திருமுறைத்தலங்கள்
சோழநாட்டு (தென்கரை) த் தலம்.
திருத்தலைச்சங்காடு ( தலைச்செங்காடு)
ஆக்கூர் திருவலம்புரம் ஆகியவற்றிற்கு அருகிலுள்ளது.
1) மயிலாடுதுறையிலிருந்து ஆக்கூர் வழியாகப் பூம்புகார்ப் பாதையில் சென்று இத்தலத்தையடையலாம்.
2) சீர்காழியிலிருந்து ஆக்கூர் செல்லும் பாதையிலும் சென்று இத்தலத்தைச் சேரலாம். கோச்செங்கட்சோழன் கட்டிய மாடங்கோயில். சங்குவனம், சஙர்கரண்யம், தலைச்செங்கானம் என்பன வேறு பெயர்கள். திருமால் வழிபட்டுப் பாஞ்சசன்னிய சங்கைப்பெற்ற தலம்.
இறைவன் - சங்காரண்யேசுவரர், சங்கவனேஸ்வரர், சங்கருணாதேஸ்வரர்.
இறைவி - சௌந்தரநாயகி.
தலமரம் - புரசு.
தீர்த்தம் - சங்குதீர்த்தம் (கோயிலுக்கு எதிரில் உள்ளது) .
இத்தீர்த்தத்தில் பௌர்ணமி நாளில் நீராடுவது விசேஷமாகும்.
சம்பந்தர் பாடல் பெற்றது.
கிழக்கு நோக்கிய கோயில் எதிரில் சங்கு தீர்த்தமுள்ளது. வெளிப் பிராகாரத்தில் தலவிநாயகர், ஸ்ரீ தேவி பூதேவிசமேதராய்ப் பெருமாள். சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. நடராசர், சேமாஸ்கந்தர் சந்நிதகள் சிறப்பானவை. உள்பிராகாரத்தில் நால்வர், திருமால், ஜ்வலஹ ரேஸ்வரர், காவிரித்தாய், பட்டினத்தார், அகத்தியர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
மூலவர் - சங்கு போன்ற உருண்டையான வடிவில் காட்சியளிக்கின்றார் - கருவறை விசாலமானது. சோழர்காலக் கல்வெட்டொன்று இக்கோயிலுக்குச் செம்பியன் மாதேவி வெள்ளிப் பாத்திரங்களை வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது.
"நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்தோர் நால்வேதம்
சொலச்சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர்
குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர்கொள் சோலைக்குயிலாலும்
தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத்தாழ்ந்தீர்". (சம்பந்தர்)
-"தூயகொடி
அங்காடு கோபுரம் வானாற்றாடு கின்றதலைச்
சங்காடு மேவுஞ்சயம் புவே". (அருட்பா)
அஞ்சல் முகவரி -
அருள்மிகு. சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில்
தலைச்சங்காடு - ஆக்கூர் அஞ்சல்
மயிலாடுதுறை RMS - 609 301
தரங்கம்பாடி வட்டம் - நாகப்பட்டினம் மாவட்டம்.