திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருவலஞ்சுழி
சுவாமிமலைக்குப் பக்கத்தில் உள்ள தலம்.
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர், பாவநாசம், சுந்தரப் பெருமாள் கோயில் முதலிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துச் சாலையில் சென்று கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது. குடந்தையிலிருந்து அடிக்கடி பேருந்து உள்ளது. காவிரி வலமாகச் சுழித்துச் செல்லுமிடத்தில் உள்ளதால் 'வலஞ்சுழி' என்று பெயராயிற்று. திருவிடைமருதூருக்குரிய பரிவாரத் தலங்களுள் இஃது விநாயகருக்கு உரிய தலமாகும்.
சக்திவனம், தக்ஷிணாவர்த்தம் என்பன வேறு பெயர்கள், பாய்ந்து வந்த காவிரியாறு, ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கிவிட்டது. அதுகண்ட சோழமன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன். "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாலத்தில் பலியிட்டுக்கொண்டார் அப்பிலம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன், கொட்டையூரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடியின் அருகில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து, செய்தியைச் சொல்ல, அவர் அவ்வாறே இறங்க, அப்பிலம் மூடப்பட்டு காவிரி வெளிப்பட்டது என்பது தலவரலாறு. இம்முனிவர் உருவம் கோயிலுள் உள்ளது.
ஏரண்ட முனிவர், ஆதிசேஷன், உமையம்மை, இந்திரன், திருமால், பிரம்ன் ஆகியோர் வழிபட்ட தலம்.
இன்றும் மஹாசிவராத்திரி நாளில் நான்கு யாமங்களிலும் ஆதிசேஷன் வெளிப்பட்டு வலஞ்சுழி, நாகேச்சுரம், பாம்புரம், நாகைக்காரோணம் என்னும் நான்கு தலங்களிலும் வந்து வழிபடுவதாகச் செவிவழிச் செய்தி சொல்லப்படுகிறது.
இறைவன் - கபர்த்தீசுவரர், செஞ்சடைநாதர், கற்பகநாதேஸ்வரர், வலஞ்சுழிநாதர்.
இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.
தலமரம் - வில்வம்.
தீர்த்தம் - காவிரி, அரசலாறு, ஜடாதீர்த்தம்.
தலவிநாயகர் - வெள்ளைவாரணப் பிள்ளையார், சுவேதவிநாயகர்.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
வெள்ளைப் பிள்ளையாரே இத்தலத்தின் சிறப்பு மூர்த்தியாவார். இப்பிள்ளையார் உள்ள மண்டபம் இந்திரனால் அமைக்ப்பட் அழகான மண்டபம். சித்திரத் தூண்களும், கல்குத்துவிளக்கும் மிக்க அழகுடையவை. கடல் நுரையால் செய்யப்பட்ட மூர்த்தியே வெள்ளைப் பிள்ளையார் ஆவார். இப்பெருமானுக்குப் பச்சைக்கற்பூரம் மட்டும் சார்த்தி அபிஷேகம் செய்யப்படுகிறது.
அழகான கோபுரம் கிழக்கு நோக்கியுள்ளது. அம்பாள் வலப்பக்கம் திருமணக் கோலக் காட்சி தருகிறார். இங்குள்ள அஷ்டபுஜகாளி சிறப்புவாய்ந்த மூர்த்தம். இங்குள்ள பைரவமூர்த்தி மிகவும் உக்கிரம் வாய்ந்தவராக விளங்கியமையால் அதைத் தணிப்பதற்காகச் சிறிது பின்னப்படுத்தப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சனீஸ்வரர் சந்நிதி உள்ளது. மூலவர் அழகான மூர்த்தி. வாணி, கமலாம்பாள் சமேத விநாயகர் உற்சவ மூர்த்தி உள்ளது. ஆவணி சதுர்த்தி விழா இங்கு விசேஷம். இத்தலம் திருமுறைத் தலம் என்பதைவிட வெள்ளை விநாயகர் தலம் என்ற பெயரிலேயே மிகுதியும் பிரசித்தியாகத் திகழ்கின்றது.
"என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து
முன்ன (ம்) நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள்
மன்னு காவிரிசூழ் திருவலஞ்சுழி வாணனை வாயாரப்
பன்னியாதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே" (சம்பந்தர்)
"நறைகொள் பூம்புனல் கொண்டு எழுமாணிக்காய்க்
குறைவிலாக் கொடுங்கூற்று உதைத் திட்டவன்
மறைகொள் நாவன் வலஞ்சுழி மேவிய
இறைவனை இனிஎன்றுகொல் காண்பதே." (அப்பர்)
க்ஷேத்திரக்கோவை பிள்ளைத்தமிழ்
மந்தர மெனுங்கிரியை மத்தாக நிறுவியே
வாசுகியை நாணதாக்கி
மாலயனொ டிந்திராதி யமரரெல் லாம்கூடி
வளர்பயோ ததிகடையும்நாள்
எந்தையைங் கரனைமுன் வணங்காம லதுசெய்ய
இயம்புமலை கீழிழுப்ப
இந்திராதி யோரறிந்து ஐங்கர விநாயகன்
இணையடிகள் பூஜைசெய்ய
அந்தமந் தரகிரி அழன்றமுதம் உதவவே
அன்புடன் பின்பவரெலாம்
அமுதமபி டேகிக்க அமுதநிறம் ஆதலால்
அருள்வெள்ளை வாரணமெனும்
தந்திமுக வற்கிளவல் திருவலஞ் சுழிமுருக
சப்பாணி கொட்டி யருளே
சந்திரசே கரனான அந்திவன் ணன்மதலை
சப்பாணி கொட்டியருளே (சிதம்பர முனிவர்)
-சேர்ந்த
"மலஞ்சுழிகின்ற மனத்தார்க் கரிதாம்
வலஞ்சுழி வாழ் பொன் மலையே" (அருட்பா)
அருள்மிகு. வலஞ்சுழிநாதர் திருக்கோயில்
வலஞ்சுழி - சுவாமிமலை அஞ்சல் - 612 302
கும்பகோணம் வட்டம்
தஞ்சை மாவட்டம்.