திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருநல்லம் ( கோனேரிராஜபுரம்)
1) கும்பகோணம் - காரைக்கால் பேருந்துப்பாதையில் 'எஸ்.புதூர்' அடைந்து, அங்கிருந்து, வலப்புறமாகப் பிரிந்து செல்லும் கோனேரி ராஜபுரம் கூட்ரோடினையடைந்து (கூட்ரோடில் பெயர்ப் பலகையில்லை - விசாரித்துதான்
தெரிந்து கொள்ள வேண்டும்) , அங்கிருந்து இடப்புறமாகப்பிரிந்து ஊருக்குள் செல்லும் சாலையில் 1 A.e. சென்றால் ஊரையடையலாம்.
2) பேருந்தில் செல்வோர் கும்பகேணாம் - வடமட்டம், ஆடுதுறை - வடமட்டம் செல்லுமூ நகரப் பேருந்துகளில் சென்று கோனேரி ராஜபுரம் கூடரோடில் இறங்கி 1 A.e. நடந்து சென்று ஊரையடையலாம். கண்டராதித்தன் மனைவியான செம்பியன் மாதேவியின் திருப்பணி பெற்ற தலம். ஊர் செழிப்பாகவுள்ளது. "நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர்" என்னும் ஞானசம்பந்தரின் வாக்குக்கேற்ப அந்தணர்கள் மிகுதியாக, வளத்தோடு வாழ்கின்ற ஊராகத் திகழ்கின்றது. கோயில் ஊர்த் தொடக்கத்திலேயே உள்ளது.
இறைவன் - உமாமகேஸ்வரர், பூமீஸ்வரர், பூமிநாதர்.
இறைவி - தேகசௌந்தரி, அங்கவளநாயகி.
தலமரம் - அரசு.
தீர்த்தம் - பிரமதீர்த்தம்.
சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது.
ஊருக்குள் நுழையும்போதே கோயில், எதிரில் தீர்த்தத்துடன் காட்சியளிக்கின்றது. மேற்கு நோக்கிய சந்நிதி. குளக்கரையில் தலமரம் 'அரசு' உள்ளது. முகப்பு வாயில், தாண்டி உள்சென்றால் நீண்ட முன்மண்டபம் உள்ளது. இதன் மேற்பாகத்தின் உட்புற முழுவதும் அறுபத்துமூவர், சிவமூர்த்தம், பன்னிரண்டுராசிகள், மகரிஷிகள் முதலிய உருவங்கள் அனைத்தும் வண்ண ஓவியங்களாக எழுதப்பட்டுள்ளன.
கசவமிட்ட கொடிமரம், கொடிமரத்து விநாயகர், நந்தி, பலி பீடம் உள்ளன. பிராகரத்தில் சண்முகர் சந்நிதி. இடப்பால் உள்ள வழியாகச் சென்றால் அம்பாள் சந்நிதியை அடையலாம் - தனிக் கோயில். அடுத்துள்ளது வைத்தியநாதர் சந்நிதி. புரூரவமன்னனின் குட்டநோயைத் தீர்த்த பெருமான் இவரே. இச்சந்நிதியில் ஜபம் செய்தால் பலமடங்கு பயனுண்டு எனப்படுகிறது. அடுத்துள்ளவை யாகசாலை மண்டபம், மகாகணபதி சந்நிதிகள். வலமுடித்து வாயில்கடந்து, உள்மண்டபம் சென்றால் இடப்பால் பிரம்மலிங்கம், சுப்பிரமணியர், மகாலட்சுமி, நடராசசபை,உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பறை - நால்வர், விநாயகர்கள், அகத்திய லிங்கம், நவக்கிரகங்கள் முதலியவை உள்ளன. சனிபகவான், பைரவர் தொழுது வாயிலைக் கடந்தால் மூலவர் தரிசனம். மூலவர் - சதுரபீடம், உயர்ந்த பாணம்.
அம்பாள் கோயில் அழகாகவுள்ளது. நின்று திருக்கோலம். இக் கோயிலில் உள்ள நடராசமூர்த்தம் மிகப்பேரழகு - பெரிய உருவம். புகழ்பெற்ற மூர்த்தி. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர். தக்ஷிணாமூர்த்தி, அகத்தியர், ஜ்வரஹரர், லிங்கோற்பவர், கங்காதரர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை ஆகீயோர் உளர். கோயில் நல்ல பொலிவு. பராமரிப்பு, கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார்' என்று குறிக்கப்பட்டுள்ளார். இங்குள்ள கல்வெட்டுகள் இராஜஇராஜன், இராஜேந்திரன், முதலாம் இராஜாதிராஜன், இரண்டாம் இராஜேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. இவற்றிலிருந்து (1) வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும் (2) 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும் (3) குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளான் என்றும் பல செய்திகள் (கல்வெட்டுகள் வாயிலாகத்) தெரிய வருகின்றன. தலபுராணம் சம்ஸ்கிருதத்தில் உள்ளது. காரணாகம முறைப்படிப் பூஜைகள் நடைபெறுகின்றன.
"கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாஎன் (று)
எல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழஎய்த
நல்லான் நமையாள் வாள் நல்ல (ம்) நகரானே." (சம்பந்தர்)
"பொக்கம்பேசிப் பொழுது கழியாதே
துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ
தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன்
நக்கன் சேர் நல்ல (ம்) நண்ணுதல் நன்மையே." (அப்பர்)
-பாடச்சீர்
வல்லதமிழ்ப்புலவர் மன்னிவணங்குதிரு
நல்லம் மகிழ்இன்ப நவவடிவே. (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. பூமீஸ்வரர் திருக்கோயில்
(உமாமகேஸ்வரர்)
கோனேரி ராஜபுரம் - அஞ்சல் - கும்பகோணம் RMS 612 201
தஞ்சை மாவட்டம்.