திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
தென்குரங்காடுதுறை (ஆடுதுறை)
மக்கள் இன்று 'ஆடுதுறை' என்று வழங்குகின்றனர்
மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் உள்ளதலம். தென்னலக் குடி (திருநீலக்குடி) யிலிருந்தும் பாதை செல்கிறது. 3 A.e. தொலைவு. ஆடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் சாலையில் சென்றால் சாலையோரத்தில் குளம் வருகிறது. அங்கு இடப்புறமாகத் திரும்பிச் (குளத்தையட்டிச் செல்லும்) சாலையில் சென்று வலப்பக்க வீதியில் திரும்பினால் கோடியில் திருக்கோயில் உள்ளது. சுக்ரீவன் வழிபட்டதலம். கண்டராதித்தன் மனைவியார் கட்டிய கற்றளி.
இறைவன் - ஆபத்சகாயேஸ்வரர்.
இறைவி - பவளக்கொடியம்மை.
சம்பந்தர், - அப்பர் பாடல் பெற்றது.
ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. நந்தி பலிபீடம் உள்ளது. முன்மண்டபத்தில் தலப்பதிக்கல்வெட்டுள்ளது. மறுபுறம் பள்ளியறையும் பக்கத்தில் அம்பாள் சந்நிதியும். இடப்பால் மூத்தபிள்ளையார் காட்சிதருகிறார். சற்று உள்ளடங்கிப் புராண மண்டபம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பிராகாரத்தில் நால்வர், விநாயகர், சிவலிங்கம், அம்பாள், சுக்ரீவன் அமைத்த சந்நிதி, விசுவநாதர், மயில்வாகனர், கஜலட்சுமி, நடராஜர் சந்நிதி, சனீஸ்வரன், சூரியன், சந்திரன், நவக்கிரகம் ஆகியோர் காட்சி தருகின்றனர். அடுத்துள்ள மண்டபத்தில் செல்லும்போது மேலே முகப்பில் சுக்ரீவன் பெருமானை வழிபடுவதும், பக்கத்தில் ரிஷபாரூடராய்க் காட்சி தருவதும் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன.
நேரே மூலவர் தரிசனம். திருமுறைக்கோயில் உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், அகத்தியர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். இங்குள்ள துர்க்கைக்கு விசேஷ அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. சுவாமி கருவறை அகழியமைப்புடையது. நாடொறும் நான்கு கால பூஜைகள், சோழ, பாண்டியர் காலக் கல்வெட்டுகளில் இத்தலம் "தென்கரைத் திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை", பூபாலகுலவல்லி வளநாட்டு திரைமூர் நாட்டு திருக்குரங்காடுதுறை" எனக் குறிக்கப்படுகின்றது, சுவாமியைத் 'திருக்குரங்காடுதுறை மாதேவர்' என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.
"பரவக்கெடும் வல்வினை யாரிடஞ்சூழ
இரவிற்புறங் காட்டிடை நின்றெரியாடு
அரவச்சடை யந்தணன் மேய அழகார்
குரவப்பொழில் சூழ்குரங்கா டுதுறையே" (சம்பந்தர்)
"நற்றவஞ்செய்த நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழியால் அருள்செய்த நல்
கொற்றவன் குரங்காடு துறை தொழப்
பற்றுந் தீவினையாயின பாறுமே." (அப்பர்)
-நீக்கமிலா
நன்குரங்காணு நடையோரடைகின்ற
தென்குரங் காடுதுறைச் செம்மலே.' (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
ஆடுதுறை - அஞ்சல் - 612 101
திருவிடைமருதூர் வட்டம் - தஞ்சை மாவட்டம்.