திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருவாவடுதுறை
மயிலாடுதுறை -கும்பகோணம் சாலையில் சென்று இத்தலத்தையடையலாம். சாலையில் ஆதீன வளைவு உள்ளது. திருவாவடுதுறை ஆதீனக் கோயில். அருகிலுள்ள இருப்புப்பாதை நிலையம் நரசிங்கன் பேட்டையாகுமூ. இறைவி பசுவடிவில் வழிபட்ட பதி. ஆதீனமும் கோயிலும் ஒன்றையன்று அடுத்துள்ளன.
1) ஞானசம்பந்தர், தன் தந்தையின் வேள்விக்காக இறைவனிடம் பொற்கிழி பெற்றது. 2) சுந்தரர் உடற்பிணி தீரப் பிரார்த்தித்தது, 3) திருவிடைமருதூரின் பரிவாரத் தலங்களுள் நந்தித் தலமாக விளங்குவது, 4) தேவர்கள் 'படர் அரசு' ஆக விளங்க அதன்கீழ் இறைவன் எழுந்தருளியது, 5) திருமூலர் தங்கியிருந்து தவம்செய்து திருமந்திரம் அருளியது, 6) போகசித்தருடைய மாணவராகிய திருமாளிகைத் தேவர் பல அற்புதங்களை நிகழ்த்தியது, 7) சேரமான் பெருமான் நாயனார், விக்ரம பாண்டியன் ஆகியோர் வழிபட்டது, 8) முசுகுந்தனுக்கு மகப்பேறு அருளி இத்தலத்தைத் திருவாரூராகவும் தம்மைத் தியாகேசராகவும் காட்டியது (புத்திரத் தியாகேசர்) 9) சித்தர்கக் § அட்டமா சித்திகளை அருளியது, 10) தருமதேவதை இறைவனை வழிபட்டு அவருக்கு வாகனமாகும் பேறு பெற்றது 11) திருமூலர், திருமாளிகைத் தேவர் முதலிய மகான்களுடைய சமாதிகள் இருப்பது முதலிய எண்ணற்ற சிறப்புக்களையுடைய தலம்.
இங்குள்ள நந்தி மிகப்பெரியது. இறைவன் வீரசிங்க ஆசனத்திருந்து சுந்தர நடனம் ஆடி மகாதாண்டவம் புரிந்த தலமும் இதுவே. கோமுக்தி நகர், அரசவனம், முத்தி க்ஷேத்ரம், கோகழி, சிவபுரம், பிரமபுரம், அகத்தியபுரம், தருமநகர், கஜாரண்யம், நந்திநகர், நவகோடி சித்திபுரம் முதலியன இத்தலத்தின் வேறு பெயர்கள்.
ஆ+ஆடுதுறை = பசுக்கள் நிறைந்துள்ள காவிரிக் கரையிலுள்ள ஊர். சமஸ்கிருதத்தில் கோமுக்திபுரம் எனப்படும்.
இறைவன் - மாசிலாமணீசுவரர், கோமுக்தீஸ்வரர்.
இறைவி - ஒப்பிலாமுலையம்மை, கோமுக்தீஸ்வரர்.
தலமரம் - படர் அரசு.
தீர்த்தம் - கோமுக்தி தீர்த்தம், பத்மதீர்த்தம், கைவல்ய தீர்த்தம்.
தலவிநாயகர் - துணைவந்த விநாயகர்.
நந்தி - தருமநந்தி.
மூவர் பாடல் பெற்றது.
கோயில் கிழக்கு நோக்கியது. எதிரில் கோமுக்தி தீர்த்தம் உள்ளது. பசுவான உமைக்குத் துணையாக வந்த விநாயகர், முருகன் சந்நிதிகள். இரண்டாங் கோபுர வாயிலில் பெரிய நந்தியுள்ளது. பின்னால் உள்ள பலிபீடமே ஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த இடமாகும்.
அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இக்கோயிலில் நவக்கிரகம் இல்லை. தியாகேசர், செம்பொன் தியாகர், புத்திரத் தியாகசேர், சொர்ணத் தியாகேசர் மூர்த்தங்கள் உள்ளன. திருமாளிகைத் தேவர் வாழ்ந்த இடமே ஆதீனமாகச் சொல்லப் படுகிறது. திருமாளிகைத்தேவர் ஆலயமுள்ளது. இதற்குப் பக்கத்தில் நமசிவாய மூர்த்திகள் கோயிலுள்ளது. இவருக்குப் பூஜை நடைபெறுவது வழக்கமாம். கோயிலின் மேற்குப் பிராகாரத்தில் திருமூலர் சந்நிதி உள்ளது.
திருமாளிகைத் தேவர், நரசிங்கன் என்னும் மன்னனின் படைகளை, கோயில் மதிலில் உள்ள நந்திகளை உயிர் பெற்றெழச் செய்து விரட்டியமையால் இன்றும் கோயில் மதில்களில் நந்திகள் இல்லையென்று சொல்லப்படுகிறது.
ஆதீனக்கோயில். நன்கு பராமரிக்கப்பட்டுச் சிறப்பாகவுள்ளது. முதற் பராந்தகன் காலத்திய கல்வெட்டிலிருந்து புரட்டாசி விழாவில் ஒருநாளில் திருமூலர்
நாடகமும் - ஆரியக் கூத்தும் நடந்து வந்ததாகச் செய்தி தெரிய வருகிறது.
"இடரினும் தளிரினும் எனதுறு நோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவே எமை ஆளுமாறு ஈவது ஒன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே. (சம்பந்தர்)
"மஞ்சனே மணியுமானாய் மரகதத் திரளுமானாய்
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரு நிகழ்வினானே
துஞ்சும் போதாகவந்து துணையெனக்காகி நின்று
அஞ்சல் என்றருள வேண்டும் ஆவடுதுறையுளானே". (அப்பர்)
"மண்ணின்மேல் மயங்கிக் கிடப்பேனை
வலிய வந்தெனையாண்டு கொண்டானே
கண்ணிலேன் உடம்பில்அடு நோயால்
கருத்தழித்து உனக்கே பொறையானேன்
தெண்ணிலா எறிக்குஞ் சடையானே
தேவனே திருவாவடு துறையுள்
அண்ணலே எனை அஞ்சல் என்றருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே". (சுந்தரர்)
-"வீழும்பொய்
தீராவடுவுடையார் சேர்தற் கருந்தெய்வச்
சீராவடுதுறையெஞ் செல்வமே." (அருட்பா)
க்ஷேத்ரக் கோவை பிள்ளைத்தமிழ்
தேவாதி தேவன்சால்வேதாக மங்களைத்
திருமந்த்ர மாலையென்றே
திகழ்சமா தியிலிருந் துலகத்து ளருள்விழி
திறந்தாண் டினுக்கொன்றெனும்
பாவாக வேசொன்ன பரமசிவ னானகுரு
பணியோக அட்டாங்கமும்
பகர்வசியசித்தியுந் திரிகால ஞானமும்
பரிபக்கு வர்க்கருளுவோன்
சேவேறுமொரு வனே பரமதத் துவமெனுந்
திருமூல நாதன்மகிழ்வூர்
திருவிசைப் பாவென்னும் அதிமதுர கவிபாடு
திருமாளி கைத்தேவர் வாழ்
காவேரி சூழ்ந்ததிரு வாவடுது றைக்குமர
கனிவாயின் முத்தமருளே
கங்கா நதிச் சரவணத்துவளர் காங்கேய
கனிவாயின் முத்தமருளே.
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்
திருவாவடுதுறை - அஞ்சல் - 609 803
(வழி) நரசிங்கன் பேட்டை மயிலாடுதுறை
நாகப்பட்டினம் மாவட்டம்.