திருமுறைத்தலங்கள்
தொண்டை நாட்டுத் தலம்
இலம்பையங் கோட்டூர் - எலுமியன் கோட்டூர்
சிறிய ஊர். மக்களின் பேச்சு வழக்கில், 'எலுமியன்கோட்டூர்' என்று வழங்குகிறது. (1) திருவிற்கோலம் எனப்படும் 'கூவம்' சென்று தரிசித்த பின்னர் அங்கிருந்து கூவம் ஏரியுள் இறங்கி 3 A.e. நடந்தால் ஆற்றின் மறுகரையிலுள்ள இத்திருக்கோயிலை அடையலாம். (2) சென்னையிலிருந்தும், காஞ்சியிலிருந்தும் 'செல்லம்பட்டிடை' செல்லும் நகரப் பேருந்தில் சென்று, செல்லம்பட்டிடையில் இறங்கினால் அங்கிருந்து 1 கி.மீ-ல் உள்ள இத்திருக்கோயிலை அடையலாம். இவ்வழியில் சென்றால் கோயில்வரை காரில் செல்லலாம். நல்ல பாதை உள்ளது. ஊரில் உணவு முதலியவற்றிற்கு எவ்வித வசதியுமில்லை, அரம்பை முதலானோர் வழிபட்ட தலம். ரம்பையங்கோட்டூர் என்பதே இலம்பையங் கோட்டூர் என்றாயிற்று என்பர்.
ஞானசம்பந்தர் இப்பக்கத்தே வருங்காலத்து, இறைவன் ஒருசிறு பிள்ளை போலவும், பின் ஒரு முதியவர் போலவும் வழிமறித்து இக்கோயிலை உணர்த்த, உடன் வந்த அடியார்கள் உணர்ந்து கொள்ளவில்லையாம், பின்பு வெள்ளைப் பசு வடிவில் வந்து ஞானசம்பந்தரின் சிவியை முட்டிநிற்க, அப்போது சம்பந்தர் வியந்து அப்பசு காட்டிய குறிப்பின் வழி செல்ல, தலத்தினருகில் வந்ததும் பசு மறைந்ததாம். அப்போதுதான் இறைவனே வந்து உணர்த்தியதை உணர்ந்து ஞானசம்பந்தர் இத்திருக்கோயிலைத் தெரிந்து கொண்டு வழிபட்டார் என்று சொல்லப்படகின்றது. இக்குறிப்பே இத்தலத்துப் பதிகத்தில் 3-வது பாட்டில் சொல்லப்பட்டுளள்தாகவும் சொல்லப்படுகிறது.
அப்பாடல் வருமாறு -
"பாலனாம் விருத்தனாம் பசுபதானாம்,
பண்டுவெங்கூற்றுதைத்து அடியவர்க்கருளும்
காலனாம்எனதுரை தனதுரையாகக், கனல் எரிஅங்கையில் ஏந்திய கடவுள் நீலமா மலர்ச்சுனைவண்டு பண்செய்ய, நீர்மலர்க்குவளைகள் தாதுவிண்டோங்கும் ஏல நாறும் பொழில் இலம்பையங் கோட்டூர், இருக்கையாப் பேணி என்எழில் கொள்வதியல்பே."
(சம்பந்தர்)
திருவல்லம் பணிந்து இத்தலத்தை அடைந்து பெருமானைத் தனதுரையாற்
பாடிப் பரவினார்.
இறைவன் - அரம்பேஸ்வரர், தெய்வநாயகேஸ்வரர், சந்திரசேகர்
இறைவி - கனககுஜாம்பிகை, கோடேந்து முலையம்மை.
தலமரம் - மல்லிகை.
தீர்த்தம் - மல்லிகைத் தீர்த்தம்
சம்பந்தர் பாடல் பெற்றது.
சிறிய கோயில். கூவம் ஆற்றின் மறுகரையில் உள்ளது.
ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. உள்ளே நுழைந்ததும் நேரே மூலவர் காட்சி தருகின்றார் வாயிலைக் கடந்ததும் இடப்பால் அரம்பாபுரிநாதர் - சிவலிங்கத் திருமேனி உள்ளது. வலமாக வரும்போது குருந்த விநாயகர், வள்ளி தெய்வயானை கூடிய முருகன் சந்நிதி, பைரவர்சந்நிதி, சூரியன் சந்நிதி- உள்ளன. கோஷ்ட மூர்த்தமாக விநாயகரும் அவரையடுத்து தட்சிணாமூர்த்தியும் உள்ளார்கள், இந்தத் தட்சிணாமூர்த்தி - யோக தட்சிணாமூர்த்தி, சின் முத்திரையை இதயத்தில் வைத்துள்ள அமைப்பு - அற்புதமாகவுள்ளது. கருவறையின் பின்புறம் இலிங்கோற்பவர் இடத்தில் மகாவிஷ்ணு உருவம் உள்ளது. அடுத்து பிரம்மா, துர்க்கை சந்நிதிகள் உள்ளன. சண்டேஸ்வரர் சந்நிதி உள்ளது. உள் நுழைந்தால் நேரே மூலவர் தரிசனம். வலப்பால் முதலில் அம்பாளும் அடுத்து நடராசரும் தெற்கு நோக்கியுள்ளனர். அம்பாள் நின்ற கோலம்.
சுவாமி - மூலவர் - தீண்டாத் திருமேனி. கிழக்கு நோக்கிய சந்நிதி. சுவாமிமீது உருத்திராக்க மாலை சார்ததப்பட்டுள்ளது சிவலிங்கத் திருமேனி வெளிர் நிறமுடைய செம்மண் நிறத்தில் உள்ளது. பெரிய ஆவுடையார் - அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் உள்ளது.
கூவத்தில் உள்ள குருக்களே இக்கோயில் முறைக்கும் உரியவர், எனவே கூவம் சென்று வருபவர்கள் குருக்களையும் உடனழைத்து வருதல் வேண்டும். வேறு வழியில் வருவோர் அக்குருக்களுக்கு முன்பே தங்கள் வருகையைத் தெரிவித்து அவரைக் கோயிலுக்கு வருமாறு செய்தல் வேண்டும். ஒருவேளை பூஜை மட்டுமே நடைபெறுகின்றது. ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின்
பொன்விழாத் திட்டத்தின் கீழ் திருப்பணிகள் செய்யப்பட்டு விமானங்கள் பழுதுபார்க்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. சிறிய கோயிலாயினம் கற்றளி செம்மையாகவுள்ளது.
இத்தலத்துப் பதிகத்தில்தான் ஞானசம்பந்தர் "எனதுரை தனதுரையாக"
என்ற தொடரை, பாடல் தொறும் அமைத்துப் பாடியுள்ளார்.
மலையினார் பருப்பதம் துருத்தி மாற்பேறு
மாசிலாச்சீர் மறைக்காடு நெய்த்தானம்
நிலையினான் எனதுரை தனதுரையாக
நீறுஅணிந்து ஏறுஉகந்து ஏறியநிமலன்
கலையினார் மடப்பிணை துணையடுந் துயிலக்
கானல் அம்பெடை புல்கிக் கணமயிலாலும்
இலையினார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர்
இருக்கையாப் பேணி என் எழில் கொள்வதியல்பே
(சம்பந்தர்)
-மாறுபடு தீதும் இலம்பயங்கோட்டீர் என்று அடியார்புகழ்
ஓதும் இலம்பயங் கோட்டூர் நலமே.
(அருட்பா)
அஞ்சல் முகவரி -
அ.மி. அரம்பேஸ்வரர் திருக்கோயில்
இலம்பயங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)
கப்பாங்கோட்டூர் அஞ்சல்
(வழி) எடையார்பாக்கம் - 631 553
ஸ்ரீ பெரும்பதூர் வட்டம் -
காஞ்சிபுரம் மாவட்டம்.