திருத்தெளிச்சேரி

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருத்தெளிச்சேரி

காரை - கோயில்பத்து

தற்போது கோயில் பத்து என்று வழங்குகிறது. காரைக்கால் நகரில் ஒரு பகுதியில் உள்ளது. (பாரதியார் சாலை வழியே சென்று கோயிலையடையலாம்) இதற்கு "சமீவனம்" என்று பெயர். சிறியகோயில், மேற்கு பார்த்த கோயில்.

இறைவன் - பார்வதீஸ்வரர், பார்ப்பதீஸ்வரர், சமீவனேஸ்வரர்.

இறைவி - பார்வதியம்மை, சத்தியம்மை, சுயம்வர தபஸ்வினி.

தலமரம் - வில்வம், வன்னி.

தலவிநாயகர் - சம்பந்த விநாயகர்.

சம்பந்தர் பாடல் பெற்றது.

இத்தலம், தவம் செய்வதற்கு உகந்த இடம் என்பது புராண வரலாறு. இதற்குப் பிரமவனம், முத்திவனம் என்றும் பெயர்களுண்டு. பிரமன் வழிபட்ட தலம். புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த தலம். இக்கோயில் அழகானது. கற்கோயில். ஐந்து நிலைகள் கொண்ட பெரிய ராஜகோபுரம். மேற்கு நோக்கிய வாயில்.

சிவசுப்பிரமணியர், இலக்குமி துர்க்கை, சூரியன், சனீஸ்வரர், பைரவர், வன்னிலிங்கம், தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, அறுபத்துமூவர் சந்நிதிகள் லிங்கோற்பவர், நடராசர் முதலிய பரிவார மூர்த்திகளின் சந்நிதிகள் உள்ளன. பிரதோஷ விநாயகர் (அம்பாளுடன்) சந்நிதி விசேஷமானது. கோயிலின் பிராதான உற்சவமூர்த்தி கிராத மூர்த்தி (வேடிவடிவம்) ஆகும்.

இங்குள்ள தீர்த்தங்கள் - சூரியபுஷ்கரணி, குகதீர்த்தம், தவத்தீர்த்தம், முதலியன. இவற்றுள் சூரிய புஷ்கரணி சிறந்ததாகும். ஞாயிறு நாள்களில் வைகறையில் இத் தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.

இங்குள்ள இலிங்க மூர்த்தி, பிரமன் வழிபட்டதால், மகாலிங்கம், பிரம்மலிங்கம் என்றும், அம்பரீஷனால் வழிபடப்பட்டதாதலின் ராஜலிங்கம் என்றும், சூரியனும் வழிபடப்பட்டதாதலின் பாஸ்கரலிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் சோமவார (திங்கட்கிழமை) வழிபாடு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. அம்பாள் திருவுருவம் அழகானது. இக்காரைக்காலில், "காரைக்காலம்மையார" கோயில் தனியே உள்ளது. சென்று தரிசிக்க வேண்டும்.

"திக்குலாம் பொழில் சூழ் தெளிச்சேரி யெஞ்செல்வனை

மிக்க காழியுள் ஞானசம்பந்தன் விளம்பிய

தக்க பாடல்கள் பத்தும் வல்லார்கள் தடமுடித்

தொக்க வானவர் சூழ இருப்பவர் சொல்லிலே." (சம்பந்தர்)

குறையாத செல்வமும் நிறைவான கல்வியும்

கோடாத ஞான வொளியும்

குன்றா ஒழுக்கமும் பொன்றாத பொறுமையும்

குணமான இனிய முகமும்

கறையிலா உள்ளமும் கபடிலா மாற்றமும்

கண்ணோட்ட மிகவு டைமையும்

கலையா முயற்சியும் அலையாப் பயிற்சியும்

காய்தலொ டுவத்த லின்றி

முறையாக ஆய்தலும் நீதிதவ றாதநன்

முடிவு தரு நற்கு ணங்கள்

மூடனேற் கென்றென்றும் அமைய அருள்புரிகுவாய்

முடிவிலா ஆற்ற லுடையாய்

செறிதருங் கன்னலது கமுகென வளர்ந்திடும்

தெளிச்சேரி தனில்வி ளங்கும்

செப்பரிய பார்வதீச் சுரரிடப் பாலமர்

சிவசக்தி யம்மை யுமையே !

(சுயம்பவர தபஸ்வினி விருத்தம்)

அஞ்சல் முகவரி-

அருள்மிகு. பார்வதீஸ்வரர் திருக்கோயில்

கோயிற்பத்து - காரைக்கால் - அஞ்சல் - 609 602

புதுவை மாநிலம்.




























 


 


 





















 




 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is வேட்டக்குடி
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  தருமபுரம்
Next