திருச்சாத்தமங்கை

திருமுறைத்தலங்கள்

சோழநாட்டு (தென்கரை) த் தலம்.

திருச்சாத்தமங்கை

மக்கள் வழக்கில் கோயில் சீயாத்தமங்கை. சீயாத்தமங்கை. செய்யாத்தமங்கை என்று பல பெயர்களில் வழங்கப் பெறுகின்றது. திருமருகலையடுத்த தலம்.

திருமருகலிலிருந்து நாகூர் செல்லும் சாலையில் 1 கி.மீ.சென்று, 'கோயில் சீயாத்தமங்கை' என்னும் வழிகாட்டிக் கல் உள்ள இடத்தில் பிரிந்து செல்லும் சாலையில், எதிர்ப்புறமாக 1 கி.மீ.செல்ல வேண்டும். முதலில் சென்றால் கோயில் உள்ள பகுதியை அடையலாம். இப்பகுதி 'கோயில் சீயாத்தமங்கை' எனப்படுகிறது. இடையில் முடிகொண்டான் ஆறு பாய்கிறது.

ஊர்க்குச் 'சாத்தமங்கை' என்றும், கோயிலுக்கு 'அயவந்தீசம்' என்றும் பெயர். பிரமன் பூஜித்த தலம். திருநீலநக்க நாயனாரின் அவதாரப்பதி. நகரத்தார் திருப்பணி பெற்றது.

இறைவன் - அயவந்தீஸ்வரர், பிரமபுரீஸ்வரர்.

இறைவி - உபய புஷ்ப விலோசினி, இருமலர்ககண்ணம்மை.

தலமரம் - கொன்றை.

தீர்த்தம் - கோயிலின் முன் உள்ள தீர்த்தக்குளம். இக்குளத்தில் மேற்பாதி சந்திர தீர்த்தம் என்றும் கீழ்ப்பாதி சூரிய தீர்த்தம் என்று சொல்லப்படுகிறது.

சம்பந்தர் பாடிய தலம்.

மேற்கு நோக்கிய திருக்கோயில். சுவாமி அம்பாள் சந்நிதகள் தனித்தனி வாயில்களுடனும், கோபுரங்களுடனும் மேற்கு நோக்கியே உள்ளன. உயர்ந்த சுற்றுமதிலையுடைய பெரிய கோயில். ஆலயத்தின் பக்கத்தில் நகரத்தார் சத்திரம் உள்ளது. சுவாமி ராஜகோபுரம் ஐந்து நிலைகளையுடையது. விசாலமான உள் இடம். வெளிச்சுற்றில் வலம் வரும்போது சந்திரன், சனிபகவான் (காகத்தின் மீது ஒரு காலூன்றிய அமைப்பில்) , சப்தமாதர்கள், பைரவர், நவக்கிரகங்கள், மகாலிங்கம், விசுவநாதர் விசாலாட்சி, விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன.

உள்வாயிலைக் கடந்து முன்மண்டபம் அடைந்து, வலம் வரும்போது, வள்ளிதெய்வயானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, நால்வர் சந்நிதிகள் உள, அடுத்து திரு நீலநக்க நாயனார், அவருடைய மனைவி ஆகியோரின் உருவங்கள் உள்ளன. நாயனாரின் மனைவியின் பெயர் மங்கையர்க்கரசி என்று இங்கு வழக்கில் சொல்லப்படுகிறது. சோமஸ்கந்தர், மகாகணபதி சந்நிதிகளைத் தரிசித்துப் படிகளேறி

உட்சென்றால் வலப்பால் உள்ள நீலநக்கர், அவருடைய மனைவி, நடன சுந்தரர் முதலிய உற்சவத் திருமேனிகளைத் தரிசிக்கலாம். நடராஜ சபை உள்ளது. அம்பலக்கூத்தர், அம்மை சிவகாமி மணிவாசகருடன் காட்சி தருகின்றார்.

நேரே மூலவர் தரிசனம் - தெய்வீகப் பொலிவு கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, நர்த்தனகணபதி, இலிங்கோற்பவர். பிரம்மா, பிட்சாடனர், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர் முதலிய மூர்த்திகள் உள்ளனர். இவற்றுள் அர்த்தநாரீஸ்வரத் திருமேனி ரிஷபத்தின் தலைமீது ஒரு கைவைத்திருக்கும் அமைப்பில் இருப்பது தரிசிக்கத்தக்கது. இம்மூர்த்தங்களுடன் அகத்தியரும் உள்ளார்.

அம்பாள் சந்நிதி பக்கத்தில் தனிக்கோயிலாகவுள்ளது. சூரியன் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. கொன்றை (தலமரம்) உள்ளது. நந்தி சற்று

உயரத்தில் உள்ளது படிகளேறிச் சென்றால் மூஞ்சூறு வாகனத்தின் மீது அமர்ந்துள்ள விநாயகரையும், தண்டபாணியையும் துவாரமூர்த்கிளாகத் தரிசிக்கலாம். நேரே அம்பாள் தரிசனம் - நான்கு திருக்கரங்களுடன்கூடிய நின்ற திருக்கோலம், பள்ளியறை உள்ளது.

'ருத்ர வியாமள தந்திர' ஆகம முறைப்படி நாடொறும் நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஆவணி மூலவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயிலுக்குப் பக்கத்தில் திருமருகல், திருநள்ளாறு முதலிய திருமுறைத் தலங்கள் உள்ளன.

(சோழர்காலக்) கல்வெட்டில் இத்தலத்து இறைவன் 'அயவந்தி உடையார்' என்று குறிக்கப்பட்டுள்ளார்.

"வேதமாய் வேள்வியாகி விளங்கும் பொருள் வீடதாகிச்

சோதியாய் மங்கை பாகன் நிலைதான் சொல்லலாவதொன்றே

சாதியான் மிகக் சீரார் தகுவார் தொழும் சாத்தமங்கை

ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே." (சம்பந்தர்)

-"திண்மைகொண்ட

மாத்தமங்கையுள்ள மருவிப்பிரியாத

சாத்தமங்கை கங்கைச் சடாமுடியோய்." (அருட்பா)

அஞ்சல் முகவரி -

அருள்மிகு. அயவந்தீஸ்வரர் திருக்கோயில்

சீயாத்தமங்கை - அஞ்சல் - 609 702

நன்னிலம் வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

 

Previous page in  கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is திருமருகல்
Previous
Next page in கட்டுரைகள் - திருமுறைத்தலங்கள்  is  நாகைக்காரோணம்
Next