில் உள்ளது.
(ஊருக்குப் பக்கத்தில் சற்றுத் தொலைவில் 'ஊற்று தீர்த்தம்' உள்ளது. சுந்தரருக்கு இறைவன் (கட்டமுது) உணவளித்த வரலாறு இத்தலத்திற்கும் சொல்லப்படுகிறது. இது செவி வழிச்செய்தியே. பெரிய புராணத்தில் இல்லை. இறைவன் அப்போது தன் பாதத்தால் கிளறி உண்டாக்கிய தீர்த்தமே 'ஊற்று தீர்த்தம்' (ஊற்றங்குழி) என்று பெயர் பெற்றதென்று சொல்லப்படுகிறது.)
சுந்தரர் பாடல் பெற்ற தலம். இரு சுவாமி சந்நிதிகளும் கஜப்பிரஷ்ட விமான அமைப்புடன் மூன்று கலசங்களுடன் விளங்குகின்றன.
கோயில் கிழக்கு நோக்கியது. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது, வெளியில் ராஜகோபுரமில்லை. உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது.
கோயிலின் முகப்பு வாயிலின் வெளியில் நிற்கவைத்துள்ள ஒரு கல்வெட்டு, ஒவ்வொரு நாளும் 2 தேசாந்திரிகளக்கு அன்னதானம் செய்வதற்காக ஓர் அன்பரால் நிலம் விடப்பட்டுள்ள செய்தியைத் தெரிவிக்கின்றது.
முகப்பு வாயில் உள்நுழைந்ததும் நேரே தெரியும் மூலவர் சந்நிதி
புலஸ்தியர் வழிபட்டதாகும். எதிரில் கொடி மரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன. இதற்குப் பக்கத்தில் உள்ளது அகத்தியர் வழிபட்ட மூலவர். இதற்கு எதிரில் வாயில் இல்லை. சுவரில் சாளரம் மட்டுமே உள்ளது. இதன் எதிரிலும் வெளியே கொடிமரம், நந்தி, பலிபீடங்கள் உள்ளன.முன் மண்டபத்தில் வாயிலில் ஒருபுறம் செல்வப் பிள்ளையார் சந்நிதியும் மறுபறம் தண்டபாணி சந்நிதியும் உள்ளன.
உள் வாயிலில் நுழைந்ததும் வலப்பால் சூரியன். அடுத்துள்ள இடத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இடப்பால் அடுத்தடுத்து இரு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கியுள்ளன. இவ்விரு சந்நிதிகளுக்கும் இடையில் பள்ளியறை உள்ளது. இரு சந்நிதிகளும் நின்ற திருக்கோலம். நேரே புலஸ்தியர் வழிபட்ட மூர்த்தி. முதலில் அகத்தியர் வழிபட்ட மூர்த்தியைத் தரிசிக்க வேண்டும். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. துவார கணபதி உள்ளார். பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபா நாதேசுவரரின் ஆவுடையார் சதுர வடிவினது. தாலபுரீசுவரர் சந்நிதியில் துவாரபாலகர்கள் உள்ளனர். அடுத்துள்ள கிருபா நாதேசுவரர் சந்நிதியில் துவாரபாலகர்கள் உருவம் வண்ணத்தில் சுவரில் வரையப்பட்டுள்ளது.
தாலபுரீசுவரரின் முன்னால், இத்திருக்கோயில் திருப்பணியைச் (1929ல்) செய்வித்த தேவகோட்டை நகரத்துச் செட்டியார் - ஏகப்பச் செட்டியாரின் உருவம் - சுவாமியைக் கைகூப்பி வணங்கும் நிலையில் உள்ளது.
வலமாகப் பிராகாரத்தில் வரும்போது, சேக்கிழார் உள்ளிட்ட நால்வர் சந்நிதி உள்ளது. அடுத்து, வல்லபை விநாயகர் தரிசனம். பக்கத்தில் மீனாட்சி சொக்கநாதர் சந்நிதியும் அடுத்துத் தலமரத்தின் சிலாரூபமும், இரு சிவலிங்கங்களும் உள்ளன. அடுத்துள்ள இடத்தில் உற்சவத் திருமேனிகளின் பாதுகாப்பு இடம் பெற்றுள்ளது. நால்வர், சோமாஸ்கந்தர், பிரதோஷ நாயகர் முதலிய உற்சவத்திருமேனிகள் சிறப்பானவை.
கஜலட்சுமி சந்நிதியை அடுத்து, முருகப்பெருமான் தரிசனம் வள்ளி தெய்வயானையுடன் கூடி, மயிலின் முகம் திசைமாறியுள்ளது. சண்டேசுவரருக்கு எதிரில் நவக்கிரகங்கள் தத்தம் வாகனங்களுடன் உள்ளன. நடராஜ சந்நிதி அழகாக உள்ளது.
தாலபுரீசுவரரின் கருவறையில் கோஷ்டமூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இச்சந்நிதியில் சண்டேசுவரர் இல்லை. அடுத்துள்ள சந்நிதியில் மட்டுமே சண்டேசுவரர் உள்ளார். கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சினாமூர்த்தி மஹாவிஷ்ணு பிரம்மா உள்ளனர். கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு' சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார்.
அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. மாசிமகத்தில் தாலபுரீசுவரருக்குப் பெருவிழா நடைபெறுகின்றது. கார்த்திகைச் சோமவார உற்சவம் கிருபாநாதேசுவரருக்கு விசேஷம். நவராத்திரி சஷ்டி உற்சவங்கள் நடைபெறுகின்றன. கோயிலுள், பக்கத்துக்கு ஒன்றாக இருபுறமும் இரு பனைமரங்கள் உள்ளன, ஒரு மரத்தின் விதையிலிருந்து மற்றொன்று பெண் பணையாகவும் உள்ளது. கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர்
கோயிலின் பின்புறம் உள்ளன. கோயில் மதிலில் புறாக்கள் நிரம்ப உள்ளன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் கல் தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில (1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உளது. (2) உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள் மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்தின் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரிய வில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது. (3) வாலி சுக்ரீவச் சிற்பம் உள்ள தூணின் மறுபுறத்தில் யோக தட்சிணாமூர்த்தி சிற்பம் உள்ளது, (4) பல தூண்களில் ஆஞ்சநேயர் உருவம் உள்ளது. (5) தாலபுரீசுவரரின் சந்நிதிக்கு எதிரில் உள்ள தூணில் புருஷாமிருகத்தின் சிற்பம் உள்ளது. (6) ஒரு தூணில் சுந்தரர், மாணிக்கவாசகரும் மற்றொரு தூணில் சம்பந்தர் அப்பரும் உள்ளனர். (7) அடுத்துள்ள தூணில் ஒரு பக்கம் ஏகபாத மூர்த்தியும் மறுபக்கம் கருடாழ்வார் சிற்பமும் உள்ளது. (8) கருடனுக்கு செட்டியாரின் உருவத்திற்குப் பின்புறம் உள்ள தூணில் உயரே சமணர் கழுவேறும் சிற்பம் உள்ளது. கோயிலுக்கு வெளியில் கோட்டை முனீஸ்வரர் கோயில் உள்ளது. முனீஸ்வரர் யோகாசனத்தில் அமர்ந்த நிலையில் வலக்கையில் உருத்திராட்ச மாலை கொண்டும், இடக்கையைத் தொடை மீது வைத்துக்கொண்டும், சடாமுடியுடன் காட்சி தருகின்றார். ஒருபுறம் துவார விநாயகரும் மறுபுறம் இடக்காலில் மட்டும் யோக பட்டங்கொண்டு யாணைமீது அமர்ந்துள்ள ஐயப்பனும் காட்சி தருகின்றனர். கோயிலுக்கு எதிரில் வன்னிமரம் உள்ளது.
அகத்தியர் பூசித்தபோது, இம்முனீஸ்வரர் பனைக் கனிகளை உதிரச் செய்ய, அகத்தியர் அதையும் இறைவனக்குப் படைத்தமையால் இன்றும் பனைக்கனி, (பனம்பழம்) கிடைக்குங் காலங்களில் சுவாமிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.
தேவகோடடை திரு.ஏகப்பச் செட்டியார் அவர்களின் திருப்பணி அவர் புதல்வர்களால் நிறைவுற்று 1929ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தற்போது நகரத்தாராலேயே ஆலயத் திருப்பணிகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் 22 கல்வெட்டுக்கள் அரசால் படியெடுக்கப்பட்டுள்ளன. அவை விஜயநகர மன்னர்கள் முதலாம் இராசேந்திர சோழன், முதலாம் குலோத்துங்க «&மீநீவீக்ஷீ